இந்த வாரம் இப்படி – ஜனவரி 29, 2001

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

மஞ்சுளா நவநீதன்


குஜராத் மாநிலத்தில் சுமார் 10000த்துக்கு மேற்பட்டவர்கள் பூகம்பத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் இழந்து தெருவில் நிற்கிறார்கள். இன்னும் ஒரு மறு பூகம்பம் வரும் என்ற பயத்தில் ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது தமிழர்கள் கடமை.

உடனே உதவுங்கள்

இந்தியப் பிரதமரின் ஆபத்து உதவி நிவாரண நிதி, செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணமடம் போன்ற பலன் கருதாது உழைக்கும் அமைப்புகளுக்கு உங்கள் உதவியை உடனே அனுப்பி வையுங்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மானப் பெரிது.

**

யார் தலித் மக்களின் எதிரிகள் ?

பிராமணிய எதிர்ப்பைத் தெரிவிப்பதன் மூலம் தம்மைத் தாழ்த்தப் பட்ட மக்களின் காவலனாய்க் காட்டிக் கொள்கிற தலைவர்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எச்சரிக்கை போலவும், உண்மை நிலை உணர்த்தல் போலவும் ஒரு நிகழ்ச்சி இந்த வாரம் நடந்துள்ளது.

அகில இந்தியத் தேவர் பேரவை தனித் தொகுதிகளையும், உள்ளாட்சி மன்றங்களில் உள்ள இட ஒதுக்கீடு முறையையும் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. இதன் தலைவர் மா சேதுராம பாண்டியன், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், பள்ளி கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டையும் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளனர். இது பற்றி தாழ்த்தப் பட்டமக்களின் நண்பர்கள், அறிவுஜீவிகள், இடது சாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும். பிராமணர்களை விழுந்து விழுந்து தாக்கத் தயாராய் இருப்பவர்கள், தலித் மக்களின் மீது தேவர்கள், வன்னியர்கள் போன்ற மற்றவர்களின் தாக்குதல் நடக்கும் போது மட்டும் பொத்தாம் பொதுவாய் சாதீயம் ஒழிய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போவது ஏன் என்று புரியவில்லை. பிராம்மணர்கள் தங்களது சங்க மாநாட்டில் இதே விஷயத்தைச் சொன்னபோது விழுந்து பிராண்டியவர்கள் (பிராண்டியது நியாயந்தான்) இன்று மெளனமாக இருக்கிறார்கள். இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவினர் போன்றவர்கள் அனைவரும் அடங்குவர்,

தனித் தொகுதி என்பது தாழ்த்தப் பட்ட மக்கள் அம்பேத்கர் தலைமையில் போராடிப் பெற்ற உரிமை. இதற்கு காந்தி எதிர்ப்புத் தெரிவித்தது உண்மை தான். ஆனால் காந்தியின் ஆதர்ச வாதம் நடைமுறைக்கு உதவாத ஒன்று என்பது அன்றே வலியுறுத்தப் பட்டது. இது மட்டுமல்லாமல், இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கையும் தலித் மக்களின் கோரிக்கையாய் இருந்து வருகிறது. இந்த இட ஒதுக்கீடு போன்றவற்றால் தான் இந்த மக்கள் கொஞ்சமாவது முன்னேறி வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் அடையும் முன்னேற்றம் கூட சிலருக்குப் பொறுப்பதில்லை.

முன்பு முன்னுரிமை பெற்ற கீழ்ஜாதியினரின் பிள்ளைகளே மீண்டும் மீண்டும் அந்த முன்னுரிமைச் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முன்னுரிமையையே நீக்கிவிட வேண்டும் என்பது அதற்கு பதிலாக இருக்காது.

இன்றும் கீழ்ஜாதியினர் கீழ்ஜாதியினராகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எந்த மதத்துக்குச் சென்றாலும் அவர்கள் கீழ்ஜாதியினர்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது நாம் பார்த்துவரும் விஷயம்.

*****

கும்ப மேளாவில் சோனியா காந்தி, மகாமகத்தில் ஜெயலலிதா

சோனியா காந்தி கிரிஸ்தவர் என்பதற்காக காங்கிரசுக்கு குறைவாக ஓட்டு விழவில்லை முன்பு. நரசிம்மராவ் பிராம்மணர் என்பதற்காக காங்கிரசுக்கு அதிகமாக ஓட்டு விழவில்லை. நேரு நாத்திகர் என்பதால் அவருக்கு குறைவாக ஓட்டு விழவில்லை. ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிரிஸ்தவர் என்பதற்காக அவருக்கு பிகாரில் அதிகமாகவோ குறைவாகவோ ஓட்டு விழவில்லை. கருணாநிதி நாத்திக வாதி என்பதற்காக அவருக்கு இந்துக்கள் நிறைந்த பகுதியில் குறைவாக ஓட்டுவிழவில்லை.

ஜெயலலிதா மகாமகத்தில் குளித்ததற்காக அவருக்கு இந்துக்கள் ஓட்டு எல்லாம் விழவில்லை. நக்வி என்னும் முஸ்லீம் அமைச்சர் பாஜகவில் இருக்கிறார். அவர் நின்று வெற்றி பெற்ற தொகுதியில் 70சதவீதத்துக்கு மேல் முஸ்லீம்கள். அவர் பாஜக என்று அவருக்கு ஓட்டு விழாமல் இல்லை.

எல்லாவற்றையும் தாண்டி மக்கள் ‘இந்த ஆளால் நமக்கு பொருளாதார ரீதியில் பயனுன்டா ‘ என்பதையே பார்க்கிறார்கள். பாஜகவின் மதவாதக்கொள்கை பெரும்பாலோருக்குப் பிடிக்காததன் போது அவர்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதன் காரணம் காங்கிரஸின் காலாவதியான அரசியல்வாதிகளும், காலாவதியான சிந்தனைகளுமே என்பதை காங்கிரஸார் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சோனியாவை கும்பமேளாவில் குளிக்கவைத்துவிட்டால் இந்துக்களின் ஓட்டை பெற்றுவிடலாம் என்றே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது ஓட்டுப்போடும் மக்களை சுயசிந்தனையை அவமதிக்கும் விஷயம் என்று இன்னும் காங்கிரஸார் புரிந்து கொள்ளவில்லை.

காங்கிரஸார் இன்னும் காந்தி நேரு பெயர்களையும் அவர்களது சந்ததியினர் என்று சிலரை காண்பித்து ஓட்டு வாங்கி நாம் பின்புறத்தில் ஊழல் செய்யலாம் என்றே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதை லேசுபாசாக மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

திமுக அதிமுகவுக்கு மாநிலத்தில் ஓட்டுப் போட்டாலும் எப்போதும் மத்தியில் காங்கிரசுக்கே ஓட்டுபோட்ட தமிழகம் என்று அதை மாற்றிக் கொண்டதோ அப்போதே காங்கிரஸாருக்கு பல்பு போட்டாற்போல பொறியடித்திருக்க வேண்டும். ஆனால் ஐம்பதாண்டு அதிகாரப் போதையில் மயங்கிப் போய் கிடக்கிற காங்கிரஸாருக்கு அது கொசு கடித்தாற் போலவே இருந்திருக்கும்.

மதவாத காங்கிரசுக்கு மதவாத பாஜகவே மேல் என்று (பாஜகவாவது உண்மையைச் சொல்கிறான் என்று பேசும் மக்களைப் பார்த்ததில்லையா) என்று மக்கள் ஓட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

தான் இந்துதான் என்று தீவிரமாகச் சொல்லிக்கொள்ளும் வாய்பாயி நடத்தும் இஃப்தார் விழாவும் கிரிஸ்துமஸ் விருந்தும் அவர் மற்றவர்களது உணர்வை மதிப்பதைச் சொல்கிறது. தான் கிரிஸ்தவர்தான் என்று ஒப்புக்கொள்ளாத சோனியா நடத்தும் இஃப்தார் விழாவும் கும்பமேளா குளியலும் அவர் ஓட்டுப் பொறுக்கவே அலைகிறார் என்பதையே சொல்கிறது. இது காங்கிரஸாருக்குப் புரியாததே ஆச்சரியம்

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்