இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

சித்ர்ஆ சிவ்அக்க்உமார்


தாய்லாந்து நாட்டில், தனன்செய் என்பவன் வாழ்ந்து வந்தான். தன் புத்திசாலித்தனத்தால் பலரையும் ஏமாற்றுவான். அவன் ஒரு முறை, மூதாட்டி ஒருவரிடன் சென்று, “கொஞ்சம் பணம் கடனாக வேண்டும்” என்று கேட்டான்.

மூதாட்டி “உங்களிடம் இல்லாததா.. என்னிடம் இருக்கப் போகிறது?” என்று கேட்டாள்.

“பணக்காரர்களுக்கும் சில சமயம் பணத்தட்டுப்பாடு இருக்கத்தானே செய்யும்” என்று கூறி கடன் கேட்டான்.

கடன் தர சம்மதித்த மூதாட்டி, “எப்போது திருப்பித் தருவாய்?” என்று கேட்டாள்.

“இரண்டு முழு நிலா வந்ததும்.. “ என்று தனன்செய் கூறிவிட்டு பணத்தையும் வாங்கிச் சென்றான்.

இரண்டு மாதங்களாயின. இரண்டு முழு நிலா நாட்களும் சென்றன. தனன்செய் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வரவில்லை.

அதனால் மூதாட்டி அவனிடம் சென்று, “இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு முழு நிலாவும் சென்று விட்டன. என் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் நல்லது” என்று அமைதியுடன் கேட்டாள்.

“இல்லையே.. இரண்டு முழு நிலா இன்னும் வரவில்லையே..” என்றான் அதை விடவும் அமைதியாக.

அவன் கூறிய விதம் “நாம் தான் தவறாக கேட்டுவிட்டோமோ” என்று எண்ணிய மூதாட்டி, மேலே ஏதும் பேசாமல் வீடு திரும்பினாள்.

பல மாதங்கள் கடந்தன. பொறுக்க மாட்டாமல் மறுபடியும் அவன் வீட்டிற்குச் சென்று, “பல முழு நிலாக்கள் போய்விட்டன. இனியும் பொறுக்க முடியாது. பணத்தைத் திருப்பித் தா..” என்று கேட்டாள்.

“இல்லையே.. இரண்டு முழு நிலா இன்னும் வரவில்லையே..” என்றான் முன்பைப் போலவே.

இப்படியே ஒரு வருடம் போனது. இறுதியில் பொறுக்க மாட்டாமல் தனன்செயிடம் சென்று, மூதாட்டி “இனியும் பொறுக்க முடியாது. பணத்தைத் திருப்பித் தா.. இல்லாவிட்டால் நீதிமன்றத்திற்கு போகப் போகிறேன்” என்றாள் கோபத்துடன்.

“செய்.. நீ நீதிமன்றத்திற்குச் சென்றாலும்.. பலனளிக்காது. இரண்டு முழு நிலா இன்னும் வரவில்லையே..” என்றான் தனன்செய் அமைதியாக.

“இதையே எவ்வளவு நாள் சொல்வாய். புது வருடம் கூட வந்து போய் விட்டது” என்றாள் அங்கலாய்ப்புடன்.

“ஆனால் இது தான் உண்மை. வானத்தில் எப்போதும் ஒரே நிலவு தான் இருக்கிறது. நாட்கள் போனாலும், இன்னும் ஒரே நிலவு தான் என் கண்களுக்குத் தெரிகிறது. உனக்கும் அப்படித் தானே. ஊர் மக்களுக்கும் அப்படித்தானே. நான் இரண்டு முழு நிலா வரும் போது தானே பணத்தைத் தருகிறேன் என்று சொன்னேன்” என்று சாமர்த்தியமாக விளக்கினான்.

மூதாட்டிக்கோ அதிர்ச்சி. ஏமாந்தது புரிந்தது. தாள மாட்டாமல் “இது சரியல்ல.. என்னை ஏமாற்றி விட்டாய்.. உன்னை விட மாட்டேன்” என்று கோபத்துடன் கத்திக் கொண்டே, வீடு திருப்பும் வழி நெடுகிலும் பிதற்றிக் கொண்டும் அழுது கொண்டும் நடந்தாள்.

வழியில் வந்த இளம் புத்தத் துறவி அதைக் கண்டார். அவளிடம் சென்று, “அம்மா.. ஏன் அழுகிறீர்கள்? என்ன ஆயிற்று? வழி தெரியவில்லையா?” என்று ஆசுவாசப்படுத்தும் வகையில் கேட்டார்.

மூதாட்டி தான் ஏமாந்த விவரத்தை விளக்கினாள்.

அதைக் கேட்டதும், “கவலையை விடுங்கள் அம்மா.. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.

மன்றம் கூடியது. வழக்கு விவரிக்கப்பட்டது. பிறகு துறவி நீதிபதியிடம், மாலை வரை, முழு நிலவு வரும் வரை வழக்கை ஒத்திப் போடும் படி கேட்டுக் கொண்டார்.

இரவு, இருட்டியதும், நீதிபதியைத் துறவி ஒரு குளத்திற்கு அருகே அழைத்துச் சென்றார். உடன் மூதாட்டியும் தனன்செய்யும் வழக்கின் தீர்ப்பை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த ஊர் மக்களும் சென்றனர்.

துறவி முதலில் வானத்தைச் சுட்டிக் காட்டினார். “பாருங்கள்.. அதோ முழு நிலா. ஒரு நிலவு”. பிறகு, கீழே குளத்தைச் சுட்டிக் காட்டினார். “பாருங்கள்.. இதோ முழு நிலா. இரண்டாவது நிலவு” என்றார். “தனன்செய் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்து விட்டதல்லவா..” என்று கேட்டார்.

தனன்செய் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. ஆம். இரண்டு நிலவுகள் தான். மேலே பேச ஏதும் இருக்கவில்லை.

ஒரு புத்திசாலி ஏமாற்றுக்காரனை இன்னொரு புத்திசாலி நன்றாக மாட்டி விட்டச் சம்பவம் இது.

Series Navigation

சித்ர்ஆ சிவ்அக்க்உமார்

சித்ர்ஆ சிவ்அக்க்உமார்