ப்ரவாஹன்
தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதை, “ஒரு ஊரிலே ஒரு நிலக்கிழார் இருந்தார். பெரிய செல்வந்தர். அவர் தனது நிலத்தில் வேலை செய்கின்றவர்களை சொல்லொணாக் கொடுமைகள் செய்து வந்தார். ஊர்ப் பிரமுகராகவும் இருந்ததால் ஊரில் உள்ளவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வந்óதார். வயது முதிர்ந்து மரணப் படுக்கைக்கு வந்துவிட்ட அவர் ஊரில் உள்ளவர்களையெல்லாம் அழைத்து நான் இவ்வளவு காலமாக உங்களுக்குப் பல கொடுமைகள் இழைத்திருக்கிறேன். இப்போது மரணப்படுக்கையில் இருக்கிறேன். நான் செய்த கொடுமைகளுக்கெல்லாம் கழுவாய் தேட விரும்புகிறேன். அதற்காக நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அந்த ஊர் மக்களும் மரணப்படுக்கையில் இருக்கிறாரே என்று அவர் மீது அனுதாபம் கொண்டு அவர் கேட்கின்ற உதவியைச் செய்வதாக வாக்கு கொடுத்தனர். அவர் கேட்ட உதவி இதுதான்.
நான் உங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக நான் இறந்தபின்னர் எனது உடலை பல கூறுகளாக வெட்டி பட்சிகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக நீங்கள் போட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறந்த உடலை அப்படிச் செய்வதில் தவறில்லை என்று நினைத்த ஊர் மக்களும் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தனர். ஓரிரு நாட்களில் அவர் இறந்தும் போனார். ஊர் மக்கள் எல்லாம் கூடி அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிற செயலில் இறங்கினர். அவர் இறந்துவிட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியது. அங்கிருக்கின்ற காவல் நிலையத்திற்கும் அந்தச் செய்தி போனது. உடனடியாக காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக அவரது உடலைக் கூறுபோடத் தயாராகிக் கொண்டிருந்த அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? எங்களுக்கு அவர் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக இப்படிச் செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்றனர். அதற்கு அந்தக் காவலர்கள், அஞ்சல் மூலம் தங்களுக்கு ஒரு புகார் வந்திருப்பதாகவும் அதில் அவர் இறந்த பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்ட ஊர்க்காரர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் தான் இறந்ததும் தனது உடலைப் பாதுகாத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தனது உடலைக் கூறுபோடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்ததை காவலர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புகாரையும் காண்பித்தார்கள். பிறகுதான் அவரின் கொடூர சூழ்ச்சியை, செத்தும் அவர் திருந்தவில்லை என்பதை அந்த ஊர் மக்கள் புரிந்து கொண்டனர்.” கிசும்பு என்பது இதுதான்.
இதுபோன்ற கிசும்பைத்தான் கடந்த ஆனந்த விகடன் (29-11-06) இதழில் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் செய்திருக்கிறார்.
வரலாற்று உணர்வின் தேவையை வலியுறுத்த முதற்கண் உண்மையான வரலாற்றைச் சொல்லவேண்டும். பூணூலையும், ஹிட்லரின் ஆரியப் பெருமை முழக்கத்தையும் முடிச்சுப்போட்டு, பார்ப்பனர் என்கிற சொல்லைத் தவிர்த்து, பார்ப்பனர்கள் மீது
வெள்ளாளர்கள் பரம்பரையாகக் கக்கி வருகின்ற விஷத்தை வழக்கம்போலக் கக்கியிருக்கிறார். பார்ப்பனர் என்று நேரடியாகச் சொல்லுவதற்கு பதிலாக மார்பில் நூல் அணிந்தவர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் சூசகமாகச் சொல்லியிருப்பதன் காரணம், ஒருவேளை ஆனந்த விகடன் குழும உரிமையாளர்கள், பார்ப்பனர் என்று எழுதினால் பிரசுரிக்க மாட்டார்களோ என்று அவர் ஐயம் கொண்டிருக்கலாம்.
இன்றைக்கு, சாதி நமது நாட்டில் நிலவும் கொடுந் தீங்கு என்பதில் நமக்கு ஒன்றும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் நமது நாட்டின் என்று மட்டும் இதைச் சொல்வது உண்மையான வரலாறு அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகளுக்கு ஆப்பிரிக்காவில் சாதிகள் இருக்கின்ற உண்மை தெரியும். இந்தியாவை விடக் கொடுமையான நிலையில் ஆப்பிரிக்காவில் சாதி முறை இருப்பதை விளக்கி காலச்சுவடு (செப்டம்பர் 2006) இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவில்தான் சாதிகள் இருக்கின்றன என்று சொல்லுவது முதல் வலாற்றுத் திரிபு.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பேரழிவுச் சூழலில் அழிவின் விளிம்பில் நின்றபோதிலும் ஆதிக்கச் சாதியினர்
செய்த அவமானகரமும் துயரமுமான சம்பவத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் “உயர் சாதி சகோதரர்கள்” என்று அன்பாக வருத்தப்பட்டிருக்கிறார். இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயம், கட்டுரையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பின் மூலம் பார்ப்பனர்கள்தான் அப்படிச் செய்தனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஓரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று பெரிய போராட்டத்தை நடத்தியவர்களில் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்ல, பார்ப்பனர் தவிர்த்த முற்பட்ட சாதிப்பிரிவுகளையும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் சேர்ந்தவர்கள். குஜராத் மாநிலத்திற்கு 13 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அழைத்துச்சென்று 10 நாட்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவன் என்கிற முறையில் நேரிடையாக அறிவேன். இது இரண்டாவது வரலாற்றுத் திரிபு.
‘உழந்தும் உழவே தலை’ என்று சொல்லுகின்ற திருக்குறள்தான் தமிழ் மரபு என்று சொல்கிறார் பேரா. ஆ.சி. ஆனால், திருக்குறளுக்கும் முற்பட்ட வரலாறு தமிழர்களுக்கு உண்டு. புறநானூறு அகநானூறு போன்ற இலக்கியங்களும், தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இலக்கணமான தொல்காப்பியம் என்ற ஒன்றும் உண்டு. “பாணன், பறையன், துடியன் கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்று சொல்லுவது புறநானூறு. எழுத்து, சொல், பொருள் என்று பிரித்து தமிழ் மொழியையும், அகத்திணை, புறத்திணை என்று பிரித்து தமிழ்ச் சமூகத்தையும் இலக்கணப்படுத்திய தொல்காப்பியம்தான் தமிழரின் தொன்மையான இலக்கணம். இது வரலாறு. தொல்காப்பியம் சொல்லுகின்ற தமிழ்ச் சமூக இலக்கணம்:
“நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயுங் காலை, அந்தணர்க் குரிய.
படையும், கொடியும், குடையும், முரசும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.
பரிசில், பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்,
நெடுந்தகை, செம்மல், என்று இவை பிறவும்,
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.
ஊரும், பெயரும், உடைத்தொழிற் கருவியும்,
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.
தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப.
இடை இரு வகையோர் அல்லது, நாடின்,
படை வகை பெறாஅர் என்மனார் புலவர்.
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார், அப் பாலான.
கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல் என மொழிப – பிறவகை நிகழ்ச்சி.
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப – அவர் பெறும் பொருளே.
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே.
வில்லும், வேலும், சுழலும், கண்ணியும்,
தாரும், மாலையும், தேரும், மாவும்,
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய.
அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை.” (தொல்காப்பியம், பொருள் அதிகாரம், மரபு இயல் 71-85)
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (தொல்காப்பியம், பொருள் அதிகாரம், கற்பு இயல் 3-4)
தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இதுதான் உண்மையான இலக்கணம், தமிழ் மரபு என்பதை தமிழ் அறிஞர்கள் அறிவார்கள். பேரா. ஆ.சி. சொல்லுகின்ற திருக்குறள், தொல்காப்பியத்திற்குப் பின்னர் எழுதப்பட்டது. “உழந்தும் உழவே தலை” என்று சொல்லுகின்ற திருக்குறள், தொல்காப்பியம் கூறியிருப்பதை மறுத்திடவில்லை. இதற்கு உதாரணம், “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்கிற குறள். இதன் பொருள் பிறப்பொழுக்கமே முதன்மையானது; அதாவது நற்குடியில், நல்ல சாதியில் பிறக்க வேண்டும் என்பதாம். அதே திருக்குறள்தான் “நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” என்றும் “நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும்” என்றும் சாதிக்கேற்ற புத்தி என்பதைச் சொல்லும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று செய்யும் தொழிலை இழிந்தது என்றும் சிறந்தது என்றும் இலக்கணம் வகுத்தது. இந்தத் தமிழ் வரலாற்றை மறைத்தும் திரித்தும் விட விரும்புவது பேரா.
ஆ.சி. போன்றவர்கள் மரபாக செய்து வந்திருப்பதுதான்.
அதே திருக்குறள், “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்று சொல்கிறது. இந்தியாவின் தீமைகள் அனைத்திற்கும் காரணம் பார்ப்பனர்களே என்று சொல்லுகின்றவர்கள் இதற்கு என்ன பொருள் சொல்வார்களோ நானறியேன். ஆனால் அரசன்தான் அனைத்துக்குமான அதிகாரம் படைத்தவன் என்பதைத்தான் இந்தக் குறள் தெற்றெனச் சொல்கின்றது. ஒருவேளை பேரா. ஆ.சி. இதைச் சொல்லவிரும்பாததற்கு வலுவான காரணம் இருக்கலாம். அது,
தங்களை நிலவுடைமையாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தாங்கள் சேர சோழ பாண்டிய மூவேந்தர்களுக்கு மகற்கொடை -பெண்ணை தானமாகக்- கொடுத்து (மகற்கொடை கொடுப்போர் பெண் கொடுக்கலாமே தவிர அரச குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க முடியாது) மருத நிலங்களை பெற்றுக் கொண்டவர்கள்.
இந்த மகற்கொடையை வைத்துக் கொண்டு தங்களுக்கும் சேர சோழ பாண்டியர்களுக்கும் மண உறவு உண்டு என்றும், அதன்
மூலம் தாங்களே சேர சோழ பாண்டிய மன்னர்களின் சட்டபூர்வ வாரிசுகள் என்றும் சந்தடி சாக்கில் வரலாற்றைத் திரித்தவர்கள். மேற்படி திருக்குறளின்படி பார்த்தால் வரலாற்று பூர்வமான தீமைகளுக்கு மன்னர்கள்தான் பொறுப்பு என்றாகிவிடும் என்பதால் அதனை மறைத்துவிட விரும்பியிருக்கலாம்.
இப்படிப்பட்ட திரிபுகளை செய்வதன் பின்னணி என்ன? ‘பண்டமாற்று முறையில் தேன் கொடுத்து, மீன் வாங்கி உயிர் வாழ்ந்த கலாச்சாரம்’ என்று சொல்லி, தலித் மக்களுக்காக அதிகமும் கவலைப்படுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகிற இவர்களின் சூழ்ச்சி, புலிக்கு பயந்தவனெல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்கிற கதையைப் போன்றது. பார்ப்பனர்களைக் காட்டி தாங்கள் இழைத்த கொடுமைகளை மறைத்துக் கொள்வதுதான். ஒரு பக்கத்தில் தாங்களே நிலக்கிழார்கள் என்றும் மூவேந்தர் பரம்பரையினர் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளுகின்ற அதே நேரத்தில் நிலவுடைமையாளர்கள் தங்களின் உழுகுடிகள் மீது செய்த கொடுமையைப் பற்றிச் சொன்னால் அது பார்ப்பனர்கள் செய்தது என்று கைகாட்டிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்ற சூழ்ச்சியை இன்றுவரையிலும் செய்து வருகின்றனர். இதை முதன் முதலில் நேரடியாகவே எழுத்தில் வடித்தவர் வே. கனகசபைப் பிள்ளை.
தொல்காப்பியர் கூறும் வர்ண அமைப்பு பற்றி தன் போக்கில் விளக்குகின்ற அவர் ‘1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள்’ என்ற தனது நூலில் தொல்காப்பியத்தைக் குறிப்பிட்டு, “இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார். இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி” என்று திராவிடர் இயக்கம் அதிகமும் சொல்லிவந்த காலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜீவானந்தம் பல மேடைகளில் கூறிய விஷயம் நம் நினைவுக்கு வருகிறது. “பார்ப்பனர்களாவது தொட்டால்தான் தீட்டு என்று சொன்னார்கள், ஆனால் தாழ்த்தப்பட்ட சகோதரர்களைப் பார்த்தாலே தீட்டு என்று சொன்னவர்கள் கார்காத்த வேளாளர்கள். அப்படிப்பட்ட கார்காத்த வேளாளர்களைத் தமிழர்கள் என்கிறீர்கள், பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றும் தமிழர்கள் அல்ல என்றும் சொல்லுவது எப்படி நியாயம்” என்று திராவிட இயக்க தலைவர்களை நோக்கி வினா எழுப்பினார். வேளாளர்களின் வரலாற்றுத் திரிபுகளையும் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்த கொடுமைகளையும், பார்ப்பனர்களைக் காட்டி தாங்கள் தப்பித்துக் கொண்ட வரலாற்றையும் பற்றி நூற்றுக் கணக்கான பக்கங்கள் எழுத முடியும்.
வேளாளர்கள் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்த நிலையை சிலப்பதிகாரத்துக்கான (நாடுகாண் காதை வரிகள்
124-125) அரும்பத உரை மற்றும் அடியார்க்குநல்லார் உரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். சங்க காலத்தில் களமர் என்றால் உழுதுண்டு வாழ்பவர்கள். அப்படி இருந்த வேளாளர்கள் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் மேல் வாரக்குடிகளாகி, பள்ளர் மற்றும் பறையர் சமூகத்தினரை கருங்கை வினைஞர்கள் என்பதாக உழுகுடிகளாக்கி ஆதிக்கம் செய்யும் நிலைக்கு வந்து விட்டனர். அப்போதையிலிருந்து, 800 ஆண்டுகளாக, மிகச் சமீப காலம்வரையிலும் நிலவுடைமையாளர்களாக இருந்துகொண்டு தங்கள் நிலங்களில் வேலைசெய்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான கொடுமைகளைச் செய்து வந்துள்ளனர். நிலவரம் இவ்வாறிருக்க, தேன் கொடுத்து மீன் வாங்கியவர்களை பூணூல் அணிந்தவர்கள் பிரித்தாண்டதாக இன்றைக்கு பேரா. ஆ.சி. சொல்லுகிறார்.
அடுத்து பூணூல் அணிவது. “நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூல் அணிந்திருந்தார்கள் என்பதை நாம் உணர்த்தியிருந்தால் உழவர்கள் சூத்திரர்கள் ஆகியிருக்க மாட்டார்கள்”
என்கிறார். இது எவ்வளவு மோசடி என்பதைக் காண்போம். பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம்; அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும் தமிழகத்தில் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்ல. தொல்காப்பியம் சொல்லுகின்ற முதல் மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
“முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்”
– என்கிறது அப்பாடல்.
மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,
“… … பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே”
“பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்
வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”
“பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ”
இவற்றையும், 13-14 ஆம் நூற்றாண்டு தொடங்கி கிடைத்துள்ள வள்ளுவர் சிலைகள் பலவற்றிலும் பூணூல் வடிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவரின் படங்கள் பூணுலுடன் வரையப்பட்டன. பறையர் சமூகத்தினர் மட்டுமின்றி, விஸ்வகர்மாக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற கம்மாளர்களும் பூணூல் அணிபவர்கள்தான். விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர். பறையர்களும் வன்னியர்களும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் தமிழர்களே அல்ல, வேளாளர்கள் மட்டுமே தமிழர்கள் என்கிறார் பேரா. ஆ.சி. தமிழ்நாட்டில் மன்னர்களின் சிலைகளும், போர் வீரர்களின் சிலைகளும் கோயில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிற்பங்களில் பூணூல் வடிக்கப்பட்டிருக்கிறது. க்ஷத்ரியர்களாகிய மூவேந்தர்களும் பல்லவர்களும் பூணூல் அணிந்தவர்களே. அவர்கள் தமிழர்களே இல்லை என்று பேரா. ஆ.சி. சொல்லுகிறாரா?
‘மங்கலம்’ என்றாலே பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊர் என்று சொல்லுவது மோசடியாகும். சதுர்வேதி மங்கலங்கள் மட்டுமே பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கமங்கலம் என்கிற ஊரின் பெயர் அங்கைமங்கலம் என்பதாகும். அங்கைப் போர்முறையில் -நவீன கால கராத்தே போன்ற கையினால் போர் செய்யும் முறை- பயிற்சி பெற்ற சான்றோர் குலத்தவருக்கு அளிக்கப்பட்ட ஊர்தான் அங்கைமங்கலம். அது போலவே நாகை மாவட்டத்தில் உள்ள அடியப்பிமங்கலம் (அடியக்காமங்கலம்) என்கிற ஊர். ஏனாதிமங்கலம் என்பதும் போர் வீரர்கள் சார்ந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தவிர பார்ப்பனர்களுக்கு அல்ல. கொங்கு நாட்டில் உள்ள விஜயமங்கலம் சமணர்களின் ஊராகும். பேரா. ஆ.சி. சொல்வதைப் போல மங்கலம் என்கிற பெயரில் உள்ள ஊர்களெல்லாம் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்ட ஊராக இருந்திருந்தால் அவர்களின் மக்கள் தொகை தமிழக மக்கள் தொகையில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்திருக்கும். மேலும் மங்கலம் என்கிற பின்னொட்டுடன் கூடிய அரசுப் பதவிகள் மருத்துவர் குலத்திற்கு அளிக்கப்பட்ட பதவிகளாகும். ஆந்திர மாநிலத்தில் மங்கலவாடு என்று சொல்வது
மருத்துவர் குலத்தவரையே குறிக்கும். உண்மை இவ்வாறிருக்க ‘மங்கலம்’ என்றாலே பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட
ஊர் என்று சொல்வது அடுத்த வரலாற்றுத் திரிபு.
இஸ்லாமியர்களுக்குக் கரிசனப்படும் பேரா. ஆ.சி, அவர்களைக் கொடூரமானவர்களாகச் சித்தரிப்பதற்குப் வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறியாதவரா? ஆனந்த விகடன் குழும இதழான ஜூனியர் விகடன் இதழில் மதன் எழுதிய, “வந்தார்கள் வென்றார்கள்” என்பதில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா? அதுவும் தவிர, உலகத்தில் எத்தனையோ மதங்களைச் சேர்ந்த மக்கள் குழுக்கள் பல்வேறு நாடுகளில் உரிமைப் போர் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில தவறானவை என்றும் சில சரியானவை என்றும் எவ்வாறாகவேனும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் யாருக்கு எதிராகப் போராடுகிறார்களோ அவர்கள் மீதுதான் தாக்குதல் தொடுக்கின்றனரே தவிர பொதுமக்கள் மீதல்ல. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கை இராணுவத்தின் மீதுதான் தாக்குதல் தொடுக்கிறார்களே தவிர, இலங்கையில் உள்ள சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆனால் ஜிகாத் என்கிற ‘புனிதப் போர்’ நடத்துகின்ற இஸ்லாமியக் குழுக்கள் பொதுமக்கள் புழங்குகின்ற இடங்களில் வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லுகின்ற கொடூரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் பொதுமக்கள் புழங்குகின்ற இரயிலில் குண்டு வைத்தது, லண்டன் நகரில் இரயில் நிலையங்களில் குண்டு வைத்தது, ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வைத்தது என பொது மக்களைக் கொன்றதுதான் வரலாறு. இந்தியாவின் மும்பையிலும் அதற்கும் முன்னர் தமிழகத்தின் கோவையிலும் பொது மக்களைக் கொல்லுகின்ற வகையில் குண்டுகள் வெடித்தனர். இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்கு விரோதம் என்றால் இந்திய இராணுவத்தினரை, அல்லது இந்திய அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களை அவர்கள்
எதுசெய்தாலும் அவர்கள் பற்றி வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லப்போவதில்லை. இந்திய நாய்களுக்கும்,
பிரித்தானிய நாய்களுக்கும், ஸ்பானிய நாய்களுக்கும் பாடம் புகட்டவே குண்டு வெடித்ததாக விளக்கமும் கொடுக்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களின் மத நூலில் முஷ்ரிக்குகளையும் (கடவுளுக்கு [அல்லாவுக்கு] இணை வைப்பவர்களையும்) காஃபிர்களையும் (இறை நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் பல கடவுளர்களைத் தொழுபவர்களையும்) அழித்தொழிக்க வேண்டும், அதுதான் புனிதப் போர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய கொடூரத்தை இஸ்லாமிய மன்னர்கள் செய்து இருக்கின்றனர். சாதாரண அப்பாவி மக்களை அச்சுறுத்துகின்ற வகையில் பயங்கரவாத செயல்களில் இன்றைக்கும் அதிகமும் ஈடுபட்டு வருவதால்தான் இஸ்லாமியர்கள் பற்றி அவ்வாறு சொல்லப்பட்டது.
வரலாறு இவ்வாறு இருக்க இவை அனைத்தையும் திரித்து தமிழ் மக்கள் ஒரே குடும்பமாகப் பிரிவினை இன்றி இருந்தது போலவும் பூணூல் அணிந்த ஆரியர்கள் வந்துதான் தமிழ் மக்களைப் பிரித்தாண்டதாகவும் வரலாற்று உணர்வு கொள்ளவேண்டும் என்கிற போர்வையில் உண்மையான வரலாற்றைத் திரித்துச் சொல்வதுதான் பேரா. ஆ.சி. செய்துள்ள கிசும்பு.
pravaahan@yahoo.co.in
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.