இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

வே.சபாநாயகம்.


1. கேள்வி: நீங்க எழுதுகிற எழுத்து உங்களுக்குத் திருப்தியாக இருகிறதா?

எல்லாமே திருப்திதான். எப்படி திருப்தி இல்லாமல் அது வெளிவர முடியும்?
எழுதுகிறபோது அது பரிபூரணமாக வரும்கிற நம்பிக்கைதான். எழுதி முடித்த
பிறகு அதைப் பலமுறை திருத்தி எழுதறேன். ஒரு நாவலையோ சிறுகதையையோ
அச்சுக்குக் கொண்டு போறதுக்கு முன்னால் நான் அதில பரிபூரணமாக உழைக்கிறேன்.
பரிபூரணமாக என்று சொல்லும்போது ‘இதைப் பத்திரிகை ஆசிரியர்கள் எப்படி
ஏற்றுக் கொள்வார்கள், வாசகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள’ என்பதைப்
பற்றிய பரிபூரணமில்லை.என்னளவில் எப்படிப் பரிபூரணமாகச் செய்ய முடியும்
என்பதுதான் என் கவலை.

2. உங்கள் எழுத்துக்களில் மொழி வளமாக மிடுக்காக இல்லை என்ற குற்றச்சாட்டு
இருக்கிறதே?

மொழி என்பது அலங்காரமாக இருக்கக்கூடாது என்பது என் கொள்கை.
அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா இவர்களைப் படிச்சதுனாலே ஏற்பட்ட விளைவு
மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.

3. இலக்கியத்துக்கு அடிப்படை மொழி. அந்த மொழிக்கு நடை, அழகு அல்லது
அலங்காரம் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கிறீங்களா?

இலக்கியத்துக்கு மொழியே அவசியமில்லை. நான் அறிவு உள்ளவர்களை,
ஞானமுள்ளவர்களைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு craftல் நம்பிக்கை இல்லை.
கலையற்றவன்தான் craftஐப் பிடித்துக் கொள்ளவேண்டும். எனக்கு மொழியும்
தேவையில்லை. நான் பயன்படுத்துவதெல்லாம் புழக்கத்தில் உள்ள இருநூறு,
முன்னூறு சாதாண வார்த்தைகள்தான்.

4. இப்ப தமிழ் மொழியிலதான் எழுதப் போகிறோம். இந்த மொழிக்கு ஒரு வளம்
இருக்கு. அதை ஒட்டி சில விஷயம் இருக்கு…….

வளம் என்பது அலங்காரமில்லை. சங்க இலக்கியம் அலங்காரத்தை ஒழிச்சிருக்கு.

5. உங்கள் கதைகளில் ‘கதைகளே’ இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே!

நிச்சயமாக அதுதான். கதையிலிருந்து ‘கதை’யை வெளியேற்றுவதுதான் என்
வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை. எல்லோரும் கதை சொல்வது
போல, கற்பனையாக, போலியாக கதை சொல்ல முடியாது. நான் வாழ்க்கையை
எழுதுகிறேன். வாழ்க்கை எனபது கதை அல்ல. நான் தனிப்பட்ட மனிதனுடைய
வாழ்க்கையைப் பற்றியும் சொல்வதில்லை. தனிப்பட்ட மனிதனை முன் நிறுத்தி
மனித சமுதாயத்தின் வாழ்க்கையை முழுக்கச் சொல்ல முடியுமா என்று பிரயாசைப்
படுகிறேன். மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது.
மனிதனுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் என்னுடைய நாவல்கள்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்