எழுதுகோல் தெய்வமா?

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கவியோகி வேதம்



எல்லா எழுதுகோலும் இன்னமும் தெய்வமா?

எல்லார் கோலும் இனிய பரவசமா?

..

பாரதி எழுதுகோல் பதிந்த மனத்தெய்வம்!

சாரமுள்ள கலைமகளின் சன்னதி அதுவேதான்!

..

மழையமுதைத் தன்னுள்ளே மடக்கிவைத்த சொர்க்கமது!

இழைஇழையாய் நெய்துதந்த இன்பப் பட்டு.அது!

..

ஆனால் பின்வந்த அரசியல் எழுத்தாளர்

பேனாவைத் திறந்து பிரசங்கச் சாக்கடையைப்

..

பொழியவைக்கத் துணைபோன புண்நிறைந்த கோலையெல்லாம்

வழிபடும் தெய்வமென்றால் அககோலை வணங்கேன்நான்!

..

சாதிகளைத் தூண்டிச் சோரம்போம் எழுத்திற்கும்

மாதுபற்றி எழுதியே பணம்சேர்த்த வக்கணைக்கும்,

..

ஏட்டின் விற்பனைக்காய் இங்குள்ள பம்பாய்போய்

மாட்டும் நாயகிபற்றி மனமாரக் கதைத்துநின்ற

..

பேனாவும் தெய்வமென்றால் தெய்வமே பிறாண்டிநிற்கும்!!

தானாக எழுத்தாளர் ஆன்மிகத்தைத் தன்துணையாய்

ஏற்று மடைபோல் எழுதுகிற நல்லெழுத்தை

நீற்றாய், என்நெற்றி நித்தமுமே தரிக்கும்!

..

நடைஒழுக்கம் இல்லாத நாத்திகரின் எழுதுகோல்

தடைசெய்த கடைச்சரக்கைத் தள்ளிவிடும் வியாபாரி!

..

நலம்கெடுக்கும் எழுத்தைவிட நாவிதரின் ‘கத்தி’தெய்வம்!

பலமில்லா எழுத்தினும்வா ருகோல்கள் பலதெய்வம்!

..

மனத்துளே சக்தி ஏறி

..மாவிந்தை புரிவ தற்காய்

தினந்தினம் நம்மைத் தூண்டி

..தேசமே வணங்கு தற்காம்

தினவுள சொல்லைக் கோலில்

..திரட்டியே கொடுத்தால் அக்கோல்

கனமுள கோவில் தூண்போல்!

,,கணமும்நாம் போற்றும் கீதை!

..

யோகமா,இல்லை, ஞான

..ஊற்றது தானா,கீற்றும்

சோகமா? சுகமா,பக்தித்

..தூண்டலா,நல்ல காதல்

வேகமா,நட்பைச் சேர்க்கும்

..மின்னலா,தவிப்பா,எல்லாம்

மேகம்போல் எழுத்தாய்க் கொட்டும்

..வித்தையைத்,தெய்வம் என்பேன்!!

..

நிமிடத்தைத் தேனாய்க் காட்டி

..நிமிண்டிடும் கதைகள் தெய்வம்!

சமையலின் சாரம் போலே

..சாற்றிடும் கவிகள் தெய்வம்!

சுமைகளைத் தூசாய்ச் செய்யும்

..துணுக்குகள் எனக்கும் தெய்வம்!

குமைகிற நெஞ்சை மாற்றும்

..குதூகலக்கோல் எல்லாம் தெய்வம்!

kaviyogi.vedham@gmail.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்