சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
தக்கார், தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
திருவள்ளுவர்.
‘டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டவன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர். ‘
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.
போதி சத்துவ புத்தரும், அயிம்சா வழிவகுத்த மகாத்மா காந்தியும் அவதரித்த நாட்டிலே அணு ஆயுதம் உதிக்கும் என்று உலக மாந்தர் எவரும் எதிர்பார்க்க வில்லை! அணு ஆயுதப் பந்தயத்தில் முன்னடி வைத்தோடும் இந்தியாவை இப்போது யாராலும் நிறுத்திக் கட்டுப்படுத்த முடியவில்லை! விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதப் பெருக்கத்தை உலகில் நிறுத்த முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் இரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வருகிறார்கள்!
கட்டுரை ஆசிரியர்.
இந்திய அணுவியல் விஞ்ஞான மேதையும், இந்திய அணு ஆயுதப் பிதாவுமான டாக்டர் ராஜா ராமண்ணா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24, 2004) அதிகாலையில் பாம்பே நகர மருத்துவ மனையில் காலமானர். அவருக்கு வயது 79. உட்புறக் குடல் இரத்தக் கசிவில் உடல்நிலை மிகவும் சீர்கேடாகி மரணம் அடைந்ததாக, மருத்துவ மனையின் அதிபர் டாக்டர் பி.கே. கோயல் நிருபர்களிடம் அறிவித்தார். டாக்டர் ராமண்ணாவுக்கு கடந்த 15 ஆண்டுகளாகவே இருதயப் பிரச்சனைகள் இருந்து, ஒருமுறை ஆஞ்சியோ பிலாஸ்டி கடப்பு அறுவைச் சிகிட்சையும் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பாம்பே வொர்லியில் வசிக்கும் மகனைக் காண வந்தவர், சென்ற திங்கட் கிழமையன்று சற்று தலைசுற்றுவதாகவும், வேர்ப்பதாகவும் குறிப்பிடவே, பாம்பே நகர மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக, அவரது மருமகள் சீமா ராமண்ணா கூறினார். வியாழக் கிழமை மாலை 7:30 மணிக்கே அவரது முடிவு நெருங்கி விட்டாலும், மருத்துவ நியமப்படி உயிருடன் இருந்ததால் சுவாசப் பாதுகாப்புச் சாதனங்களுடன் அவர் கண்காணிக்கப் பட்டார். செய்தியை ஒளரங்காபாத்தில் கேள்விப்பட்டு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் டாக்டர் ராமண்ணாவைக் காண மருத்துவ மனைக்கு வந்ததாக, டாக்டர் கோயல் அறிவித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:15 ராமண்ணாவின் ஆத்மா பிரிந்தது. அவருக்கு மனைவி, இரு புதல்விகள், ஒரு புதல்வன் இருக்கிறார்கள்.
பாம்பே சிவாஜிப் பூங்கா மின்சார எரிப்பகத்தில் டாக்டர் ராமண்ணாவின் உடம்பு வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணிக்குத் தகனம் செய்யப்பட்டு, ஈமச் சடங்கள் நடத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டவர், முந்தைய அணுசக்திப் பேரவை அதிபதி ஹோமி சேத்னா, டாக்டர் பி.கே. ஐயங்கார், தற்போதைய அதிபதி டாக்டர் அனில் ககோட்கர், இந்திய அணுமின்சக்தி அதிபர், எஸ். கே. ஜெயின், கனநீர் ஆணைக்குழு அதிபர், எஸ். சி. ஹயர்மத் ஆகியோர். ‘டாக்டர் ராமண்ணா மெய்யானச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர் ‘ என்று மருத்துவ மனையில் டாக்டர் கோயலிடம் கூறினார் ஜனாதிபதி. ‘அணுக்கரு விஞ்ஞானத்தில் செய்முறைத் திறமிக்க நிபுணர் என்றும், இந்தியாவை உலக அணுக்கரு விஞ்ஞான அரங்கில் அமரச் செய்தவர் டாக்டர் ராமண்ணா ‘ என்றும் பெருமைப் படுத்தினார் பி.கே. ஐயங்கார்.
1950 ஆண்டுகளில் பாரத அணுசக்தி யுகத்தைத் துவக்கியர் பெளதிக விஞ்ஞான மேதை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. டாக்டர் ஹோமி பாபாவின் பிரதான சீடராகக் கருதப்படும் டாக்டர் ராமண்ணா பாரதத்தில் அணு ஆயுதங்களுக்கு விதையிட்டு ஆலமரமாக்கி விழுதுகள் படர விட்டவர்! இந்திய அணுசக்திப் பேரவையின் அதிபதி யாகவும், பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் ஆணையாளராகவும் பணியாற்றியவர், டாக்டர் ராமண்ணா. 1989 இல் வி.பி. சிங் அரசாங்கத்தில் பாதுகாப்பு துறையில் மத்திய மந்திரியாகவும், ராஜீய சபை உறுப்பினராகவும் பதவியில் இருந்தவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பாரதத்தின் உச்ச விருதுகளை அடுத்து அடுத்துப் பெற்றவர். அணு ஆயுதப் படைப்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசக மந்திரியாகவும், அணு ஆயுதப் படைப்பில் தலைமை விஞ்ஞானியாகவும் இறுதிக் காலம் வரை பணி செய்தவர்.
இந்திய விஞ்ஞான மேதையாகக் கருதப்படினும், இரகசியமாக 1974 இல் முதல் அணுகுண்டைத் தயாரித்துப் பொக்ரானில் அடித்தள வெடிப்பைச் செய்து, உலக நாடுகளின் வெறுப்பையும் இந்திய மக்கள் சாபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர், ராமண்ணா! இரண்டாம் உலகப் போரின் சமயம் இரகசிய மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project] விஞ்ஞான அதிபதியாய் முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer], ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவும் அணு ஆயுத அழிவு மேதைகளில் ஒருவராய் நின்று கதிரொளி வீசுகிறார்! டாக்டர் ராமண்ணா அணு ஆயுதச் சோதனைகள் நடத்தி வெற்றியடைந்த போது, எந்தவித மனச்சாட்சிக் குத்தலுமின்றி வருந்தாமல், முழு உறுதியாகப் பேசிப் பெருமிதம் கொண்டது உலக சிந்தனையாளர் பலரை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது! கடைசிக் காலம் வரை அவர் பின்பற்றிய பாழ்பட்ட விஞ்ஞான அழிவுப் பாதைக்கு வருந்தி ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட்டதில்லை!
இந்தியா அணு ஆயுதப் படைப்பில் இறங்கக் காரணங்கள் என்ன ? ஆறு முக்கிய காரணங்களைக் கூறலாம்! முதல் காரணம்: 1962 இல் சைனா எதிர்பாராத சமயத்தில் இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்கு மலைப் பிரதேசத்தில் சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது! இரண்டாவது காரணம்: அணு ஆயுதங்களை வெறுத்த முதல் பிரதமர் பண்டிட் நேரு 1964 ஆண்டில் காலமானது! நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர இந்தியாவில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்! ஆனால் பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார் நேரு! மூன்றாவது காரணம்: பாம்பே சைரஸ் அணு ஆராய்ச்சி உலை [CIRUS Research Reactor] 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எருவான புளுடோனியம் உண்டானது. பிறகு அதைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஓட ஆரம்பித்து, அணு ஆயுதத்துக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது! நான்காவது காரணம்: சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் இதயத்தை அதிர வைத்தது! ஐந்தாவது காரணம்: அச்சமயம் டாக்டர் ஹோமி பாபா முன்வந்து, ‘அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுதச் சோதனை செய்ய முடியும் ‘ என்று உறுதிமொழி அளித்தது! ஆறாவது காரணம்: குரு நினைத்ததைச் சாதிக்கச் சீடர் ராமண்ணா தயாராக அருகிலே இருந்தது!
இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவனது வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது! பிண்டசக்தி சமன்பாடைக் கணித்து, அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.
ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு ‘ விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் அணு ஆயுதங்கள் இனியும் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது! அதை அகில நாடுகள் உணர வேண்டும். கதிரியக்க அபாயங்களை மக்கள் அனைவரும் அறியும்படி உலக வல்லுநர்கள் வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ‘. இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதப் பந்தயத்தை நிறுத்த முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் இரகசியமாய் அணு ஆயுதங்களை உலகில் பெருக்கிக் கொண்டு வந்தார்கள்!
1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, ‘புத்தர் புன்னகை செய்கிறார் ‘ [The Buddha is Smiling] என்னும் குறிமொழியில் [Code Language] ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்! அதன் உட்பொருள்: பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது! ராமண்ணாவின் அந்த இனிய சொல்தொடர் அதன் பின்வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப்பட்டு உலகப் புகழ் பெற்றது! இந்தியாவின் முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி [TNT] வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணுகுண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது! முதல் அணு ஆயுதச் சோதனையை ‘அமைதிமய அணு ஆயுத வெடிப்பு ‘ [Peaceful Nuclear Explosion] என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஒப்புக்கொள்ள வில்லை! அழிவு சக்தியின் பேரளவை அடித்தளத்தில் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எவ்விதம் அமைதியை உண்டாக்கப் போகிறது ? உலகின் எந்தப் பகுதியில் அமைதியைப் பரப்பிடப் போகிறது ?
ராஜா ராமண்ணா 1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தும்கூரில் [Tumkur] பிறந்தார். தந்தையார் பெயர் பி. ராமண்ணா. தாயார் ருக்மணியம்மா. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக் கழகத்தில் பெளதிக விஞ்ஞானத்தை எடுத்து, அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], அணுஉலைப் பெளதிகம் [Reactor Physics], ஈரோப்பியன் இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். இறுதியில் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்தையும் [Ph.D.], ராஜீய இசைப் பள்ளியின் டிப்போளாமாவையும் [Licentiate in Royal School of Music] பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார். ராஜா ராமண்ணாவுக்கு இசை, நாடகம், வேதாந்தம், இலக்கியம், சோதனை & கோட்பாடு அணுக்கரு & அணுத்துகள் பெளதிகம் [Nuclear & Particle Physics (Experimental & Theoretical)] ஆகியவற்றில் வேட்கை மிகுதி.
டாக்டர் ராமண்ணா பல பெரும் பதவிகளில் பணியாற்றியவர். முக்கியமாக பாம்பே, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆணையாளராக [Director, Bhabha Atomic Research Centre] எட்டாண்டுகள் பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை ராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைப் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் குறிமொழிப் பெயர் ‘புன்னகை புத்தர் ‘ [Code Name, Smiling Buddha] என்னும் முதல் அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிப் படைப்பிலும், கண்காணிப்பில் உருவானது! 1974 மே மாதம் 18 ஆம் தேதி ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு அதிபராக, அணுசக்திப் பேரவைக்குத் [Chairman, Atomic Energy Commission] டாக்டர் ராஜா ராமண்ணா 1983 இல் தேர்ந்தெடுக்கப் பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் [Indian Institute of Science] ஆணைக் குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences (1977)], மற்றும் இஇந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay (1972)] ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார். 1990 இல் பாரத அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை மாநில மந்திரியாகவும் [Minister of State for Defence], 1997 முதல் அரசியல் மேல் சபையில் [Rajya Sabha] அங்கத்தினாராகவும் நியமிக்கப்பட்டுப் பணி புரிந்தார்.
டாக்டர் ராஜா ராமண்ணா பல பரிசுகளும், கெளரவ மதிப்புகளும் பெற்றவர். பல பல்கலைக் கழகங்கள் ராமண்ணாவுக்கு D.Sc. [Doctor of Science] பட்டம் அளித்துள்ளன. சாந்தி ஸூவரூப் பட்நாகர் நினைவுப் பரிசு [1963], பாரத அரசின் பத்ம விபூஷண் [1975], நேரு பொறியியல், பொறித்துறைப் பரிசு [Nehru Award for Engineering & Technology (1983)], விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் கெளரவ இலக்கிய டாக்டர் பட்டம் [1993] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை. வியன்னாவில் அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையின் [International Atomic Energy Agency (1986)] அதிபராகச் சில காலம் பணியாற்றி யுள்ளார். 30 ஆவது அகில நாடுகளின் அணுசக்திப் பேரவைப் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் டாக்டர் ராமண்ணாவின் விஞ்ஞான வெளியீடுகள் பல பதிவாகி யுள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையான, “யாத்திரை ஆண்டுகள்” [Years of Pilgrimage (1991)], மேற்கிசைகள், ராகத்தின் இசை அமைப்பு [The Structure of Music in Raga & Western Systems (1993)] என்னும் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.
1998 புத்த மகான் பிறந்த நாளான மே 11 இல், ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் இந்தியா மூன்று அணு ஆயுத வெடிப்புகளை அடித்தளத்தில் உண்டாக்கி ஆராய்ச்சிகள் செய்தது! இரண்டு நாட்கள் கழித்து மே 13 இல் மறுபடியும் இரண்டு அடித்தள அணுகுண்டு வெடிப்புகளை ஏற்படுத்தியது! பிரதம மந்திரி அடல் பெஹாரி பாஜ்பாயி செய்திக் கூட்டத்தார் முன்பு, மூன்று வெடிப்பில் ஒன்று 12 கிலோ டன் பிளவுச் சாதனம் [Fission Device], ஒன்று 43 கிலோ டன் வெப்ப அணுக்கருச் சாதனம் [Thermonuclear Device], மூன்றாம் சாதனம் 1 கிலோ டன்னுக்கும் சிறியது! இரண்டாம் நாள் வெடித்த சாதனங்கள் ஒரு கிலோ டன்னுக்குச் சிறியவை! உலகின் பூவதிர்ச்சி உளவிகள் [Seismic Probes] பல இரண்டாம் நாள் வெடிப்புகளை நுகர முடிய வில்லை! இந்தியா ஒரு சிறு ஹைடிரஜன் குண்டைச் சோதித்துள்ளது என்பதைப் பல நாடுகள் அப்போது நம்பவில்லை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, ‘ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம்! ‘
1998 மே மாதம் இரண்டாம் தடவை அடித்தள வெடிப்புச் செய்த போது பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: ‘இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு [Nuclear Weapon State]! உலக மானிட ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமை ஆயுதங்கள் அவை! அணு ஆயுதங்கள் இந்தியச் சுயப் பாதுகாப்புக்கு [Self Defence] மட்டும் பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்கு முதலில் பயன்படுத்தப்பட மாட்டா! ‘ அவ்விதம் அழுத்தமாகப் பேசி பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளைப் பயமுறுத்தப் பாரதம் அணு ஆயுதங்களைக் காட்சிக் கண்ணாடி மாளிகையில் வைத்திருக்கிறது!
இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் வரலாம்! அந்த வனாந்திரப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டுபோல் எழுதப்பட்டு விட்டது!
****
முகப்புப் படம் உதவி ‘ஹிந்து தினத்தகவல் ‘…. நன்றி
jayabarat@tnt21.com [S. Jayabarathan (Sep 30, 2004)]
- கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்
- முப்பதாண்டு கால முயற்சி
- பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:
- தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்
- மெய்மையின் மயக்கம்-19
- Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா
- புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….
- ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”
- செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)
- சொன்னார்கள்
- கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை
- கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!
- கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004
- மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்
- கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!
- உரத்த சிந்தனைகள்- 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை -2
- பிரிக்க முடியாத தனிமை
- எனக்கென்று ஒரு மனம்
- பிழை திருத்தம்
- எதிர்பார்ப்பு
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)
- அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,
- சினிமா — முக்கிய அறிவிப்புகள்
- ஒரு முன்னோடியின் பின்னாடி
- ஐந்து கவிதைகள்
- பெரியபுராணம் — 11
- நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39
- கூர் பச்சையங்கள்
- களை…
- இயற்கைக் கோலங்கள்
- அதிசயம்
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)
- சிலந்தி வலை சிக்கல்கள்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)
- பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்
- காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்