உடம்பை வெட்டி எறி – உரைவெண்பா

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


எது எதுக்குத்தான் டிக்கட் வசூலித்து தினசரி மூணு காட்சி நடத்துவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவ நிபுணர் சமீபத்தில் லண்டன் வந்திருந்தார். வைத்தியம் பார்க்க இல்லை. ஷோ நடத்திக் காசு சம்பாதிக்க.

மந்திரவாதி மண்டை ஓட்டோடு வருகிற மாதிரி இவர் ஏழெட்டுப் பிணஙகளோடு வந்து சேர்ந்தார். காட்சியில் இடம் பெற்றவை இந்த மூச்சு விட மறந்து போனவர்கள்தான்.

ஜெர்மனிய டாக்டர் ஒரு பெரிய அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். டிக்கட் நூறு பவுண்ட். காட்சி இரண்டு மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் நடந்தது.

டிக்கட் வாங்கக் கூட்டம் அலைமோதியதாம்.

என்ன மாதிரிக் காட்சி அது ?

வேறு ஒண்ணும் இல்லை. அந்த டாக்டர் மேடையில் ஒரு காட்சிக்கு ஒரு பிணத்தை அறுத்து மருத்துவப் பரிசோதனை செய்வாராம் (அடாப்ஸி). அரங்கம் முழுக்க பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்து அவருடைய அறுவை, பக்கத்திலிருந்து பார்க்கிற துல்லியத்தோடு ஒளிபரப்பாகுமாம்.

அறுப்பதற்கு நடுவே அவர் ரன்னிங்க் காமெண்டரி வேறு கொடுப்பாராம் –

‘இதைப் பாருங்க .. முப்பது வயசான ஆண்பிள்ளை .. திடகாத்திரமான உடம்பு .. நெறைய வெளையாடியிருக்கான் வீட்டுக்குள்ளே .. இதான் கல்லீரல் .. இது சிறுகுடல் .. வயத்துக்குக் கீழே அறுக்கறேன் .. இந்த ஆளுக்கு நெறைய சினேகிதிகள்னு சொன்னேனே .. இது என்னன்னு உங்களுக்கே தெரியும் .. உள்ளார என்ன இருக்குன்னு பார்க்கணுமா .. யாருப்பா பையா .. இந்தக் கண்ராவியை ஒரு பிளேட்லே வச்சு சபையிலே எல்லோரும் பார்க்கறபடியாக் காட்டிட்டு வா .. ‘

டாக்டருடைய உதவியாளர்கள் அறுத்தெடுத்த இருதயத்தையும், மெடுலா ஆப்ளங்காட்டாவையும் (தமிழில் இதுக்கு முகுளம்னோ என்னவோ சொல்லுவாங்க) இன்னும் சுவாரசியமான சமாச்சாரம் எல்லாவற்றையும் தட்டுலே வச்சு எடுத்துப்போய் நாற்காலி நாற்காலியாகக் காட்டுவார்களாம்.

சினிமா, டிராமா என்றால் கூட்டம் வருவது புரிகிறது. பிரேதப் பரிசோதனையைப் பார்க்க எதற்காக, ஏன் வருகிறார்கள் இப்படி ?

“இங்கிலாந்து சட்டத்துலே தேடிப்பார்த்துட்டேன். இப்படி பப்ளிக்காக பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாதுன்னு சட்டத்துலே எங்கேயுமே சொல்லலே”

ஜெர்மன் டாக்டர் கல்லாவில் காசை வாங்கிப் போட்டுக் கொண்டே சொன்னார்.

நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன ஓர் இளம் பெண்ணின் பெற்றோர்கள் டாக்டருக்கு அவளுடைய உடலைத் தானம் செய்ததோடு மட்டும் இல்லாமல், இந்த அறுவைக் காட்சிக்குப் பார்வையாளர்களாகவும் வந்தார்கள்.

“எங்க பொண்ணு கல்யாணம் ஆகாமலேயே இறந்திட்டா. ஆனா அவளுக்கு ஒரு பாய்பிரண்ட் இருந்தான்னு தெரியும். அவன் மூலமா அவ வயத்துலே ஏதாவது புழு பூச்சி உண்டாயிருக்கான்னு தெரிஞ்சுக்கணும் ..”

தெரிந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை.

இங்கிலாந்தில் இருநூறு வருடத்துக்கு முன்னாலேயே இப்படி காசு வசூலித்துக் கூட்டம் சேர்த்து பிரேதப் பரிசோதனசை¢ செய்து காட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இதனால் நோய் பரவும் என்று அப்போது தடை செய்து விட்டார்களாம்.

நெக்ரோஃபோபியாவும் நெக்ரோபிலியாவும் ஆதாம் ஏவாளுக்கு அப்புறம் ஆரம்பித்தவை. இன்னும் கல்பகோடி காலம் அவை தொடரும்.

செத்தும் கொடுத்திட சீதக்கா தீவேணாம்
பத்துச் சவம்போதும் பார்வையாய்ச் – சுத்துமுத்தும்
தட்டிவைத்து ஆள்சேர் தசையும் உறுப்புமாய்
வெட்டியெறி காசுவரும் பார்.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்