எது நிஜம், எது நிழல்?

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

கோமதி நடராஜன்


———————-
உறவும் நட்புமாய் உரையாடியவர்,
உறவொடித்து மறந்து செல்லலாம்
ஆனாலும் –
நிழல்கள் ஒடிவதில்லை.
அன்புடன் நெருங்கி இருந்தவர்கள்,
அருகாமை தவிர்த்து நழுவலாம். .
ஆனாலும் –
நிழல்கள் மறைவதில்லை.
பாசமுடன் பக்கத்தில் இருந்தவர்,
பார்த்தும் பார்க்காதது போலிருக்கலாம்.
ஆனாலும்-
நிழல்கள் மாறுவதில்லை.
சிரித்தபடி நம் நட்பை ஏற்றவர்,
சிக்கலென விட்டுப் பிரியலாம்
ஆனாலும்-
நிழலகள் ஒழிவதில்லை.
பாசம் நேசம் நட்பு உறவு எல்லாமே ,
பனை அளவு மாற்றம் கண்டாலும்
தினை அளவுகூட மாறாதிருக்கும்
நிழல்களைப் பத்திரப் படுத்துங்கள்.
உறவாய் நின்றதை உள்ளிழுத்து வையுங்கள்.
அன்பாய் களித்ததை ,அழுத்தி வையுங்கள்.
சிரிக்கும் தருணத்தைச் ,சேர்த்து வையுங்கள்.
பார்க்கும் நிமிட்த்தைப் ,பதிந்து வையுங்கள்.
காரணமே அறியாமல் ,
இழந்துபோன அனைத்தையும்
அப்படியே தேக்கி வைத்துத் ,
திருப்தி படுத்தும் புகைப்படங்களைப் ,
பொக்கிஷங்களைப் போற்றுங்கள்
நிஜங்கள் ,மாறலாம் ,மறையலாம் ,அழியலாம்,
ஆனால்
இங்கே நிஜங்கள் பொய்யாயின,
நிழல்கள் மெய்யாயின.
நிஜங்கள் வரும் போகும்
நிழல்கள்தான் என்றும் நிரந்தரம்.

கோமதி நடராஜன்

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்