எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

பாவண்ணன்


ஊரில் எனக்கும் பழனிக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இருந்தார். நாங்கள் படித்த பள்ளியிலேயே அவரும் படித்தவர். நாங்கள் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது அவர் பதினோராம் வகுப்பில் இருந்தார். பள்ளியிறுதிக்குப் பிறகு அவர் மேற்கொண்டு படிக்கவில்லை. நகைகள் செய்யும் தம் அப்பாவுக்குத் துணையாகத் தொழிலில் ஈடுபட்டார். ஒருபுறம் நந்தியாவட்டைப் பூக்களும் மற்றொரு பக்கம் அரளிப்பூக்களும் பூத்துக்குலுங்கும் அவர்கள் வீட்டு வாசலை ஏரிக்கரைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் நாங்கள் பார்த்துக்கொண்டு செல்வோம்.

அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்தார்கள். மூத்த சகோதர சகோதரிகள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறியிருந்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்கு அவர் பழக்கமில்லை. பார்த்தால் சிரித்துக்கொள்ளும் பழக்கம் மட்டுமே இருந்தது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்துவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பியபிறகு எங்கள் பொழுதுகளை நுாலகங்களிலும் ஏரிக்கரையிலும் செலவழித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் அவர் நெருக்கமானார். அதே நுாலகத்திழூம் ஏரிக்கரையிலும் அவரும் அமைதியைத் தேடிக்கொண்டிருந்தார். கடுமையான நோயாளியாக இருந்த தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலேயே அவர் செல்வமும் பொழுதுகளும் கரைந்துகொண்டிருந்தன. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததால் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பட்டினியாக இருந்தாலும் சிறிதும் வெளியே தெரியாமல் பேசிப் பழகுவார். சாப்பிட்ட வயிற்றோடு அவருடன் பேசுவதில் நாங்கள் பெரும் குற்றஉணர்ச்சியில் ஆழ்ந்துவிடுவோம்.

காலம் நகர்ந்தது. எங்களுக்கு வேலை கிடைத்தது. வெளியூர்க்குப் புறப்பட்டாக வேண்டிய சூழல். பிறகு திருமணமும் நடந்தது. குழந்தைகளும் பிறந்தனர். ஆனால் அந்த அண்ணன் இன்னும் அப்படியே இருக்கிறார். மறைந்துபோன தந்தையின் சமாதிக்குப் பால்ஊற்றிப் பூசை செய்வதில் பாதிநாளையும் நுாலகத்திலும் எரிக்கரையிலும் மீதிநாளையும் கழித்தபடி அதே அரைப்பட்டினிக்கோலம். எப்படியாவது ஒரு திருமணத்தைச் செய்துவைத்தவிட வேண்டுமென நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சிறிதளவும் வெற்றி பெறவில்லை.

திருமண வாழ்வு என்ற ஒன்று உருவானால் வாழ்வின் மீது ஒரு பிடிப்பு உருவாகும், அந்தப் பிடிப்பையே துணையாகக் கொண்டு மேலும் மேலும் உயிர்ப்புள்ள ஒரு வாழ்க்கையை அவர் வாழத் தொடங்கக் கூடும் என்று நாங்கள் கனவு கண்டிருந்தோம். ஆனால் அண்ணனிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. எங்கள் முயற்சிகளை ஆயிரம் காரணங்கள் சொல்லி அவரே முறியடித்தார். அவருக்குள் ஏதோ ஒரு அச்சம் மனத்தை முன்னகரவிடாமல் தடுத்தபடி இருந்ததைப் புரிந்துகொண்டோம். பற்பல எடுத்துக்காட்டுக் கதைகள் சொல்லியும் கூட அவர் மனத்தை எங்கள் விருப்பத்தின் பக்கம் திருப்ப முடியவில்லை. தனிக்கட்டையாகவே வாழ்க்கைப் பாதையைக் கடந்துவிட்டதாலோ என்னமோ துணை என்பதையே அச்ச்முட்டும் ஒன்றாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார். துரதிருஷ்டவசமாக அவருக்குச் சாதகமான வாதங்களுக்குத் துணையாக அவருடைய சொந்தக்காரர்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் சில அமைந்துவிட்டன.

திருமண முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கவே ஏதேனும் ஒரு வேலையிலாவது அவரை அமர்த்திவிட முயன்றோம். நாற்பதைக்கடந்த வயதில் புதிதாக ஓர் இடத்தில் பொருத்திக்கொள்ள முடியாமல் பெரிதும் தடுமாறினார். எந்தக் கோணத்திலும் வாழ்க்கையை அவர் நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயங்கினார். வெளிப்படையான எங்கள் முயற்சிகளை அவர் மதித்தாலும் தயவுசெய்து இவை வேண்டாம் என அவரே தடுத்துச்சொன்ன பிறகு மேற்கொண்டு எங்களால் எதுவும் செய்யவியலாமல் போனது.

‘ஆடறதுக்குன்னு வந்துட்டு ஆட்டத்தயே ஆடாம ஒதுங்கிட்டா எப்படிங்கண்ணே ? ‘ என்று பல சமயங்களில் கேட்டதுண்டு. ‘மத்தவங்க ஆடறதப் பாக்கறமே அது போதாதா ? நெருப்பு சுடும்ன்னு தொட்டுத்தான் தெரிஞ்சிக்கணுமா ? ‘ என்று அழகாக வாதமிட ஆரம்பித்துவிடுவார். ‘ஒருத்தவங்க ரெண்டுபேருக்கு நடக்கறத பொதுவாக்கிப் புரிஞ்சிக்கலாமாண்ணே. வாழ்க்கைன்னா நல்லதுவும் இருக்கும். கெட்டதும் இருக்கும். வாழ்ந்து பாத்துத்தாண்ணே அத தெரிஞ்சிக்க முடியும் ‘ என்போம். ‘எனக்கு என்னமோ அந்த ஆட்டத்துக்கு நான் லாயக்கில்லாதவன்னு தோணுது, விட்டுருங்களேம்பா ‘ என்று சிரிப்பார். ‘இப்ப நாங்கள்ளாம் கல்யாணம் பண்ணிகிட்டு வேலைக்கும் போயிட்டு சந்தோஷமா இல்லையாண்ணே ‘ என்றால் ‘நீங்கள்ளாம் விதிவிலக்குங்க ராஜா. எல்லாரும் ஒங்களமாதிரி இருக்கமுடியுமா ? ‘ என்று மறுபடியும் சிரிப்பார்.

அவருடைய ஒத்துழையாமை எங்களைப் பெரிதும் சோர்வடைய வைத்தது. மெல்ல மெல்ல அவரைச் சந்திக்கும்போது திருமணம், வேலை என்கிற பேச்சையே பேசுவதில்லை என்று முடிவெடுத்தோம். கூடுமான வரையில் அவருடன் நிறைய நேரம் செலவழித்து, நிறையப் பேசி, நிறையக் கதைசொல்லி, அவரை அதிகஅளவில் பேசவிட்டு, அவரது மனப்பாரம் குறையும் வகையில் சிரிப்பூட்டி மகிழவைத்துவிட்டுத் திரும்பத் தொடங்கிவிட்டோம். ஆனால் நல்ல துாய வெள்ளையில் உடை உடுத்திக்கொண்டு மழுங்கச் சவரம் செய்துகொண்டு பளிச்சென்று ஏரிக்கரையில் உட்கார்ந்திருக்கும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் சங்கடத்தில் அடிவயிறு குழையும். எந்தவிதமான உதவியும் செய்ய முடியவில்லையே என்று இயலாமை நெஞ்சைத் தாக்கும்.

படகுச்சவாரி நடக்கிற கரையில் வந்து போகும் ஏதாவது ஒரு படகில் ஏறிவிடப் போகிறமாதிரி நின்றுகொண்டிருப்பவன் நாள்முழுக்க எந்தப் படகிலும் அடியெடுத்து வைக்காமல், ஏறிச்செல்லும், இறங்கிவரும் பயணியரைப் பார்த்தபடியே ஒதுங்கியிருப்பதைப்போல வாழ்க்கையையே எதிர்கொள்ளாதவராகவே நின்றுவிட்டார் அவர். யாருக்கும் பிரச்சனையாகிவிடக் கூடாது என்பது போன்ற எண்ணத்தில் அப்படியே வாழப்பழகிவிட்டார் அவர் .

அண்ணனுடைய முடிவு ஒருவகையில் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்றானாலும் மற்றொரு வகையில் அவரைப் பாராட்டத் தோன்றும். தன் இயலாமையைத் தானே உணர்ந்து ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் மற்றொருவர் வாழ்வில் தான் ஒரு பிரச்சனையாகிவிடக் கூடாது என்பதில் ஆழ்ந்த தீர்மானமும் அவரிடம் இருந்தன. இந்தக் குணத்துக்கு முற்றிலும் நேர்மாறானவர்களும் உலகில் இருக்கிறார்கள். வாழ்வின் எக்கட்டத்தையும் நேர்கொள்ளும் துணிவோ உழைக்கும் ஆற்றலோ இல்லாதவர்களானாலும் வாழ்வின் பிற இன்பங்களைத் துய்க்கும் ஆவலில் திருமணம் செய்துகொண்டு நாளாக நாளாக கழுத்தை நீட்டிய பெண்மணிக்குத் தீராத பாரமாக விளங்கும் ஆட்களைப் பார்க்கும்போது அவர்களுடைய அப்பட்டமான கயமை உணர்வு உருவாக்கும் எரிச்சலைத் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை.

இதுபோன்ற தருணங்களில் காலமெல்லாம் அல்லலுற்றுத் தம் இறுதிக்கணத்தில் அபூர்வமான விதத்தில் தன் கனவு நனவாவதை அனுபவித்து ஆனந்தத்தில் லயித்தபடி உயிர்துறந்த ஒரு பெண்ணின் கதை நினைவில் மிதக்கும். ‘தீராத பிரச்சனை ‘ என்னும் சிறுகதையில் கிருத்திகா தீட்டிக் காட்டிய சித்திரம் அது. புகுந்த வீட்டுக்குச் செல்லும் எச்சுமி என்னும் இளம்பெண்ணின் வாழ்க்கையை முதலில் விவரிக்கிறது கதை. எச்சுமியின் உள்மனம் சிறுவயதிலிருந்தே ஏதோ ஒன்றுக்காக ஏங்குகிறது. ஆனால் அதற்கு ஒரு வடிவம் தரத்தெரியாமல் காலம் முழுக்கத் தவிக்கிறாள் அவள்.

எச்சுமிக்கு யாருமே பாடச்சொல்லிக் கொடுக்கவில்லை. ஒருவிதமான பயிற்சியும் கிடையாது. ஆனால் இசையின் நாதம் அவள் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நிறைவு காணும்பொழுதெல்லாம் இதயத்தில் சுருதி சேர, அந்த உணர்ச்சி ததும்பிப் பாட்டாக வெளிவருகிறது. ஆனால் அவள் பாட்டை ரசிக்கும் மனநிலை அவளுடைய வக்கீல் கணவன் சிவநாதனுக்கு இல்லை. குடும்பத் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அக்கறையும் இல்லை. விருந்தாளியைப்போல வீட்டுக்கு வந்து திருடனைப்போல மாயமாக மறைந்துவிடுபவன். அவன் செய்கைக்கான காரணம் என்னவாக இருக்குமென்று அவள் பல முறை யோசனைகளில் ஆழ்ந்து ஏதேதோ பதில்களை உருவாக்கிக்கொள்வாள் எச்சுமி. சம்பாதிக்க இயலாத தன் பலவீனத்தை மறைக்கவே அவன் இப்படி ஒரு போலி நாடகத்தை நடத்துவதாக எண்ணிக்கொள்வாள். ஆனால் அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. ஏமாந்த உள்ளம் குமுறத் தொடங்குகிறது. ஒரு வருடத்தில் இன்பத்தடாகம் சேற்றுக் குட்டையாக மாறுகிறது. பூசல்களுக்கிடையேயும் ஆண்டுக்கொரு குழந்தையாகக் குடும்பம் வளர்கிறது. ஸ்திரமற்ற சூழல். ஆதாரமில்லாத வாழ்வு. தாய்வீட்டைத் தவிர அவளுக்குப் போக்கிடமில்லை.

தாய்வீட்டிலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தில் சொற்கள் சுடுநெருப்பாக விழுகின்றன. பிரசவத்துக்காக வந்திருக்கும் தங்கையைப் பெற்றோர்கள் கொண்டாடும்போது விவரிக்க முடியாத ஒரு கனம் அவள் உள்ளத்தைப் பிடித்து அழுத்துகிறது. தொப்புள் குழியைச் சூழ்ந்து சூழ்ந்து சுருளும் அந்த வேதனையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சங்கீதம் கற்கப்போகும் தங்கைக்குத் துணையாகப்போகும் எச்சுமியைப் பார்த்து விளையாட்டாகப் பாடும்படி சொல்கிறார் வித்துவான். தயக்கத்துடன் அபிராமி அந்தாதியைப் பாடுகிறாள் எச்சுமி. அவள் குரல் வித்துவானையும் உருக்கிவிடுகிறது. தானாகவே முன்வந்து அவளுக்கும் இசையைச் சொல்லித் தருகிறார் வித்துவான். பாடும்போது அவளுக்கும் ஏதோ பூரணமாகிவிட்டதைப் போன்ற உணர்வு எழுகிறது. மறுகணம் சங்கீதம் ஓய்ந்ததும் வாழ்வின் உண்மை நிலையும் கணவனுடைய மூர்க்கமும் அப்பாவின் சுடுசொற்களும் அம்மாவின் மெளனபாவமும் கண்முன் தோன்றி மறைகிறது. ஒவ்வொரு முறையும் பிறந்தகத்தை விட்டுப் புறப்படும்போது இனிமேல் இங்கே வரக்கூடாது என்று பற்களைக் கடித்தவண்ணம் முடிவுசெய்து கொள்ளுவாள். ஆனால் பிள்ளை கள் பட்டினியால் சுருண்டு மூலைக்கொன்றாக விழும்போதும் மனச்சாட்சி இல்லாத சிவநாதன் அவர்களை மொத்தும்போதும் தடுக்கச்சென்று உதைபடும்போதும் அந்த உறுதி கரைந்துவிடும். வேறு போக்கிடமின்றி தாய்வீட்டுக்குள் நுழைவாள்.

பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் இடையே ஓடிஓடி நொந்துபோகிறாள் எச்சுமி. யாரையும் அண்டி நின்று தன் பிரச்சனையைத் தீரத்துக்கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. வருவதை எதிர்கொள்ள சித்தமாகிறாள்.

தோழி ஒருத்தியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு மதுரைக்குச் சென்று ஒருசில வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு அபிராமி அந்தாதி கற்றுத் தந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறாள் எச்சுமி. சிரமமான வாழ்க்கை. வீடுவீடாக நுழைந்து சொல்லித் தந்து பிள்ளைகளை வளர்க்கிறாள். எப்படியோ அவள் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு வந்துசேர்கிற கிராமத்துப்பாட்டிகள் இருவர் அவள் ஜீவனத்தைக் கெடுக்கின்றனர். எச்சுமி அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி நேர் ந்துவிடுகிறது. உளவறிந்து அங்கும் வந்து சேர்ந்துவிடுகிற பாட்டிகளால் மறுபடியும் வேறு ஊருக்குச் செல்கிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. கைக்குழந்தையாக இருந்த பெண் இறக்கிறாள். சின்னப் பிள்ளைகள் காப்பிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு போய்விடுகிறார்கள். தனிமரமாகிற எச்சுமி கொஞ்சம் கொஞ்சமாக பாட்டுச் சொல்லித்தருவதை நிறுத்துகிறாள். கிராமத்தின் முடுக்கிலிருந்த ஒரு வீட்டின் கொல்லைச் சாய்ப்பில் குடியேறுகிாறள். காலையில் அவ்வழியே உழவுக்குச் செல்லும் குடியானவர்களுக்குப் பலகாரம் செய்துகொடுக்கத் தொடங்குகிறாள்.

இரவில் ஒண்டியாகப் படுக்கும்போது அவளுள் சிந்தனைகள் எழுகின்றன. திடுமென தன் அகத்திலிருந்து ஒரு இன்னிசை கிளம்புவதை உணர்கிறாள். பாட்டை நிறுத்திப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இதென்ன இசை என்று அவள் கூர்ந்து கவனிக்கிறாள். அடிவயிற்றிலிருந்து ஒரு சுருதி கம்மென்று எழுகிறது. இதயம் நிரம்பித் தளும்புகிறது. பளிச்சென்று அவள் மூளைக்கு ஒன்று எட்டுகிறது. இதுதானா தொடக்கத்திலிருந்து அவள் தேடுகிற இன்பம் ? இதற்கு முன்னர் இந்த இன்பத்தை நுகர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்க்கையை அடித்துத்துரத்திப் போராடிக் கொண்டிருந்த நெருக்கடியில் மெல்லிய சுருதியின் ரீங்காரத்தைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்பது உறைக்கிறது. சுயவிசாரணை வலுக்கவலுக்க அவளுக்குத் தேவையான இன்பமான நிறைவு அவளிடமே புதைந்து கிடந்ததை உணர்கிறாள். லெளகிக வாழ்வினால் நிறைவு காண முடியுமென்று எண்ணி ஆயுளை வீணாகக் கழித்துவிட்டதை நினைத்து வருத்தமுறுகிறாள். இனிமேலாவது அகத்தில் கூடியிருக்கும் சாந்தமான இன்ப நிலையில் நிம்மதியாக இருக்க விழைகிறாள்.

அச்சமயத்தில் எப்போதோ அவளைவிட்டுச் சென்ற மூத்த மகனுடைய கடிதம் கிடைக்கிறது. மும்பையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது அக்கடிதம். தங்கைக்கும் தம்பிக்கும் திருமணம் செய்துவைத்து விட்டதாகச் சொல்லி அவளைத் தன்னுடன் வந்து இருக்கும்படி கோரியிருந்தான். போய்த்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்துக்கொண்டு மும்பை செல்கிறாள் எச்சுமி.

ஆனால் அவளுக்கு மும்பை மகன் வீடு பிடிக்கவில்லை. நல்ல மனைவி, தங்க விக்கிரகத்தைப் போன்ற குழந்தைகள் இருந்தும் அவர்களை மகன் நல்லபடி நடத்தாததைக் கண்டு மனம் வருந்துகிறாள். இளமைக்காலத்தில் தன் கணவன் நடந்துகொண்டதைப் போலவே அவனும் நடந்துகொள்வதைப் பார்த்து வருத்தமுறுகிறாள். அதே சீற்றம். அதே வதை. பொறுப்பை ஏற்க, வாழ்க்கையை நேர்கொண்டு பார்ப்பதில் அச்சம். வாழ்வின் தாங்கொணாப் பாரத்தைத் தாளவியலாத மனித குலமே அப்படித்தான் போலும் என்று நினைத்தபடி சரசரவென்று மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பி விடுகிறாள்.

உண்மை விளங்கிய பிறகு அவள் உள்ளத்தில் சாந்தம் குடிகொள்கிறது. நாதவெள்ளம் அவள் மனத்திலிருந்து கிளம்புகிறது. வாய்விட்டுப் பாடிக்கொண்டிருக்கும்போது திடுமென அவள் வாய்குழற சரிந்து விழுகிறாள். உயிர் பிரிகிறது.

*

‘வாஸவேஸ்வரம் ‘ என்னும் நாவலின் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர் கிருத்திகா. பெண்களின் மனவெளியை எழுத்துக் களமாக்கி நினைவுகளின் ஆழத்தில் மிதக்கும் உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் தர கிருத்திகா எடுத்துக்கொண்ட முயற்சி முக்கியமானதாகும். 1976 ஆம் ஆண்டில் மீனாட்சிப் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த ‘போகமும் யோகமும் ‘ என்கிற தொகுதியில் ‘தீராத பிரச்சனை ‘ என்கிற கதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்