இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

புகாரி, கனடா


நீலாம்பற் பூவே!
————–
நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பற் பூவே

கோலாட்டம் போடும் கொண்டாட்ட மனசு
ஏழெட்டு நாளாய்
தூங்காமல் கிடக்கு

காலற்ற மேகம் வானேறிப் போகும்
காய்கின்ற நிலவும்
கண்மூடி நாணும்

நூலற்று வாடும் காற்றாடி யானேன்
நீவந்து சேரு
நீலாம்பற் பூவே!

O

ஆகாயம் நீலம் ஆழ்கடல் நீலம்
ஆனாலும் உன்விழி
போலேது நீலம்

பாகாக்கி மூளும் பனிப்போரே நாளும்
பாராத நாளில்
என்மொத்தம் நீலம்

வேகாத வெய்யில் தாளாத தனிமை
விலகட்டும் இமைகள்
விரியட்டும் குடைகள்

சாகாத வரமாய் உன்பார்வை போதும்
சாவென்ற சதியின்
குறிமாறிப் போகும்!

O

தேரோடு வந்தேன் தீர்மானம் தந்தேன்
ஊரோடு நீயோ
போராடும் செந்தேன்

யாரோடும் சேரா ஏகாந்த கீதம்
உன்நெஞ்சில் ஓதும்
என்காதல் யாகம்

சேரோடு சரியும் உன்னுள்ள தாகம்
என்மான உயிரின்
வேர்கொத்தும் காகம்

மாரோடு மங்களம் மனத்தோடு குங்குமம்
மாறாகிப் போனால்
முற்றாக நடைபிணம்!

O

நீலாம்பற் பூவே நீலாம்பற் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பற் பூவே

*

புகாரி, கனடா
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி