உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

பரிமளம்


முன்பே குறிப்பிட்டதுபோல் அறிவியல் கறாரான கடுமையான விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவது. முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவியல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தன் எல்லைகளை அது உணர்ந்தே இருக்கிறது. இந்த அறிவியலின் அருகே தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத பொய்யான அறிவியலும் (Pseudo Science) செழித்தே வளருகிறது. உண்மை அறிவியலை விடவும் இந்தப் பொய் அறிவியலுக்கு மக்களிடையே வரவேற்பும், செல்வாக்கும் பல்வேறு ஊடகங்களிடையே ஆதரவும் அதிகம். அறிவியல் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதும், அறிவியல் போன்ற ஆய்வு முறைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வதும், அறிவியல் துறை சார்ந்த அறிஞர்களால் வெளியிடப்படுவதும் போலிகளுக்கு வலிமையைச் சேர்க்கின்றன.

பல அறிவியல் கருத்துகள் அவை வெளியான காலத்தில் அன்றைய அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கலிலியோ முதற்கொண்டு எத்தனையோ விஞ்ஞானிகள் ஏளனம் செய்யப்பட்டனர். வெகுகாலத்துக்குப் பிறகே அவை சரியானவை என்பது உறுதியாயிற்று. இறந்த பிறகே பலர் பாராட்டப்பட்டனர். போலி அறிவியலுக்கு இது மிகவும் சாதகமாகிவிட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் இப்போது நிராகரிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

உளவியலுக்குப் போலியாக அதீத உளவியல் (Para Psychology) என்றால், நவீன மருத்துவத்துக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ ஓமியோபதி, அக்குபங்சர், நம்பிக்கையின் மூலம் குணப்படுத்தல் (faith healing), கிறித்துவ மருத்துவம், மாற்று மருத்துவம் என்னும் போலிகள் உள்ளன. இது போலவே வானவியலுக்குச் சோதிடம், பரிணாம வளர்ச்சிக்குக் கடவுளின் படைப்பு என அறிவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் போலிகள் மலிந்துள்ளன.

ஆவிகளுடன் பேசுதல், தரையடியில் மறைந்துள்ள கனிமங்களையும் நீரையும் கண்டுபிடிக்கும் தடி, காற்றில் மிதத்தல், குறி சொல்லுதல், விண்வெளி மனிதர்கள்; இவர்களால் கடத்தப்படுவது, பறக்கும் தட்டுகள், வாஸ்து, பேய்கள், பில்லி சூனியம், வயல்வெளி வரைபடங்கள், பிரமிட் மர்மங்கள், பைபிள் ரகசியங்கள், லிங்கத்தையும் விபூதியையும் வரவழைத்தல், மை போட்டுப் பார்த்தல், காந்தக் கல், ராசிக் கல், வசியம், ரசவாதம், குருடர்கள் பார்க்கிறார்கள்; முடவர்கள் நடக்கிறார்கள், உலகம் அழியப்போகிறது என்று மக்களை ஏமாற்றவும், ஏமாறவும் எத்தனை எத்தனையோ பொய்கள் இருக்கின்றன.

இவற்றுள் திடாரென ஏற்படும் உள்ளுணர்வு, அதிசய நிகழ்ச்சிகள், ஆழ்மனதின் ஆற்றல் பற்றி உதயமூர்த்தி குறிப்பிடும் பல உண்மைச் சம்பவங்களில் ஒரு சிலவற்றின் உண்மையைப் பார்ப்போம். (தேவையின்மை கருதி உதயமூர்த்தி பல பெயர்களுக்குரிய ஆங்கில வடிவங்களைத் தரவில்லை. நூலிலிருந்து எடுக்கப்பட்ட பின் வரும் பகுதிகளில் உள்ள ஆங்கில அடைப்புக்குறிகள் என்னால் இடப்பட்டவை)

{ஐரோப்பாவில் முன்பு, ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்மணிகளுக்கு ‘பர்யரியுல் ஜுரம்’ (Puerperal fever) என்ற ஒரு வியாதி ஏற்பட்டது. அதன் விளைவாகப் பலர் மாண்டனர். காரணம், அப்போது டாக்டர்கள் பிண அறுவை அறையிலிருந்து நேராக வந்து பிரசவம் பார்ப்பார்கள். அவர்கள் கையிலிருந்த கிருமிகள் ஒட்டிக்கொண்டு, பிரசவித்த பெண்மணிகள் சுரம் கண்டார்கள். இது நிகழ்ந்தது பாஸ்டியூர் (Louis Pasteur) காலத்திற்கு முன்; அதாவது கிருமிகள் நோய்க்குக் காரணம் என்று அறியப்படாத காலம். சேம்பல் ஓய்ஸ் (Ignaz Philipp Semmelweis) என்ற மருத்துவர், ‘பிண அறையிலிருந்து வரும் மருத்துவர்கள், கைகளை வெகு சுத்தமாகக் கழுவிக் கொண்டு வரவேண்டும். அங்கிருந்துதான் இவ்வியாதி வருகிறது’ என்று சொன்னார். அதாவது மருத்துவர்கள்தான் நோய்க்குக் காரணம் என்றார் அவர். ‘மருத்துவர்கள் கொலைகாரர்களா ?’ என்று மருத்துவ உலகம் வெகுண்டு எழுந்தது. சேம்பல் ஓய்ஸ் தம் காலத்திற்கு முன் ஓர் எண்ணத்தைக் கண்டார். அவர் கண்டுபிடிப்பு உண்மையானது. ஆனால் அதை உலகம் ஏற்றுக்கொள்ள – அதற்கேற்ற விஞ்ஞான ஆதாரங்கள் வெளிவர – நாளாயிற்று.

மார்க்கோனியும் சேம்பல் ஓய்சும் காலத்தைக் கடந்த உண்மையை உள்ளுணர்வு மூலம் கண்டார்கள். ஆதாரங்கள் பின்புதான் வந்தன. மனம் எங்கோ மூலாதாரத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறது.

காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை உள்மனம் – உள்ளுணர்வு கூறுகிறது. நாம் அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் (பக். 102, 103)}

செமல்வைசின் (1818 -1865) கண்டுபிடிப்பை அவர் மனநோயாளியாகி இறக்கும் வரை அப்போதைய மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. ஆனால் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு மூலம் அவர் தம் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பது காரண காரியங்கள் மூலம் எளிதில் நிராகரிக்கக் கூடிய ஒரு பொய். உண்மையில் செமல்வைசின் கண்டுபிடிப்பு ஒரு அறிவியல் ஆய்வு எவ்வாறு செய்யப்பட வேண்டும்; ஒரு அறிவியல் ஆய்வாளன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பனவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.

அக்கால ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில் இருந்தது போலவே செமல்வைசின் பொறுப்பிலிருந்த ஒரு மகப்பேறு மருத்துவ மனையிலும் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் சுரம் (Puerperal fever) கண்டு இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கவலை தரும் விதத்தில் அதிகமாக இருந்தது. பெண்கள் மருத்துவ மனைக்குச் செல்லவே பயந்தனர். இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று செமல்வைஸ் விரும்பினார். முதலில் என்ன நடக்கிறது என்று ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தார். குழந்தைகளை ஈன்ற பின் மருத்துவமனையில் சேர்க்கப்படும் தாய்மார்களின் இறப்புவிகிதம் குறைவாக இருந்தது. அதோடு மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கவனித்து வந்த மருத்துவமனை வார்டில் இறப்புவிகிதம் அதிகமாகவும், தாதியர்கள் கவனித்து வந்த வார்டில் இறப்புவிகிதம் குறைவாகவும் இருந்ததைக் கவனித்தார். பிறகு இவர்களை இடம் மாற்றி வேலை செய்ய வைத்தார். இறப்புவிகிதமும் இடம் மாறியது. இதனால் நோய்க்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. தொடர்ந்து, நோய் கண்டு இறந்த ஒரு தாயின் பிணச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கையை வெட்டிக் கொண்ட செமல்வைசின் தோழர் ஒருவர் தானும் puerperal fever கண்டு இறந்து போனார். இதிலிருந்து நோயாளிகளிடமிருந்து நோய் பரவுகிறது என்றும் பிணச்சோதனை செய்யும் மருத்துவர்கள் நோய்க்கிருமிகளை ஏந்திச் சென்று பரப்புகிறார்கள் என்றும் முடிவுக்கு வந்து மருத்துவர்கள் அனைவரும் நோயாளிகளிடம் செல்லும் முன் கட்டாயமாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்று ஆணையிட்டார். அதன் பிறகு இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. ஆனால் மூத்த மருத்துவர்கள் இந்த ஆணையை விரும்பவில்லை. நாட்டின் வேறு பகுதிகளிலிருந்த மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். செமல்வைஸ் வேலையை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இறப்புக்குப் பிறகே இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

கவனித்தல், அதன் மூலம் ஒரு கருதுகோளை உருவாக்குதல், இக்கருதுகோளை நிரூபிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்னும் அறிவியல் நெறிப்படி அமைந்ததே அல்லாமல், உதயமூர்த்தி கூறுவது போலக் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வுக்கும் செமல்வைசுக்கும் ஏதும் தொடர்பில்லை.

மேல் விவரங்களுக்கு

http://www.projectcreation.org/CStation/v8n1-strong.htm

http://www.newadvent.org/cathen/13712a.htm

http://inventors.about.com/library/inventors/blantisceptics.htm

http://www.np.edu.sg/~dept-bio/ssm/news/apr_jun99/ignaz.htm

***

{சார்ல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற விஞ்ஞானி டார்வின் போல பரிணாமக் கொள்கைபற்றி ஆராய்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் மருத்துவமனையில் கடும் சுரம் வந்து படுத்திருந்தபோது, பல விஷயங்கள் இவருக்குப் புலனாயின. சார்லஸ் தன் எண்ணங்களை ஒரு தாளில் எழுதி டார்வினுக்கு அனுப்பினார்.

டார்வின் அதைப் படித்ததும் அயர்ந்து போய் விட்டார். பல ஆண்டுக்காலமாக உழைத்து அவர் உருவாக்கிய ‘வாழத் தகுதியுள்ளதே வாழ்கிறது’ என்ற பரிணாமக் கொள்கையைத் தமக்கு முன் வாலஸ் எழுதிவிட்டாரே என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. பரிணாமக் கொள்கைக்கு டார்வினுடன் வாலசுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டது.

கடும் சுரத்தில் மூளையில் ஏற்பட்ட மாறுதல்கள் எப்படிப் பரிணாமக் கொள்கையின் தத்துவங்களை வாலசுக்குக் கொண்டு தந்தது என்பதைக் கவனியுங்கள். (பக்.107)}

வாலஸ் சுரம் கண்டு மருத்துவமனையில் படுத்திருந்த காலத்தில் அவருக்குப் பல விஷயங்கள் புலனாயின என்பது உண்மையே. ஆனால் அதற்கு முன் அவர் பல ஆண்டுகள் தென்னமெரிக்கக் காடுகளில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மருத்துவமனையில் படுத்திருந்தபோது கிடைத்த ஓய்வு அவரது மூளைக்கு வேலை கொடுத்திருக்கிறது. ‘வாழத்தகுதி உள்ளதே வாழ்கிறது’ என்னும் தன் புதிய கண்டுபிடிப்பை எழுதி, முன்னரே கடிதம் மூலம் அறிமுகம் ஆனவரும், தன்னைப் போலவே உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டவருமான டார்வினுக்கு அனுப்பினார்.

படிப்பறிவில்லாத ஒரு மனிதன் திடாரென ‘வாழத்தகுதி உள்ளதே வாழ்கிறது’ என்னும் உண்மையை டார்வினுக்கு முன் கண்டறிந்து சான்றுகளுடன் அதைக் கடிதமாக எழுதியிருந்தால் ஒருவேளை காரண காரியமற்ற உள்ளுணர்வின் மகத்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதே துறையில் பல ஆண்டுகள் ஆர்வம் காட்டிவந்த வாலசுக்கும் திடாரென மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.

ஒரு கண நேரம் நம் அறிவை அப்பால் ஒதுக்கிவைத்துவிட்டுச் சில கண்டுபிடிப்புகள் காரண காரியமற்ற திடார்ச் சிந்தனையால் விளைகின்றன என்று ஏற்றுக் கொண்டாலும், காரண காரியத்துடன் கூடிய சிந்தனை முறைகளால் விளையும் ஆயிரக் கணக்கான கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட அவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. ஆனால் தம் நம்பிக்கைக்குத் தடையாக இருப்பதால் உதயமூர்த்தி அவற்றை ஏறிட்டுப் பார்ப்பதில்லை.

மேல் விவரங்களுக்கு

http://www.wku.edu/~smithch/home.htm

***

{இரண்டாம் உலக மகாயுத்த சமயத்தில் காப்டன் ரிக்கன் பேக்கரும் (Eddie Rickenbacker) அவருடைய எட்டு உதவியாளர்களும் பசிபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பித் தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை; குடிக்கத் தண்ணீர் இல்லை; வழியோ தெரியவில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதைத் திறந்து, ‘தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைப்படாதே’ என்ற மாத்யூவின் வாசகங்களைப் படித்தனர். படித்த ஒரு கண நேரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாகப் பிடித்து அனைவருக்கும் அதை உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் வானம் கறுத்து இடியுடன் மழை பெய்தது. அவர்கள் குடிக்க நல்ல தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது ‘நாங்கள் பிழைத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் இவர்கள் படகைப் பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த ரிக்கன் பேக்கரின் சம்பவம், ஒரு நடந்த உண்மைச் சம்பவம். அமெரிக்கா பூராவிலும், ரிக்கன் பேக்கரோடு உடன் இருந்த மற்ற ஏழு நபர்களின் சாட்சியத்துடன் இச்செய்தி வெளியாகியது; எங்கும் பேசப்பட்டது. (பக். 71, 72)}

பிரார்த்தனையின் வழியாக வெளிவரும் ஆழ்ந்த நம்பிக்கையின் சக்தியை விளக்குவதற்காக Reader’s Digest பாணியிலான இந்த(உண்மை)க் கதை கூறப்படுகிறது. கதையிலும் பிரார்த்தனை முழுவதும் பலிக்கவில்லை. படகில் இருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஆனால் இறந்துபோன செய்தியை உதயமூர்த்தி திறமையாகக் கையாண்டிருக்கிறார். கடலில் அவர்கள் எத்தனை நாள்கள் தவித்தனர் என்னும் விவரத்தையும் உதயமூர்த்தி தரவில்லை.

ரிக்கன்பேக்கர் ஒரு விமானப்படை விமானி. பசிபிக் கடலில் வழி தவறிச் சென்று, எரிபொருள் தீர்ந்து போனதால் விமானத்தைக் கைவிட்டு இவரும் உடனிருந்த எட்டு உதவியாளர்களும் (crew) படகில் மிதக்க வேண்டிய நிலை; கைவசமிருந்த சொற்ப உணவும் விரைவில் காணாமல் போயிற்று. எட்டாவது நாளன்று ஒரு கடல் புறா ரிக்கன்பேக்கரின் தலையில் அமர அதைப் பிடித்து உண்டனர். நீரும் உணவும் இன்றிக் கடலில் பல நாட்கள் மிதந்ததால் உடல் வற்றிக் களைத்துக் காய்ந்து போன நிலையில் இவர்கள் 24 நாள்களுக்குப் பிறகு காப்பாற்றப் பட்டனர்.

இவர்கள் காப்பாற்றப்பட்டது வியப்பான செய்திதான் என்றாலும் இதில் பைபிளின் மகத்துவம் உண்டு என்பதும் ஒரே ஒரு கடல் புறா கிட்டத்தட்ட இரண்டு வார காலத்துக்கு ஒன்பது பேருக்கு உணவாக இருந்தது என்று கதை விடுவதும் அறிவின்பாற்பட்டனவல்ல.

மேல் விவரங்களுக்கு (பைபிள் வாசித்த விவரம் எனக்குக் கிடைக்கவில்லை)

http://www.lib.auburn.edu/archive/flyhy/101/eddie.htm

http://www.acepilots.com/wwi/us_rickenbacker.html

***

{எண்ணங்கள் மூலம் உயிரற்ற ஜடப் பொருள்களைக் கூட ஆட்டி வைக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்கூடாகக் கண்டிருக்கின்றனர்.

யூரி கெல்லர் (Uri Geller) என்ற இஸ்ரேல்காரர் ஒரு சமயம், தமது மன எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஓர் உலோகத்துண்டை வளைத்துக் காட்டினார். எண்ணங்கள் நமது உடலை மாத்திரம் பாதிப்பதில்லை; பிற உயிர்களைப் பாதிக்கும்; ஊடுருவும்; ஏன், உயிரற்ற திடப்பொருள்களைக்கூட ஆட்டிப் படைக்கும் வலிமை படைத்தவை (பக்.49)}

அதீத மனம் கொண்டவர்களில் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் யூரி கெல்லர் பல ஆண்டுகளாக மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கரண்டியை வளைக்கும் (Spoon bending) தன் வித்தையைச் செய்துகாட்டி வருகிறார். அவரிடம் இருக்கும் பல்வேறு அதியற்புத திறமைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்கர்கள் நிலவில் விட்டுவிட்டு வந்த கேமராவை எண்ணத்தின் ஆற்றலால் மீட்டுத்தர இயலும், விண்கோளில் ஏற்படும் சிக்கலைச் சரி செய்ய முடியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர். அவரது திறமைகள் அளவு கடந்தன. மக்களின் ஆதரவோ இன்னும் அதிகம்.

பொய்களையும் பொய்யர்களையும் தோலுரித்துக் காட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கும் James Randi என்பவர் யூரி கெல்லரின் மோசடி வித்தைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். இவருக்கெதிராக கெல்லர் தொடர்ந்த வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏதேனும் ஒரு அற்புத நிகழ்ச்சியைத் தந்திரம் இல்லாமல் நிகழ்த்திக் காட்டுபவர்க்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று Randi அறிவித்தும் இதுவரை கெல்லர் சவாலை ஏற்கவில்லை. (எப்போதும் கரண்டியை வளைக்கிறாரே தவிர ஒரு முறையாவது வளைந்த கரண்டியை நிமிர்த்தியதில்லை என்பது வேறொருவரின் கிண்டல்)

யூரி கெல்லர் செய்வது அனைத்தும் மேஜிக் தந்திரமே என்பது Randi போன்றவர்களின் வாதம். கரண்டியை வளைக்கும் சாகசத்தை இவரும் இவரைப்போன்ற மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்களும் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்து காட்டியுள்ளனர். ஆனாலும் கெல்லரின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.

உதயமூர்த்தி கூறுவதுபோல விஞ்ஞானம் இவரது அதிசயத் திறமைகளைக் கண்டு வாய்பிளந்து நிற்கவில்லை.

***

கட்டுரைக்கு உதவியவை:

இணையப்பக்கங்கள்

http://www.csicop.org

http://www.randi.org

http://skepdic.com/geller.html

புத்தகங்கள்

Fads and Fallacies in the Name of Science – Martin Gardner (லெமுரியாக் கண்டம் கற்பனையே என்று நிறுவும் ஒரு கட்டுரையும் இதில் உள்ளது)

Science: Good, Bad, and Bogus – Martin Gardner

Weird Water & Fuzzy Logic: More Notes of a Fringe Watcher – Martin Gardner

Did Adam and Eve Have Navels ?: Debunking Pseudoscience – Martin Gardner

The Night is Large: Collected Essays 1938-1995 – Martin Gardner

An Encyclopedia of Claims, Frauds, and Hoaxes of the Occult and Supernatural- James Randi

The Demon-Haunted World: Science As a Candle in the Dark – Carl Sagan

The Roving Mind – Isaac Asimov

படிக்கக் கிடைத்திருந்தால் உதவியிருக்கக் கூடிய புத்தகங்கள்

Flim-Flam! – James Randi

Truth About Uri Geller – James Randi

The New Age: Notes of a Fringe Watcher – Martin Gardner

***

பி.கு: புத்தகத்தில் நல்ல கருத்துகளே இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. நூலில் உள்ள ஒரு சில அறிவுரைகள் நம் யோகிகளாலும் ஞானிகளாலும் முன்னரே சொல்லப்பட்டவை என்பதால் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

(நிறைவுற்றது)

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

பரிமளம்


எண்ணங்கள் – டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

நாற்பத்தி ஒன்றாம் பதிப்பு 1997 கங்கை புத்தக நிலையம்.

முதற் பதிப்பு 1976

இந்நூல் எழுபதுகளின் ஆரம்பத்தில் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஏறக்குறைய முப்பதாண்டுகள் பழமையான ஒரு புத்தகத்தை இப்போது திறனாய்வு செய்வது அவசியமா என்ற தயக்கம் ஏற்படவே செய்தது. இருந்தாலும் இந்தப் பதிப்பு வெளிவரும் வரை நூலாசிரியர் இந்நூலில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை என்பது இந்நூற் கருத்துகளுடன் அவர் இன்னமும் உடன்படுவதாகவே கருத இடம் தருகிறது. ஆகவே காலம் கடந்தாலும் பரவாயில்லை என்னும் ஆறுதலுடன் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இதற்கு முன் இந்நூலை நான் படித்ததில்லை என்பதும் தாமதத்துக்கான ஒரு காரணமாகும்.

புத்தகத்தின் ‘என்னுரை’யிலிருந்து ஒரு பகுதி:

{கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக மனவளர்ச்சி சம்பந்தமான பல புத்தகங்களைப் படித்தேன். சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினேன். நான் என்னத் திருத்திக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளின் முனைப்புத்தான் இது. மனத்தத்துவம் பற்றியும் அதீத மனம் (Para psychology) பற்றியும், உள சிகிச்சை பற்றியும் கிடைத்த தகவல்களை எல்லாம் படித்தேன். படிக்கப் படிக்க, இவை எல்லாம் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இவ் வாழ்க்கையில் கிடைத்ததே என மகிழ்ந்தேன். (என்னுரை பக்.9)}

இதைப் படிக்கும் ஒரு சராசரி வாசகருக்கு நூலாசிரியனின் உழைப்பும், ஆர்வமும், கல்வியறிவும் கண்டிப்பாக மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. ஆனால் Para psychology அறிவியல் இல்லை என்பதையோ, அறிவியல் உலகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையோ அந்த வாசகர் அறியமாட்டார். வாசகரின் அறியாமை உதயமூர்த்தியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.

‘அதீத உளவியல் (Para psychology) என்பது நம் வாழ்வில் நிகழும் அசாதாரணமான, இயல்புக்கு மாறான, பகுத்தறிவால் விளக்க இயலாத, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட, விசித்திரமான சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். விஞ்ஞானம் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடவில்லை; விஞ்ஞானத்தால் விளக்க இயலாத பகுதிகள் உலகில் பல உள்ளன. விளக்கம் இல்லாத இவற்றை ஆய்ந்து விளக்குவது அதீத உளவியலின் பணி’ என்பது அதீத உளவியல் அறிஞர்களின் வாதம்.

காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. காகம் கத்திய பல நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருப்பார்கள். இதற்கு அறிவியலிடம் விளக்கம் கேட்டால் விடை கிடைக்காது. ‘இரண்டுக்கும் தொடர்பில்லை; இரண்டும் தற்செயல் நிகழ்வுகள்’ என்றுதான் பதில் கிடைக்கும். இங்குதான் அதீத உளவியல் நுழைகிறது. அறிவியலால் விளக்க இயலாத பகுதி இது. நாங்கள் விளக்கம் தருகிறோம் என்று அதீத உளவியல் விஞ்ஞானிகள் அறிவிக்கின்றர்.

‘தூரத்திலிருக்கும் உறவினர் தான் இன்று ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்ததும் அந்த நினைப்பு, எண்ணம் அவர் மூளையிலிருந்து வெளிவந்து காற்றில் மிதந்தபடியே இந்த ஊருக்கு வருகிறது. அதைக் காகம் தன் மூளையில் வாங்கிக் கொள்கிறது. வாங்கியதை வெளிப்படுத்த காகம் கத்துகிறது. கத்துவதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் விருந்தினர் வருகையை அறிகிறார்கள்.’ இது அதீத உளவியல் விஞ்ஞானிகளின் விளக்கம். இது போன்ற விளக்கத்தைக் கொடுப்பவர்கள் சாதாரண மனிதர்களல்லர். நன்கு படித்து அறிவியலில் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்கள். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகே இந்த விளக்கங்களை வந்தடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதீத உளவியல், அறிவியலின் ஒரு பகுதி என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் இது பற்றி ஏராளமான புத்தகங்களையும் எழுதிக் குவிக்கிறார்கள். அதோடு பல பல்கலைக் கழகங்கள் இம்மாதிரியான ஆய்வுகளுக்கு இடம்கொடுப்பதும் பல பல்கலைக் கழகங்களில் இது பாடமாக இருப்பதும் இவர்களுக்கு ஊக்கத்தையும் மக்களிடத்தில் மயக்கத்தையும் ஏற்படுத்துகிறன்றன.

மற்ற அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைப் போலக் கறாரான, கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிரூபிக்கப்படுவதில்லை என்பதால் அறிவியல் உலகம் இந்த ஆய்வுகளையும் புத்தகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யான அறிவியல் (Pseudo Science) என்று இவற்றை நிராகரிக்கிறது. ஆனால் பகுத்தறிவின் ஆய்வுக் கண் கொண்டு நோக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் உதயமூர்த்தி போன்றவர்கள் இவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

‘எண்ணமாவது, காற்றில் மிதப்பதாவது, காகம் அதை உணர்வதாவது’ என்று ஐயுறுபவர்களுக்குப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் :

{(ரமணர் வாழ்ந்த அறைக்குள் நுழைந்தபோது) பேச முடியாத பேரின்பநிலை என்கிறார்களே, அதன் பொருளை என்னால் உணர முடிந்தது. அவர் இறந்துவிட்டதாக என்னால் கொள்ள முடியவில்லை. அவரது கனிவும் கருணையும், அன்பும், அறிவும் எண்ணங்களாக அங்கே மிதப்பதை – நம்மை ஊடுருவுவதை – நான் உணர்ந்தேன். (பக்.36)}

{(அமெரிக்க நண்பர்களுடன் காஞ்சிப் பெரியவரைப் பார்த்தபோது) கனிவு எனும் எண்ணச்சக்தி எங்களை ஊடுருவிக்கொண்டிருந்தது. (பக்.36)}

{மனிதர்களும் சாகிறார்கள். ஆனால் எண்ணங்கள் சாவதில்லை. அவை காற்றில் மிதக்கின்றன. (பக்.37)}

{நமது எண்ணங்கள் செயல்களாகி, பழக்கங்களாகும்போது, நமது எண்ணங்களே நமக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் நமது எண்ணங்கள் நம்மைச் சுற்றிப் பரவுகின்றன. பிறரைப் பாதிக்கின்றன என்பதை மட்டும் மறுக்க முடியாது. எண்ணம் ஒரு சக்தி! (பக்.44)}

{எண்ணங்களை, வார்த்தைக்கு அப்பாற்பட்ட ஒரு வித சக்தி மூலம் மிருகங்கள் உணர்ந்து கொள்கின்றன. ஓர் ஊரில் நாய்களைப் பட்டியில் விட்டுவிட்டு சொந்தக்காரர்கள் வெளியூர் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும் நாளன்று பட்டியிலிருந்த நாய்கள் மிக சாதாரண முறையில் குரைத்ததையும், பழகியதையும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததையும் பட்டிக்காவலர்கள் கண்டார்கள். (பக்.47)}

{மின்காந்த சக்தி புகாத காங்கிரீட் அறைக்குள்ளிருந்து எண்ணங்களை வெளியில் அனுப்ப முடியும். (பக்.48)}

{சோவியத் ரஷ்யாவில்…. மனம் மூலம் மாஸ்கோவிலிருந்து லெனின்கிராடிற்குச் செய்தி அனுப்பினார்கள். இதைப் பற்றி அறியும் போது அமெரிக்க அரசாங்கத்திற்குக் கவலை ஏற்படுகிறது. ஏனெனில் தனது சோதனைச் சாலையில் அமர்ந்த வண்ணம் ஒரு ரஷ்ய மன விஞ்ஞானி, அமெரிக்க ஜனாதிபதியின் மனதில் ரஷ்யாவைப் பற்றி என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று எளிதில் அறிந்துகொள்ளக் கூடும். பிறகு மாற்றுக்குத் தன் எண்ணம் ஒன்றைச் செலுத்தி அமெரிக்க ஜனாதிபதியின் மன ஓட்டங்களை மாற்றிவிட முடியும். (பக் 48)}

எண்ணங்களின் சக்தியை இவ்வாறெல்லாம் விளக்கும் உதயமூர்த்தியின் எண்ணம் எப்படிப் பட்டது என்பதை அறிந்துகொள்ள மேற்கண்ட பகுதிகள் உதவும். இறந்துபோனவர்களின் எண்ணங்கள் இன்னும் காற்றில் மிதப்பதாகக் கதை வேறு! பாரதிதாசனின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் வீசும்’ இப்படிப்பட்ட குப்பைகள் நிறைந்த ஒரு புத்தகம் இது. ஓரு அறிவியல் ஆராய்ச்சியாளர் பகுத்தறிவுக்கொவ்வாத கருத்துகளை வெளியிடுவது புதுமையானதல்ல என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் கேள்விக்கிடமில்லாமல் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதற்குரிய தகுதி உதயமூர்த்திக்கு இல்லை. தனது வெளிநாட்டு முத்திரையையும் படிப்பையும் பயன்படுத்தி இவர் விற்பனை செய்யும் சரக்கு தெருவோரத்தில் ஆண்மையைப் பெருக்க விற்கப்படும் லேகியத்தைவிடவும் கேவலமானது.

‘இந்த மனச்சக்தியையும், எண்ணச் சக்தியையும் பற்றி நம் ஞானிகளும் யோகிகளும் முன்னரே அறிந்துள்ளனர். நமது மனத்தத்துவம் பழமையானது; நமது ஞானிகள் போற்றற்குரியவர்கள். மேல்நாட்டு விஞ்ஞானிகள் இப்போது இவர்களை வியப்புடன் பார்க்கிறார்கள். நம்முடைய யோகச் சாதனைகளின் விளைவாக இன்று விஞ்ஞானமே மாற்றி எழுதப்படுகிறது.’ என்றெல்லாம் பலவாறாக உதயமூர்த்தி பழம்பெருமை பேசுவதோடு இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் தமிழ்ப்பகுத்தறிவு இயக்கத்தை அவ்வப்போது குறைசொல்லவும் தயங்கவில்லை.

***

அதீத உளவியல் எண்ணங்கள் காற்றில் மிதந்து கொண்டிருப்பதை ஆய்வு செய்வதோடு மனதிலிருந்து மனதுக்குச் செய்தி அனுப்புதல் (Telepathy), எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய, பேச்சுகளைக் கேட்கக் கூடிய திறமை (clairvoyance & clairaudience), எதிர்கால நிகழ்வுகளை முன்னரே உணரும் திறன் (precognition), எண்ணச்சக்தியைப் பயன்படுத்தி பொருள்களை நகர்த்தும், வளைக்கும் திறமை (psychokinesis – mind over matter), முற்பிறவி பற்றிய எண்ணங்கள் (Reincarnation), நம் உடம்பை விட்டு நாம் அப்பால் செல்வது (Out-of-body experience), எமனிடம் போய் மீண்டுவருவது (Near death experience), அற்புத நிகழ்வுகள் ( Miracles), ஹிப்னாடிசம், சாமியாடுதல் (Trance) போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளது. இவற்றை நிரூபிப்பதற்காக அதீத உளவியலாளர்கள் தரும் சான்றுகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியவை. ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலைப் போல தரமான அறிவியல் சோதனைக்கு முன் தோல்விகண்டவை. ஆனால் உதயமூர்த்தி இவற்றையெல்லாம் வழக்கம்போல அறிவியல் உண்மைகளாக ஏற்றுக்கொள்கிறார்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

{எண்ணங்களின் சக்தி அனுபவபூர்வமாகவும், விஞ்ஞானச் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்குமுன் ஓர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஆகாயத்திலிருந்த கருமேகக் கூட்டங்களை நோக்கி எண்ணங்களைச் செலுத்தினார். தம் சோதனைச் சாலையிலிருந்தவண்ணம் அந்த மேகக்கூட்டம் கலையவேண்டும் என்று எண்ணினார். தொடர்ந்து – உணர்ச்சிவசப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மேகம் கலைந்தது. இதை மீண்டும் மீண்டும் செய்து காட்டினார் அவர். (பக்.27)}

{மனவியல் அறிஞர்கள் சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள், ‘நமது ஆழ்மனத்தில் பழையகால நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, நமது முற்பிறப்பு நிகழ்ச்சிகள் – சம்பவங்களும் கூடப் பதிவாகியிருக்கின்றன’ என்று (பக்.82)}

{நமது ஊரில் சிலருக்குச் சில சமயம் சாமி வந்து விடுகிறது. அவர்கள் அப்போது புலன்றிவில் இருப்பதில்லை. அப்போது அவர்கள் கூறும் விஷயங்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து பெறப்படுகின்றன. (பக். 108)} (சில நேரங்களில் மக்களை ஏமாற்றுவதற்குச் சாமியாட்டம் பயன்படுகிறதென்பதை உதயமூர்த்தி ஒத்துக்கொள்கிறார் என்றாலும் அடிப்படையை மறுக்கவில்லை)

இவ்வாறே ஹிப்னாடிசம் (பக். 87, 88, 92, 93), நம்பிக்கையின் மூலம் குணப்படுத்துதல் (faith healing பக். 29, 30, 69, 70), போன்றவற்றையும் சிறப்பித்துக்கூறுகிறார்.

(தொடரும்)

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்