ஈழம் கவிதைகள் (மே 18)

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ஹேமா(சுவிஸ்)


1)
மே பதினெட்டோடு போகட்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதைத்துவிட்டால் உயிர்க்காது
என்றுதான் நினைக்கிறீர்கள்
உயிர்மூச்சில்
சிலுவை அறையப்பட்டதை
அறியாத நீங்கள்.

மழையிலும் வெயிலிலும்
குளிக்கும் மலரென
வாழ இசைத்தீர்கள்
பழக்கப்பட்டுவிட்டோம்
முட்களையும் பூக்களாக்க
பயமில்லை இப்போ
வாசனையாகிறது இரத்தவாடைகூட.

சுவைக்கும் உணவுக்குமான தூரமாய்
எங்கள் தேவைகளை
உங்கள் இடைவெளிகளே நிதானித்து
கடத்தி இருத்தி தீர்மானிக்கிறது.

மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும்
கருவுரும் தலைமுறை தலைசுமக்க
காலகாலமாய் விலகாத வெறுப்போடு.

எனவே……
வேண்டாம் இனியும்
ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!

2)
பதிலில்லாக் கேள்விகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிணங்கள் இன்னும்
மூச்சுவிட்டபடிதான் ஈழத்தில்
இறுதி மூச்சின் பதில்களுக்காய்.

அப்பா எங்கே
கணவனைக் கண்டீர்களா
என்னை ஏன் சுட்டார்கள்
முள்வேலிக்குள் ஏன் இன்னும்
இது நான் பிறந்த தேசமா
ஏன் நான் அகதியாய்…

பிணங்களின் கேள்விகள்
அவர்களின் காதுகளுக்கு
எட்டப்போவதில்லை எப்போதுமே!!!

3)
தலைமுறை விளையாட்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரத்த வாடை குறைந்திருந்தாலும்
ஈழமுகாம்களின் வாசல்கள்
மூடப்படவில்லை.
நிலத்தின் மீதான
பெருங்கனவு கலைக்கப்பட
காலைகள் விடியாமலே.

“ஆமி சுடுறான் ஓடு ஓடு ஒளி்
குண்டு விழுந்திட்டுது
அப்பாவைக் காணேல்ல
குழறி அழுகிறா அம்மா
பதுங்கு குழி்க்குள்ளும்
படமெடுக்குது பாம்பு
முள்வேலியும் அகதிமுகாமுமாய்”
முகாம்களில் விளையாடும் குழந்தைகள்.

சப்பித்துப்பிய எலும்புகள் ஏந்திய
பேய்களும் பிசாசுகளும்
புரியாத மொழி பறைய
சொல்லாமலே புரிகிறது
நம்மைப் பிடித்த நோய்கள்
இவர்களென.

விளையாட விடுங்கள்
எங்கள் குழந்தைகளின்
கண்களைக் கட்டாமலே
தோழனின்
கண்ணைத் தோண்டியவனை
தாயின் மார்பறுத்தவனை
அடையாளம் காணட்டும்.

பேசவிடுங்கள்
மண்டையோடுகளோடும்
மூடிய மண் கிளப்பும்
பெருமூச்சுக்களோடும்!!!

4)
உயிர் மூச்சு.
~~~~~~~~~~~~
நிலவாழ் குழந்தைகளுக்காகவும்
நிலக்கீழ் குழந்தைகளுக்காவும்
ஈரவிழிகளோடு ஈழத்தாய்.

உயிர் மூச்சோடு
மண்ணுக்குள் மூடினாலும்
இழுத்து முடித்த இறுதி மூச்சு
தாய் மண்ணில்.

மூச்சடைக்க
நினைவுகள் மறையும்போதும்
ஒற்றைச் சொல் உதிர்ந்திருக்குமோ
தமிழீழத் தாயகமென!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)