சின்னக்கருப்பன்
சாலமன் பாப்பையா
ஆண்களும் பெண்களும் சினேகிதர்களாக இருக்கலாமா கூடாதா என்ற பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஸன் தொலைக்காட்சியில் ஒரே உருப்படியான பொங்கல் நிகழ்ச்சி அதுதான். (கமல் பேட்டி அல்ல)
இந்த அட்டகாசமான நகைச்சுவை உணர்வும், எதிராளியின் கருத்துக்களை கேட்டு விவாதிக்கும் ஜனநாயக உணர்வும் தான் நாம் இன்னும் நாசமாய் போகாமல் இருக்க முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். சாலமன் பாப்பையாவின் நகைச்சுவை உணர்வு அபாரம். (அவ்வளவுதான் சொல்லுவோம்…)
***
குறியில் மணிரத்னம்
மணிரத்னத்துக்கும் இன்னும் சில சினிமா கலைஞர்களுக்கும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பது ஒரு செய்தி. பயங்கரவாத இயக்கங்கள் முதலில் குறிவைப்பது பத்திரிக்கையாளர்களையும் கலைஞர்களையுமே. தேவைப்படுவது அவர்களை பயமுறுத்த சில பத்திரிக்கையாளர் கொலைகள் மட்டுமே. அதன் பின்னர், எந்த பத்திரிக்கையாளரும் இவர்களை எதிர்த்து எழுதப் பயப்படுவார். (அவர்களும் உடலும் ரத்தமும் பயமும் உள்ள மனிதர்கள் தாமே) அப்படியே இன்னும் கொஞ்சம் காலம் பின்னர், கலகச் சிந்தனை என்ற பெயரில் இந்த பயங்கரவாதிகளை ஆதரித்து பத்திரிக்கையாளர்கள் எழுத முற்படுவார்கள். பிறகு அதுவே எல்லா பத்திரிக்கையாளர்களும் எழுத வேண்டிய ஒரு முற்போக்குச் சிந்தனையாக மாறிவிடும். இதனை ஒருவகை ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்று வகைப்படுத்தலாம்.
(ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பனைப் பாராட்டி ராஜ்குமார் பேசிய செய்திகள் வந்தபோது இந்த ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பற்றி பேசப்பட்டது. ஒரு கொடுமைக்கு ஆளானவர், அந்தக் கொடுமையை இழைப்பவரையே நேசிப்பதும், அவருக்குப் பரிந்து பேசுவதும் குற்றம் இழைத்தவருக்கான நியாயத்தை ஓர் உள் நியாயமாய் மேற்கொண்டு அநியாயம் தனக்கு இழைக்கப்படினும் அது நியாயமே எனப் பேசும் ஒரு மனவியல் நிலைக்கு இந்தப் பெயரிட்டிருக்கிறார்கள்.)
***
காயும் வயலுக்கு இன்னும் பலர் பலி
முதலில் அந்தந்த வருட விளைச்சலை நம்பி விவசாயிகள் இருப்பதை குறைக்கும் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டத்தை பற்றி ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
நம் நாட்டில் சுமார் 50 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகாப்பஞ்சம் எல் நினோ விளைவு என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கும் அறிந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், எல் நினோ ஆராய்ச்சியே தமிழ்நாட்டில் வந்த பஞ்சத்தால் ஆரம்பிக்கப்பட்டதுதான். இருப்பினும், அதனைப் புரிந்துகொண்டு, புளோரிடா ஆரஞ்சுசாற்றை நீண்டகாலம் சேமிக்கும் முறைகளிலிருந்து கேன் என்னும் டப்பாவில் அடைக்கும் முறைவரை எல்லாம் செய்துவைத்துக்கொண்டு சாப்பிட்டே குண்டாகி அதனை பிரச்னை என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவில்.
நாம் அரசாங்க ரகசியங்கள் என்ற பெயரில் அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியாமல், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குட்டி சர்வாதிகாரிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
***
ஜெயலலிதாவின் தோழர் மோடியா ?
மோடி மட்டுமல்ல, பாஜகவுக்கு யாருமே உதற முடியாதவர்கள் அல்லர். அது பலமுறை ஜனசங்கத்திலிருந்து இன்று வரை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். வகேலா வெளியேற்றப்பட்டதும், கல்யாண்சிங் வெளியேற்றப்பட்டதும் பாஜகவில் யாரும் அப்படி உதற முடியாத நிலையை அடையமுடியாது என்பதன் ஆதாரம். ஆகவே அது நிச்சயம் மோடிக்கும் தெரியும். அப்படி தெரிந்தே, திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கும் இந்த சமயத்தில், ‘ ஜெயலலிதாவின் துணை கொண்டு தெற்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் ‘ என்று மோடி பேசியிருப்பது, மேலிட சிந்தனை இல்லாமல் வந்திருக்கமுடியாது என்பதுதான் என் கருத்து.
மோடி, பாஜக தாண்டி வெளியே ஒரு அமைப்பை உருவாக்கி ஆட்சிக்கு வர முயற்சிப்பார் என்று எண்ண வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் திட்டம் என்ன ? மோடியின் திட்டம் என்ன ? பாஜகவின் திட்டம் என்ன ? காங்கிரஸின் திட்டம் என்ன ? இதற்கு நடுவில் சந்திரபாபு நாயுடுவுக்கு திட்டம் என்ன என்று யோசிக்கும்போது சிக்கலான செஸ் விளையாட்டு போலத்தான் தோன்றுகிறது. நடுவில் ஒரு சிப்பாய் போல -Pawn – போல திமுக.
***
காஷ்மீரில் புர்கா அணிந்த பயங்கரவாதிகள் போலீஸை கொன்றிருக்கிறார்கள்
எதற்காக எல்லா பெண்களையும் புர்கா போடச் சொன்னார்கள் இந்த பயங்கரவாதிகள் என்பது தெளிவாகியிருக்கும்.
இது ஒரு மாயச்சுழல். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் ஒருவர் புர்கா போட்டுக்கொண்டு செல்வதை போலீஸ் தடுக்க முடியாது. ஆனால் அந்த புர்காவின் கீழ் ஒரு பயங்கரவாதி ஆண் இருந்தால் என்ன செய்வது என்று போலீஸ் பயப்படுவதை நிறுத்த முடியாது. அந்த பயம் போலீஸ் ஒரு புர்கா அணிந்த பெண்ணை பரிசோதிக்கச் செல்லத் தூண்டும். அது மனித உரிமை மீறல் வன்முறையாகும். என்ன ஒரு மாயச்சுழல்.
இதுவே பயங்கரவாதிகளின் ஆயுதம். போலீஸ் மனித உரிமை மீறலைச் செய்யக்கூடிய நிலைமைகளை குறைக்க இந்த ‘சுதந்திரப்போராட்ட வீரர்கள் ‘ உதவ மாட்டார்கள். போலீசும், ராணுவமும் மனித உரிமை மீறல்களை அதிக அளவில் செய்யவைப்பதுதான் இவர்களது ‘சுதந்திரப்போராட்டத்துக்கு ‘ வலு சேர்க்கும் ஆயுதம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இந்த பயங்கரவாதிகள். ஒவ்வொரு மனித உரிமை மீறலும் இன்னொரு பயங்கரவாதியை உருவாக்கும் என்பதும் அவர்கள் அறிந்ததுதான். இந்த ஒரு விஷயமே போதும், இவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லர், வெறும் பயங்கரவாதிகள் என்பதை தெளிவாக்க.
***
கேரளாவில் கிரிஸ்துவ பிரச்சாரகர் தாக்குதல்
இன்னொரு ஸ்டெயின்ஸ் தாக்குதல் என்றே தோன்றுகிறது. சமீபகாலமாக இப்படிப்பட்ட தாக்குதல்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலேயே நடப்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஸ்டெயின்ஸ் கொலை நடந்தது ஒரிஸ்ஸாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது. இப்போதும் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கும் கம்யூனிஸ்ட் ஆட்களுக்கும் இடையே குத்துவெட்டு கேரளாவில் நடந்துகொண்டிருக்கிறது. இது இப்போது கிரிஸ்தவ பிரச்சாரகர்களுக்கும் பரவுகிறது. சிரியன் கிரிஸ்தவர்கள் போன்ற கேரளாவின் பாரம்பரிய கிரிஸ்தவர்கள் மதமாற்றத்தில் முனைப்பு காட்டாதவர்கள்.
நேற்று, ஆமதாபாத்தில் முன்னாள் பஜ்ரங் தளத்தலைவர் சிறுபான்மையின கும்பலால் கொலை செய்யப்பட்டார். இரண்டு உயிர்களும் ஒன்றல்ல. இதற்காக இந்துவின் ஒரு தலையங்கத்தைப் பார்க்கமுடியாது. ஒன்று பழிவாங்கல், இன்னொன்று வெறியாட்டம். உயிரல்ல முக்கியம், எதற்காக கொலை என்பத்தான் முக்கியம். கோத்ரா கொலைகளைக்கூட பழிவாங்கல் என்று இந்து தலையங்கம் எழுதியது. பழிவாங்கல் என்று சொன்னால், கொலைக்கான தண்டனை குறைவு என்பதுபோல. இருவர் பார்வையிலும் ஒரே விஷயம் வெறியாட்டமாகவும், பழிவாங்கலாகவும் பார்க்கப்படுகிறது. மனச்சாய்வை விட்டு வெளியே வந்து பார்ப்பது கடினமாக ஆகிக்கொண்டிருக்கிறது.
***
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
மேற்கண்ட வரிக்கு உன்னதமான உதாரணம் வேண்டுமென்றால் பாகிஸ்தானைச் சொல்லலாம். அதிலும் முக்கியமாக பர்வேஸ் முஷாரஃபைச் சொல்லலாம். நேற்று ஞானோதயம் வந்ததுபோல, ஈராக்குக்கு அடுத்தபடியாக மேற்கத்திய நாடுகளின் குறியாக பாகிஸ்தான் இருக்கலாம் என்று பேசியிருக்கிறார். வினோதம்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரியும். (அல்லது உண்மையிலேயே இந்தியாவின் பிரச்சாரத்தை பாகிஸ்தான் நம்ப ஆரம்பித்துவிட்டது என்றும் கொள்ளலாம்). பாகிஸ்தானின் பூகோள ரீதியான இடம், அதனை ஆட்டுவிக்கிறது. ஸ்ட்ராடஜின் லொகேஷன் என்று பெயர் போட்டு அந்த இடத்தைப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள் மேற்கத்திய நாடுகள். அந்த இடம் மேற்கத்திய நாடுகளுக்கு பொன் முட்டையிடும் வாத்து. பாகிஸ்தானின் தோற்றத்துக்கு ஜின்னா காரணம், காந்தி காரணம், இன்ன இத்யாதிகள் காரணமென பேசுவதெல்லாம் வெட்டி வேலை. உண்மையான காரணம், வெளியேறிய பிரிட்டிஷாரால் அந்த இடத்தின் முக்கியத்துவம் கருதி உருவாக்கப்பட்ட தேசம் என்பதுதான். அத்தோடு கூட காஷ்மீர் பிரச்னையும் அவர்களின் உருவாக்கமே. இதில் மக்கள் விருப்பம்.. இத்யாதி எல்லாம் மைக்கின் முன் நின்று பேசத்தான்.
நேற்று பெர்வேஸ் முஷாரஃப் பேசியது பாகிஸ்தானிய மக்களைத் தன் பின் திரட்டவே. ஒரு பக்கம் தீவிரவாதிகளுக்கு கோடிகோடியாக கொடுப்பது, இன்னொரு பக்கம் அமெரிக்க உளவு ஸ்தாபனத்துடன் இணைந்து அதே ஆட்களைப் பிடிக்க முனைவது, ஒரு பக்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என்று கோரிக்கை விடுவது, மறுபக்கம் அதே தீவிரவாதிகளைக் கொண்டு காஷ்மீரில் தாலிபான் ஆட்சியை உருவாக்க முனைவது, ஒரு பக்கம் மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைக்கு இசைந்து எல்லை கடக்கும் பயங்கரவாதிகளை நிறுத்திவிட்டேன் என்று பேசுவது, மறுபக்கம் அதே ஆட்களுக்கு அரசாங்கம் மூலம் உதவுவது என்று பலகாலமாக பத்துத்தலை ராவணனாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் காட்டிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு ஆதரவாக அவர் இருக்கும்மட்டும், அவருக்கு ஒரு கேடும் வராது என்று அறியாதவரா அவர் ? அமெரிக்காவுடன் கடந்த 50 வருட ராணுவரீதியான நட்புறவுதான் பாகிஸ்தானில் ராணுவத்தின் மேலாண்மைக்குக் காரணம் என்று உலகம் அறியாதா ? அமெரிக்கா ஜனநாயகத்தின் தோழன் என்றும் யாரும் நம்பப்போவதில்லை, பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அடுத்த குறி என்றும் யாரும் நம்பப்போவதில்லை. முஷாரஃப் பேசுவதைக் கேட்டு சந்தோஷப்படும் இந்தியர்களும் ஏமாளிகள், வருத்தப்படும் பாகிஸ்தானியரும் ஏமாளிகள்.
***
karuppanchinna@yahoo.com
***
- கடல் அரசனின் கட்டளை!
- உயிர்ப்பு
- ஓடிவா மகளே!
- மழை
- காத்திருக்கிறேன் அம்மாவிற்காக
- மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்
- தப்பும் வழி
- எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)
- அறிவியல் துளிகள்-9
- நன்றி
- காதல்..
- ஒரு நாள் = 40 மணி நேரம்.
- அனுபவம்
- பாம்பு பற்றிய பயங்கள்.
- பறவையும் பெரு முட்டையும்!
- எல்லைகளைப் போடாதீர்!
- பூவின் முகவரி
- என்னென்ன செய்யலாம் ?
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார
- அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- கழிப்பறைகளும் விழிப்புணர்வும்
- ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்
- தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்
- கடிதங்கள்
- திரைக்கடலோடியும் –