இழந்த யோகம்

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

கோபி கிருஷ்ணன்

மாரிச்சாமி அந்தப் பெண் — மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை.

அவன் கேட்டான், ‘இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ‘ என்று.

‘என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ‘ என்றாள் மருத்துவர்.

‘ஒரு நாற்பது, நாற்பத்தஞ்சு இருக்கும். ஒன்றையடுத்து இன்னொன்று சங்கிலி மாதிரி ‘ என்று தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டான் மாரிச்சாமி.

‘என்ன செயின் ஸ்மோக்கிங்கா ? ‘ கிண்டலடித்தாள் மருத்துவர்.

மாரிச்சாமிக்குக் கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தும் சொன்னான், ‘பெரிய சிகரெட் எல்லாம் ஒன்றும் இல்லை. சிறு அளவிலான மினி சிகரெட்தான் ‘ என்று.

‘இந்த மினி ஸ்கர்ட் மாதிரியா ? ‘ என்றாள் மருத்துவர்.

மாரிச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது. மருத்துவர் ரொம்பவும் பழைமைவாதி என்றும் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவள் என்றும் நினைத்துக்கொண்டான். சற்று ஏறிட்டுப் பார்த்தான். மருத்துவர் புடவை தான் கட்டியிருந்தாள். இன்னும் பெரிய புடவை கட்டிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றிற்று அவனுக்கு.

மருத்துவர் சொல்லிவிட்டாள், ‘எல்லாம் சுய கட்டுப்பாட்டில்தான் நிறுத்த வேண்டும். மாத்திரை மருந்தெல்லாம் ஒன்றும் இல்லை ‘ என்று.

மாரிச்சாமி வீழ்ந்தான். பாதாளத்தில். அதலபாதாளத்தில். எழுந்திருக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான். அவ்வளவு தானா ? யாரும் காப்பாற்ற மாட்டார்களா ? நெஞ்சடைத்துச் சாக வேண்டியது தானா ? இவர்கள் விஞ்ஞானம் என்கிறார்கள்.முன்னேற்றம் என்கிறார்கள். சனியன், ஒரு சின்ன, மிக மிகச்சின்ன மினி சிகரெட்டை நிறுத்த மருத்துவம் இல்லையா ? மாரிச்சாமி வீழ்ந்தான். மீண்டும் மீண்டும் திரும்பவும் திரும்பவும் மறுபடியும் மறுபடியும் வீழ்ந்து கொண்டேயிருந்தான். ஆபத்து காலத்தில் கைதூக்கிவிட யாரும் வர மாட்டார்களா இந்தப் பரந்த மாநகரில் ? ஒரு ஜீவன் ‘ ஓர் உயிர் ‘

ஒரு வாரம் சென்றது. இரண்டு வாரம் சென்றது. யாருமே தன்னைக் காப்பாற்ற வரவில்லையே என்ற கவலையும் தொற்றிக்கொள்ள நாற்பது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது ஐம்பைத்தைந்தாக மினி சிகரெட் உயர்ந்தது.

மூன்றாவது வாரம். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றிருந்தது மாரிச்சாமிக்கு. மினி சிகரெட்டே ஒரு சிறு சிறு அளவிலான சின்னச் சின்ன அளவிலான மெதுமெதுவான குட்டியூண்டு குட்டியூண்டான தற்கொலை நகர்வுகள்தான் என்று தோன்றிற்று. ஆகவே பெரிய அளவில் திட்டமிட்டுத் தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு சரியானதாகப்படவில்லை. அந்த ஆசையும் நிராசையாகிவிடவே மாரிச்சாமியின் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. மினி சிகரெட் ஐம்பத்தேழு எட்டாக உயர்ந்தது மனச்சோர்வுடன் சேர்ந்து.

நான்காவது வாரம். மிகவும் தொய்ந்து போனான் மாரிச்சாமி. அலுவலகத்தில் இருந்தான் கவலையே உருவான முகத்துடன் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவனாகக் காணப்பட்டான். நிறைய இருமினான். கண்ணாடி போத்தல் உடைந்து சிதறியது போல இருந்தது இருமல் சப்தம். நிறையத் தண்ணீர் குடித்தான். நாக்கு வறண்டு வறண்டுப் போய்க்கொண்டிருந்தது. ‘ஆட்டம் க்ளோஸ் தான் போல ‘ என்று நினைத்துக் கொண்டான் மாரிச்சாமி. கொஞ்சம் வேகமாக நடந்தாலே மூச்சிரைத்தது. படியேறுவதைப்பற்றிப் பேச்சே வேண்டாம்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு நினைவில் டக்கென்று ஒரு பொறி தட்டிற்று. ‘பராமரிப்பு ‘ என்ற ஒரு நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. அதுதான் மருத்தடிமைத்தனத்திலிருந்தும் குடிப்பழக்கத்திலிருந்தும் பிரச்சினை உள்ள நபர்களை மீட்டுக் கொண்டிருந்தது.

தொலைபேசி எண் புத்தகத்தைப் புரட்டி விலாசத்தையும் எண்ணையும் குறித்துக் கொண்டான். அவசர அவசரமாக எண்களைச் சுழற்றினான். ஒரு பெண் குரல். நிலையத்தின் பணி நேரத்தைத் தெரிந்து கொண்டான். நான்கரை மணிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு நிலையம் நோக்கி விரைந்தான். நிலையம் அடையாரில் இருந்தது.

‘பராமரிப்பு ‘ கீழ் தளத்தில் இருந்தது. மாரிச்சாமி மோபெட்டை முன்பக்க வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடு அளவிலான ஓர் அறை. அது முன் பக்கமிருந்தது. இரண்டு மேசைகளில் கோப்புகள் நிறைந்திருந்தன.

ஒரு வாலிபர் இருந்தார். மாரிச்சாமி தன் பிரச்சினையைச் சொன்னான். உள் அறையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள். ‘என்ன, புது கேஸா ? ‘ என்று கேட்டாள். வாலிபர் தலையசைத்தார்.

வாலிபர் தன்னைச் சமூகப்பணியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பெயர் ராமேஸ்வரன் என்றார். மாரிச்சாமி தன் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினான்.

சமூகப்பணிக்கென்றே தான் முதுகலைப்பட்டம் படித்திருப்பதாகச் சொன்னார் வாலிபர். மாரிச்சாமி ‘இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? ‘ என்று கேட்டான் அப்பாவித்தனமாக.

‘சமூகப்பணி தான். மருந்தடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்கும் சமூகப்பணி ‘ என்றார் வாலிபர்.

‘அது மீட்புப்பணி இல்லியோ ‘ ‘ என்று வியந்தான் மாரிச்சாமி.

‘மீட்புப்பணியும் சமூகப்பணியும் ஒன்றுதான். ஆங்கிலத்தில் intervention என்பார்கள் ‘ என்றார் வாலிபர்.

‘ஓ, அப்படியா ‘ ‘ என்றான் மாரிச்சாமி.

மாரிச்சாமி மீண்டும் தன் பிரச்சினை குறித்துச் சிறு அளவில் எடுத்துச்சொன்னான்.

‘அட, மினி சிகரெட் தானே ? கவலையை விடுங்கள். ‘பராமரிப்பு ‘ காஞ்சா, குடி, எல்.எஸ்.டி., ஹெராயின், பெத்தடின், ப்ரவுன் ஷ்உகர், புகையிலை, சிகரெட், பான்பராக் அனைத்தையும் நிறுத்த உதவிக் கொண்டிருக்கிறது ‘ என்று சொன்னார் வாலிபர்.

மாரிச்சாமிக்கு மூச்சு வந்தது, மினி சிகரெட் புகை வாசம் கலந்த மூச்சே என்றாலும். மிகவும் ஆறுதலாக உணர்ந்தான்.

மருத்துவர் வர இன்னும் அரை மணி செல்லும் என்றும் காத்திருக்குமாறும் வாலிபர் கேட்டுக் கொண்டார்.

ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். மாரிச்சாமிக்கு ஒரு மினி சிகரெட் தேவைப்பட்டது. இவர்கள்தான் விடவைப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே என்று வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.

மீண்டும் உள்ளே நுழைந்தபோது மருத்துவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆட்களிடையே நிசப்தம் போன்ற எதோ ஒன்று தோன்றியிருந்தது. பேச்சு தணிந்த குரலில் இருந்தது. ஓராள் அடுத்து இன்னொரு ஆளாக உள்ளே போய் வந்து கொண்டிருந்தார்கள்.

‘கடைசியாகத்தான் புது கேஸ் பார்ப்பார்கள் ‘ என்று நோயாளி ஒருவர் சொன்னார். மாரிச்சாமி தலையசைத்தான்.

மாரிச்சாமியின் முறை வந்தது. உள்ளே சென்றான். மருத்துவர் அமர்ந்திருந்தாள். சல்வார் கமீஸில் ஷால் பரத்திக் கொண்டிருக்க ஜாலியாக அமர்ந்திருந்தாள். மாரிச்சாமிக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அவள் மினி ஸ்கர்ட் பற்றித் தரக்குறைவாகப் பேசாத நவீனப் பெண் – மருத்துவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாரிச்சாமிக்கு நவீன உடைகள் பிடிக்கும், குறிப்பாக மினி ஸ்கர்ட் வகையறாக்கள்.

தன் மினி சிகரெட் பிரச்சினை குறித்து மாரிச்சாமி சொன்னான். மருத்துவர் கைவிரித்தாள். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை நிறைய வார்த்தைகளில் மிருதுவாகச் சொன்னாள்.

மாரிச்சாமி மீண்டும் வீழ்ந்தான்.

அன்றிரவு முழுக்க மினி சிகரெட்டுகளை ஊதியவண்ணமிருந்தான்.

அடுத்த நாள் அரை நாளுக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டான்.

மிகுந்த சிக்கல்களுடன் ஒரு மாதம் கழிந்தது. மாரிச்சாமி மிகவும் மெலிந்திருந்தான். ஒரு சீக்காளிக்களை முகத்தில் குடியேறியிருந்தது.

அந்த ஞாயிறுதான் சிதம்பரம் வந்திருந்தார். பிராந்தியத்திலேயே முதல் நம்பர் மருத்துவரிடம் அவனை அடுத்த நாள் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அவனிடமிருந்த மினி சிகரெட் பெட்டிகளைப் பறித்துச் சென்றார். சிதம்பரம் சென்று பத்து நிமிடம் கழித்து மாரிச்சாமி அறையைப் பூட்டிக்கொண்டு கீழே வந்து பக்கத்திலிருந்த பங்க் கடையில் ஒரு பெட்டி மினி சிகரெட் வாங்கிக்கொண்டான். அன்றிரவு மாரிச்சாமி ஓரளவு ஆசுவாசத்துடன் தூங்கினான்.

திங்கள் மாலை அலுவலகம் விடும் சமயம் சிதம்பரம் வந்தார். ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச்சென்றார். மருத்துவர் ஓர் அம்மையார். முதியவர். சாந்தமே உருவானவர். சிதம்பரம் மாரிச்சாமியின் பிரச்சினையை எடுத்து சொன்னார். அம்மையார் ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி மாரிச்சாமியிடம் நீட்டினார். அது ஒரு யோக கேந்திரத்தின் விலாசம். அண்ணாநகர் கிழக்கில் மீட்பர் ஆலயம் அருகில். மாரிச்சாமி தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் ஏழுகிலோ மீட்டர் தொலைவு.

அடுத்த நாள் காலை மாரிச்சாமி எழத் தாமதமாகிவிட்டிருந்தது. யோக கேந்திரத்தை அடையும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது. அது ஒரு பிரம்மாண்டமான மூன்றடுக்கு பங்களா. வெளியே கார் நிறுத்த இடம். பிற வண்டிகள் விட பெரிய வெளி. மாரிச்சாமி தன் வண்டியை நிறுத்து விட்டு உள்ளே நுழைந்தான். அழைப்பு மணி. அழுத்தினான்.

சில கணக் காத்திருப்பின் பின் அவன் முகத்தில் ஓர் இன்பப்புயல் வீசிற்று. புயலில் சிக்கித் தவித்தான் மாரிச்சாமி.

ஓர் அழகான, மிக மிக அழகான ஓர் இளம் பெண் – இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் – வந்து கதவைத் திறந்தாள். சின்ன வெள்ளை குர்தாவும் அதே நிற மினி ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முகம் கிழக்கத்திய – மேற்கத்தியக் கலவையாக இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அழகை வெளிப்படுத்திற்று. இதழின் வலது ஓரத்தில் ஓர் இளம் நெளிவு, நகை, முறுவல், வேறென்ன..

முப்பத்து ஐந்து வயது வரை உடலில் உயிரைப் பாதுகாத்து வைத்திருந்தது பற்றி மாரிச்சாமி முதல் முறையாக சந்தோசப்பட்டான். தன் ஆதர்சப் பெண்ணை, இலட்சியப்பெண்ணை முதல் முதலில் சந்தித்திருந்தான் மாரிச்சாமி. அவன் மிகவும் நேசித்த அழகு, அவன் விரும்பிய முக இனிமை, குறிப்பாக அவன் மிகவும் ஆசைப்பட்ட உடைகள்.

புயலிலிருந்து மீட்டுக்கொள்ளச் சற்று நேரம் ஆயிற்று மாரிச்சாமிக்கு. அம்மையார் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவளிடம் நீட்டினான்.

பெண் தலையசைத்தாள் உள்ளே அழைத்துச் சென்றாள். அவளது நடை மிகவும் ஒயிலுடன் இருப்பதாகப் பட்டது மாரிச்சாமிக்கு. மீண்டும் புயலில் சிக்கிக்கொள்ளாமலிருக்கக் கடுமையான முயற்சி தேவைப்பட்டது.

பெரிய வரவேற்பு அறை. மூன்று பக்கங்களிலும் விலையுயர்ந்த சோஃபாக்கள். ஒரு பக்கத்தில் பெரிய மேசை ஒன்று. பக்கத்துக்கு ஒன்றாகக் கைவேலைப்பாடுகள் அமைந்த இரண்டு நாற்காலிகள்.

ஒரு நாற்காலியைச் சுட்டினாள் பெண். மாரிச்சாமி மிகவும் கூசி குறுகலுடன் உட்கார்ந்துகொண்டான். தான் இதுநாள் வரை காதலித்து வந்த ஒரு பேரழகின் முன்னால் ஒரு துரும்பாக உணர்ந்தான் மாரிச்சாமி.

‘சொல்லுங்கள் ‘ என்றாள் பெண்.

‘மினி சிகரெட் விட யோகாசன முறையில் இங்கு சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று அம்மையார் சொன்னார் ‘ என்றான் மிகுந்த தடுமாற்றத்துடன்.

‘என்ன சிகரெட் ‘ ‘ வியந்தாள் பெண்.

‘மினி சிகரெட் ‘ என்றான் மாரிச்சாமி சாதாரணமாக.

அந்தப் பெண் இப்பொழுது சிரித்தாள். வாய்விட்டுச் சிரித்ததாக மாரிச்சாமிக்குத் தோன்றிற்று. பல் வரிசை நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக அந்த மேல் வரிசைத் தோசைப் பற்கள் இரண்டும் சரியான அளவில் அமைந்திருந்தன. மாரிச்சாமிக்குச் சந்தோசமாக இருந்தது மீண்டும். ஆனால் ஏன் அவள் சிரிக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு வேளை தன்னைச் சந்தித்ததில் அவளுக்கும் சந்தோசம் பொங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பெண் அவனைச் சற்று காத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். பதினைந்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் உயரமான, பருமனும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் தாடியும் மீசையுமாகச் சிவந்த நிறத்தில் ஒருவர் அங்கு தோன்றினார். ஐம்பது வயது இருக்கும். தன் பெயர் கிஷன்சந்த் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மாரிச்சாமி கைகுலுக்குவதற்காகக் கை நீட்ட அவர் கை கூப்பினார்.

மாரிச்சாமி தன் மினி சிகரெட் பிரச்சினையைச் சொல்ல கிஷன்சந்த்ஜியும் முறுவலித்தார். மாரிச்சாமிக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் தான் தன் பிரச்சினையைத் தெளிவாக முன் வைத்துவிட்டதான திருப்தி ஏற்பட்டது.

அடுத்த திங்களிலிருந்து ஓர் ஐந்து நாட்கள் இரவு 8.00மணி முதல் 8.30வரை வர வேண்டும் என்றார். பிறகு காலை வகுப்புகளில் 6.30முதல் 7.30வரை பிற மாணவர்களுடன் கலந்துகொள்ளலாம் என்றார் கிஷன்சந்த்ஜி.

மாரிச்சாமிக்கு நம்பிக்கை வரவில்லை. ‘மினி சிகரெட்டை விட்டுவிட முடியும்தானே ? ‘ என்று மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாகக் கேட்டான்.

‘சேர்ந்த ஒருமாதத்தில் பலன் தெரியும் ‘ என்றார் குருஜி.

கட்டணம் ரூ.4130/- எட்டுமாதப்பயிற்சி தினமும் காலை ஒரு மணி நேரம் மட்டும்.

மாரிச்சாமி ரூ.130/-ஐ முன்பணமாக நீட்டினான். குருஜி கூடுதலாக ஒரு ரூபாய் கேட்டார். ஏனென்று தெரியாவிட்டாலும் மாரிச்சாமி கொடுத்தான். எவ்வளவு பெரிய சமாச்சாரம் நடக்கப்போகிறது. காசு பணம் பார்த்தால் முடியுமா ‘ மீதியைக் கூடிய விரைவில் கொடுப்பதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினான் மாரிச்சாமி. குருஜி கைகூப்பினார்.

மாரிச்சாமி அலுவலகத்தில் பி எஃப் லோன் போட்டான். கிடைக்கச் சில நாட்கள் ஆகும் என்றார்கள்.

மாரிச்சாமிக்கு ஒரு திடார் சந்தேகம் வந்தது. ஆகையால் வியாழன் மாலை யோக கேந்திரத்துக்கு மீண்டும் சென்றான். குருஜியிடம் கேட்டான், ‘யோகப் பயிற்சி மதம் சம்பந்தப்பட்டதா ? ‘ என்று. ‘இல்லை ‘ என்றார் குருஜி. ‘ஆனால் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது ‘ என்றார்.

மாரிச்சாமி காலையில் தினமும் நான்கைந்து க்ளாஸ் டா குடிப்பான். இடையிடையே மினி சிகரெட். ஒரு கட்டத்தில் கக்கூஸ்உக்கு வரும். போய் வருவான். வந்து ஒரு டாயும் சிகரெட்டும் குடிப்பான். அந்தச் சமயத்தில் மிகவும் ஓய்வாகவும் ஆசுவாசமாகவும் உணர்வான். அது மட்டும்தான் தான் உணரும் ஆன்மீக அனுபவம் என்று ஒருமுறை சிதம்பரத்திடம் சொல்லியிருந்தான். சிதம்பரம் ஒரு முற்போக்குவாதி ஆனால் சில சமரசங்களுடன் ‘ஒரு முழு நாளில் சில கணங்களேயாயினும் உங்களால் ஆசுவாசமாக உணர முடிவது ஒரு பெரிய விஷயமல்லவோ ? நீங்கள் அதற்கு என்ன பெயர் வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ‘ என்று சொல்லிவிட்டிருந்தார் சிதம்பரம்.

ஆரம்பத்திலேயே காரசார விவாதங்கள் வேண்டாம் என்று மாரிச்சாமி சும்மா இருந்துவிட்டான். தவிர அந்தப் பெண்ணை பார்க்கவாவது தான் அங்கு போக வேண்டும் என்று நினைத்தான்.

அடுத்த வாரம் திங்கள் முதல் வகுப்பு. எட்டு மணி வகுப்புக்கு ஏழே முக்காலுக்கே சென்றிருந்தான் மாரிச்சாமி. வழியில் மோபெட்டை நிறுத்தி ஒரு மினி சிகரெட் பிடித்திருந்ததில் நாக்கு வறண்டிருந்தது. அவனுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. வரவேற்பறையில் அந்தப் பெண்தான் தண்ணீர் தந்தாள் முகத்தில் மென்னகையுடன். வெறும் தண்ணீர் அல்ல. மூலிகை கலந்த தண்ணீர். ஒரு வினோதமான சுவையுடன் இருந்தது அது. இனிப்பு, கசப்பு, புளிப்பு மூன்றும் சேர்ந்த கலவைச் சுவை. நாக்கு வறண்டிராவிட்டாலும் தினமும் அவள் கையால் ஒரு லோட்டா மூலிகைத் தண்ணீர் அருந்த வேண்டும் என்றிருந்தது மாரிச்சாமிக்கு.

வகுப்பில் ஆரம்ப கட்ட மாணவர்கள் பதினைந்து பேர் இருந்தார்கள். பாதி நேரம் விரிவுரை. மீதி எளிய யோகாசனப் பயிற்சிகள். மாரிச்சாமிக்கு மூச்சு வாங்கியது. முழுதாகவெல்லாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட முடியவில்லை. மூச்சுத் திணறல். போகப் போகச் சரியாகிவிடும் என்றார் குருஜி.

கண்களை மூடிக்கொண்டார் குருஜி. மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டார்கள். குருஜி ‘ஓம் ‘ என்றார் நீளமாக. சற்றுக் கழித்துச் சமஸ்கிருதச் சுலோகம் ஒன்றை உச்சாடனம் செய்தார். சில வினாடிகள்தான்.

பிறகு பூசை நடந்தது. ஒரு மூலையில் மேடை போன்ற அமைப்பு ஒன்றில் இந்துச் சாமி படம் ஒன்றும் ஒரு துறவியின் படமும் இருந்தன. பக்கவாட்டில் ஒரு குத்து விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது. குருஜி கற்பூரம் காட்டினார். பழகிய மாணவன் ஒருவன் மணியடித்தான். குருஜி வாக்குத் தவறுகிறார் என்று நினைத்தான் மாரிச்சாமி.

மாரிச்சாமியிடம் கற்பூரத் தட்டு நீட்டப்பட்டது. வேறு வழியில்லாமல் கண்களில் ஒற்றிக் கொண்டான். பாழாய்ப் போயிருந்த மாரிச்சாமியின் நெற்றியில் வாழ்க்கையில் முதல் முறையாக விபூதி ஏறிற்று. சற்றுக் கழித்துக் குங்குமமும். பெரும் பக்திமானாகக் காட்சியளித்தான் மாரிச்சாமி. தட்டில் கற்கண்டுப் படிகங்கள் இருந்தன. அது மாரிச்சாமிக்குப் பிடிக்கும் நிறைய அள்ளி வாயிலும் மீதியைச் சட்டைப்பையிலும் போட்டுக் கொண்டான்.

ஐந்து நாட்கள் முடிந்தன. மினி சிகரெட் ஓரளவு, ஓரளவேனும் குறைந்திருந்தது. குருஜி நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருந்தார். அதில் பாதியைக் கூட மாரிச்சாமியால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தான். தினமும் அந்தப் பெண்ணை மூலிகைத் தண்ணீரைச் சாக்கிட்டுப் பார்ப்பதைக் கைவிடவில்லை.

அடுத்த நாளிலிருந்து காலை வகுப்புகள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குருஜி கொடுத்திருந்த காவிக் கலர் முழுக்கால் சட்டையை அணிந்து கொண்டு தினந்தோறும் தவறாமல் யோகாசன வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். மூன்றாம் மாடி தாண்டி மொட்டை மாடியில் பயிற்சி. கீத்துக் கொட்டகை. ஓலைகளால் மூடப்பட்ட பெரிய ஒரு கூடம். சுமார் அறுபது மாணவர்கள். ஐந்து மாணவியர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாய். நல்லவேளையாகக் காலை வகுப்புகளில் பூசை இல்லை.

அவனுக்குப் பிடித்த யோகாசனப் பயிற்சிகளுள் ஒன்று குழந்தை தவழும் நிலையில் உடலை இருத்திக் கொள்வது. ஒரு பாவமும் அறியாத குழந்தையாக உணர்ந்தான் மாரிச்சாமி அப்பொழுதெல்லாம்.

மாரிச்சாமிக்கு பி.எஃப் லோன் கிடைத்தது. அடுத்த நாள் பத்தாம் நாள். வகுப்பு முடிந்ததும் குருஜியிடம் வள்ளிசாக நாலாயிரம் ரூபாய் கட்டி தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டான் மாரிச்சாமி.

நடுவில் மாரிச்சாமி சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம்பேசினான். தான் யோகாசன வகுப்புகளில் சேர்ந்துவிட்டதாகவும் நிலைமை பரவாயில்லை என்றும். ‘நான் தான் சொன்னேனே. எல்லாம் சரியாகிவிடும் ‘ என்றார் சிதம்பரம்.

காலை வகுப்பு மாணவர்களில் நான்கைந்து பேர் மாரிச்சாமிக்குப் பரிச்சயமானார்கள். தனை ஒத்த வயதுடைய ஒரு மாணவரிடம் மாரிச்சாமி அந்த மூலிகைத் தண்ணீர்ப் பெண் பற்றி விசாரித்தான்.

குருஜியின் பூர்வீகம் வார்தா. அந்தப் பெண் மகாராஷ்டிராவில் சேவாக்கிராமில் காந்தி மருத்துவ நிலையக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வார்தாவில் தனிப்பயிற்சி மேற்கொள்ளுமுன் ஓய்வாக இருக்கத் தன் தகப்பனரான கிஷன்சந்த்ஜி வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தாள். பெயர் சாரதா. வந்து மூன்று வாரங்களே ஆகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் போய்விடுவாள். ஆனால் ‘அந்தக் குட்டையான பாவாடைப் பெண்தானே ? ‘ என்று மாணவர் கேட்டதைத் தான் மாரிச்சாமியால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மினி ஸ்கர்ட் என்று சொல்லவேண்டும் ‘ என்று மாரிச்சாமி கட்டாயப்படுத்தி அவரைத் திருத்த நிலைமை கொஞ்சம் எக்கச்சக்கமாகிவிட்டது. நவீன உடை ரசிகனான மாரிச்சாமிக்கு உடைகளின் பெயரைச் சரியாகச் சொல்லாவிட்டால் உணர்ச்சி பொங்கியெழுந்துவிடும்.

பணம் சுளையாக. ரூ.4131/- கட்டணமாகவும் தொளதொளக் காவிக் கலர் துறவறக் கால் சட்டைக்காக ரூ.300/-வும் செலவானது குறித்து மாரிச்சாமி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணிசமான அளவு மினி சிகரெட்டுகளை அவனால் குறைக்க முடிந்திருந்தது.

பணம் கட்டிய இரண்டு தினங்கள் கழித்து மாரிச்சாமி அலுவலகக் களப்பணிக்காகப் பூந்தமல்லி அருகே தன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தான். பின்னால் வேகமாக வந்த அம்பாஸடர் அவனை முந்த முயன்றுச் சற்றுப் பலமாக அவன் மோபெட்டின் பின் பகுதியில் இடிக்கத் தான் சாலையில் மல்லாக்க விழுந்து கிடப்பதை உணர்ந்தான் மாரிச்சாமி. ஒன்றும் பிரச்சினை பண்ணிக்கொள்ளவில்லை. அம்பாஸடரைப் போகவிட்டான். மோபெட்டை ஓரங்கட்டினான். வலது முழங்காலுக்குக் கீழே கொஞ்சம் அடி, வலது கையில் முட்டியருகில் ஒரு நீண்ட சிராய்ப்பு. பக்கத்திலிருந்த ஓர் 24 மணி நேர மருத்துவமனையில் ஏ.டி.எஸ் ஊசி ஒன்று போட்டுக் கொண்டான். ஒரு பெண் அவனது காயங்களில் டிங்க்சர் போட்டுத் தேய்த்தாள். எரிந்தது, மருத்துவர் மருந்து எழுதித் தந்தார் மூன்று நாட்களுக்கு. வண்டிக்குப் பெரிதாகச் சேதம் ஒன்றுமில்லை. அது பழையபடிக்கு நன்றாகத்தான் ஓடிற்று.

அடுத்த நாள் காலை மறக்காமல் யோக கேந்திராவுக்கு சென்றான் மாரிச்சாமி. குருஜியிடம் விபத்துப் பற்றிச் சொன்னான், காயங்களைப் பற்றியும், ‘அப்படியானால் கால் காயம் ஆறின பிறகு வந்தால் போதும் ‘ என்றார் குருஜி. மிக மிக அதிர்ஷ்டவசமாக வரவேற்பறையில் சாரதா இருந்தாள். ‘மூலிகைத் தண்ணீர் வேண்டுமா ? ‘ என்று கேட்டு மாரிச்சாமியின் நெஞ்சைத் தொட்டாள். மறுக்காமல் சந்தோசமாக நீர் பருகினான் மாரிச்சாமி.

‘பெண்ணே மூலிகைத்தண்ணீர் பெண்ணே, உன் இதழோர நெளிவுக்காக இந்த மாரிச்சாமி தன் உயிரையே கொடுப்பான் ‘ என்றான் அவளிடம் மானசீகமாக. மினி சிகரெட் விட முடியாத இயலாமையில் தற்கொலை செய்துகொள்வதற்கும் சாரதாவின் அழகுக்காக உயிர் விடுவதற்கும் இடையிலான பல்வேறு வித்தியாசங்களை அவன் மனம் அலசிப்பார்த்தது.

செத்த பிறகு நிக்கோடின் அடிமையாக இருந்த பாவத்துக்காகத் தனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று தன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் மறந்து, மீறி நினைத்துக்கொண்டான். யார் சாவார்கள் முதலில் என்ற பிரச்சினை எழுந்தது. சந்தேகமென்ன ? மாரிச்சாமிதான். அவனுக்குத்தான் சாரதாவைவிட அதிகவயது.

ஆனால், தான் தான் இப்பொழுது யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு கூடியவிரைவில் மினி சிகரெட்டை விட்டு விடுவோமே; மனம் திரும்பியவர்களுக்குப் பாவமன்னிப்பு உண்டு; எனவே தனக்குச் சொர்க்கம் ஒரு கால் கிடைக்கலாம் என்று நினைத்துகொண்டான் மாரிச்சாமி. அப்படியானால் முதலில் இறந்த மாரிச்சாமி சொர்க்கத்தில் சாரதாவின் வருகைக்காகக் காத்திருப்பான். அழகான சாரதாவுக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவள் வந்த கையோடு அவளிடம் மனம் விட்டுப் பேசுவான் மாரிச்சாமி. பூலோகத்தில் கைகூடா நெருக்கம் நிகழச் சொர்க்கத்தில் நிச்சயம் போதிய வசதிகள் இருக்கும். சாரதா சொர்க்கத்திலும் மினி ஸ்கர்ட் தான் அணிந்திருப்பாள்.

சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து குருஜியிடமிருந்து விடை பெற்றான் மாரிச்சாமி.

அலுவலகத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விடுப்பில் இருந்தான் மாரிச்சாமி. விபத்து பணியின்போது நிகழ்ந்திருந்ததால் அவனுக்குச் சிறப்பு விடுப்பு கிடைத்திருந்தது.

இப்பொழுது மீண்டும் சிந்தனைவயப்பட்டவனான் மாரிச்சாமி. யோகாசனப் பயிற்சி, குறிப்பாக இந்த மூச்சுப் பயிற்சி மூலம் மினி சிகரெட் பெரும் அளவில் குறைந்திருந்தது..

ஆறேழு நாட்களில் சாரதா வார்தா போய்விடுவாள். இனிப் பார்க்க இயலாது. முப்பதாகக் குறைந்திருந்த மினி சிகரெட் முப்பத்து ஐந்தாக அதிகப்பட்டிருந்ததற்குக் காரணம் இனி சாரதாவைப் பார்க்க இயலாது என்பதால் தான் என்பது மாரிச்சாமிக்கு மட்டுமே தெரியும்.

Series Navigation

கோபிகிருஷ்ணன்.

கோபிகிருஷ்ணன்.

இழந்த யோகம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue