திலகபாமா
(லண்டனில் நடைபெற்ற 24வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப் பட்ட கட்டுரை )
இலக்கியம் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்தின் வெளிப்பாடாக பிரவாகமெடுக்கும் மொழி வரலாறாக, பதிவாக, உணர்வாக கருத்தியல்களை கட்டமைக்கும் ஆயுதமாக போராட்ட தளமாக எல்லாமாக மாறிப் போகக் கூடியது.
அந்த வகையில் பெண்களின் தொடர் வாழ்வியல் போராட்டத்தில் இலக்கியத்தில் பெண்ணின் இருப்பு என்ன ? அந்த இருப்பை தீர்மானிப்பது யார் ? எது ? என பதிவு செய்திருக்கும் இலக்கியம் எது ? பெண் உணருதல்கள் அதுவாகவே சொல்லப் பட்டிருக்கிறதா ? சொல்லப் பட்டது அதுவாகவே உணரப் பட்டிருக்கின்றதா இப்படியான பல கேள்விகைளை நம்முன் விரித்துச் செல்லும் வாழ்வியல் போராட்டத் தளத்தில் மிகச் சொற்பமான பதிவுகளே இலக்கியமாகி இருக்கின்றன
மொழி வழியாகவே வரலாறுகள் அறியக் கிடைக்கின்றன. தாயாண்மை சமுதாயத்தில், பெண்ணின் உயிர் பறிக்கா உதிரப் போக்கும், ஒரு உயிரைப் பிரசவிக்கும் கர்ப்பமும், பயத்தைத் தந்து சமுதாயம் அவளைப் போற்றக் கூடிய நிலையைத் தந்திருந்தது. ஆனால் இயற்கையின் இரகசியங்கள் மெல்ல உடைபட்ட பிறகு நிலவுடமைக் காலத்தில் அதே உடலைச் சொல்லியே அவள் அடிமைப் படத் தக்க உணர்வுகளையும் தந்து மெல்ல மெல்ல தன் ஆதிக்க கரங்களை அவள் கழுத்தில் வைத்து, பெண் என்பவள் ஆணுக்கான உடமைப் பொருளாகவும் பக்தி இலக்கியங்கள் தலை யெடுத்த காலத்தில் மண் பொன், என ஆண் ஆசை வைக்கக் கூடாத பொருட்களின் பட்டியலில் பெண் என்பதை சேர்த்ததன் மூலம் அவள் ஆணின் சுகத்துக்கானவளாகவும், வணிகமயமாக்கலின் போது நுகர்பொருளாகவும் மாற்றி விட்டது இந்த ஆதிக்க சமுதாயம். மாற்றப் பட்டதை உணர முடியாத அளவுக்கு அதுவே பெண்ணுக்கு சுகம் என்னும் போதிப்பை தொடர்ந்து சமயம், மதம் இலக்கியங்கள் எல்லாவற்றுன் வாயிலாகவும் நிகழ்த்திய படி இருந்திருக்கின்றது இந்த ஆதிக்க சமுதாயம்.
இந்த சமுதாயம் ஆதிக்க மனோபாவங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப் பட்டதை உணர முடியாத அளவுக்கு தாயாண்மை சமுதாயத்திலிருந்து நாகரீகம் வளர்ச்சியடைந்த கால கட்டங்களின் பின் காலம் காலமாக நாம் ஆணாதிக்க சிந்தனைக்குள் ஊறிப்போனவர்களாகவும் மீண்டு வர எத்தனிக்கும் போதும் அதன் அடிப்படை மூலக் கூறுகளை நாமே அறியாமல் நம்மோடு சுமந்து திரிபவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றோம். இலக்கியங்களும் புராண இதிகாசங்களும் அந்த அந்த கால கட்டங்களுக்குத் தேவையானவற்றை பேசியோ பதிவாகவோ செய்து வைத்திருக்கின்றன. அந்த பேச்சும் பதிவும் எல்லாமே பெரும்பாலான ஆண்களாலும் பெண்களால் எழுதப்பட்ட கொஞ்ச படைப்புகளும் அதே ஆணாதிக்க சிந்தனைக்குள் இருந்தவர்களாலுமே எழுதப்பட்டிருக்கின்றது. இது பழமையான இலக்கியங்களை குறை சொல்லும் “ மாற்றாந்தாய் மனப் பான்மை “அன்று..
அந்த அந்த கால கட்டங்களில் உருவாகிய இலக்கியங்கள் நமக்குள் விட்டுச் சென்றிருக்கின்ற மரபுகள் , கட்டுப் பாடுகள் விழுமியங்கள் எல்லாமே ஆண் வழிச் சிந்தனை உடையதாகவும் சமுதாயம் ஆட்சி, கலாசாரம், காலம் என மாறிய கால கட்டங்களிலும் அந்த இலக்கியங்களை இன்றைய காலகட்டங்களூடன் ஒப்பீடு செய்து சிந்திக்க துவங்கியிருக்கிறோமா. அல்லது நமது இன்றைய இலக்கியங்கள் ஆணாதிக்க சிந்தனை மரபிலிருந்து விடுபட்டு நின்று பெண்ணை பார்க்கத் துவங்கியிருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டிய விசயமாகும்
அப்படியான சமூகவியலையும் கணக்கில் கொண்டு தான் இலக்கியங்களையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது
பெண் விடுதலையை துவங்கி வைத்த பாரதி காலம் தொட்டு இன்று எவ்வளவோ பெண்கள் வெளிவந்து விட்டதாயும் உலகை சுற்றி வந்ததாயும் பெருமை பேசிய போதும், பெண்ணை நுகர் பொருளாகவும் உடைமைப் பொருளாகவும் சொத்தாய் பார்க்கும் மனோபாவமும் ஆணுக்குள் மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் மாறாமல் இருந்து கொண்டே இருக்கின்றது என்பதே உண்மை. பெண்ணின் வாழ்க்கை ஆணை சார்ந்து இருப்பதாகவும் , ஆணை சார்ந்திலாத வாழ்வு பெண் இழந்து விட்ட வாழ்வாகவும் தீர்மானிக்கப்பட்டே இன்றைய நமது மனோபாவங்கள் தொடர்கின்றன. பெண் உடல்ரீதியாக மட்டுமன்றி உணர்வு ரீதியாகவும் சிதைக்கப் பட்டுக் கொண்டே இருக்க வாழ்வியலில் இவ்வளவு சிக்கலுக்கிடையில் இருக்கும் பெண்ணின் இலக்கிய இருப்பு என்ன ? என்று பார்க்கப் போனோமானால் அதை இரு வகையாக பிரித்து பார்ப்பது நமக்கு எளிதாகிறது
பெண் பங்களிப்பு என்று பார்க்கப் போனோமானால் அண்றிலிருந்து இன்று வரை மிகக் மிக குறைவானதே
பெண் சித்தரிப்பு என்று சொல்லப் போனால்
பெண்ணைப் பேசும் படைப்புகள்
பெண் உணர்வைப் பேசும் படைப்புகள்
எனப் பார்க்க முடிகின்றது
பெண்ணைப் பேசும் படைப்புகள்
சங்க கவிதைகள் வாசிப்பில் நான் உணர்ந்த இடமிருந்து எழும்பிய சில கேள்விகளை இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன்
சங்க இலக்கியங்களில் நிறைய பெண் பாற்புலவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று பெருமை கொள்கின்றாம். அதே நேரத்தில் பாடப் பட்ட பாடல்களில் எழுதியவர்கள் ஆண்களாக இருந்த போதும் பெண்களாக இருந்த போதும், தலைவனை அதாவது ஒரு ஆணை (மறந்தும் கூட பெண் தலைமை இடத்தில் இல்லை,) சார்ந்து , அவன் மன்னனாக இருந்தாலும் சரி.,கடைசி போர் வீரனாக இருந்தாலும் ‘சரி அவனுக்காக காத்திருப்பது அவனில்லாது போனால் வாழ்க்கை தொலைந்து போனதாய் விரக்தியில் தவிப்பதுமாய் தான் பெண் நிலை சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
காமத்தை , பெண் உணர்வை பேசுவதாய் இருந்த ஒளவையின் சில பாடல்களும் அந்த ரகங்களே. பெண் உணர்வுகளாக அந்த பாடல்கள் வெளிபடுத்தியிருக்கும் உணர்வுகள் பெரும்பாலும் இயல்பை பேசுவது போலவே இருப்பினும், அதற்குள் இயல்பு போலவே ஆதிக்க சிந்தனை திணிக்கப் பட்டிருக்கின்றது
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்று சொல்லி அது மட்டும் அவள் செய்தால் போதுமானது என்று வீட்டிச் சுவருக்குள் நிறுத்தியதன் எதிரொலி இன்றும் பெண் வேலைக்குப் போகத் தொடங்கிய பின்னரும், களைத்து திரும்பும்பெண் முன்னால் வீட்டை சரியாக பராமரிக்கத் தெரியாதவள் அல்லது முடியாதவள் எனும் குற்ற உணர்வை முன் வைப்பதற்கு நமை அறியாமல் நமக்குள் இருக்கின்ற , திணிக்கப் பட்ட இந்த விழுமியங்கலும் காரணம்
ஈன்று புறந்த தருதல் என் தலைப் கடனே என்று அன்று பாடிய வரிகள் இன்னமும் அதற்கான கட்டமைப்பை செய்து கொண்டிருகின்றன
வினையே ஆடவர்க்கு உயிரே
மனை புற மகளிர்க்கு அவ்வாடவர் உயிரே
அப்பொ பெண்கள் செய்வதெல்லாம் வினை இல்லையா ?
பாடப் பட்டவர்கள் பட்டியலில் ஏறக்குறைய 110 பேர்கள் வரை பாடல் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அந்த பட்டியலில் ஏன் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. பெண்கள் செயல்படவே இடம் இல்லாது போனதாலா ? அல்லது அவர்கள் செயல் பட்ட போதும் அதை வெற்றியாக கண்டவர்கள் இல்லாததா ? காரணம் .
இத்தனை பெண் பாற் புலவர்கள் இருந்தும் அரசனையே இடித்துக் கூறும் தகுதி பெற்றிருந்தும் ஆதிக்க சிந்தனையால் தன் மேல் நிழலாய் வீழ்ந்த இருள் மனோபாவங்களை தவிர்க்க முடியாமல் தவிக்கத்தான் செய்திருக்கிறார்கள் .
“யாழொடும் கொள்ளா;பொழுதோடும் புணரா
பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் .,புதல்வர் தம் மழலை
என் வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே
“ என் வாய்ச் சொல்லும் அன்ன”
எனும் இந்த கவிதை வரிகள் ,
இன்று பெண்களின் பேச்சு நிராகரிக்கப் படுவது போலவே ஒளவையின் சொற்களும் மதிக்கப் படாமல் போயிருக்கக் கூடுமென நம்மை நினைக்க வைக்கிறது. அப்படியிருந்த போதும் அங்கீகாரங்களை எதிர்பார்க்காது . யாழிசை போன்று என்று மயங்கவும் வேண்டாம், காலத்தோடு ஒத்து வாராது போல தோன்றவும் செய்யலாம், புரியவில்லை என்றும் உரைக்கலாம்.
ஆனாலும் அதையெல்லாம் மீறி தந்தைக்கு குழந்தை சொல் எவ்வளவு மதிப்பானதோ என் வாய்ச் சொல்லும் அத்தகையவையே என்று சொல்லும் சொற்களில் தெரியும் தன்னம்பிக்கையே அந்த கவிதையின் வாழ்தலுக்கு காரணமென்று நான் நினைக்கிறேன்.
அன்று இருந்த அதே நிலை இன்றும் மாறவில்லை.
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”
என்ற வரியிலும் அந்த கர்வம், தன்னமிக்கை கலந்த கர்வம் இருப்பது முக்கியம் என்று எனக்கு படுகின்றது. ஆதிக்க சிந்தனையின் அடிமை மனோபாவம் பெண்ணுக்குள்ளும் புரையோடிப் போய் இருந்து கொண்டிருக்க அதை தவிர்க்க முடியாமல் தவிப்பது தொடர் முயற்சியாகவே இருந்து வந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முயலுதல் என்பதுவே இயக்கமாய் இருக்க இன்று எழுத வந்த பெண்ணெழுத்துக்களிலும் அந்த முயற்சிகளில் வென்று விட்டோமா என்றால் அப்பவும் பெண்ணை பெண் உணர்வுகளை ஆணுக்கானதாய் படைத்துத் தரும் மனோபாவமும் அல்லது காத்து தவிப்பதுமாகவே முன் வைப்பது வருத்தம் தருவதாகவே இருக்கின்றது.
காத்திருப்பதும், மகிழ்விப்பதுவும், மன்னிப்பதுவுமே தான் பெண்ணுக்கான இயல்புகளாக அடையாளப் படுத்தப் படுவதை அந்த காலம் முதல் இன்று வரை பாலியல் சுதந்திரக் கவிதைகளிலும் கூட ஏன் விட்டு வெளியேற முடியவில்லை என்று நாம் யோசிக்க வேண்டும். உடைத்துக் கொண்டு வெளியேறுவதாய் பிரகடனப் படுத்தப் படும் கவிதைகளும் ., உடைத்துக் கொண்டு எங்கு போய் விழுகின்றன என்றால் தொடங்கிய இடமே போய் விழுவதாக இருக்கின்றது
பெண் என்று இருந்தால் அவள் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆணுக்கானவளாய் வழங்குவதற்கான ஒன்றாக நிகழ்ந்து விட வேண்டிய நுண்ணிய வழிமுறைகளில், சாதுரியமான முறைகளில் ஆணாதிக்கம் செயல்படுகின்றது
அதை உடைத்து போடுவதாய் பெண் எழுத்துக்களோ பெண்ணுக்காக எழுதப் பட்ட எழுத்துக்களோ இருக்கின்றாதா என்றால் இன்னும் அந்த விழிப்புணர்வு பெண்களிடையே இல்லாமல் இருப்பதைத்தான் இதுவரை எழுதப்பட்டிருக்கின்ற இலக்கியங்கள் காண்பிக்கின்றன.
ஒரு கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் பேசினார். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள் என்று அதற்கு உதாரணாமாக அவர் சொல்லிய பெண்கள் ஒளவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார். அந்த மேடையிலேயே எனது கேள்வியும் இருந்தது . அப்போ எதை வாழ்க்கையாய் நினைகின்றீர்கள். ஒரு பெண் கணவனோடு குழந்தைகளோடு வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்றா ? அப்பொழுதுதான் அவன் வாழ்வில் வெற்றி கண்டவள் என்றா ? .என்னைப் பெறுத்தவரை இவர்கள் எல்லாரும் தாங்கள் எதை வெற்றியாக கருதினார்களோ அதை திறப்பட செய்து வென்றவர்கள் தான்
இந்த எண்ணங்கலிருந்து மீண்டு வந்தவர்களாய் எனக்கு சித்தர்களும் அவர்களது பாடல்களும் தெரிகின்றன. பொதுவாக எல்லாரும் சொல்வதுண்டு சித்தர்கள் பெண்களை வெறுத்தவர்கள் என்று
ஆனால்
மைவிழியாரை சாராதே-துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே
எனும் கடுவெளிச் சித்தர்(பாடல் 24)
பாம்பினை பற்றியாட்டாதே-உன்றன்
பத்தினி மார்களை பழித்து காட்டாதே
என்று முரணாகவும் சொல்லும் போது யோசிக்க வேண்டியிருக்கின்றது அந்த காலத்தில் தாசிக் குலப் பெண் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டியின் கடுமையான போராட்டத்திற்கு பின் தான் அது சட்ட விரோதமாக்கப் பட்டுள்ளது.
ஆனால் இவ்வளவுக்குப் பிறகு இன்று பத்திரிக்கையாளர் ஞானி பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும். அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மீதுள்ல குற்ரப் பார்வையை சமுதாயம் நீக்க வேண்டும் என்கின்றார். பபலியல் தொழிலாளிகலுக்காக குரல் கொடுகும் தொனியில் உள்ல அவரது கருத்தாக்கங்கள் உண்மையில் பெண்ணுக்கு நல்லது செய்யுமா அல்லது அத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்காவது என்று பார்க்கப் போனோமானால் நிச்சயமாக இல்லை.மேலும் மேலும் பெண்ணை உடல் சார்ந்தும், பொகப் பொருளாகவும் நிறுவவே முயலும்
தாசி குல வழக்கங்களை , பெண்ைணை போகப் பொருளாய் பார்ப்பதை இந்த சித்தர் கண்டிக்கின்றார். பெண்ணை தாயாய் பார்க்கும் மனோபாவங்களை நெடுகச் சொல்லிச் செல்கின்றனர்.
கக்தி பெரிதோ உறை பெரிதோ இவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சக்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே
எனும்கொங்கனச் சித்தர்
பண்டு முளைப்பது தரிசியேயானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டு கொண்டு முன்னே அவ்வை சொன்னாலது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே
பெண்ணுமில்லாமல்லே யாணுமில்லையிது
பேணிப்பாரடிவாலைபெண்ணே
சமதர்மத்தையும், பெண் பார்க்கப்பட வேண்டிய கோணத்தையும் சரியாக சொல்லிப் போகிறவர்களாக சித்தர்களை அடையாளம் காண்கின்றேன்.
பட்டினத்தார் பாடல்கள் மிக மோசமாக சித்தரிக்கும் பெண்களை. கச்சித் திரு அகவல்-4 பாடலில்முழுக்க பெண் உடலை நிந்தித்து பாடியிருப்பார். பெண்ணை நிந்திப்பதாக சொல்லுகின்ற அப்பாடலிலும் உற்று நோக்கினால் பெண்ணை உடல் சார்ந்து பார்ப்பதைதான் வெறுத்திருக்கின்றார்.
காமுகரை சேரும் சிறு குழி என்றும், போக மாதரை போற்றுதல் ஒழிந்தே என்றும் அவர் சொல்ல சொல்ல பெண் ஆண் என்றில்லாது உடலை மையப் படுத்தி வாழும் வாழ்க்கையை வெறுத்து அவர் பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரஞ் செய்வார், சாத்திரங்கள் ஆயார் , பிறர்க்கு உபகாரஞ்செய்யார் இவெரெல்லாம் இருந்தென்ன போயென்ன என்றும் கேட்கின்றா கேள்விதனில் நாம் புரியலாம் பெண்ணை உடல் சார்ந்து பார்ப்பதை தவிர்க்க சொல்லி வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதே நேரத்தில் உடலை ஆரோக்கியம் சார்ந்த விசயங்களுக்கு எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் உண்ர்ந்திருந்ததானால் தான் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர்
ஆனால் சித்தர்களை பெண்களுக்கு விரோதியாகச் சொல்லி, உண்மைகளை அதுவாகவே உணரவிடாததுதான் நிகழ்ந்திருக்கின்றது
இன்றைக்கு பின்னவீனத்துவம் என்று போலிகளை உடைக்காது புனிதங்களை கட்டுடைக்கும் போக்குள்ளவர்கள் உடலை எங்கு கொண்டாட வேண்டும் எங்கு அற்றுப் போகச் செய்ய வேண்டும் முற்போக்கு பின்நவீனம் என்பதையெல்லாம் சித்தர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்
ஆதி காலம் தொட்டு பெரும்பாலான இலக்கியங்கள் மலையை, பூவை இயற்கையை தென்றலைப் பாடியதைப் போலவே பெண்ணையும் பாடி வந்திருக்கின்றன. தனை சந்தோசப் படுத்தும், பொருளை பாடுவதாகவும், பெண்ணின் எவ்வகையான இருப்பு தனை சந்தோசப் படுத்துகிறது என்பதாகவுமே பெரும்பாலும் படைப்புகள் இருந்து வந்திருகின்றன
பெண் நுகர் பொருளாக, இரண்டாம் தரப் பிரஜையாக ஆணுக்காக வடிவமைக்கப் பட்ட பொருளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்
முற்போக்கு சிந்தனைகளை முன்னிறுத்திய பாரதி தாசன் கவிதை வரிகள் சில
வேண்டுமா மகளே வேண்டுமா ?
மகிழ்ச்சி வேண்டுமா இன்பம் வேண்டுமா
தூண்டாமணி விளக்கே சொல்லுவேன் கேள் உனக்கே
துணைவனோடு நீதான் இணை பிரியாதிருக்க வேண்டும்
கறி சமைத்து சோறாக்கியுன்
கணவனுக்கிடு முன்பு-நிகழ்
கருத்தினிலே மகிழ்ச்சி தோன்றும்
அதுதானடிஅன்பு
வெறுக்காமல் உன் அத்தான் உண்டு மகிழ்ந்த பின்பு
மெல்லியே உன் வாழ்க்கை இனிக்கும் செல்ல குட்டி
கண்ணாளன் வெளியிற் சென்று
திரும்புவதும் உண்டு தன்
காரியம் கை கூடாமையால்
வருந்துவதும் உண்டு
பண்ணொன்று பாடடி இன்பக் கற்கண்டு
பரிமாறு துயர் தீர்க்கும் அது நல் தொண்டு
இக்கவிதை பெண்ணின் பசியும் இசையும் யாருக்காகவோ என்று பேசுகிறது. அடுத்தவருக்காக வாழும் வாழ்வு மட்டுமே சந்தோசமானது என பெண்ணுக்கு போதிக்கிறது. வாழ்ந்து கொண்டிருக்கின்ற படைப்பாளிகளை பற்றி மட்டுமே பேசுவோம் என்று வரையறுத்து வைத்த போதும் இன்றும் வழக்கத்தில் ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டிருக்கின்ற இந்த பழக்க வழக்கங்கள் நல்ல பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என இந்த இலக்கியங்கள் தீட்டி வைத்திருக்கின்ற உருவகங்கள் உடைபட்டு இயல்பாக சிறகு விரிக்க எத்தனை காலம் தான் ஆகுமோ என்று நமை கேள்வி கேட்க வைக்கின்றன.
சரி முடிந்து போனவர்கள் காலத்தை புரிதலுக்கான சான்றாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய விமரிசித்து ஆவதொன்றுமில்லை
வாழும் கவிஞர்கள் மனோபாவங்களாவது இந்த ஆதிக்க நிலையிலிருந்து மாறியிருக்கின்றதா ? முற்போக்கு எனும் வார்த்தைகள் நிஜமாகவே முற்போக்காக இருக்கின்றதா ?
அடுத்து ஞானக்கூத்தனின் கவிதை வரிகள். பெரும்பாலான படைப்புகளில் கவிஞர்கள் சொல்லிச் செல்கிற பெண் தன் உணர்வுதனை பேசுபவளாக இருந்திருக்கவில்லை.
அந்த படைப்பாளி , சுகிப்பதற்கான ஒரு பொருளாகவே பெண்ணையும் பார்க்கும் பார்வை தொடர்ந்து இருந்து வருவதை நாம் காணலாம்
காய்ச்சல் நீங்கி கண்விழிக்கும் ஒரு
கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய்
பட்டிப் பூவின் கருநீலம்
பெண்னை அழகு என்று மட்டுமே பார்க்கும் மனோபாவம் இந்த கவிதை வரிகளில் காண முடிகிறது
முலைகள் அசையத்தான் செய்யும் ஒரு
புடவைத் தலைப்பை ந்ினைவூட்டி.
இந்த கவிதை வரிகள் சொல்ல வந்த செய்தி தான் என்ன ?பூக்களின் அழகை உணர்த்த உயிருள்ள பெண்மையிடம் வேறு விசயங்களே கவிஞரின் கண்களுக்கு புலப்படாமல் போனது வருத்தம் தான்
கவிஞர் நீல பத்ம நாபனின் கவிதைகள்
அபஸ்வரம்
கனவு தொனிக்கும்
விழிகள்
சவாலுக்கு அழைக்கும்
ஸ்தனங்கள் துவளும் இடைகள்
யானைக் கால்கள்
செய்தி
அன்றிலிருந்து
இன்றுவரை
அன்பு கற்பு
எனக்
கதைத்துக் கற்புக் கரசியாம்
கண்னகிகளை
பெண் தெய்வமாய்
கோயில் அமைத்து
குடியிருத்தி
வழிபட்டதெல்லாம்
எதற்கென
இந்தியாவின்
முதல்
எய்ட்ஸ் நோயாளியை
நம் நகரில்
கண்டு பிடித்த
செய்தியை
வாசித்த இக்கணத்தில்
புரியத் துவங்கியது
செய்தி கவிதை சொல்லிச் செல்வது என்ன ?
எல்லாரும் கண்ணகியாய் இருந்து விட்டால் எய்ட்ஸ் குறைந்து விடும் என்றா ? சரிதான் கண்ணகியாக இருப்பது என்பது. ஆனால் கோவலன்கள் இராமர்களாக இருந்திருந்தால் குறைந்திருக்கும் என்று சிந்தனை ஏன் தோன்றவில்லை. அப்போ நமக்குள் இருக்கின்ற பார்வைகள் இன்னமும் ஆணாதிக்க வழி சிந்தனைக்குள் இருப்பதை அறிய முடிகிறதே.
ஆனால் இந்த சிந்தனைகள் ஆணுக்குள் மட்டுமல்ல. புதிதாக எழுதத் துவங்கியிருக்கும் இளைஞர்கள், பெண்கள் என்று ஒரு குழுவினரிடம் இருப்பது வருத்ததிற்குரியதாய் இருக்கின்றது
சில கவிதை வரிகள்
சமையலறை தேடி
நீரருந்தி விட்டு திரும்பும் அவருக்கு
எதை சொல்லி
என் வயதை
ஞாபகப்படுத்த ? சுகிர்தராணி
என்ன சொல்ல வருகிறார் ?இரண்டு விசயங்கள்
ஒன்று திருமண வயதை நினைவு படுத்துவதன் மூலம் திருமணம் தான் தன் வாழ்வு என்றும்
இரண்டு தன் வாழ்வுக்கு யாரையோ சார்ந்திருக்க வேண்டிய நிலையும்,
ஆணாதிக்க சிந்தனையின் மரபுக் கூறுகள் இவருள்ளும்
தன் உறக்கத்தில் அவை வேட்டை
நாய்களைக்
கனவு காண்கின்றன
சில பொமரேனியன்கள்
ஸ்டிக்கர் பொட்டிட்டுள்ளன சங்கர ராம சுப்ரமணியன்
குனிந்து வளைந்து
கூட்டிப் போனாள்
வீடு சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு
அவள் அழகாயில்லாததால் எனக்கு தங்கையாகி விட்டல்
எனும் கவிதைக்கு கவிஞர் இடும் தலைப்பு “சலுகை” பெண்ணுக்கு தங்கையாகும் சலுமை அளிக்கின்றாறாம்
தன் ஆடுதன் செட்டுக்கு
ஜோக்கர் கிடைக்காதவரை
அவள் எனக்கு பத்தினியாயிருப்பாள்
இந்த கவிதை வரிகள் ஒரு கிராமத்து ஆணாதிக்கவாதியின் உச்சகட்ட சிந்தனை. நவீன கவிஞரின் முன்னோடியாக இலக்கிய உலகில் நிறுவப் பட்டிருக்கும் கலாப் பிரியாவினாலும் கூட ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட முடியவில்லை
ஆண்கள் மட்டும் எழுதலாமா என்ற கேள்வியுடன் இப்போது பெண்களும் அதே ஆணாதிக்க சிந்தனை வழியில் பெண்ணை உடல் சார்ந்து தன்னை தானே அடையாளப் படுத்துவது இன்று நிகழ்ந்து வருகின்றது
பெண் உறுப்புகளை பற்றி பேசுவதாலேயே ஒரு கவிதை பெண் உணர்வுகளை பேசுவதாய் ஆகிவிடாது. பெண்ணுக்கான வலியை சொல்ல வந்த போதும் , பெண் என்றாலே நினைவுக்கு வருவது பாலுறுப்புகள் என்கின்ற தளத்தில் கவிதை இருப்பதால் அதுவே அறியாது ஆதிக்க சமுதயம் கொண்டிருந்த குரலை கையிலெடுத்து விட்டது என்பது என் கருத்து.
நாங்கள் குறிப்பிட்டது பெண்ணுறுப்புக்களை அல்ல. அது ஒரு உருவகமே என்கிறார்கள். உருவகத்திற்கு வேறு பொருட்களே இல்லாது போக இந்த கவிஞர்களிடத்தில் மொழிப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா என்ன ?
பெண்ணுக்கான வரையறைகள் என்று ஆண் தீர்மானித்து வைத்தவைகளை மாற்ற நேரும் போதும் , மனிதனுக்கான வரையறைகள் மீறப்படாமல் பாதுகாப்பதும் அவசியமாகும்..புனிதங்களை கட்டுடைக்க தேவையில்லை.புனிதங்களுகிடையில் புனிதங்களின் போர்வையில் இருக்கின்ற போலிகள் கட்டுடைக்கப் படவேண்டுமதை விட சில நேரங்களில் மிக முக்கியமானது எங்களுக்கான புதியவற்றை கட்டமைப்பதும் ஆகும்
பெண் உணர்வு பற்றி நாம் சிலாகிக்க கூடிய படைப்புகளும் நிகழ்ந்த படிதானிருக்கின்றது. அதுவே நமது நம்பிக்கைகளின் பிடிமானம்
பிச்சமூர்த்தியின் கவிதை வரிகள்
கெளதமனை இராமன் நிந்திப்பதாய் வரும் கவிதை வரிகள்
“உயிரை ஓர் உடைமையாகக்
கருதியே குற்றம் செய்தான்
என்றும்
பெண் இனம் நெஞ்சை இன்னும்
மானிடர் அறியவில்லை
கற்பெனும் நெறியைப் பெண்கள்
கொள்ளவோர் சட்டமிட்டால்
மீறுதல் ஆண்களன்றி
இயலுமா வேத ரிஷியே
பெண் உடைமைப் பொருளாய் கருதப் படுவதற்கு எதிரான குரல் . பிச்சமூர்த்தியின் கவிதை வரிகளில்.
சூரியனை பற்ற வைக்க
நிச்சயமாய்
எனது சந்தோசங்கள்
உன்னைக் காயப்படுத்தும்
என்று தான்
கண்ணீர்க் கூட்டுக்குள்
ஒரு துயரமாகவே
என்னை வாழவிட்டாய்
வலிமை மிகு நம்பிக்கைகள்
உதிர்ந்து போகும்படி
தோல்வியை நோக்கியே
துரத்துகிறாய்
மேலும்
உனக்குப் பொழுது போக்கவும்
எனக்குப் போராட்டமாகவும்
போஇ விட்டது
என் வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக
என் கண்களைப் பறித்தாய்
நீ உலாவி மகிழ்வதர்காக
என் கால்களைத் தடுத்தாய்
தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சண்யமின்றி
தண்டித்தன
அன்பும் இரக்கமும்
வசீகரமும் பொருந்திய
என் இறகுகளைப் பிடுங்கி பிடுங்கி
உன் கறை படிந்த பற்களை
(இன்னும்)
எத்தனை காலத்திற்கு
தேய்த்துக் கொண்டிருப்பாய்
நிச்சயமாய்
எத்தனை தீப்பந்தங்களை
எறிந்தாலும்
சூரியனைப் பற்ற வைக்க
உன்னால் முடியாது
இதுவரை நமக்குள் படிமங்க:ள் உவமைகள் சொற்கள் மொழி என்று எல்லாவற்றிலும் ஆணுக்கானது பெண்ணுக்கானது என்று ஒரு பிரித்தல் நாமே அறியாமல் இருந்து கொண்டே இருக்கின்றது. நிலா நதி பூ என்று பெண்ணுக்கான உவமைகள் படிமங்கள் என்று இருந்து வந்திருந்த உவமைகள் மாற்றி சூரியனை பெண்ணுக்கான படிமமாய் யோசித்திருப்பது பெண்களுக்குள் தன்னை உணர்தல் நிகழ்ந்திருப்பதை காட்டுகின்றது உரிமைகளை யாரிடமும் கேட்டுப் பெறாமல் அதே நேரத்தில் தனக்குள் இருப்பதை உணரத் துவங்கியிருப்பதற்கான அடையாளமிது அதே போல் இன்னுமொரு கவிதையில் ஓவியமாக நானில்லை என்னும் உரத்த குரலும்
சட்டங்களால்
சிலுவையறையப் பட்டிருக்கும்
படிம மாற்றங்களை சிந்தனை மாற்றங்களாய் அடையாளப் படுத்துகிறது.
யுத்த கால
இரவொன்றின் நெருக்குதல்கள்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்த வர்கள் ஆக்கிவிடும்- சிவரமணி
எனக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்றும் சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ கால்களோ இல்லை
அவ்வப்போது நீ இரவல்
தருவதைத் தவிர கனிமொழி
என் ஆதித் தாயின்
முதுகில் பட்ட திருகைச்சவுக்கடி
னான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது ஆழியாள்
பார் பார் போராட்டத்தில்
ஆண் வதை பட்டால்
தியாகம் என்பதும்
பெண் வதை பட்டால்
கற்பிழப் பெண்பது,ம்
ஆண்தலைப்பட்ட சமூக நியாயம் ஜெயபாலன்
பெண்ணுக்கான குரலை பெண்தான் கொடுக்க முடியும் என்றில்லை என நிரூபணம் செய்யும் கவிதை வரிகள்.
ஆதிக்க மனோ பாவங்களுக்குள் சிக்கக் கூடாது என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பெண் உணர்வு என்றில்லாது மனித உணர்வாக பார்க்கும் சிந்தனை சாத்தியமாகும்.
ஆனால் அதே கவிஞரின் அந்த கவிதையின் இடையிலேயே அவரே அறியாமல் ஆணாதிக்க சிந்தனை பயணப்பட்ட இடமும் உண்டு ஈழத்து மண்ணும் எங்கள் முகமும் எனும் காவியத்தில் போராட்டத்தில் ஈடு பட்டிருக்கின்ற ஆண் காயப் பட்டு உயிருக்கு போராடும் நிலையிலும் பெண் தன்னை தந்து அவனை மீட்டெடுப்பதாகவும் கதை வரும்.
போராட்டத்திற்குள் ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுபடும் போது பெண்ணை மட்டும் ஆணின் சுகதுக்கத்துக்கானவளாய் நினைத்துப் பார்க்கும் மனோனிலை எப்படி கவிஞருக்கு சாத்தியமாகியது
ஒரு படைப்பாளி வெறுமனே நிகழின் சாட்சியாக மட்டுஅல்லாது, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான மூலக் கூறுகளையும் அவன் கலை பேச வேண்டும்.
இன்னுமொன்று பெண் அரசியல் எழுதவில்லை எனும் குற்றச் சாட்டு எப்பவும் உண்டு
ஆண் எழுதுகின்ற படைப்பில் பெண் இல்லாமல் இருந்து விட்ட போதும் பெண் எழுதுகின்ற படைப்புகளில் வெறும் குடும்பமாக தெரிகின்ற கவிதைகளில் கூட அரசியல் ஆண் சமூகம் போர் எல்லாமே இருந்து கொண்டே தானிருக்கின்றன. பல விடயங்களை நாமதுவாகவே காணுவதில்லை
ஈழக் கவிஞர் ஒளவையின் கவிதை ஒன்று
எதையும் நினைத்தழுவது
இப்பொழுது சாத்தியமில்லை
கட்கோளத்தின் ஆறு தசைகளும்
செயலற்றுப் போய்
கண்ணீர்பைகள் வரண்டு பிளந்து
நெருப்பை யாரிடம் கக்குவதென்று
வெறிக்கொண்டு திரிந்த
எங்கள் காலமும் போயிற்று
இன்றைய வாழ்வை நியாயப் படுத்த
நேற்றைய வாழ்வைக் கொச்சைப்படுத்தும்
பொய்மைகள் எமக்குள் இனி வேண்டாம்
நமது பிழையா எனது பிழையா
வரலாற்றுச் சாபமா-போகட்டும்
கருத்துக்களுக்கு
விமரிசனமெழுதி எழுதி
முட்டுகள் செயலிழந்து போனதால்
இலக்கியக் குழுவிலும்
அரசியல் குழுவிலும்
தனி நபர் தாக்குதல் தொடங்கியுள்ளது
ஏகே தூக்கும் பலத்தை இழந்ததால்
பேனாவும் வாயும்
அதன் பணி தொடர்கின்றன
குந்தியிருந்து நிலமிழந்து
கூடியிருந்த வாழ்விழந்து
முகமிழ்ந்து போனது யார்
மார்க்சியவாதி மறுபிறப்பு பற்றி விவாதிக்கிறார்.
பிரமச்சாரி குழந்தைகள் வாழ்வின் தொடர்ச்சி என்கிறார்
அரசியல்வாதி தியானம் பற்றிக் கற்றுக் கொடுக்கிறார்.
உனது பிழையா
எனது பிழையா
வரலாற்று சாபமா ?
போராட வந்தவள் மனைவியாய்
சமையலறையில் அடைபட்டிருக்கின்றாள்
புலம் பெயர்வதை துரோகமென்றவர்
பெயர்ந்த நிலத்தில் வீடு கட்டுகிறார்
சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்தவன்
குழந்தை பெறும் மனைவிக்காக அழுகின்றான்
நீயுமல்ல
நானுமல்ல
இரவல் கருத்தில்சவாரி செய்தவர்
முகமிழந்து போனார்கள்
காலம் பதில் சொன்னபடி நகர்கின்றது
எதையும் நினைத்தழுதல்
இப்போது சாத்தியமில்லை
மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டு
உயிர்த்தெழுதலே வாழ்வு
பெண் குடும்பத்தை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவள் என்று சொல்லுபவர்கள் தான் படுக்கையறையை மட்டுமே எழுதுவதை இன்று ஊக்கப் படுத்தி கொண்டிருக்கின்றார்கள். அது வீட்டை விட்டுபெண் வெளிவந்து விடக் கூடாது எனும் நல்லண்னமே அன்றி வேறல்ல
தையல் சொல் கேளேல்
என்கின்ற ஒளவை வார்த்தைகளுக்கான உண்மையான பொருள் என்ன வாக இருந்திருக்கக் கூடும் என்பதும் கூட நமது சிந்தனைகள் தான்.
பெண்ணே சொல்லியிருக்கின்றார். பெண் சொல்லை கேட்கக் கூடாதென்று சொல்லுபவர்கள் இருக்கக் கூடும். தையல் சொல் கேள் ஏல் .கேட்டு நட என்றும் பொருள் கொள்ள சாத்தியம் இருக்கின்றது .
பா. விசாலம் அவர்கள் எழுதிய மெல்லப் கனவாய் பழங்கதையாய் எனும் நாவல் நான் விரும்பி வாசித்த நாவல்.
ஆனால் அந்த நாவல் சரியாக பேசப் படவில்லை. எது சிறந்த எழுத்து என தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். அத நாவல் சலிப்பு தரும் வகையில் பேசுகின்றது என ஒரு விமரிசனமுண்டு பெண்ணின் வாழ்க்கையே சலிப்புத் தரும் வகையில் ஓயாமல் பேசிப் புரிய வைக்க வேண்டிய வகையில் இருக்க, அதை எழுதப் போகும் நாவல் அப்படி இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால் மிகச் சரியாக அது உணர வைத்திருக்கிறது என்றே சொல்வேன்
ஒரு கூட்டத்தில் பெண்களுக்காய் பேசும் தொணியில் பேச்சு தொடங்கியது. பெண் கவிதாயினிகள் ஆபாசமாக எழுதுகின்றார்கள் என்று குற்றம் சொல்லி அவர்களை முடக்குகின்றார்கள் என்று.
பெண்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற நண்பரின் பேச்சின் இன்னுமொரு மறை பொருள் பெண்கள் ஆபாசமாக எழுதுகின்றார்கள் என்பது. இல்லை காலம் காலமாக உறவுகளை உணர்வுகளை கொச்சைப் படுத்தும் எழுத்தை எழுதிக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்துகொண்டிருக்கின்றாகள் . எப்பவும் இருக்கத்தான் போகின்றார்கள். பெண்கள் எழுதுகின்றார்கள் என்று ஒரு கட்டம் கட்டி பேச்சை துவங்குவது , பெண் எழுத்தின் வழி வெளியே வருபவர்களை அடிக்க காத்திருப்பவர்களை தூண்டி விடும் மறை முகமான வேலையோ அல்லது பெண்ணுக்காக குரல் கொடுத்தவன் எனும் பெருமை தட்டிக் கொள்ளக் காத்திருந்த சுயனலமுமே அன்றி வேறல்ல
படைப்பாளியைக் காட்டிலும் அது பிறக்க காரணமாயிருந்த அடியூற்றாக இருக்கிற காலத்தை சூழலை முதன்மையாக மூலமாக நோக்க வேண்டும்.பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனிமனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறி விடக் கூடாது.
கலை கலைக்காக என்று சொல்லி வருகின்ற சிற்றிதழ் போக்குகளும் வணிக நோக்கிற்கு தடம் மாறியுள்ளன.இன்றைய போக்கு எனும் பெயரில் இயல்பாக இல்லாத- 09; மேற்கத்திய இலக்கிய வடிவங்களில் வென்று விட்ட வடிவமிது உத்தி இது என்று எண்ணிக் கொண்டு நமது மண் சார்ந்த வாழ்வியல் சூழலை மறந்து கவிதை இலக்கியமும் சில நேரங்களில் செய்யப்பட்ட பொருளாக மாறிவிடுகின்றது. வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் தமது பத்திரிக்கைகளுக்கு அப்படியாக செய்யப் படு பொருள் தேவை என ஒரு போலித் தேவையை காலச் சுவடு உருவாக்கி வருகின்றது. காலச் சுவடி ?ன் தடத்தில் அதற்கு போட்டியாக நடத்தப் படும் பத்திரிக்கைகளும் அதையே செய்து வருகி ? ?ன்றன அதில் நடக்கும் விளம்பர உத்திகளில் முதல் பலி இளைஞர்கள் தான். இலக்கியம் மக்களுக்காக என்ரு சொன்ன இடது சாரிக் கட்சிகளும் ? எந்த மக்களுக்காக எனும் குழப்பத்தில் இப்போது. ஆக போக்குகள் வணிக நோக்குள்ள , அல்லது அரசியல் சார்புள்ள வர்களால் தீர்மானிக்கப் படுகின்ற போது அது பெண்ணுக்கு சாதகமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை
மொழி என்பது சொற்கூட்டத்தின் அதிகரிப்பு மட்டுமன்று சிந்தனையின் அதிகரிப்பாலும் தான் மொழி வளம் பெற வேண்டும். இன்றைக்கு சில வார்த்தைகள் அர்த்தமிழந்து போயிருக்க ின்றன அவற்றில் பெண்ணியமும், ஆணாதிக்கமும் ஒன்றாகும். அந்த் அவ்வார்த்தைகளை நாங்கள் மாற்றி யோசிக்க வேண்டியிருக்கின்றது. எளியவர்களை வலுத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது இன மொழி பால் வர்க்க என எல்லா விடமும் நடந்து கொண்டேயிருக்க, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆதிக்க மனோபாவங்களை உடைத்தெறிவதும் நேசம் ஒன்றே எல்லாவற்றுக்கான தீர்வாகவும் இருக்க முடியும் .பெண்ணின் இருப்பு, மனித இருப்பாக உணரப் படுவதும் உணரப் படுவதற்கான வழி வகையை செய்து தருவதும் அதற்கான சிந்தனையை தருவதுமே இன்றைய இலக்கியத்தின் பெண்களுக்காற்றவேண்டிய முக்கிய பணியாக கருதுகின்றேன்
சிந்தனை வழியிலான மாற்றங்கள் மனிதத்தை காப்பாற்றும் விதத்தில் வாழ்வியலிலும் இலக்கியத்திலும் ஒரே நேரத்திலும் நிகழ்வதே இலக்கியத்திற்கும் வாழ்வுக்கும் நல்ல தீர்வாக இருக்க முடியும்
திலகபாமாவின்புகைப்படம் : தமயந்தி , நார்வே
mathibama@yahoo.com
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- கண்ணாடிகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- இலக்கியத்தில் பெண்கள்
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- சான்றுகள்
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- வட்டமேசை
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- கடிதம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- இதே கார்த்திகை
- எச்சம்!
- வயதென்ன ?
- உருமாறும் உறவுகள்
- மழை
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- தியா: முஸ்லிம் மடோனா
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- மனித வதை!
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- அந்த மலர்க் கூட்டம்
- இது எங்கள் கதை