ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

இராகுலதாசன்


1. 9. 2003 ஆம் நாள் இந்த சூரியன் சிவந்த பூமியாம் சிவகங்கை மண்ணில் கிரகணங்ககள் பதித்த போது சற்று வியப்புற்று உற்றுத்தான் கண் பதித்திருக்க வேண்டும். இதென்ன ஊர் முழுவதும் கண்ணை ஈரமாக்கும் சுவரொட்டிகள்.. .. யாருடைய படம் ? கவிஞர் மீரவுடைய படம்! ஓ ! ஒருவருடம் ஓடி விட்டதா ? என வியந்த சூரியன் தன் கிரணக் கரங்களால் மீராவுக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தி விட்டு மேலே போகிறான்.. .. ..

ச்ிவகங்கைக்குக் கல்வியால், அரசியலால், சமூக சேவையால் பெருமை சேர்த்த பெருமக்கள் அவ்வப் போது மறைந்த பொழுதுகளில் எல்லாருடைய நெஞ்சங்களிலும் ஓர் ஆறுதல் ஒரு ஆசுவாசம் இருந்தது “ பாதகமில்லை மீரா இருக்கிறார்.. .. நம்முடைய மீரா இருக்கிறார்..:

ஆனால் இப்போது அந்த மீரா இல்லை “ மீரா இல்லாத சிவகங்கையா ?” என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை கடந்த ஓராண்டு காலமாக “ மீரா” என்னும் தேமாப் பெயரை நினைந்தும் நினைந்தும் கண்ணீரால் நனைந்தும் நனைந்தும் போன நெஞ்சங்கள் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் அதோ கூடி நிற்கின்றன.

2, சிவன் கோவில் தெற்குத் தெரு” என்ற முகவரி தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத அகவரியாகவே ஆகி விட்டது. இந்த முகவரியில். அன்னம்- அகரம் நிறுவனத்தின் படிகளை மிதிக்காத கவிஞர்கள் தமிழகத்தில் இல்லை. எண்ணங்களை , எழுத்துக்களைப் பாரமாய்ச் சுமந்து திரிந்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இளைப்பாறுதல் தந்த வேடந்தாங்கல் இந்த முகவரி! கவிஞர்கள் , கட்டுரையாளர்கள், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வமுடையவர் சமுதாயச் சிந்தனை மிக்க இளைஞர்கள் அனைவருக்கும் குளிர்தருவாய் தரு நிழலாய் நிழலிட்ட முகவரி இது1

1.9.2003 ஆம் நாள் கவிஞர் மீராவின் முதலாவது நினைவு நாள். புதிய இலக்கித்தின் நாடியாய் நரம்பாய் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்த அச்சக அறையும் அலுவலக அறையும் ஏதோ ஒரு இனம் புரியாத மெளனத்தால் நிரம்பிக் கிடக்கின்றன. அறையின் உள்ளே போகும் ஒவ்வொருவரும் நின்று , தயங்கி உள்ளே நுழைகின்றனர். “ மீரா இங்கே தானே நிற்பார் இப்படித்தானே மாடியிலிருந்து வருவார்; இதுதானே அவர் உட்கார்ந்திருக்கும் இடம்” என்று எண்ணி எண்ணி நுழையும் ஒவ்வொருவரின் கால்கள் சிறிது தளரத்தான் செய்தன.

“ மரணம் என்பது இயற்கைதானே” என்று ஆயிரம் கவிதைகள் செய்த கவிக்கோ அப்துல் ரகுமான் மீராவின் பிரிவைத் தாங்க முடியாமல் துயரத்தின் உருவமாய் அமர்ந்திருக்கிறார் கவிஞர் சிற்பி பேராசிரியர் பாலா பேராசிரியர் சுபாசு முதலிய பெருமக்கள் விழாவின் பணிகளை முறைப்படுத்துகின்றனர்.

முதலாம் நிகழ்ச்சி கவிஞரின் படத்திறப்பு. படத்தை திறந்து வைத்தவர் சிவகங்கை அரச குடும்பத்தைச் சார்ந்த உயர்திரு வே. திருவரங்கராசன் அவர்கள் புகழ் என்னும் மலர் பூத்த பேராலமரம் தான் உங்களுக்குத் தெரியும் எனக்கு அது பயிரான நாற்றாங்கால் காலத்திலிருந்தே அறிமுகம் என்று கவிஞருடனான அநுபவங்களை திருவரங்கராசன் கண்கள் பணிக்க எடுத்துரைத்தார் . மன்னர் கல்லூரிச் சிக்கல்களில் தனக்கு நேர்ந்த தடைகளையும் மீராவ்ின் நியாயமான போராட்ட உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.

“ மீராவோடு நான்” என்ற கருத்தரங்க நிகழ்ச்சி கவிஞர் சிற்பிதலைமையில் அமைந்தது. நட்புறவு -சகோதர பாசம் என்ற உணர்வுகளின்

விளிம்பில் மெய் சிலிர்த்து நின்ற கவிஞர் சிற்பி ஓர் அற்புதச் சிற்பத்தைச் செதுக்குவது போலவே சின்னச் சின்னக் கவித்துவச் சொற்களால் மீராவின் பண்புகளைத் தீட்டிக் காட்டினார். பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் மீரா இருந்த போது பாடக்களைப் பார்ப்பதோடு நூலாசிரியரின் வாழ்க்கைப் பாடுகளையும் மிகுந்த பரிவோடு மீரா சுவைத்து நூல்களைத் தேர்வு செய்வார் என்று சிற்பி குறிப்பிட்டார். மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆசிரியர் மன்ற நிறுவுனரும் சிவகங்கை கல்லூரியில் மீராவுடன் பல ஆண்டுகள் பணியாற்றியவருமான பேராசிரியர் நா. தருமராசன் “ மீராவும் நானும் எதிர் எதிர் முரன்பாடுகளைக் கொண்டு ஒருவரால் ஒருவர் என வளர்தோம். முரன்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பொது நலம் சமுதாய மேம்பாடு என்று வரும் போது இணைந்து சாதிக்க முடியும் வெற்றி பெற முடியும் என்பதற்கு எங்கள் வாழ்க்கையே சாட்சி” எறு உரைத்தார்.

“வயதால் சிறியவராகிய அவர் முந்திக் கொண்டு விட்டாரே என நெகிழ்ந்தார். அடுத்து வந்த கவிஞர் க..வை பழனிச்சாமி ,” மீரா எழுதத் திட்டமிட்ட நாவல் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நாவலின் கதா நாயகன் வேறுயாருமல்ல மீரா தான் நாயகன் .ஓர் அற்புதமான கவிஞன் படைக்க இருந்த நவீனம் நமக்குக் கிடைக்காமல் போனது. தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத நஷ்டம்” என்று வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார்.. மீரா செய்த ஓயாத பயணங்களின் போதெல்லாம் அவருடைய பொருளாகப் பெட்டியில் நூறு ரூபாய் மட்டுமே பெறுமானமுள்ள சட்டையும் வேட்டியும் தான் இருக்கும். மற்றபடி பெட்டிக்குள் இளைஞர்கள் எழுதிய இலக்கியங்களின் கையெழுத்துப் பிரதிகள் தான் நிரம்பிக் கிடக்கும் என்றார்.. தனது மூன்று புத்தகங்களையும் மீராவின் அகரம் வழியே அச்சிட்டு வெளியிட்ட உணர்வுகளை பேராசிரியர் பு. ராசதுரை நேசம் மிகுத குரலில் எடுத்துரத்தார். நூலுக்குப் பெயர் வைத்தல், ஆசிரியர் குறிப்பை எழுதுதல், அட்டையை நேர்த்தி செய்தல், பிழையின்றி அச்சடித்தல் என்று இத்தனை பணிகளையும் ஒரு சேரப் பார்த்த மீரா இல்லையே என்று ராசதுரை மனம் கலங்கினார். ஆனந்த விகடனில் வெளியான தனது சிறுகதையைப் படித்து உடனே ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதி , பிறகு கதைகளை அவராகவே கேட்டு வாங்கி வெளியிட்ட மீராவின் பெருந்தன்மையை தனுஷ்கோடி ராமசாமி உணர்ச்சியுடன் சுட்டிக் காட்டினார்.

அடுத்துப் பேசிய டாக்டர். ம.. பெ சீனிவாசன் மீராவின் மரபுக் கவ்ிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஆசிரியர் மாணவர் என்னும் உறவை மிகவும் நெருக்கமாக்கியவர் உருக்கமாக்கியவர் மீரா என்றும் சுட்டிக் காட்டினார். எழுத்தாளர்தேனி சீருடையான் கவிஞரின் மூன்றும் ஆறும் நூல்தான் தொடர்பை ஏற்படுத்தியது என்றும் கடை என்ற தனது நாவலை மீரா அதன் உள்ளடக்கம் கருதி வெளியிட்டார் என்றும் குறிப்பிடார். கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் நா. சுலைமான் மீராவின் எளிய அணுகு முறைகள் இனிய உரையாடல்கள் பற்றி நினைவு கூர்ந்தார். விஜயா பதிப்பகம் வேலாயுதம் கோவையில் என்னைப்போல் யார் வேண்டுமானாலும் புத்தகம் வெளியிடலாம் ; சிவகங்கைப் பகுதியிலிருந்து நேர்த்தியாய் கால ஓட்டம் உணர்ந்து புதிது புதிதாய் வேறு யாரால் வெளியிட முடியும் ? மீராவால்தான் முடியும் என்றார். சின்ன சின்ன உணவு விசயங்களில் அதே போல் மலர் தயாரித்தல் போன்ற பெரிய விசயங்களில் மீராவின் செயல்பாடுகள் மாசில்லாத குழந்ந்தை மனம் கொண்டவையாக இருக்கும் என்று டாக்டர் மோஹன் நினைவு கூர்ந்தார். மீரா சுவை மிக்க சம்பாஷணைக் காரர் என்றும் அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது தான் “ அன்னம் விடு தூது” பத்திரிக்கையின் வடிவ அமைப்பு உருவானது என்றும் , இளம் கவிஞர்களில் கவிதைகளை “நவ கவிதை வரிசை” என்று மீரா வெளியிட்டது கவனிக்கப் பட வேண்டிய பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.” நான் தமிழ்ப் பணி செய்கிறேன் என்று சொல்லக் கூடிய பெருமை கல்லூரிப் பேராசிரியர்களுக்குள் மீராவுக்கு மட்டுமே உரியது என்று பாராட்டிய கவிஞர் கந்தர்வன், மீரா இல்லை என்றால் தனது படைப்புகள் நூலாகியிருக்க முடியாது என்றார். எட்டைய புரம் பாரதி நினைவகக் காப்பாளர் இளசை மணியன் பாரதி மீது மீரா கொண்டிருந்த அளப்பரிய மரியாதையைச் சுட்டிக் காட்டினார். எட்டையபுரம் பாரதி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற மீரா வழிவகை அமைத்துத் தந்ததை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். என்னை அன்புடன்” அண்ணன்” என்றழைக்கும் தம்பி மீராவை இழந்தது பெரிய இழப்பு என்று பேராசிரியர் நா. இலக்குமணப் பெருமாள் உள்ளம் நெகிழ்ந்தார். தொடக்க காலத்திய உறவுகளைச் சொல்லுவார் என்று மிகவும் எதிர் பார்க்க்கப் பட்ட கவிஞர் நா. காமராசன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அறிவு மதி , மு. பழனிஇராகுலதாசன், சுபாசு, ரவி சுப்பிரமணியன் , பிரான்சிஸ் கிருபா, திலகபாமா ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் மீராவின் பன்முக ஆளுமை குறித்தும் குறிப்பாக அவர் நாலா பக்கங்களிருந்தும் ஜன்னல்களைத் திறந்து வைத்து பல்வேறு சோதனைப் படைப்புகளை வெளியிட்ட துணிவு குறித்தும் கவிஞர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்

விவாதங்கள்- விமர்சனங்கள்

என்ற அமர்வுக்குத் தலைமை ஏற்ற பா. ஜெயப் பிரகாசம் தமிழ் இலக்கியச் சூழலில் குழு மனப்பான்மை பெருகி வ்ிட்டது என்றும் அதனால் ஒரு பக்கம் சார்ந்த கருத்துக்களே திட்டமிட்டு பரப்பப் படுகின்றன என்றார். ஜெயகாந்தன் எழுத்துக்களையே மறுதலிக்கும் அளவுக்கு குழு மனப்பான்மை குரூரம் அடைந்து விட்டது என்றும் மீரா நினைவு நாளைக் கொண்டாடும் போது அர்த்தமுள்ள விவாதங்கள் கட்டமைக்கப் படவேண்டும் என்றார்.

பேராசிரியர் பஞ்சாங்கம் மேலை நாட்டு இலக்கிய அலைகள் பற்றிய விமர்சன நூல்கள் தமிழில் போதுமான அளவு மொழியாக்கம் செய்யப் படவில்லை

என்றும் மீராவின் பெயரால் கூடும் இலக்கிய ஆர்வலர்கள் இது குறித்து ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..

முதலாம் ஆண்டு நினைவு நாளில் “அகரம்” சார்பாக மீராவின் கட்டுரைகள்”, “காலத்தின் குரல்” என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன கட்டுரை நூலை அறிஞர் தமிழண்ணல் வெளியிட விற்பனை வரி விளக்க இதழின் ஆசிரியர் மு. மாரிமுத்து பெற்றுக் கொண்டார். “காலத்தின் குரல்” நூலைப்பேராசிரியர் தர்மராசன் வெளியிட நா. சுலைமான் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் சிறப்புரையாக தமிழண்ணல் பேசும் போது “ மீரா என் மாணவர் ஆனால் என்னை அண்ணன் என்றே பாசமுடன் அழைப்பார். என் மணி விழாவுக்கு ஓர் அற்புதமான மலர் ஒன்று வெளியிடார் . பாரதி பாரதி தாசன் ஆகியோரிடம் ஒரு பன்முகப் பார்வை இருந்தது. இதை நாம் நமது தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

கவிஞர் மீராவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் அறிவித்துள்ள “ மீரா விருது” கவிஞர் ஒருவர் படைத்த முதல் கவிதைத் தொகுதிக்கு ரூ5000/- பாராட்டுப் பத்திரம் என்று அறிவிக்கப் பட்டது..

இந்த ஆண்டுக்கான பரிசை கவிஞர் பிரான்சிஸ் கிருபா தன்னுடைய “ மெசியாவ்ின் காயங்கள் “ என்ற நூலுக்குப் பெற்றார்.ஒவ்வொரு ஆண்டும் விஜயா பதிப்பகத்தின் சார்பாக வழங்கப்படும் என்று உரத்த கரவொலிக்கு இடையே வேலாயுதம் அறிவித்தார்.

நூலையும் கவிஞரையும் பாராட்டிப் பேசிய மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ப. க பொன்னுசாமி தன்னுடைய நூலை வெளியிட மீரா எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை வியந்து பாராட்டினார்.

பரிசுக்கு உரிய நூலின் சில அம்சங்களைப் பாராட்டிவிட்டு நூலில் இடம் பெற்றுள்ள சில பாலியல் விகாரக் கவிதைகளுக்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார். இனி எழுதும் போது இளம் கவிஞரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்வு செய்கிற குழுவினரும் எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இந்த விழாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் கவிஞர் மீரா நினைவகமாக ஆக்குவது என்று எடுக்கப்பட்ட தீர்மானமும் அதற்கான செயல் திட்டங்களும் ஆகும். பெரிய அளவில் நிதி திரட்டி நினைவகம், படிப்பகம், நூலகம் ஆகியன அமைத்து ஆண்டு தோறும் மீரா நினைவை கவிஞர் விழாவாக நடத்துவது என்று அறிவிக்கப் பட்டது.

இன்னொரு முக்கிய நிகழ்ச்சி கவிஞரின் முதலாம் நினைவு நாளில் சாகித்திய அகாதமி தன்னை இணைத்துக் கொண்டு” என் சாளரத்தின் வழியே” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஆகும். தமிழக அகாதெமியின் திட்ட அலுவலர் டாக்டர் இளங்கோவன் மீராவுடன் அகாதமி இணைந்து பெருமைபெறுகிறது என்றார். மீரா நினைவக நிதி பற்றியும் அதன் செயல் பாடுகள் பற்றியும் பேசிய பேராசிரியர் சாகித்திய அகாதமியின் உறுப்பினர் பாலச்சந்திரன் இதுவரை பெரிய பெரிய அரங்குகளில் நடந்த அகாதெமி கவிஞர் மீராவுக்காக சிவகங்கையின் வீதிக்கே வந்துள்ளது என்றார்

முதலாவது நினைவு நாளில் திரண்டிருந்த அனைவருக்கும் மீரா அமைத்த இலக்கிய ராஜ பாட்டை தொடர்ந்து மேலே மேலே செல்லும் எனும் நம்பிக்கை நெஞ்சமெல்லாம் நிரம்பியிருந்தது . அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று தந்தையைப் போல் தாகமும் வேகமும் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் கதிர்,

இரண்டு விழா நிகழ்ச்சியின் போது மீராவின் சாகாத வனம் கவிதையை மீராவின் பேத்தி பிரபஞ்சனா இசைத்து வழங்கியது.

கவிஞர் மீரா நினைவக நிதி அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு

கவிஞர் மீரா நினைவு நிதி

(Poet Meera Memorial Fund)

முகவரி

கவிக்கோ அப்துல் ரகுமான்

24, முதல் கடல் வழிச் சாலை

வால்மீகி நகர்

திருவான்மியூர்

சென்னை-600 041

தமிழ்நாடு

தொலைபேசி: 044-24417737

***

mahend-2k@eth.net

Series Navigation

இராகுலதாசன்

இராகுலதாசன்