இலக்கணம் மாறுதோ ?

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

வேதா


வெறும்

ஒரு மாத்திரை நேரத்தில்
இந்த உலகையே மறக்கடித்தாய்! – என்னை
முழுவதுமாய் மூழ்கடித்தாய்!

இருப்பதை மாற்றச் சொல்லி – என்
இலக்கணம் மாற்றி வைத்தாய்!
இன்று மட்டும் , என்று சொல்லி
இரவுகளை இறக்க வைத்தாய்!

இன்னும் இன்னும், இசைத்து இசைத்து – என்
ஈரங்கள் இறக்கி வைத்தாய்!
இன்பங்கள் உனக்கு மட்டும்
வேண்டுவதாய், நினைத்து விட்டாய்!

இவளுக்கென்று ஒரு மனம்
இவளுக்கென்று ஒரு குணம்
இருப்பதைக்கூட மறந்து விட்டாய்!

உன் உலகம் வேறல்ல எனக்கு…
பார்வையிலே கர்ப்பம் தாங்கி,
பிறந்து, மலர்ந்து,
தவழ்ந்து, கரைந்து,
பிணைத்த நாள் வரையில்
உறவுகள் தொடர்ந்தாலும்,
உண்மையில்,
இன்னமும் நீ நீயாகவே!
நானும் நானாகவே!

பசி, தூக்கம்,
ஆறுதல், அரவணைப்பு,
ஆசை, கோபம், அத்தனைக்கும்
என் இளமை உனக்கு வடிகால்….

உன் தேவைகளே
என் வாழ்க்கையாகிப் போன சோகம்,
சொன்னாலும் தீராது!

உன் தீண்டலும் , உன் நெருக்கமும்,
உன் வாசமும், உன் ஸ்பரிசமும்,
உன் கோபமும், உன் தாபமும்,
உன் சிரிப்பும், உன் சங்கீதமும்,

எனக்கே எனக்காய்….
எழுதி வைக்க மறந்தாலும்,
என்றாவது உனக்கும் புரியும்
‘என்னவள் ‘ இவளென்று!!

எனக்காகத்தான் நீயென்று!!

‘என்ன செய்தோம் ? இவளுக்காக… ‘
நீ எண்ணியிருக்கும்
அந்த நாள், அந்த நிமிடம்,
அந்த நொடி, அந்த கணம்,
ஆசைஆசையாய் பேசிட நினைப்பாய்!!

எந்த ஆரம்பமும் கிடைக்காமல் தவிப்பாய்!!

உன் ஆசையும், தவிப்பும்,
தமிழாய் தழைக்கும் நாளில்…
தங்கமே!
என் உயிர், உனக்குள் இருக்கும்,
என் உணர்வுகள், நிலத்துள் இருக்கும்!

என் ‘கல்லறை ‘ ஈரத்தில்
ஒருநாள் காத்திருந்து கதறும் முன்,
உன் இதயத்திலும் கூட
நான் மட்டும் தானென்ற
உண்மையை மட்டும் சொல்வாயா ?

என் உயிர் உதிர்ந்து போகும்முன்னே
‘உனக்கும் கூட என்னைப் பிடிக்கும் என்று ‘
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்வாயா ?

piraati@hotmail.com
tamilmano@rediffmail.com

Series Navigation

வேதா

வேதா