என்.கே மகாலிங்கம், ரொறொன்ரோ
ஜனவாி 19ம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஸ்காபரோ சிவிக் மைய மண்டபத்தில் Lutesong and Lament என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பில் பல்வேறுபட்ட காலகட்டங்களைப் பிரதிபலிக்கும், ஆங்கிலத்தில் அழகுற மொழிமாற்றம் செய்யப்பட்ட இலங்கை தமிழ் கவிதைகளும், சிறுகதைகளும் அடங்கியிருக்கின்றன.
இந்நூலைத் தொகுத்த ரொறொன்ரோ பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிாியர் செல்வா கனகநாயகம் கூட்டத்தை நெறிப்படுத்தி ஆரம்ப உரை ஆற்றினார். ‘ இந்த நூலைக் கொண்டுவரவேண்டுமென்று முன்மொழிந்து அயராது உழைத்த திரு பத்மநாப ஐயரை நாம் மறக்க முடியாது. அவர் ஒரு திட்டத்தை ஆரம்பித்தால் அது பூர்த்தியாகும்வரை ஓய மாட்டார். தன்னலமற்றவர். இந்நூல் வெளிவரும்வரை இது அவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் அவருக்கு தொியாது.
‘இந்த நூலின் தலைப்பை தொிவு செய்தவர் கனடா இலக்கிய உலகத்தில் உயர்ந்த விருதுகளைப் பெற்ற திரு வஸஞ்சி. மிகச் சாியாக தொகுக்கப்பட்ட கவிதைகளில் இழையோடும் பிாிவுத்துயரை பிரதிபலிப்பதாக அது இருக்கிறது ‘ என்றார்.
அடுத்ததாகப் பேசிய ரொறொன்ரோ பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிாியர் மில்ரன் இஸ்ரேல் இந்த தொகுப்பில் உள்ள கவிதைகளின் அடிக்கருத்தாக இருக்கும் அடையாளம், தேடுதல், பிாிவுத்துயர், புலம்பெயர்வு, அமைதிக்குலைவு போன்றவற்றை எடுத்துக் காட்டினார். குறிப்பாக ஜெயபாலனின் பாழி ஆறு கவிதையை நினைவுகூர்ந்தார்.
கொலம்பியா பல்கலைக் கழக மானிடவியல் பேராசிாியர் வலன்ரைன் டானியல் அங்கதச் சுவையுடன் உரையாற்றினார். ‘கல்சர் என்ற சொல்லுக்கு தமிழில் பண்பு, நாகாீகம், கலாச்சாரம் என்ற பதங்களை மாற்றி மாற்றி சொல்வார்கள். அச்சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் விடைகளும் மாறி மாறித்தான் வரும். உண்மையில் பண்பாடு நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது. எதுவுமே கால ஓட்டத்தில் நெகிழ்ந்து இணங்கிப்போய் கொண்டிருக்கிற ஒரு compliance தான் ‘ என்றார்.
மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல்துறை பேராசிாியர் ராம் மகாலிங்கம் தான் இலங்கை எழுத்துக்களை தேடிக்கண்டுபிடித்து வாசிப்பதாகவும் கடந்த இருபது வருடங்களாக அவற்றை நேசித்து வருவதாகவும் கூறினார். அவர் நூலிலுள்ள ப்றாங்போட் நகரத்துக் கவிதையையும், சேரனுடைய ‘பிாிவும் சந்திப்பும் ‘ கவிதையையும் நுணுக்கமாக ஒப்பிட்டு அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்தார்.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக புதிய பரம்பரையினரான ஏழு தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலில் காணப்படும் சில கவிதைகளை வாசித்தார்கள். இவர்கள் தமிழ் கலைப்படைப்புகளை சுவைத்து அதில் ஆர்வம் பெற்று இன்னும் பல மொழிபெயர்ப்புகளை தங்கள் சொந்த முயற்சியில் எதிர்காலத்தில் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது.
சிறப்பு விருந்தினராக நியூயோர்க்கில் இருந்து வந்திருந்த பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவராகிய மருத்துவ கலாநிதி வின்ஸ்ரன் பஞ்சாச்சரம் தன் உரையில் ஆங்கில புத்தக வெளியீட்டு முயற்சியை போற்றி இதுபோல இன்னும் பல நூல்கள் வரவேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டு இவ்விழா நடத்துவதற்கு பணவுதவி புாிந்தவர்களுக்கு நூலை வழங்கி கெளரவித்தார்.
இந்த நூல் ஒரு தொடக்கமே. சில முக்கியமான படைப்பாளிகள் தொகுப்பில் இடம் பெறவில்லை; இன்னும் சில அவகாசமின்மையால் விடுபட்டுப் போயின. இது பூரணமான முயற்சி அல்ல. அடுத்த நூல்களில் இவை பூர்த்தி செய்யப்படும் என்று தலைவர் முடிவுரையில் சொன்னார்.
பத்திாிகை, வானொலி , ஒளிபரப்பு ஊடகங்கள் நிகழ்ச்சியை முக்கியப்படுத்தி நேரடி ஒலி , ஒளி பரப்பு செய்தன. பல்லின மக்களுடன் தமிழ் மக்களும் ஆர்வமாக கலந்தது விழாவின் பெரு வெற்றியை காட்டியது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசிய மையத்துடன் இணைந்து நடாத்திய இவ்விழா எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுடைய நன்றியுரையுடன் இனிது நிறைவேறியது.
22 ஜனவாி, 2002
- இருட்டு பேசுகிறது!
- பிறவழிப் பாதைகள்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- கார தேன் கோழிக்கால்கள்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கணித மேதை ராமானுஜன்
- மின் அஞ்சல்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- கேள்வி
- அன்பு என்ற அமுதம்
- மனைவி!
- மரணம்
- இதற்கும் புன்னகைதானா… ?
- என் வீட்டருகே ….
- அப்பா
- அது அந்தக் காலம்….
- துயரம்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தெரியாமலே