எழுதாதக் கவிதை

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

புதியமாதவி


==============

என் சின்னக் குயிலே
நல்ல காற்றுக்கும்
நாயாய் அலையும்
நரகர் காட்டில்
உறக்கம் மறந்த
புழுக்க இரவில்
நீ ஏன் உதயமானாய் ?

நீ பாடும் முன்பே
குரல்வளைப் பறித்த
பாவியின் வயிற்றில்
ஏன் பயணம் தொடங்கினாய் ?

தாய் பார்க்காத முகமே- என்
தமிழ்ப் படிக்காத மனமே
அச்சில் ஏறாத எழுத்தே-என்
எழுதாதக் கவிதை நீயே!

நீ சொல்லலாம்.. நான் ?
+++++++++++++++++++

அழகானப் பெண்
அவள் சிரித்தாள்
கவிதை
-நீ சொல்லலாம்..
நான் சொல்லமுடியுமா ?

முதல் சந்திப்பு
முதல் முத்தம்
முதல் காதல்
முடிவுப் பெறாதக் கவிதை
நீ சொல்லலாம்..
நான் சொல்ல முடியுமா.. ?

அவளைக் கண்டதும் காதல்
காதலுக்கு கடிதம்
எழுதியதில்
கவிதை
கவிஞனை
ரகசியமாயக் காதலித்தது
நீ சொல்லலாம்…
நான் சொல்ல முடியுமா.. ?

அடுத்தவன் மனைவியை
ரசிப்பதுதான்
கவிதை..
அடடா..
நீ சொல்லலாம்
அதையே
நான் சொல்லமுடியுமா ?
நான் சொன்னால்
என்னிடம்-
கோவல புத்திரர்கள்
கொடுவாளை எடுத்திடுவார்
கண்ணகிப் பரம்பரை
கழுவேற்ற வந்திடுவார்..
=====================
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை