எனக்குள் ஒருவன்

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

பசுபதி


எனக்குள் ஒருவன் அழுவான் ! — பின்னர்
எரியும் கனலாய் எழுவான்!

கங்கை நதியினில் வெள்ளம் ! — ஐயோ!
. . காவிரி யோமணல் பள்ளம் ! — தன்னலம்
பொங்குதே சோதரர் வீட்டில் ! — மனிதம்
. . பொய்த்ததோ பாரத நாட்டில் ! (1) (எனக்குள் ..)

காந்தி பெயரைத் துதிப்பார் — அன்பைக்
. . காந்தி உயிரை வதைப்பார் ! — நாட்டில்
சாந்தி பிறப்பதென் னாளோ ? — வன்முறைச்
. . சாத்தான் இறப்பதென் னாளோ ? (2)

தேசத்தில் நேர்மைக்குப் பஞ்சம் — எந்தத்
. . திசையில் திரும்பினும் லஞ்சம் ! –உலவும்
காசுக்கும் உண்டிரு வண்ணம் — நாடு
. . கருப்பிலே மூழ்குதல் திண்ணம் ! (3)

பெண்ணின் பெருமையைச் சொல்வார் — பிறகு
. . பேயெனப் பெண்சிசு கொல்வார் ! –எந்த
மண்ணும் மறவாதிப் பாபம் — பல
. . மறைகள் அறிந்தென்ன லாபம் ? (4)

குனிந்து குறுகுதல் ஏனோ ? — நாட்டின்
. . குறைகளை உள்ளம் உணர்ந்தோ ? — பின்னர்
சினத்தில் சிவப்பதும் ஏனோ — சிலரின்
. . செயல்கள் விளைவை நினைத்தோ ? (5) (எனக்குள் ..)

*~*~o0o~*~*
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி