கே.பாலமுருகன்
வேலை முடிந்து வந்த பிறகு மாலை தரும் சோர்வில் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நகரத்து வாகனங்களின் நெரிசல் ஏற்படுத்தும் ஒலிகளுனூடாகத் தூங்கி தொலைவதே அன்றாட கடமையாக இருக்கிறது. நகரம் எறியும் வெயில் வீட்டின் வாசல்வரை வந்து பரபரப்பைத் தழுவி வெறுமையுடன் கோடுகள் போட்டிருக்கும். வீட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த வெயிலைப் பார்க்கும்போது சுறுசுறுப்பும் உற்சாகமும் நம்மிடமிருந்து நழுவியிருக்கும். அப்படியே சோம்பலில் அமர்ந்தபடியே உறங்கிவிடுவேன்.
எப்பொழுதாவது மழைப் பெய்யும். அப்படித் தூங்கிக் கொண்டிருக்கும்போது அந்த மழைத் துளிகள் அறுந்து வெள்ளிக் கொளுசின் மணிகளாக சிதறி வீட்டின் கூரையைத் தட்டிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் முதலில் மழையில் நனைந்து கொண்டு நகரம் பக்கமாகப் போய்விட்டு வருவதில்தான் மகா திருப்தி. அது எனக்கு ஒருவித பழக்கமும்கூட. மழைப் பெய்யும் நாட்களில் நகரம் வேறு மாதிரியாக மாறியிருக்கும். அதன் நிகழ்த்தன்மையை இழந்து தன்னை புதுப்பித்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் நகரம்.
மழைக்கு ஒதுங்குபவர்கள்
மழைக்கு மட்டுமே கடைத்தெருக்களில் ஒதுங்கிக் கொண்டும் நனைந்துவிட்ட தனது ஆடைகளைச் சரிச் செய்து கொண்டும், மோட்டாரிலிருந்து இறங்கி ஒதுக்குப்புறமாக ஓடும் மோட்டாரோட்டிகளையும் எப்பொழுதும் மழைக் காலங்களில் நகரத்தில் விசித்திரமான மனோபாவத்துடன் பார்க்கலாம். நகரத்தில் பெய்யும் அந்த மழை சிறிது நேரத்திற்கு அவசர மனிதர்களின் கால்களைக் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்குமேலும் நகர முடியாமல் ஒதுக்குப்புறங்களில் நின்று கொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள் சிலர். அதை பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
“எந்த நேரத்துலே பேயுது பாரு சனியன்”
“மனுசன் எங்கயும் நகர முடியாது போல”
“என்னா இது? நேரம் காலம் தெரியாமல்.. . எழவெடுத்த மழை”
அந்தக் கடைத்தெருக்களில் ஒதுங்கியிருப்பவர்களின் வார்த்தைகள் சொற்கள் மழையைத் திட்டிக் கொண்டேயிருக்கும். அவர்களை நெருங்கினால் வெறுப்பையும் அறுந்துவிட்ட அவர்களின் அவசரத்தையும் உணர முடியும். அவர்களின் உடலில் ஒழுகிக் கொண்டிருக்கும் மழைத் துளிகள் அந்தக் கடைதெருக்களின் வாசலை நனைத்து சாக்கடையை நோக்கி வழிந்து கொண்டிருக்கும். நகரத்தின் சாலையில் பலமான நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் கணங்களில் வாகனங்களின் ஹாரன் ஒலிகளைக் கேட்டுக் கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
“இன்னிக்கு நிக்காது போல இந்த மழை”
“வானத்தே பாரு! எங்க நிக்க போது”
சமாதானம் இழந்து ஒரு சிலர் மழையில் நனைந்து கொண்டே நெரிசலான சாலையைக் கடந்து நடக்கத் தொடங்குவார்கள். மழையை எதிர்க்கொண்டவாறு அவர்கள் துள்ளிக் குதித்து ஓடுவார்கள். பெண்கள் ஒருசிலர் கையில் வைத்திருக்கும் பாலித்தின்களைத் தலையில் வைத்துக் கொண்டு மிகவும் கவனமாக சாலையில் இறங்கி நடந்து கொண்டிருப்பார்கள். மழையைக் கடந்து அவர்களின் வேகம் எங்கோயோ நிறைவேறாமல் காத்துக் கொண்டிருக்கும் வேலைகளை நோக்கி பறந்து கொண்டிருக்கும்.
குழந்தைகளைச் சிறுவர்களை வைத்திருக்கும் பெண்களோ ஆண்களோ அல்லது அவர்களுடன் நடந்தே நகரத்திற்கு வந்துவிட்டிருக்கும் பெற்றோர்களோ அவ்வளவு எளிதில் மழையை உடைத்துக் கொண்டு நகர முடியாது. அவர்களுக்கு வேறுவழியே இல்லை. மழை நிற்கும்வரை அங்கேயே காத்திருக்க வேண்டும். அந்தச் சமயங்களில் அந்தக் குடும்பத்தின் அசைவுகளையும் சொற்களையும் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
“அம்மா கைலே தூக்கி வச்சிக்கம்மா”
“டே.. உன் சட்டைலாம் நனைஞ்சிருச்சி, கம்முனு இரு”
அந்தச் சிறுவன் அம்மாவின் கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பான். அவன் சட்டையிலிருந்து ஈரம் கசிந்து கீழே ஒழுகிக் கொண்டிருக்கும். இதற்கிடையில் மற்றொரு பையன் கடைத்தெருக்களின் கூடாரத்திலிருந்து கீழே சரிந்து கொண்டிருக்கும் மழைத் துளிகளைக் கைகளைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பான். அந்த அம்மா இருவரையும் திட்டிக் கொண்டிருக்க அந்த அம்மாவின் கணவர் எந்தச் சலமனமுமில்லாமல் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். அன்றாட நிகழ்வைப் போலவே அது நடந்து கொண்டிருக்கும்.
குடை பிடித்திருப்பவர்கள்
மழைப் பெய்யத் தொடங்கிய பிறகு நகரத்தில் முளைக்கும் குடைகள் எப்பொழுதுமே அழகாகத்தான் காட்சியளிக்கும். காற்றின் வேகத்துடன் போராடும் குடைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டு சாலையின் ஓரமாகவும் சாலையைக் கடந்தவாறும் குடைகள் நகர்ந்து கொண்டிருக்கும். குடை பிடித்திருப்பவர்களின் உலகம் தடையில்லாமல் சிறு அசௌகரிகத்துடன் எப்பொழுதும் மழைக்காலத்திலும்கூட வழக்கம் மாறாமல் போய்க் கொண்டேயிருக்கும்.
நகரத்தில் மழை பெய்தால், செயற்கைத்தன்மையான இயக்கங்களில் ஏற்பட்ட சரிவு என்றுதான் பொருள்கொள்ள முடிகிறது. மழை என்றாலே சிறிது நேரத்திற்கு நகர மனிதர்களின் அட்டவணை வாழ்வில், குறித்த நேரத்தில் நடக்கும் இயந்திர நிகழ்வில் ஏற்படும் பெரும்தடையாகவே நினைக்கிறேன். மழை நேரத்தில் வித்தியாசப்பட்டுப் போகும் நகரத்தைக் காணவே நகரத்திற்குச் சென்று வருவேன். மழைக்காக ஒதுங்கியிருப்பவர்கள் குடை ஏந்தி வருபவர்களுடன் இணைந்து கொண்டு சாலையில் நடக்கும்போது நகர மனிதர்களின் சக்கர வாழ்வில் ஏற்படும் மிகச் சிறந்த நட்பு அதுவாகத்தான் இருக்கும். இந்த கணநேர நட்பை கொடுக்கும் மழை எப்பொழுதும் பெய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- விஸ்வநாதன் ஆனந்த்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- கோடி கொடுத்துத் தேடினால்
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- அட்மிஷன்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- கவிதை௧ள்
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- ஒபாமா
- நனவாகும் கனவு
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- வரம்புகளை மீறி
- தீபாவளி 2008
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- மௌனித்த நேசம்
- மானிடவியல்
- அப்பாவின் சொத்து
- நிழலற்ற பெருவெளி…
- ஒரு தினக் குறிப்பு
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- குட்டி மகளின் ஞாபகம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- தாகம்
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- நாம் காலாண்டிதழ்
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- நினைவுகளின் தடத்தில் – (21)
- உறவுச் சங்கிலிகள்
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- நிலையின்மை
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!