இன்றைய மது

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.

அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.

நிச்சயம் இல்லை நமக்கு

நாளைய மது அல்லது நாளை.

எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காக
ஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.

கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.

எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.

நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.

காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

***
visjayapalan@hotmail.com

Series Navigation