மஞ்சுளா நவநீதன்
சங்கரலிங்கபுரத்தின் கலவரம்
போலீஸில் தேவையான அளவு தலித்துகள் இல்லாததன் விளைவு, போலீஸ் அத்துமீறல் எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானதாகவே இருப்பதைப் பற்றி காலச்சுவடு கண்ணன், அ மார்க்ஸ் போன்றவர்கள் சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். காவல் துறை என்பது சமூகத்தின் உறுப்பினர்களின் அக்கறைகளைப் பிரதிபலிக்க வேண்டுமென்றால் எல்லாப் பிரிவினருக்கும் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டியது அவசியம். தாமிரபரணி யானாலும், மேலவளவு என்றாலும் மாறாமல் இந்த பொலிஸ் அராஜகம் அல்லது மெத்தனம் தொடர்கிறது.
இந்தக் கலவரமும் அதனையே உறுதிப்படுத்துகிறது.
இன்றைய தமிழக போலீஸின் தேவை, நிறைய தலித்துகள், முஸ்லிம்கள், கிறுஸ்தவர்கள் ஆகியோரை போலீஸில் சேர்க்க முன்னுரிமை தருவது.
அதை விட முக்கியமானது, போலீஸில் தொடர்ந்து சாதி மதம் இனம் தாண்டிய சிந்தனையை வளர்ப்பது. இன்று சாதி மதம் இனம் என்று பேசும் கட்சிகள் தேர்தல் காலத்தில் கிளப்பிவிடும் நச்சு ஊறி, எல்லோரையும் பாதிக்கிறது. தனியே போலீஸ் மட்டும் சாதிமதம் இனம் தாண்டிய சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல. போலீஸ் மக்களது, மக்கள் தலைவர்களது பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கும்.
தலித் எதிர்ப்பு சிந்தனையை, தேர்தல் காலத்தில் போஸ்டர் அடித்து ,தேவர் வன்னியர் சார்ந்த அமைப்புகள் ஒட்டின. இது சட்டரீதியாய்க் கூட எதிர்கொள்ளப்படவில்லை.
******
ஜெயலலிதா ஏன் தனித்தனி இடங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் ?
அது வேளாங்கண்ணி கோவிலில். இது ஷாமியானா போட்ட பந்தலில். எல்லோரையும் ஒன்று போல பார்க்க வேண்டிய முதல்வர், நேரடியாக இருவரையும் ஒரே இடத்தில் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டாமா ?
ஒருபுறம் சமத்துவபுரம் உருவாக்கிய கருணாநிதி, மறுபுறம் ஒரு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை தனித்தனியே சந்திக்கும் ஜெயலலிதா. இதன் மூலம் ஜெயலலிதா என்ன செய்தி சொல்ல விரும்புகிறார் ?
******
கோத்ரா மற்றும் ஜம்மு
கோத்ராவில் செய்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது எனக்குக் கூட புரிவது காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் புரியவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமா ? எந்தக் காலத்திலும் பாஜக சொல்வதை நாமும் சொல்லிவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்யமுடியும் ? அவரவர் அறிவு ஜீவி நேர்மைதான் கேள்விக்குறியானதாக ஆகும். கோத்ராவிற்குத் தான் ஐ எஸ் ஐ காரணமே தவிர, தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு முழுப்பொறுப்பு விஸ்வ இந்து பரிஷத்தும், ஆர் எச் எஸ்-உம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய முதல்வர் மோடி, ‘ஒரு செயலுக்கு எதிர்ச்செயல் இருக்கத் தான் செய்யும் ‘ என்று பேசி தன் கையாலாகாத் தனத்தைக் காண்பிக்கிறார்.
ஜம்முவில் ரகுநாத் கோவிலில் தற்கொலைப்படையை அனுப்பி பக்தர்களை கொலை செய்வதன் மூலம் பாகிஸ்தானின் கைக்கூலி பயங்கரவாதிகள் செய்ய நினைப்பது என்ன என்பதை¢ துளியூண்டு யோசித்தால் கூட தெரியும் விஷயம் இது. ஏற்கெனவே காஷ்மீரில் இருக்கும் கோவில்கள் பல உடைக்கப்பட்டுவிட்டன. அது இந்தியாவின் செய்திப்பத்திரிக்கைகளில் செய்தியாகக் கூட வராது. இந்துக்கோவில்கள் இருந்தால் என்ன உடைந்தால் என்ன ? இந்துமதம் என்றாலே சமீபத்து 200 ஆண்டுகளில் உருவான கருத்துருவாக்கம், இந்துமதத்தில் சாதியம் தவிர வேறொன்றும் இல்லை ஆகிய சிந்தனைகளின் வழியே யோசித்தால், இந்தச் செய்திப்பத்திரிக்கைகளில் இருப்பவர்கள் ஏன் இந்துக்கள் கொல்லப் பட்டாலும் , செய்திகள் இந்துக்கள் மீதே தவறைக் கற்பிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஜம்முவில் ரகுநாத் கோவிலில் தற்கொலைப்படையை அனுப்பி பல பக்தர்களைக் கொல்வதன் மூலம், ஜம்முவில் வசிக்கும் பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்களைப் பற்றிய எதிர்வினையை கோத்ராவில் உருவானது போலவே உருவாக்குவதுதான் ஐ.எஸ்.ஐயின் நோக்கம். அப்படி உள்நாட்டுக்கலவரம் நடக்கும் போது, ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவம் அமைதி வேலையில் இறங்க வேண்டிவரும். ராணுவம் விலக்கிக் கொள்ளப்ப்ட்டால் முஷரஃபின் உள்நாட்டுப் புகழ் பெரிதாகும். ஏற்கனவே ஜியா உல் ஹக் பாணியில் ஒரு கருத்துக் கணிப்பு மாதிரி நடத்தி இன்னும் ஐந்து வருடங்கள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியையும் தன் சர்வாதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள முஷரஃப் முயற்சி செய்து வருகிறார். போரில் எல்லா தந்திரங்களும் நியாயமானவைதானே.
என்னதான் இந்த பாகிஸ்தானின் தற்கொலைப்படையினர் பக்தர்களைக் கொல்ல வந்திருந்தாலும், அவர்களது இறந்த உடலை இப்படி காலைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்வதைப் பார்த்தால், எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
இதுதான் இந்தியாவின் கலாச்சாரமா ? இதுதான் மனித நேயமா ? அந்தப் பிள்ளையை பெற்றவளின் மனது துடிக்காதா ?
கோத்ராவில் இறந்தவர்களின் பெயர் தெரியுமா நமக்கு ? அதன் பின் நடந்த கலவரங்களில் இறந்த இந்தியரின் பெயர் தெரியுமா நமக்கு ? அவர்களது இறப்பின் மூலம் நாம் படிக்கும் பாடம் என்ன ? இவர்களை நினைவு கூர்வது என்பது மீண்டும் ஆறிப்போகிற புண்களைக் கிளறுவதற்காக அல்ல, இனி இது போன்று மீண்டும் நிகழக்கூடாது என்பதாய் இருக்க வேண்டும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவு கூரும் வண்ணம் அந்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது. கோத்ராவிலும், அதன் விளைவாக குஜராத்திலும் இறந்தவர்களின் நினைவுக்காக ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டும். அதில் அந்த நிகழ்ச்சிகளில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும். அந்த நினைவுச்சின்னம், இதுவரை நடந்த எல்லா மதக்கலவரங்களுக்குமான ஒரு நினைவுச்சின்னமாக நிற்க வேண்டும். அது போன்றதொரு நினைவுச்சின்னம் கோயம்புத்தூரிலும் அதில் இறந்த மக்களின் பெயர் பொறித்து நிற்க வேண்டும். இதில் முஸ்லீம் இந்து என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கருகியிருப்பதைக் காணவேண்டும்.
இந்த பிரச்னைகளுக்கு மூல காரணமான இந்திய பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து அங்கு ஒரு தீபம் எரியவேண்டும். முடிந்து போன அந்தப் பிரிவினை முடிந்து போனதாக இருக்கட்டும் இனியொரு பிரிவினை வேண்டியதில்லை என்று தீபங்கள் எரியட்டும். அந்த தீபத்தில் நமது ஜாதி மத இன மனமாச்சரியங்கள் எரிந்து பொசுங்க வேண்டும்.
*****
சிதம்பரமும் ரஜனியும் : மூன்றாவது அணி
இந்தச் செய்தி வெறும் வதந்தியா என்று எனக்குத் தெரியவில்லை. இது உண்மையானால் மிக நல்லது. இந்த அணியில் திருமாவளவன், கிருஷ்ணசாமி, த மா க இணைந்தால் நல்லது. சி பி ஐ, சி பி எம்மும் இணைய வேண்டும். எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்ததில் எம் கல்யாண சுந்தரம் பி ராம மூர்த்தி காட்டிய அக்கறைஅய் இப்போது இந்த மூன்றாவது அணி அமைவதில் ஆர் நல்லகண்ணு போன்றோர் காண்பிக்க வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீது பெரிது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ரஜனி ஏற்கனவே தமிழ் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு அறிக்கைகள் வெளீயிட்டதுண்டு. இப்படி உருவானால், ரஜனி மீதும் மற்றவர்கள் மீதும், ஜெயலலிதா-கருணாநிதி இருவருமே சேற்றை வாரி இறைப்பார்கள். அதைக் கண்டு அஞ்சாமல் இந்த முயற்சிகள் தொடர வேண்டும்.
திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செலுத்துவதும், கருணாநிதி ஜெயலலிதா மாறி மாறி முதல்வர் ஆவதும் நின்று புதிய சிந்தனைகளும் புதிய தலைமைகளும் உருவாக இது ஒன்றே வழியாக இப்போது தோன்றுகிறது.
*********
- உன்னுள் நான்
- ப்ரியமுள்ள தொலைபேசிக்கு
- நலமுற
- வளர்ச்சி
- அனிச்சமடி சிறு இதயம்
- நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு
- நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
- ‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)
- நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
- திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்
- நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி
- அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- இன்னும் கொஞ்சம் வெண்பா
- சொன்னால் விரோதம்
- முந்தைப் பெருநகர்
- கறுப்பு வெளிச்சங்கள்
- கடிகாரம்..
- இன்னொரு ஜனனம்
- நினைவுகள்
- பனி மழை
- இயல்பு
- தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
- ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது
- ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)
- சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா
- சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!
- கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது
- இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)
- இரக்கம்
- ஓட்டப் போட்டி