எழுத்தின் மீது ஒடுக்குமுறை

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

மாலதி


தமிழ் நுகர் சூழலின் மறைமுகத் தணிக்கையில் மிகப் பெரியதொரு அரசியலும் வணிக நோக்கமும் நிலவுகின்றன.ஒரே சமயத்தில் இரட்டைநிலை முன்னெடுக்கப் படுகிறது.பெரும் பிரம்மாண்ட ஊடகங்களில் மலினமும் சமிக்ஞைகளும் விரவிய பாலியமும் நுண்பதிவுகளில் அதிகாரம் இழையோடும் ஆதிக்கமும் ஒருங்கே திணிக்கப் படுகின்றன.வெளியே அவிழ்த்தாடும் வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குகிறவர்களே உள்ளே ஒழுக்கவியல் பாசாங்குகளைச் செய்துகொண்டு படைப்பாளிகளைக் கீழ்நிலைப் படுத்த முயற்சி செய்கிறார்கள்.

சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். படைப்பாளிகள் சாதிப்பெயரால் தாக்கிப் பேசப்படுகிறார்கள்.சில நிறுவனங்களையும் கோட்பாடுகளையும் பேனா முனை தொட்ட விநாடியே படைப்பாளிகள் தூக்கியெறியப் படுகிறார்கள்.

கண்ணுக்குத் தென்படும் அல்லது மறைவாகச் செயல்படும் பல தடைகள் எழுத்தின் மீது இயங்குகின்றன.பிரசுரத்துக்கோ புகழுக்கோ சுயலாபங்களுக்கோ இடைஞ்சலாகிவிடக்கூடும் என்ற அச்சுறுத்தலோடு சில கருத்தாக்கங்களை முளையிலேயே அழிக்க முற்படுகிற உள்தடைகளை வைக்கின்றன,திட்டமிடப் பட்ட வெளித்தடைகள்.

நாகரிகத்தடைகளை முன்வைத்து ஆபாச எழுத்தை அடையாளம் காட்டி ஒடுக்குகிறார்கள்,தடையிலே தான் ஆபாசமே இருக்கிறது என்பதை உணராமல்.

விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதாகச் சிறுபான்மைகளைச் சார்ந்த கட்டுமானங்களையும் குழுவிலக்கியங்களையும் கருதுகிறார்கள். பெரும்பான்மையைத் தூற்றுவது பற்றி பெரும்பான்மை உறுப்பினர் உட்பட யாருக்குமே ஆட்சேபணையில்லை.சிறுபான்மைகள் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை ,அவையும் பெரும்பான்மை ஆகும்வரை என்ற கொள்கை நிலவி வருகிறது. அதில் முடிவு என்னாகிறதென்றால் எல்லா குழுவிலக்கியமும் தேக்கங்களாகிக் கேட்பாரின்றி போகின்றன.

சாரம் சாரமின்மை எங்கிருப்பினும் வெளிக் கொணரக் கூடிய எழுத்துக்கான சுதந்திரத்தை நம்ப மறுப்பது தற்கொலைக்குச் சமமான முட்டாள்தனமும் கோழைத்தனமுமாகும்.வலுவுள்ள எழுத்து நிற்கும் என்ற அடிப்படை விதியையே குலைப்பது அது.

இப்படிப்பட்ட சூழலில் மறு படைப்புகளும் தலைகீழ்ப்படைப்புகளும் தோன்றுவதற்கு இடமின்றி போகும்.இருட்டடிப்பு என்கிற பள்ளத்துக்குள் படைப்புகள் விழுந்து தமிழ்மொழி முதலிடம் விட்டு வரிசையிலுள்ள அடுத்தமொழி விஞ்சுவதற்கு வாய்ப்பு தந்து விலகும் அளவு அபாயத்தை இந்த ஒடுக்குமுறை ஏற்படுத்தலாம்.

சுயதணிக்கை நேராதபடி படைப்பாளியை வளரவிடுவதும் பாமரனைக் குழப்பாதபடி இலக்கியம் நேரான பட்டவர்த்தமான வீறுபாடு கொண்டு நடைபோடப் பொருத்தமான சூழலைத் தருவதும் எழுத்து ஒடுக்குமுறை இல்லாத சமுதாயத்துக்கே சாத்தியம்.

ஒரு செய்தி அல்லது தகவல் அரைகுறையாக மறைக்கப் படுகிறது அல்லது பூசி மெழுகப் படுகிறது.அல்லது திரித்து வழங்கப்படுகிறது.என்பதெல்லாம் வேறு. கலகக்குரல் வெளிவரக்கூடாது. விமரிசனம் என்பது சிலபேர் மீது வரவே கூடாது. சில விஷயங்களை எதிர்த்துக் கேட்டால் முத்திரை குத்தப்படும். தீவிரவாதி முத்திரை அல்லது தேசத்துரோகி அல்லது இனத்துரோகி அல்லது மொழித்துரோகி அல்லது சநாதனி அல்லது அடிப்படைவாதி அல்லது வலதுசாரி. இப்படி எத்தனையோ வகையில் விமர்சனம் அல்லது நேர்மைக்கலகம் ஆரம்பித்த நொடியிலேயே அதை முடக்கி ஒடித்துப் போடலாம். இப்படி ஒட்டு மொத்தமாக எழுதவோ பேசவோ கருத்துச் சொல்லவோ துவங்குமுன் ஒரு அடையாளத்துக்குள் கலகக்குரலை ஒடித்து முடிப்பது ஒருவித மறை தணிக்கை ஒடுக்குமுறை.

பெண்ணாய்ப் பிறந்து அழகியலையோ காதலையோ எழுத எப்படித் துணிச்சல் வரலாம் ? நீயே அழகு நீயே காதல் நீயே போர்னோ தெரிந்துகொள்.உனக்கெப்படி காதல் இருக்கலாம் ? அழகு சிறக்கலாம் ? போர்னோ பிடிக்கலாம் ? காதலை வியந்து எழுத பெண்மையே தடை. பெண்ணிய நிலைப்பாடு சார்புடைய படைப்பாளி காதலை வியந்தால் அது ஆணை முன்னெடுப்பது. [தேர்ந்தெடு உனக்கு காதலிக்கவேண்டுமா ? பெண்ணியம் பேசவேண்டுமா ? படுக்கலாம் நீ அதற்குக் காதலே வேண்டாம்] வயதும் திருமண அந்தஸ்தும் ஒத்துவராத சமயத்தில் காதலை வியந்தால் அது திருமணத்துக்கு முன்னான தொடர்பு அல்லது திருமணம் தாண்டிய தொடர்பின் திருட்டுத் தனமான வெளிப்பாடு.

சொல்பவர்கள் சாதாரணர்கள் அல்ல. அறிவுஜீவிகள். பாவிகளா! பெண் ஒரு ரத்தம் சதையுள்ள பண்டம் அதற்கும் எல்லாரையும் போல பசி தாகம் மற்றும் காதலும் உண்டு.

என் காதல் கவிதைகளுக்காக நான் நிறைய கல்லடி பட்டிருக்கிறேன். பெண்ணின் கர்ப்பம் பெண்ணுடைய தனி உரிமை என்று ஒரு கதை எழுதியதற்காக என்னை ஒழுக்கவியலாளர்கள் ஒட்டு மொத்தமாகக் காளவாயில் சுண்ணாம்போடு போட்டிருக்கிறார்கள்.

எனக்குப் புரியவில்லை. பெண் உடலுக்குள் நடக்கவேண்டியது எப்படி வெளியே இருப்பவனின் ஆதிக்கத்துக்குள் அடங்கும் ?

என் எழுத்துக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லை என்று தூற்றுகிறார்கள்.இரண்டுக்கும் சம்பந்தம் வைத்து உங்களுக்கு இணக்கமாக வேண்டுமென்று எனக்கென்ன அவசியம் ?நான் எப்படியும் இருப்பேன். எப்படியும் எழுதுவேன். என் எழுத்தை யார் எனக்குக் கட்டளையிடுகிறார்கள் ? என் தோற்றம் எதற்காக யாருக்காவது அடங்க வேண்டும் ?

உங்களுக்குப் பிடித்தமாதிரி யிருக்க உங்களுக்குப் பிடித்த மாதிரி எழுத நீங்கள் என் ஆண்டையில்லை.நான் தான்தோன்றி.என் இஷ்டம் போல் கோலம் காட்டுவேன் கலைப்பேன். என் விருப்பம்.

அசல் வெளிப்பாடுகளைக் கொடுத்த பெண்கவிஞர்களை ஆதரித்துப் பேசியதற்காக என்னைக் கூனிக் குறுக வைத்திருக்கிறார்கள் இணைய வலைகளில். ‘போர்னோ ‘விஷயங்களைப் பெண்கள் எழுதுவதும் அதை ஆதரித்துப் பெண் பேசுவதும் எய்ட்ஸ் நோயாளிகள் நோய்க் கொடுமை பற்றிய நேரடி விவரணை தருவதையொத்த பரபரப்பு மதிப்பீடு கொண்டது என்றார் ஒரு ஆன்றவிந்த பெரியார்.

‘சிறு பத்திரிகை உலகம் nudist colony. இங்கு யாருடைய நிர்வாணமும் யாரையும் உறுத்தாது இங்கு ஆடை தான் ஆபாசம் ‘ என்று ‘பன்முக ‘த்தில் நான் எழுதியது திரித்துப் பேசப்பட்டது. ‘வெகுச் சில பேர் இயங்கும் தளம் தானே என்று இவர்கள் அவிழ்க்க முன் வந்தாலும் பார்க்க யாரும் தயாரில்லை ‘ என்று எதிர்முகாமில் பேச வைத்தார்கள். நான் சொன்ன கருத்தையும் இன்னொரு மாலதி சொன்னதாக நன்கு தெரிந்தவரே ஆள்மாறாட்டம் செய்தார்.சில பேர்களைச் சொல்வதிலும் சில பேர்களை இருட்டடிப்பு செய்வதிலும் அரசியல் இருக்கிறது. தற்செயல் போல ஒரு பாசாங்குடன் திட்டமிட்டுச் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.விசாரித்தால் சக கவிஞர்கள் மீது காழ்ப்பு என்பார்கள். எல்லாருடைய இடமும் எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்க காய் நகர்த்தலுக்கு என்ன அவசியம் ?

இதெல்லாம் இப்போது வீடு புகுந்து மிரட்டுவது வரை வந்திருக்கிறது. அதில் ஆச்சரியமில்லை. என் கணவரைப் பார்க்கப் பலர் ஆவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர் என் எழுத்தைப் படிப்பதுண்டா என்பதில் மிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். அவர் என்னோடு சேர்ந்து வாழ்கிறாரா என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.எனக்குப் பதிலாக அவர் எழுத்தாளராயிருந்தால் என்ன எழுதியிருப்பார் என்கிற தூரங்களுக்கு கற்பனைகளை எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.நானே அந்த எழுத்தையும் பதிப்பித்திருப்பேன். எழுத்து சுதந்திரத்தை முழுக்க நம்புகிறவள் நான் என்பது அவர்களுக்குத் தெரிய வரவில்லை.காரணம் எழுத்துக்கு சுதந்திரம் உண்டு என்பதை அவர்கள் நம்பினால் தானே!

எழுத்தின் மீது பதிந்திருக்கும் ஆதிக்கத்தடங்களை இடம்பெயர்க்க குழு இலக்கியங்களை எல்லாரும் ஓரம் கட்ட வேண்டும்.முறையான அங்கத்தினர் சூழ்ந்த நடுநிலை எழுத்தாளர் கூட்டுறவுகள்[இயல்,நாடகம்,புதுக்கவிதை,மொழிபெயர்ப்பு,விமரிசனமென்கிற தளங்கள் வாரியாக]ஏற்படுத்தப்பட்டு மாதாந்திரக் கூட்டங்களில் முக்கியமான பதிவுகளை நிறுவ வேண்டும்.புத்தகமாக்கலும் பிரசுரங்களும் படைப்பாளிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படவேண்டும். வாசிப்புக்கும் ரசனைக்கும் தேசியப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.எழுதுகிறவர்கள் தாம் எழுதியதை மட்டும் அழகு பார்க்கும் அவல நிலை மாற வேண்டும்.பெரிய பெரிய நாடளாவிய கூட்டங்களில் வந்து பேனாவைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்தபடி சக படைப்பாளிகளைப்பார்த்து ‘நீங்களும் எழுதியதுண்டா ? தமிழில் தான் எழுதுகிறீர்களா ? ‘என்று கேள்வி கேட்காமல் இருக்கும் அளவுக்காவது சமகாலத்து இலக்கியம் தெரிந்துகொள்ள வேண்டும்.பேட்டி எடுக்க வருகிறவர்கள் ‘உங்கள் கதையை நீங்களே எழுதித் தந்துவிடுங்கள் ‘என்று கொஞ்சுவதை நிறுத்த வேண்டும்.எல்லா விதமான தொகைநூல்களுக்கும் தொகுப்புகளுக்கும் சிறப்பான இலக்கிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.ஏனெனில் தொகுப்பதே ஒரு முறையான இலக்கியப் பரிவு மற்றும் பொறுப்புணர்வு.அதை விஸ்தரிப்பதே ஒரு இலக்கியப்பணி.சட்டபூர்வமாக அதைச் செய்வது இன்னமும் கண்ணியம்.

அவதூறும் காழ்ப்பும் பிறப்பிக்கின்ற பத்திரிகைகளையும் படைப்பாளிகளையும் கருப்புவரிசையில் வைத்து கருத்தரங்குகளும் தொகுப்புகளும் அவர்களை அவர்கள் கருத்துக்களை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும்.நாகரிகமான திறந்த விமரிசனங்கள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.இப்படிப்பட்ட முயற்சிகளால் சுதந்திரமான எழுத்து மீண்டு மேலெழ நிறைய வாய்ப்பிருக்கிறது.

மாலதி[சதாரா]

Presented and read In a Karuththarangam arranged by veLi Rangarajan Amarantha and LathaRamakrishnan in Chennai by the end of 2004.

====

Malathi

Series Navigation

மாலதி

மாலதி