உன்னைப்போல் தான் நானும் ?!

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

மீனாட்சி வசந்த்


கட்டிய ஆடையே
கம்பளிப் போர்வையாய்,
கொட்டும் மழையில்
உடல் கழுவி,
சுட்டெரிக்கும் வெயிலில்
குளிர் காய்ந்து,
எதிர்கால கனவுகளை
எரிசாரயத்தில் கழுவி,
கெட்ட வார்த்தைகளில்
ஆற்றாமை கொட்டி,
ஏதோ உண்டு,
எங்கோ தூங்கி,
எலும்புத் தடங்களே
எஞ்சி இருக்க,
சாலையோரம் வாழும்
ஏழைகளும் கூட…
நம்
சொந்தமென்ற வருத்தம்
உனக்கும் உண்டா ?
…………..
உன்னைப்போல் தான் நானும்.

வார்த்தைகளில் ஏமாற்றி,
நிரந்தரத் தேவைகளை
நினைத்தும் பாராமல்,
அன்றாடத் தேவைகளை
இலவசமாய் அறிவித்து,
மக்களை மறைமுகமாய்
பிச்சைக் காரர்களாக்கும்,
இந்திய அரசியலில்
வெறுப்புண்டா உனக்கு ?
(வி..ரு..ப்..ப..ம் இருந்தும்)
உன்னைப்போல் தான் நானும்.

சாதி மதங்களை
அடிப்படையாய் கொண்டு,
சான்றிதழும் அச்சடித்து,
படிப்புக்கும் வேலைக்கும்
பகிர்ந்தளிக்கும் திட்டங்கள்,
உலக நாடுகளில்
இந்தியாவில் மட்டும்!! ?,
உடன்பாடில்லையா உனக்கு ?
உன்னைப்போல் தான் நானும்.

மனிதர்கள் அதிகமின்றி சின்னதாய்,
நிலப்பரப்பில் சின்னதாய்,
கணிவளத்தில் சின்னதாய்,
காய்களும் இன்றி
கனிகளும் இன்றி
நிலையில்லா இயற்கையோடு
எத்தனை நாடுகள்,
சின்ன சின்ன நாடுகள்!!!,
எப்படிப் பிடித்தன
பொருளாதார ஏற்றத்தை ? ? ?,
என்னவில்லை இந்தியாவில் ?!!
ஏன் இன்னும் வறுமை ?.
………………
நினைத்துப் பார்ப்பதுண்டா ?
உன்னைப்போல் தான் நானும்.

அடிப்படை வசதிகளே
அனுபவிக்காத fனங்களிடம்,
கனிப்பொறி யுகத்தின்
ஜாம்பவான்கள் நாமென்று,
சொன்னதில்லையா நீயும் ?
அசிங்கப் படுகிறேன்
உன்னைப்போல் தான் நானும்.

எலெக்ட்ரானிக் வளர்ச்சியின்
வியாபார யுத்தத்தில்,
பக்கத்து நாடுகள்
வேகமாய் போட்டியிட,
பத்து வருட
பழைய செல்போனையும்
ஆச்சர்யமாய் பார்ப்பார்-நம்
கஸ்டம்ஸ் அதிகாரி!! ?
அத்தோடு ஆயிரம்
கேள்விகளும் கேட்பார்!!
……………
என்ன சொல்லி
எப்படித் திட்டுவதெனெ ? ? ?
உன்னைப்போல் தான் நானும்.

பெண்ணுரிமை மறுக்கும்
ஆண்களும் பெண்களும்,
ஆணினம் வெறுத்திகழும்
பெண்களும் ஆண்களும்,
சமஉரிமைப் பந்தலில்
வந்தமர சரியென்றால்…
உனக்கும் மகிழ்ச்சியா ?
உன்னைப்போல் தான் நானும்.

அரசுப்பணியின் மெத்தனம்,
அசிங்கமாக்கப்பட்ட அரசியல்,
அதிகாரத் திமிர்,
பதவி வெறி,
பணக்காரச் செருக்கு,
பொதுமக்களின் அலட்சியம்,
சோம்பேறியின் திருட்டு,
பட்டினிச் சாவுகள்,
கெட்டுப்போன சட்டம்,ஒழுங்கு,
………………..
நித்தமொரு செய்தி
சொல்லிக் கொண்டேயிருக்க…,
எல்லாம் கண்டும்
என்னைப் போல்,
வெட்கமின்றி நடமாடும்
என்னைப் போல்,
நூறு கோடி மனிதர்களுள்
என்னைப் போல்,
தயவு செய்து
இருக்காதே நீயும்…
***********************
MSV001@MAERSKCREW.COM

Series Navigation

மீனாட்சி வசந்த்

மீனாட்சி வசந்த்