புகாரி, கனடா
என் ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஒரு நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன் இன்று…!
O
அன்பைப் பெருக்கி எடுத்து
கண்ணில் சுருக்கி நிறுத்தி
ஆழ உயிர்க் குரலில்
‘அம்மா ‘ என்ற கத்தலோடு
சாம்பல்நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்…!
O
எத்தனையோ முறை
கீறிக் கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக் கொத்திப்
புண்ணாக்கினாலும்
கோபம் கொள்ளாமல்
அத்தனை முறையுமே
சிரிக்கும்
அன்புத் தாய் முகத்தோடு
அமுதள்ளி ஊட்டும்
நிலம்…!
O
சோற்றுத்தட்டின் ஓரங்களாய்
ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடையாய் நடப்பேன் நான்
நாளெல்லாம்…
ஒருபொழுதும் எனக்குக்
கால் நொந்ததில்லை…!
கைசொடுக்கிப் பறிப்பேன் –
என் காலடி அதிர்வுகளை
முகர்ந்த கணமே
சடக்கென ஓடி ஒளிந்து
சத்தமில்லாமல் நகைக்கும்
கள்ளக் களைகளை…!
ஆம்…
களைகளுக்கெல்லாம்
எப்போதுமே
என் நிலச்சொர்க்கத்தின் மீது
நீங்காத ஆசைதான்…!
வந்து வந்து…
‘நானும் நின்னுக்கறேன் ராசா… ‘
என்று
கேட்டுக் கேட்டுக் கெஞ்சும்…!
நானோ அவற்றை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறிவேன் –
என் பயிர்ப் பிள்ளைகளின்
பாலைக்குடித்துப்
பட்டினிபோட்டுவிடாதே
என்ற அதட்டலோடு…!
வயலோ
சமுதாயமோ
களை பிடுங்காமல் விளங்குமா… ?
O
வேண்டும் என்று எண்ணி நான்
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
என் நிலத்தின் மடிகளில்
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
நிலவாசம் சுகமாக எழும்ப எழும்ப…!
என் நெற்றியின் நரம்புகளோடு
சேர்ந்தே ஓடியோடி
என் விழிகளுக்குள் விழுவாள்
நீர்ப் பூக்களாக…!
O
கரும்புக்கட்டா
அல்லது எங்களூர்
சிட்டுக் கட்டழகிகளின்
இடுப்பு வனப்பா என்று கேட்டால்…
சூடு இழக்கும் சூரியன்
அந்தச் சூட்டை
பருவ நரம்புகளுக்குள்
முறுக்கோடு ஏற்றும்
முதுமாலைக்
கிளர்ச்சிப் பொழுதுகளிலும்கூட
திணறித்தான் போவேன்
நான் விடையளிக்க…!
O
‘அடேய்…
நம்ம மச்சக்காளைக்கும்
கொஞ்சம் மிச்சம் வையி… ‘
என்ற காருண்யத்தோடு
நாட்டுச்சரக்கை
செமத்தியாய்ச் சாத்திக்கொண்டு
வேட்டுச்சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்…!
O
முகத்தை
வெட்டி வெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து
கும்மியிட்டு
‘குடுடா காசு… ‘ என்று
மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது…
சல்லிக்காசும் இல்லாத
வெத்துப் பையுடன்
‘எவ்வளவு வேணும்… ‘ என்ற
விடலை எகத்தாளத்தோடு
பருவ நெருப்பு சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்….!
O
இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை…!
தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
அடுத்தடுத்து தையல் போடுவதுமாய்
நாட்கள்…!
பொங்குது பொங்குது பொங்கல்!
கண்களில் பொங்குது பொங்கல்!
O
அன்புடன் புகாரி, கனடா
buhari2000@hotmail.com
- எங்கள் ஊர் பொங்கல்!
- திருப்பிக்கொடு
- பொங்கல்
- பொங்க லோ பொங்கல்!
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்கல் கவிதைகள்
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- அறிவியல் துளிகள்-8
- க(னவு)விதை
- ஜன்னலினூடு பார்த்தல்!
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- இரண்டு கவிதைகள்
- பரிணாமம்
- இனி, அவள்…
- பொங்கல்
- ஒரு சந்திப்பு
- மகள்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை
- எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)
- அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8
- கடிதங்கள்
- இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி
- அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு
- வாசனை
- வேர்கள்
- கொழுத்தாடு பிடிப்பேன்