எனக்குப் பிடித்த கதைகள் – 87-குகைக்குள் ஒரு பயணம்-ஆர்.ராஜேந்திரசோழனின் ‘கோணல் வடிவங்கள் ‘

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பாவண்ணன்


துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு குன்றோரமாக நானும் நண்பரும் பேசியபடி அந்தி சாயும் வேளையில் நடந்துகொண்டிருந்தோம். அவர் காவல் துறை அதிகாரி. அன்று மாலைதான் எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு சாவுச் சடங்கில் பங்கெடுத்துவிட்டுத் திரும்பியிருந்தேன். என்னைத் தேடிக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்தவரோடு வெளியே வரவேண்டியதாயிற்று. எனக்கும் அந்த மரணத்தைக் கண்கூடாகப் பார்த்ததால் உருவான அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. வீட்டுக்கு வெளியே ஒரு விடுதியில் சூடான தேநீரைப் பருகியபின்னர் நதிக்கரையை நோக்கி வந்தோம். ‘தண்ணீருக்கு வடிவம் உண்டா ? ‘ என்று திடுமெனக் கேட்டார் அவர். நான் இல்லையென்று சொன்னேன். தொடர்ந்து ‘அது எந்தப் பாத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அதன் தற்காலிக வடிவம் ‘ என்றேன்.

‘திடப்பொருளுக்கு மட்டுமே நிலையான வடிவம் உண்டு. திரவப்பொருளுக்கும் வாயுப்பொருளுக்கும் நிலையான எந்த வடிவமுமில்லை. இதுதான் அறிவியல். இந்த துங்கபத்ராவையே பாருங்கள். ஓடிவரும்போது குன்றுகளின் இடையில் சுழித்துக்கொண்டு வருகிறது. பிறகு கிளைகளாகப் பிரிந்து படர்ந்து செல்கிறது. ஊருக்குள் செல்லும்பொழுது கால்வாய்களாக மாறுகிறது. அணை, கால்வாய் எல்லாமே ஆற்றின் வடிவங்களே. ‘

‘மனத்துக்கு வடிவமுண்டா ? ‘ அவர் உடனே அடுத்த கேள்விக்குத் தாவினார்.

‘கிடையாது. ‘

‘ஏன் கிடையாது ? உங்கள் வாதப்படி அது ஒன்றும் திரவமோ வாயுவோ இல்லையே ? பிறகேன் வடிவமற்றுப் போனது ? ‘

‘மனம் திரவமோ வாயுவோ இல்லை என்பது உண்மைதான். ஆனால் மனம் எண்ணங்களால் ஆனது. எண்ணங்களோ கணந்தோறும் மாறும் தன்மையுள்ளவை. கொள்கலத்துக்குத் தகுந்தபடி உருவத்தை மாற்றிக்கொள்ளும் தண்ணீரைப்போல. அதனால் எண்ணங்களைத் திரவமாகவோ வாயுவாகவோ எடுத்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆகவே எண்ணங்களின் உறைவிடமான மனத்தையும் திரவமாகவோ வாயுவாகவோதான் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அதனாலேயே மனத்துக்கு வடிவமில்லை. ‘

‘அப்படியென்றால் ஒருவருடைய மனத்தைப் புரிந்துகொள்ளவே முடியாதா ? ‘

‘முக்காலே மூணுவீசம் புரிந்துகொள்ளலாம். எண்ணங்கள் பேச்சாகவும் செயலாகவும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும். ஈரமாகவும் சுவையாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தண்ணீரைப்போல. அவற்றை முன்வைத்து ஓரளவாவது மனத்தைப் புரிந்துகொள்ளலாம். ‘

‘அப்படியென்றால் அந்த முத்துசாமியைப்பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறீர்கள் ? ‘

திடாரென நண்பர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை நான். அன்று மாலையில் அவனுடைய மனைவிக்குத்தான் இறுதிச்சடங்கு நடந்தது. அவள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு முதல்நாள் மாலைதான் உயிரைவிட்டிருந்தாள்.

‘அவன் அவ்வளவு நல்லவனில்லைதான். வேலையிலும் பெரிய கெட்டிக்காரன் இல்லை. சதாகாலமும் சூதாடுவான். பல இரவுகளில் அவன் மது அருந்திவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி தள்ளாடி நடப்பதைப் பார்த்திருக்கிறேன். மனைவியின் மீது நம்பிக்கையில்லாத சந்தேகப்பிராணி. அவளை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். ஜன்னல் வழியாகக்கூட அவள் வெளியே யாரிடமும் பேசிவிடக்கூடாது. வெளியே போகும்போது கதவைப்பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டுதான் போவான். அவ்வளவுதான் அவனைப்பற்றி எனக்குத் தெரியும். ‘ நான் நண்பரைப் பார்க்காமல் தொலைவில் சிவப்பேறத் தொடங்கிய வானத்தைப் பார்த்தேன்.

‘அப்படிப்பட்ட அயோக்கியனோடு வாழ்வதைவிட சாவதே மேலென்று அவள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமல்லவா ? ‘ நண்பர் விடாமல் கேட்டார்.

‘இருக்கலாம் ‘

‘சந்தேகப்பேய் பிடித்தாட்டுகிற நிலையில் ஏதோ ஒரு சந்தேகத்தை முன்வைத்து விவாதமெழுப்பி, சாதகமான பதில் கிட்டாத ஆத்திரத்தில் அவனே எண்ணெயை ஊற்றிக் கொளுத்தியும் இருக்கலாமில்லையா ? ‘ அவர் நிதானமாகக் கேட்டார்.

‘அந்தச் சாத்தியத்தையும் தள்ளுவதற்கில்லை. ‘

‘அப்படியென்றால் பக்கத்து வீட்டுக்காரர் என்கிற முறையில் எங்கள் பெரிய அதிகாரி உங்களை விசாரித்தபோது அந்தத் தம்பதியரைப்போன்ற ஆதர்ச ஜோடி வேறில்லை என்று ஏன் சொன்னீர்கள் ? உங்கள் ஒரு வார்த்தையால்தான் அவன் உயிர்பிழைத்தான் தெரியுமா ? ‘ நண்பர் குரல் மெல்ல உயரத் தொடங்கியது. ‘இன்னும் ஒருநாள் அவகாசமிருந்தால் அவன் மனத்தின் வடிவமென்ன என்பதை நானே காட்டிக்கொடுத்திருப்பேன். ‘

தொடர்ந்து பேச என் மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை. பிறகு மெதுவான குரலில் ‘என்ன நடக்குதுன்னே தெரிஞ்சிக்க முடியாத பிஞ்சு வயசுல அந்தக் குழந்தையைப் பாத்தா பாவமா இருக்குதுப்பா. அவனும் உள்ள போயிட்டா அந்தக் கொழந்தைஆயாட கதியை நெனைச்சிப் பாரு. கெட்டவனா இருந்தாலும் அப்பன்னு ஒருத்தன் கூட இருக்கட்டுமேன்னுதான் அப்படி சொன்னேன். ‘

‘அத நெனைச்சித்தான் நானும் சும்மா இருந்தேன். இல்லன்னா குறுக்குல பூந்து தடுத்திருப்பேன். ‘ அவர் என் தோளில் கைவைத்தார். பிறகு சில மாதங்கள் முன்னால் நடந்த சம்பவமொன்றை எனக்கு ஞாபகப்படுத்தினார்.

அன்று அவருக்கு இரவு வேலையாம். நகரை வலம் வந்தபடி இருந்தவர் ஏதோ ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக வந்த செய்தியை வைத்துப் படையுடன் சென்றிருக்கிறார். தகவல் உண்மையாகவே இருந்தது. பலரைக் கைது செய்து இழுத்துவந்திருக்கிறார். அகப்பட்டவர்களில் ஒருவன் முத்துசாமி. காவல் நிலையத்தில் இரவு முழுக்க நிற்க வைக்கப்பட்டிருந்தானாம். பிறகு தானொரு மத்திய அரசாங்க ஊழியனென்று சொல்லி பையிலிருந்த அடையாள அட்டையைக் காட்டி காலில் விழுந்து கெஞ்சினானாம். பிறகு அவனை அதிகாலைக் கருக்கலில் விடுவிக்கப்பட்டானாம்.

‘இதான் அந்த ஆளு சங்கதி. இப்படிப்பட்ட ஆளுக்கு இரக்கம் காட்டறதே தப்பு. இவனுங்களுக்கு மனசும் கெடையாது. மனசாட்சியும் கெடையாது. தான் செய்யற தப்பையெல்லாம் தன்னோட பொண்டாட்டியும் செஞ்சிடுவாளோன்னு பயம். தன்ன மாதிரியே ஊரு ஒலகத்து ஆம்பளைங்களும் இருப்பாங்களோன்னும் பயம். பயந்து பயந்து சாவற கழுதைங்க இதுங்க. ‘

இரவு கவிந்ததும் மீண்டும் ஒரு விடுதிக்குள் சென்று தேநீர் அருந்தினோம். நண்பர் தொடர்ந்து பேசும் மனநிலையில் இருந்தார்.

‘மகாபாரதத்துல ஒரு கேள்வி வரும். இந்த உலகத்திலே கெட்டவங்க யாராவது இருக்காங்களான்னு தர்மர்கிட்ட கேட்டாங்களாம். அவரு யோசிச்சிப்பாத்துட்டு அப்படி யாருமே இல்லயே. எல்லாரும் நல்லவங்கதான்னு சொன்னாரு. துரியோதனனப் பாத்து அதே கேள்வியை கேட்டாங்களாம். அவரு கொஞ்சமும் யோசிக்காம ஐயோ ஒலகத்துல எல்லாப் பசங்களும் கெட்டவனுங்கதான்னாரு. தன்னப்போலவே மத்தவங்களயும் நெனைக்கறதுதான் மனசு. நீங்க சொன்னது உண்மைதான். அதுக்குன்னு நெரந்த வடிவமெதுவும் இல்ல ‘

கைகுலுக்கிவிட்டு அவர் பிரிந்துசெல்ல நான் என் குடியிருப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன். நண்பருடைய வார்த்தைகளை அசைபோட்டபடி இருந்தது என் மனம். ஒரு நேர்க்கோட்டை நேராக நின்று பார்த்தால் நேர்கோடு. அதையே வேறு கோணத்தில் பார்த்தால் வளைகோடு. கோட்டில் எப்போதும் மாற்றமில்லை. பார்க்கிற கோணத்தின் மாறுபாட்டை கோட்டின்மீது ஏற்றிப் பார்த்துப் பழகிவிட்டோம். இவ்வாறாகப் பல எண்ணங்கள் அலைபாய்ந்தன. ஒரு கணத்தில் ஆர்.ராஜேந்திர சோழனுடைய ‘கோணல் வடிவங்கள் ‘ கதையில் வரும் கணவனையும் அவனிடம் உதைவாங்கும் ஆசைக்கிழத்தியையும் நினைத்துக்கொண்டேன்.

அக்கதையில் இடம்பெறுபவன் பெயர் கிஷ்டன். ஒருநாள் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் பதற்றமேற்படுத்தும் செய்தியொன்று அவன் காதில் விழுகிறது. தான் உறவாடுகிற பார்வதியின் வீட்டில் முனுசாமி என்பவன் முதல்நாள் இரவைக் கழித்தான் என்பதே அச்செய்தி. செய்தியைக் கொண்டுவந்தவன் சத்தியம் வைத்துச் சொன்னதால் நம்பிவிடுகிறான் கிஷ்டன் . நம்பியதாலேயே குழப்பமும் கோபமும் பதற்றமும் அவன் மனத்தில் நெருப்புப்பொறிகளாக விழுகின்றன. கலப்பையுடன் வேகவேகமாக மாடுகளை அதட்டி ஓட்டிக்கொண்டு செல்கிறான். வீட்டை அடைந்ததும் மனைவி மங்கலட்சுமியை அழைத்து மாடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி சொல்லிவிட்டுப் பார்வதியின் வீட்டுக்குச் செல்கிறான்.

பொழுது சாயும் நேரத்திலேயே வந்துவிட்டவனைப் பார்த்து வியப்படைகிறாள் பார்வதி. ‘திடுக்னு நெனப்பு எடுத்துகிச்சா ? ‘ என்று அருகில் நெருங்கிவருகிறாள். அவன் தன் கோபத்தை அவள்மீது வார்த்தைகளாகக் கொட்டுகிறான். முதல்நாள் இரவு வந்தவன் யார் என்று வெவ்வேறு விதங்களில் மாற்றிமாற்றித் துப்பறிபவனைப்போலக் கேட்கிறான். துளைத்தெடுக்கும் அவன் கேள்விகள் அவளைச் சலிப்படைய வைக்கின்றன. அவள் முதலில் யாருமே வரவில்லை என்று மறுக்கிறாள். பிறகு, தன் கணவன் வந்து இருந்ததாகச் சொல்கிறாள். அவனோ அதை நம்பத் தயாராக இல்லை. ‘ஒழுங்காகச் சொல்லிவிடு ‘ என்று மீண்டும் மீண்டும் அதட்டுகிறான். அவள் வேறு யாருமே வரவில்லை என்று ஆணையிட்டுச் அசான்னதும் அவளிடமிருந்து தனக்குத் தேவையான பதிலை வரவழைக்க முடியாத ஆத்திரத்தில் அவளது தலைமுடியைப்பற்றி இழுத்து அடிக்கிறான். புருஷனிடம் கூட வாங்காத அடி, உதை, வசைகளை கிஷ்டனிடம் வாங்க நேர்ந்ததற்காக விதியை நொந்தபடி ஒப்பாரி வைக்கிறாள் பார்வதி. கட்டிக்கொண்ட மனைவியைவிட பலமடங்கு அருமைபெருமையாகப் பார்த்துக்கொண்டதற்கு இதுதான் பதிலா என்று அவனைப்பார்த்துக் கேட்கிறாள் பார்வதி. தன்னைப்பற்றிக் கேவலமாக நினைத்துப் பேசிய அவனை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள். இருவருக்குமிடையே வாக்குவாதம் வலுக்கிறது. அதுவரை பொதுவாகக் கேட்டவன் ‘முனுசாமி வந்தானா ? அவன் ஏன் இங்கே தங்கினான் ? ‘ என்று குறிப்பிட்டுக் கேட்கிறான். அவள் அதை மறுக்கிறாள். யாருமே வரவில்லை என்று சத்தியம் செய்கிறாள். தனக்கு வேண்டிய பதிலை அவளிடமிருந்து பெறமுடியாத வெறுப்பிலும் விரக்தியிலும் கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறான்.

வேகவேகமாக நடந்து மரத்தடியில் சீட்டாட்டம் நடத்தப்படுகிற இடத்துக்கு வருகிறான். எதிர்பார்த்தபடி முனுசாமி அங்கே ஆடிக்கொண்டிருக்கிறான். பக்கமாகத் தனிமையில் அழைத்துச்சென்று முதல்நாள் இரவைக் கழித்த இடத்தைப்பற்றிச் சொல்லுமாறு அவனிடம் கேட்கிறான். அவன் தொடக்கத்தில் எங்கேயும் செல்லவில்லை என்று சொல்கிறான். பிறகு திரைப்படத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் சைக்கிள் கிடைக்காததால் செல்லவில்லை என்றும் இரவெல்லாம் தொடர்ந்து சீட்டாடியதில் பெருத்த தோல்வியென்றும் சொல்கிறான். மேலும் வலியுறுத்தியபிறகு பார்வதியின் வீட்டுக்குச் சென்று சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டதாகச் சொல்கிறான். அவளிடம் உனக்கென்ன பேச்சு என்றும் பேசிமுடித்துவிட்டு எப்பொழுது வந்தாய் என்றும் மேலும் மேலும் கேட்பதைப் பார்த்து அவன் எரிச்சல் கொள்கிறான். அவள் வீட்டுக்குச் செல்வதைப்பற்றி அவனிடம் ஏன் சொல்லவேண்டும் என்றும் வயதில் மூத்தவன் என்பதால் மட்டுமே தான் மரியாதை கொடுத்ததாகவும் திருப்பி அடிக்கத் தொடங்கினால் அவனுக்கே அவமானம் நேரும் என்றும் அதட்டுகிறான். பார்வதியின் மீதான தன் உரிமையை வெளிப்படையாகச் சொல்லி நிலைநாட்டிக்கொள்ள முடியாத வெறுப்பும் தனக்கு உடைமையான ஒன்றைத் தன்னையறியாமல் வேறொருவன் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு ஏமாந்துவிட்ட எரிச்சலுமாகப் பைத்தியத்தைப்போலாகிறான் கிஷ்டன். போய் உட்கார்ந்து பேசிவிட்டுத் திரும்பியதாக இவன் சொல்கிறான். அவன் வரவேயில்லை என்று சாதிக்கிறாள் அவள். இந்த வார்த்தைகளில் எது உண்மை எது பொய் என்று பிரித்தறிய முடியாத ஆத்திரத்தில் யார்மீது வெறுப்பைக் காட்டுவது என்று புரியாமல் இருளில் குழப்பத்துடன் வீட்டை அடைகிறான்.

வீட்டில் அவன் குளிப்பதற்காக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறாள் அவன் மனைவி. வந்ததும் குளிக்க உட்கார்கிறான் அவன். அவன் முதுகில் அழுக்கைத் தேய்த்தபடி பள்ளிக்கூடத்தில் பிள்ளை சரியாகப் படிக்காத விஷயத்தையும் மணிலாவுக்கு மண்டியில் நல்ல விலை கிடைக்கும் விஷயத்தையும் அடுத்தநாள் காலை வீட்டிலிருக்கிற நாலு மூட்டைகளைக் கொண்டுபோய் போட்டுவிட்டு வரவேண்டிய வேலையைப்பற்றியும் சொல்கிறாள். அவன் மனத்தில் எதுவும் பதியவில்லை. சாப்பிட உட்கார்ந்தபோதும் சும்மா கிளறிக்கொண்டே இருக்கிறான். கடமைக்கு அள்ளிச் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவுகிறான். பிறகு, மூலைக்குப்போய் மேட்டுவளையைப் பார்த்தபடி உட்கார்கிறான். அவன் நடவடிக்கைகளுக்குப் பொருள் புரியாத மனைவி ‘என்னாயா பொண்டாட்டிய பறிகொடுத்தவனாட்டம் நீம்பாட்டுனு போய் குந்திக்ன, குத்துக்கல்லாட்டம் எதுர இருக்கும்போதே ‘ என்று விசாரிக்கத் தொடங்குகிறாள். அத்துடன் கதை முடிந்துவிடுகிறது.

முதுகில் அப்பி இருக்கிற அழுக்கைப் பார்க்கமுடிந்த மங்கலட்சுமியால் அவன் மனத்தில் அப்பியிருக்கிற அழுக்கைப் பார்க்கமுடியவில்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. தண்ணீர் ஊற்றிக் கழுவுவதன் வழியாக முதுகில் படிந்த அழுக்கை அகற்றிவிட முடியும். மனத்தில் படிந்துவிட்ட அழுக்கை எதை ஊற்றிக்கழுவுவது என்கிற கேள்வியும் எழுகிறது. பறிகொடுத்தவனைப் போல அவன் உட்கார்ந்த நிலையில் அவன் மங்கலட்சுமி, பார்வதி இருவரில் யாரை உண்மையான பெண்டாட்டியாகக் கருதினான் என்னும் கேள்வியும் எழுகிறது. அவன் துக்கம் எதற்காக ? மங்கலட்சுமி, பார்வதி இருவரில் யார் தன் துணைவி என்பதைத் தீர்மானித்துக்கொள்ள முடியாததாலா ? பார்வதியின் வீட்டில் முனுசாமி இருந்ததைப் பார்த்ததாகத் தனக்குத் தகவலைச் சொன்னவனுடைய வார்த்தை, தன் வீட்டுக்கு முனுசாமி வரவே இல்லை என்று பார்வதியே சொன்ன வார்த்தை, பொழுதுபோக்குக்காகப் பார்வதியின் வீட்டுக்குச் சென்று சிறிதுநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து திரும்பியதாக முனுசாமியே சொன்ன வார்த்தை ஆகியவற்றில் உண்மையைக் கண்டறிய முடியாததாலா ? காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப்போல, கோணல் பார்வையுடன் பார்ப்பவனுக்கு எல்லாமே கோணல் வடிவங்களாகவே தெரியும். மனத்துக்கு எந்த வடிவமுமில்லை. எந்த இலக்கணமுமில்லை. எந்தச் சூத்திரமும் இல்லை. மனம் என்பது எப்போதும் அறிய முடியாத ஒரு குகை. அறிந்துகொள்ள உருவாகும் முயற்சியின் பதிவுகளே இலக்கியம்.

*

எழுபதுகளில் அறிமுகமாகச் சிறுகதைகளில் தனக்கென்று தனித்தன்மை மிகுந்த கதைப்பாணியையும் கதைஉலகத்தையும் உருவாக்கிக்கொண்டவர் இராஜேந்திரசோழன். அஸ்வகோஷ் என்கிற பெயரிலும் சில சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். வீதி நாடகங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். மனத்தின் ஆழங்களை வார்த்தைகளின் உதவியோடு தேடிச்செல்வதில் பெரிதும் நாட்டமுள்ளவர். சிறகுகள் முளைத்து என்னும் நாவலை எழுதியிருக்கிறார். ‘கோணல் வடிவங்கள் ‘ என்னும் சிறுகதை ‘கசடதபற ‘ என்னும் இலக்கியச் சிற்றிதழில் 1971 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிறகு 1984 ஆம் ஆண்டில் க்ரியா வெளியீடாக வந்த ‘எட்டுக் கதைகள் ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பிலும் இடம்பெற்றது. இவருடைய எல்லாச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது.

திண்ணை பக்கங்களில் ராஜேந்திர சோழன்

  • நான் பண்ணாத சப்ளை

  • பக்க வாத்தியம்

    Series Navigation

  • பாவண்ணன்

    பாவண்ணன்