ஹெச்.ஜி.ரசூல்
சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் – ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வாகும்.
அப்பா என்ற சொல் தக்கலைப்பகுதி முஸ்லிம்கள் உறவோடும்,உயிர்ப்போடும் சூபிஞானியை பீரப்பா என அழைக்கும் சொல்லாகும். பீர்முகமது அப்பா என்றும் அழைப்பதுண்டு.பெத்தாப்பா என்ற மற்றொரு சொல்லும் அப்பாவின் அப்பா என மூத்த தலைமுறையை மிக நெருக்கமாக குறிப்பிடும் சொல்லாக விளங்குகிறது.தைக்கா(தர்கா)பெத்தாப்பா என்றும் பீரப்பாவை அழைப்பதுண்டு. இப்பின்னணியிலிருந்தே அப்பாவியம் என்ற காவியத்தன்மைப் பொருந்திய தலைப்பிடுதலை நாம் வாசித்துப் பார்க்கலாம்.
முஸ்லிம் மன்னர் அவுரங்கசீப் காசியின்மீது ஆட்சி செலுத்திய காலகட்டம் சார்ந்து தென்காசியில் பிறந்து வீரசைவ வேளாளர்,பாளையப்பட்டுமறவர்,விசுவநாதசுவாமி கோவில் வெங்கடராம சாஸ்திரி உள்ளிட்ட கலாச்சார சூழலில் வளர்ந்து கேரள மாநில வ்டகிழக்கு மலைப்பகுதியான ஆனைமலையில் 25 ஆண்டுகள் தனித்திருந்து இறுதியில் திருவிதாங்கூர் முத்துசாமிதம்பிரான் அளித்த தக்கலைப் பகுதி உறைவிடத்தில் வாழ்ந்து மறைந்த பீர்முகமது அப்பாவின் காலம் கி.பி.1570/1670 க்கு இடைப்பட்டதாக கருதப்படுகிறது.
பீர்முகமதுஅப்பா எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம் என்பதான ஒரு வரலாற்றுத்தகவல் உண்டு.ஞானப் புகழ்ச்சி(686) ஞானப்பால்(33) ஞானப்பூட்டு(38) ஞானமணிமாலை(242) ஞானரத்தினக் குறவஞ்சி(63) திருநெறிநீதம்(3600)பிஸ்மில்குறம்(601) ம அரிபத்துமாலை (612) மற்றும் பல உதிரிப்பாடல்களையும் சேர்த்து தற்போது 4982 பாடல்கள் மட்டுமே வாசிப்பதற்குக் கிடைக்கின்றன.
எச்.முகமதுசலீமின் ஞானப் புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வு மொழியியல் சார்ந்து மாறுபட்டதொரு கோணத்தில் நிகழ்ந்துள்ளது.தமிழ் மரபில் எண்கள் குறித்தும் அரபுலகில் அப்ஜத் கணக்கியல் குறித்ததுமான அணுகுமுறைகள் நிலவில் உள்ளன.இவ்வெண்களின் குறியீட்டியல் தத்துவசமூகவியல் அர்த்தப்பாடுகளும் தொடர்ந்து உரையாடல்களாக முன்வைக்கப்படுகின்றன.முகமதுசலீமின் ஆய்வுப்பரப்போ ஞானப்புகழ்ச்சி பாடல்களில் பீர்முகமது அப்பா பயன்படுத்தியுள்ள எண்கள் குறித்த விரிவான தரவுகளை விவாதிக்கின்றன.அந்த எண்களுக்கு இதுகாறும் கொடுக்கப்பட்டுள்ள விளக்க அர்த்தப்பாடுகளும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
எண்ணல் அளவைகள் பற்றிய தொகையகராதி,திவாக நிகண்டின் சொல்முறைகள் விரிவாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன்.குறிப்பாக ஏகம் (ஒன்று) தசம் (பத்து) சதம்(நூறு) சகசிரம்(ஆயிரம்)ஆயுதம்(பதினாயிரம்) எனத் தொடர்ந்து இறுதியில் மகாகும்பம்(நூறுகோடி) நிகர்வம் மகாகும்பம்(பத்து நூறாயிரம் கோடி)என்பதாக விரிவடைந்திருக்கிற முறையியலை ஆய்வாளர் முன்வைக்கிறார்.இதுபோல் இன்றுக்கும் குறைந்த எண்ணை கீழ்வாய் எண் எனக் குறிப்பதும்,அவை முக்கால்,அரக்கால்,நாலுமா,இருமா,மும்மாகாணி,மாகாணி,வீசம்,மும்மா,ஒருமா,அரைமா, முக்காணி,காணி,அரைக்காணி,எனத் தொடர்ந்து நுணளவைக் கூறை இம்மி என தமிழியலாலர் குறிப்பிட்டுள்ளதையும் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த உரையாடல்களின்வழியாகவே ஞானப்புகழ்ச்சியில் பீர்முகமதுஅப்பா பயன்படுத்தியுள்ள ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு, ஏழு,எட்டு,ஒன்பது,பத்து,பன்னிரண்டு,பதினான்கு,பதினாறு,இருபது,இருபத்துநான்கு,இருபத்தைந்து,முப்பது,நாற்பத்திரெண்டு,நாற்பத்துமூன்று,ஐம்பது,தொண்ணூற்றொன்பது,முன்னூற்று எண்பத்துநான்கு,,ஆயிரம்,ஆயிரத்தொன்று,பதினெண்ணாயிரம்,லட்சம்,
பத்துலட்சம்,எண்பத்துநான்கு லட்சம் என்பதாக 28வகை எண்குறியீடுகளை எழுத்தில் கரைத்துள்ளார்.இவை வெறும் எண்களாக இல்லை ஆன்மீக சூக்கும பரிபாஷையாக நூல்நெடுக வழங்கப்பட்டுள்ளன எனபது ஆய்வாளரின் மதிப்பீடாக உள்ளது.
இதில் நூற்றுக்கு உட்பட்ட எண்குறியீடுகள் 21 பதினெண்ணாயிரத்துக்கு உட்பட்ட எண்குறியீடுகள் 4, லட்சமும் அதற்கு மேலுமுள்ள எண்குறியீடுகள் 3 ம் இடம்பெற்றுள்ளன.
பீர்முகமது அப்பா இந்த எண்குறியீடுகளை கவிதையாக்கி இருக்கும் படைப்பாக்கநிலை குறித்தும் கவனப்படுத்த வேண்டியுள்ளது.
அஞ்சுமறியாமல் ஐபேரும் காணாமல்
நெஞ்சுதனிலேயிருக்கும் நித்தனே
என வரும் பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகளில் இறையை அகவயமாக உணர்தலைக் கூறுகிறது.இந்த அஞ்சு என்பது பஞ்சபூதங்களாக இருக்கின்றன.அஞ்சுகடமையாகவும் அஞ்சுநேரத்தொழுகையாகவும் கூட வெளிப்படுகிறது.. இது அகம்தூய்மை அடையாமல் நிகழும் வணக்கமுறைகளுக்கு மாற்றாக அமைகிறது.இது புறத்திலிருந்தும்,சடங்கியல்களிலிருந்தும்,இறையை விடுதலை செய்யும்நோக்காக கூட வெளிப்படுகிறது.
பதங்கள் மேலும் சிரங்கீழுமாய்
பத்து நூறாயிரம் ஆண்டு ஓதித் தவம் செய்தாலும் போதாதாம்
அவன் அன்றுகந்ததுக்கே.
வேதநபிமுகமதுவின் சந்ததியாக வந்த வெகுநன்றிக்காக தலைகீழாக பத்துநூறாயிரமாண்டு ஓதித் தவம் செய்தாலும் போதாதென உணர்ச்சி மேலிட எழுதிச் செல்கிறார். மனிதப் பிறப்பின் ரகசியமும் வியப்பு மேலிட மிஞ்சி நிற்கிறது.
அஞ்சு,பத்துநூறாயிரம் என பீர்முகமது அப்பா பயன்படுத்திய எண்குறியீடு களில்
மற்றொன்றாக எண்பத்துநான்கு நூறாயிரம்(எண்பத்து நான்கு லட்சம்) குறிப்பிடலாம்.எறும்புக்கடை எண்பத்து நான்கு நூறாயிரத்தில் உறும் பொருளே என்பதான வரிகளில் உயிரினங்களில் மிகவும் சிறியதான எறும்பிலிருந்து துவங்கி தாவரங்கள் விலங்கினங்கள் பறவையினங்கள் மனித இனங்களென எண்பத்துநான்கு லட்சம் படைப்பினங்கல் குறித்த பாரம்பர்ய அறிவினை இவ்வரிகள் கவனப்படுத்துவதை சொல்லிச் செல்கிறது.
ஆய்வாளரின் இத்தகைய கூர்ந்த தேர்வின் நுட்பத்திற்கிடையே பீர்முகமது அப்பாவின் எண்ணியல் கணக்கில் ஆய்வாளரால்விடுபட்ட ஒரு அதிகபட்ச எண்குறியீடும் உள்ளது.அது ஞானப்புகழ்ச்சியின் இறுதிப் பகுதியான துஆ இரப்பில் வரும் சொல்லாடலான எண்ணாயிரம் கோடி என்பதாகும்.
எண்ணாயிரங்கோடி இமையோருள்ளத்தில் – என்பதாக அது அமைகிறது.இந்த எண்ணாயிரங்கோடி அக்காலகட்ட மக்கள் எண்ணிக்கையோடு பொருந்துகிறதா என்பதும் ஆராயத்தகுந்தது.
இச் சூழலில் ஒன்றுக்கும் குறைவான மிகச் சிறியதான நு ண் அளவைக் குறிப்பிடும் எழுத்தியல் குறியீடாக அணுஅணுவாய்,பனித்துளி அதிற் சிறு பதத்துள்ளது,தினைப்போது,எறும்புக்கடை,கொசுவிற்பாதி என்பதான சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன.
எண் அளவைகளைப் போலவே ஏழோடு தொடர்பு கொண்ட கிழமைகள் குறித்த பதிவினூடே பீரப்பாவின் கவிதை எழுத்து நகர்கிறது.ஜிப்ரீல் எனும் வானவர் அள்ளி மண்ணெடுத்து உருவம் உருவாக்கி ஆதமிற்கு இறை உயிரூட்டிய நாள் வெள்ளி,பாழ்நரகமைத்தது சனி.பாருலகு அமைத்தது ஞாயிறு,வானுலகு உருவாக்கம் திங்கள்,சூமனை உருவாக்கியது செவ்வாய்,திசைகள் எட்டையும் ஒலிமூலத்தையும் படைத்தது புதன்,ஊர்வன,பறப்பன்,விலங்கினம் என படைப்பினங்கள் உருவாக்கம் வியாழன்,என்று இது இடம் பெறுகிறது.இதனை பிரபஞ்ச உருவாக்கம் குறித்த புனைவின் அறிவுத்தோற்றவியலாகவும் கருதலாம்.
திறனாய்வாளர் எச்.முகமதுசலீமின் மற்றுமொரு நீள்கட்டுரை இறையின்(அல்லாஹ்)திருநாமங்களை பீரப்பா தமிழில் மறூருவாக்கம் செய்திருக்கும் மொழியியல் பாங்கை விரிவாக ஆய்வு செய்கிறது.அரபுவகைப்பட்ட மொழியியலில் இறையின் 99 பெயர்களை அஸ்மாவுல் ஹுஸ்னா எனக் குறிப்பிடுவதுண்டு.ஆய்வாளர் அல்லாஹ் என்ற சொல்லையும் சேர்த்து 100 பெயர்களாக இதனை விளக்கம் கூறுகிறார்.மாதிரிக்கு ரஹ்மான் என்ற சொல் அருளாளன் என்ற பொருளைக் கொண்டது.இச் சொல்லின் குண இயல்புகள் அருளிறைவனே,அருளுந் தானவனே,அருளுந் துய்யவனே,அருளிறைவனே,அத்தனே அருளே, ஈடேற்று ரஹ்மானே,செய்வாய் ரஹ்மத், என்பதாகவும் இன்னும் பலவாகவும் வெவ்வேறு சொல்நிலைகளில்பீரப்பாவின் பாடல்வரிகளில் இடம்பெறுவதை குறிப்பிடலாம்.
இதுபோல் முந்தகிம் என்ற சொல் தண்டிப்பவன் என்ற அர்த்த உருவாக்கத்தைக் கொண்டுள்ளது.அவத்தமதிலாக்கும் அல்லாஹ்,மிடைதந்து விதனிப்பவனும் நீ,என்பதாகவும்,முஅக்கிர் என்ற சொல் பின் தங்கச் செய்பவன் என்பதற்கு கூட்டுங் கருமத்தை குறைப்பவனே,அமைத்ததை நிமைக்குமுன் அழிப்பவனும் நீயே,என்பதாகவும் பீரப்பாவின் பாடல் வரிகளில் உள்ளது.
இன்னுஞ்சற்றுத் தீவிரமாக
அள்ளுநாயகர்க் கமுதளித்தவன் அடியனுக்கருள் தருகிலாய்
அன்பனே நீ நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே.
என்பதான அர்த்த உருவாக்கமாகவும் கருதலாம்
இவ்வாறாக 99 வகை அரபுச் சொற்களுக்கானதமிழின் மறு உருவாக்கம் (Trans creation)நிகழ்ந்திருப்பதை ஆய்வாளர் விரிவாக எடுத்துரைக்கிறார்.
இறை பற்றிய தத்துவநிலையில் இவ்விளக்கங்கள் இறையை காலம்(Time) வெளி(space)க்கு அப்பாற்பட்ட ஒன்றாக கருதவில்லை.மனித பண்பேற்றப்பட்ட (Anthropomorphism) அடையாளமாகவே முன்வைக்கிறது. எங்கும் ஊடுருவிப் பரந்துள்ள இறை (Divine immanence) என்பதாகவும் ஒரு அர்த்தத்தை உற்பத்தி செய்கிறது.
பீரப்பாவின் எழுத்தில் இரு இனங்களின் கலப்பின மொழிக் கூறு தமிழ்/அரபு என இரட்டை அடையாளங்களின் அரசியலாகி உள்ளது. சித்தர்மரபும் சூபிமரபும் இணந்ததொரு கலாச்சார புதுவெளியும் உருவாகியுள்ளது.
பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகளில் தென்படும் மற்றுமொரு முக்கிய அம்சம் தன்னை தரநீக்கம்(Declass) செய்து கொள்வதாகும்.
தான்/மற்றமை என்கிற எதிர்வுகளில் மற்றமையை மற்றமையாக அங்கீகரிப்பது பின்நவீனத்துவத்தின் முக்கியதொரு கூறு. பீரப்பாவின் பாடல் வரிகளிலோ மற்றமையை(இறையை) மிக உயர்ந்ததாகவும்,தன்னை மிக கீழானதாகவும் தரநீக்கம் செய்யும் பண்பு வெளிப்படுகிறது.மறுமையில் அல்லாஹ்வின் வாசல் சுவர்க்க வாசல். இம்மையான அல்லாவின்வீடு என்பது புனித காபத்துல்லா. இதனை ஒரு குறியீட்டுப் பொருளில் உணரலாம்.இந்த சுவர்க்க வாசலில் அல்லது காபத்துல்லாவாசலில் தான் ஒரு நாய்போல ஒதுங்கி வந்து நிற்பதாக பீர்முகமதப்பா எழுதிச் செல்கிறார்.நாய் போலொதுங்கி நின் வாயல் வந்தேன்.
இந்த தரநீக்கம் என்பது ஒதுக்கப்பட்டவற்றின் ,கீழாக கருதப்பட்டவற்றின் தரப்பாக நிற்பதுமாக உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறாக முகமது சலீமின் ஆய்வினை முன்வைத்து இத்தகையானதொரு உரையாடலை முன் எடுத்துச் செல்ல முடியும்.
செம்மொழி புலத்தின் குமரிமாவட்ட திட்டக் கிளை ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான ஹாமீம் முஸ்தபாவின் கீற்று வெளியீட்டகம் மிகச்சிறந்தமுறையில் இந்நூலை தயாரித்து வெளியிட்டிருக்கிறது
தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தடத்தில் முத்திரைப் பதித்த சிங்கப்பூரில் வாழும் தமிழகம்,சிங்கப்பூர்,மத்தியக் கிழக்கு நாடுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள ஜே.எம்.சாலி அவர்கள் இந் நூலுக்கு ஒரு நெகிழ்ந்த அனுபவப் பதிவாய் அணிந்துரையை வழங்கியுள்ளார்.
இதுபோன்றே தனது தொடர்ந்த இடையறாத கதை எழுத்துக்களாலும் நாவல் படைப்புகளாலும் ,சிறந்த பேச்சாற்றலாலும் தமிழ் இஸ்லாமிய மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள தற்போது சிங்கையில் வாழும் நாவலாசிரியர் ஹிமானாசையது(டாக்டர் சையது இபுராகீம்)
இந்நூலுக்கான மதிப்புரையை வழங்கியுள்ளார்.
அண்ணன் முகமது சலீமின் அப்பாவியம் – ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள் பீரப்பாவின் பாடல்க ளை இன்னும் பன்முகவெளியில் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு எனக்குள்ளும் ஒரு தொந்தரவை செய்கிறது.தூண்டுதல் என்பதைவிட தொந்தரவு என்ற சொல் எனக்கு பிடித்திருக்கிறது.
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- வெந்நீர் ஒத்தடம்!
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- பொதுவான புள்ளியொன்றில்..
- மனப்பிறழ்வு
- இயலும்
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- நானாச்சு என்கிற நாணா
- கடிகை வழி பாதை
- பேராசை
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- நீளும் இகற்போர்…..
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29