எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

கே.பாலமுருகன்


தினமும் ஒரு கடவுள்
இன்னும் சில சமயங்களில் துரோகி
சில நேரங்களில் இயலாமைவாதி
சில வேளைகளில் தைரியமும் பயமும்
எதிர்பாரா சந்தர்ப்பங்களில் என்னுடன் சண்டையிட்டுக் கொள்ளும்
நானுடன் நான் புரள்வது போன்ற போராட்டத்தில்
என் மீதங்களைக் கொண்டு என்னை நானே தின்பது போல
ஒவ்வொரு பொழுதிலும் விரக்தியுடன் சோம்பலுடன் அயர்ச்சியுடன்
கோபத்துடன் நிதானத்துடன் அலட்சியத்துடன் ஆவேசத்துடன்
அவசரத்துடன்
தினம் ஒரு நான். . .

இந்தச் சமூகத்தின் மீதும் சமூகத்தில் வாழும் சில மனிதர்களின் மீதும் எப்பொழுதும் எனக்கு முரண்பாடுகளும்/விமர்சனங்களும்/ எதிர்வினைகளும் உள்ளன. அதை வெளிப்படுத்தும் முறைகளில் ஒருவேளை போதுமான பக்குவமும் நிதானமும் இல்லாமல் இருக்கலாம். எந்தக் கருத்தையும் முன் வைக்கும் போது அதன் பின்விளைவுகள் அல்லது பாதிப்புகள், அந்தக் கருத்து உருவாக்க போகும் அதிர்வுகள் என நீண்ட சிந்தனையையும் உடன்பாட்டு/முரண்பாட்டுச் சிந்தனையையும் கொண்டிருப்பது மிக அவசியமானது.

எதுவுமே சரியில்லை, என்று நான் என் பார்வையை முன் வைக்கும் போது முதலில் நான் சரியாக இருக்கிறேனா என்று சுய மதிப்பீட்டின் மூலம் என்னை நானே அணுகும் விதத்தில் எனக்குள்ளும் சராசரி மனிதனுக்குள் இருக்கும் பல பலவீனங்கள் எட்டிப் பார்ப்பதை உணர்கிறேன். என் இன்னொரு முகம் பாதாளத்திலிருந்து சிரிக்கிறது.

ஒவ்வொருவரின் அனுபவங்களும் வெவ்வேறானவை. சிலருக்கு ஏற்படும் அனுபவங்கள் அவர்களைச் சீக்கிரமே பக்குவப்படுத்தும், சிலருக்கு அதன் போதாமை காரணமாக தாமதப்படலாம். எல்லோரும் ஒரே கோட்டில் ஒரே நிலையில் இயங்குவதோ பக்குவப்பட வேண்டும் என்று தன்சார்பு நிலையில் இருந்து நிர்ணயிப்பதோ சரிவராது.

கருத்துகளை/எதிர்வினைகளை முன்வைக்கும்போது எந்தத் தனிமனித அவதூறுகளையும் தனிமனிதனின் குணாதிசியங்களையும், அவனைச் சார்ந்த அன்பிற்க்குரியவர்களையும் அதில் தொடர்புப்படுத்துவது சரியான/முறையான விவாதம் கிடையாது. அது ஆரோக்கியமற்றது. ஒருவனின் கருத்தை அல்லது எழுத்தை அணுகும்போது, கருத்தாலும் எழுத்தாலும் மட்டுமே விவாதிக்க வேண்டுமே தவிர அவனைச் சார்ந்த பிறரையும், அவனுடைய அன்பிற்க்குரியவர்களையும், அவனின் தனிப்பட்ட வாழ்வையும் தொடர்புப்படுத்தி பேசுவது, விவாதத்தின் தோல்வியையும், அறியாமையின் வெளிப்பாடுகளையும் காட்டுவதற்குச் சமம்.

எனக்குள் இருக்கும் மகா பலவீனன் சில சமயங்களில் இப்படியொரு காரியத்தைச் செய்துவிடுகிறான். அனேகமாக ஒருவித அவசரமும், கோபமும் இன்னும் ஒரு காட்டாறு போல என்னை இழுத்துக் கொண்டே அலைகிறது. அதன் வாயில் சிக்கியவன் போல திணறிக் கொண்டிருக்கிறேன். சக மனிதனின் அந்தரங்க உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம் ஒருவனின் அந்தரங்க உரிமையும் பொதுநலனும் முரண்படும்போது, பொதுநலனே முக்கியத்துவம் பெறும். அந்தச் சமூக பொறுப்பு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவசியம்.

என் எழுத்தைக் கொண்டு என் பலவீனங்களையும் தோல்விகளையும் பகிர்ந்து கொள்வதில் நான் வெட்கப்படுவதோ அல்லது தயக்கம் அடைவதோ கிடையாது. தாராளமாக என்னை நான் உங்கள் முன் ஒப்புக் கொள்கிறேன். எனக்கென்று மிக இறுக்கமான கொள்கைகள் கிடையாது. நான் கொள்கைகளை உற்பத்திக்கும் இயந்திரம் இல்லை. அளவுக்கு அதிகமான கொள்கைகள் சிரமப்படுத்தும். வாழ்க்கையைக் கடினமாக்கும். புது புது வழிமுறைகளை பயிற்சிகளைக் கொண்டு வரும்.

நான் முரண்படுகிர சிலவற்றை நாகரிகமாக பதிவிடுவதில் கவனம் செலுத்துவேன். எனது எதிர்வினைகளை பதிவிடக்கூடிய காலத்தையும் அளவையும்கூட நானே தீர்மானிக்கிறேன். இதில் பிறரின் ஆலோசனையையும் ஆக்கிரமிப்பையும் முற்றிலும் நான் அனுமதிப்பதில்லை. ஒருவனைச் சுயமாக சிந்திக்க விடுவதும் தீர்மானிக்கவிடுவதும் வரவேற்கத்தக்க விஷயம். சுயத் தேர்வுகளுக்கு மதிப்பளிக்கலாம். முரண்பட்டால் நியாயங்களுடன் தர்க்கங்களுடன் எடுத்துரைக்கலாம்.

கொஞ்சம் நாகரிகமாக, விவாத முக்கியத்துவங்களுடன் தனிமனிதனின் கருத்தை மட்டும் அணுகும் விமர்சன வித்தையைக் கற்றுக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்துவது பலருக்கும் மிக முக்கியமானது.

தனது பலவீனங்களை ஒப்புக் கொள்வது ஒரு சிறந்த ஆண்மை என்று நண்பர் ஒருமுறை(மணிஜெகதீஷன்) சொன்னார். தனக்கு ஏற்பட்டிருக்கும் பிம்பங்களை உடைத்துவிடக்கூடிய சாத்தியங்கள் தோல்விகளை/ பலவீனங்களை ஒப்புக் கொள்வதில் இருப்பதாகவும் தனது சுய மரியாதையைத் தற்காத்துக் கொள்ள தனது அந்தரங்க உரிமையின் ஒரு பிரிவாக தோல்விகளை/இயலாமைகளை சாயம் பூசி மறைவாக நிறுவிக் கொள்கிறான். இன்று அரசியலின் மிக வலிமையான தேர்ந்த தந்திரமே இதுதான். முகங்களை இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அமைத்துக் கொள்வது. அரசியலில் இருப்பவனுக்கு சமூக அங்கீகாரமும் சமூக புகழ்ச்சியும் மிக அவசியமானது. அவனுக்கு தனது பலவகையான முகங்களைச் சேமித்து வைத்துக் கொள்ள ஓர் அபூர்வ அலமாரி தேவைப்படுகிறது.

கருத்து முரண்களை சந்திப்பத்தில் நமக்கு பக்குவமான மனோநிலையும் விமர்சன ரீதியிலான அணுகுமுறைகளும் ஆரோக்கியமான மாற்றுச் சிந்தனைக்கு இட்டுச் செல்லக்கூடிய களமும் தேவை. இறுக்கமான வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் படைப்பாளனுக்குரிய, ஒரு படைப்பாளன் அடைந்திருக்கக்கூடிய பக்குவ முதிர்ச்சியுடன் கையாளுதல் சிறப்பு. சராசரியான ஒருவன் செய்யக்கூடிய அதே செயலைத்தான் படைப்பாளனும் செய்வானென்றால் அது ஒருவகையிலான பின்னடைவு. தனது இயல்பை அறிந்திருக்கக்கூடிய ஒருவன், தன்னுடைய இயல்பில் சிக்கிக் கொள்ளாதபடி எச்சரிக்கையாக இருக்கக்கூடிய ஆளுமை அவனுக்கு இருத்தல் அவசியம். தன்னுடைய இயல்பை நன்கு புரிந்து கொண்டு அதிலிருந்து தன்னைத் தவிர்த்து, நிர்வகித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பந்தய சக்கரம் சுழல
தூரத்திலிருந்து வீசப்படும்
கயிறுகள்.
ஒவ்வொன்றிலும் ஆயிரமாயிரம்
கைகள்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்