செங்காளி
ஊரே அதிசயிக்கும்படி அவள் அப்படிப் பாடுபட்டாள். கணவனை இழந்துவிட்ட அவள் தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரவெண்டுமென்று அயராது உழைத்தாள். சிறிதளவு நிலந்தான் இருந்தது என்றாலும் இரவும் பகலுமாக அதில் பாடுபட்டாள். அதுவும் போதாதென்று கிராமத்தில் எந்தக் கூலிவேலை என்றாலும் தயங்காமல் செய்தாள், சம்பாதித்தாள், சிறுகச்சிறுக பணத்தைச் சேர்த்து வைத்தாள்.
பையனும் படித்தான், பட்டமும் வாங்கினான். யாருடைய காலையோ கையையோ பிடித்து எப்படியோ சென்னையில் ஒரு வேலையும் வாங்கிவிட்டான்.
முதன்முதலாக வேலக்குப் போகிறானே பையன் என்று புதுத் துணிகள் வாங்கிக்கொள்வதற்கும் மேற்கொண்டு செலவுக்கும் பணம் கொடுத்து மகனை வழியனுப்பி வைத்தாள்.
சரி.. படித்தான், வேலையும் வாங்கிவிட்டான், இனிமேல் அவனுக்கு ஒரு கால்கட்டும் போட்டுவிடலாமென்று அவனுக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடினாள். மகனும் சரி என்று சொல்லவே திருமணமும் முடித்துவைத்தாள்.
தனிக்குடித்தனம் போய்விட்டார்கள் மகனும் மருமகளும். தன்னையும் கூட அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவர்களோ போய் வருகின்றோம் என்று சொல்லிக்கொண்டு போய்விட்டார்கள். ‘அதுவும் சரிதான், சிறுசுகள், தனியாக இருக்க ஆசையாக இருக்காதா ‘ என்று தனக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
பண்டிகை வந்தது. மகனும் மருமகளும் கிராமத்திற்கு வர, திருமணத்தன்று போட்டதுபோக இதற்கென்றே வைத்திருந்த நகைகளையெல்லாம் மருமகளுக்குப் போட்டுப் பார்த்து, பூரித்துப் போனாள். இந்தத் தடவையும் அவர்கள் போகும்போது பேச்சுக்காகக்கூட தங்களோடு வரும்படி அவளைக் கூப்பிடவில்லை.
ஒரு மாதம் கழித்து திடாரென்று மகனும் மருமகளும் வந்து சேர்ந்தார்கள். மகன் வந்ததிலிருந்து ஏதோ யோசனையில் இருப்பதுபோல் தோன்றவே, ‘என்னப்பா..ஒருமாதிரி இருக்கிறே.. ‘ என்று கேட்டாள். ‘ஒண்ணுமில்லேம்மா.. ‘ என்று மகன் சிறிது தயங்கிடவே, ‘சும்மா சொல்லுப்பா.. ‘ என்று பரிவோடு கேட்டாள். ‘இல்லே.. நான் இப்ப செய்யிற வேலை அவ்வளவு சரியாயில்லை. அதனாலே நானும் இன்னும் ரெண்டுபேரும் சேர்ந்து தனியா ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு பாக்கறோம். ஆனா.. ‘ என்று சொல்லி நிறுத்தினான். ‘ஆனா என்னப்பா சொல்லு ‘ என்றாள். ‘நம்ப பங்குக்கு நாம கொஞ்சம் பணம் கொடுக்கணும். அது நம்மாலெ முடியாதுங்கறதினாலே அதிலே சேரலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கிறேன் ‘ என்றான். ‘அட நீ என்னப்பா.. இப்படித் தயங்கிக்கிட்டு.. இந்தா எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குது..அதை வச்சு ஆரம்பி ‘ என்று சொல்லி, தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்தாள்.
கடந்த இரண்டு தடவைகளைப்போலவே இந்தத் தடவையும் அவளை அவர்கள் கூப்பிடவில்லை. ‘பாவம், பையன் புதுத் தொழிலை எப்படிச் செய்யப்போகின்றோம் என்ற கவலையில் போய்விட்டான் ‘ என்று நினைத்துக்கொண்டாள்.
மூன்று, நான்கு மாதங்கள் சென்றபிறகு அவளைத்தான் பார்க்கத்தான் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்து நின்ற மகனையும் மருமகளையும் பார்த்துப் பரவசமடைந்தாள். இரண்டு நாட்கள் சென்றன. மருமகள் தனியாக இருக்கும்பொழுது ‘நான் எப்போது பேரக்குழந்தயைப் பாக்கப்போறேன் ‘ என்று ஆசையுடன் கேட்டாள். ‘இப்போதைக்கு இல்லை ‘ என்று சொன்ன மருமகளைப் பார்த்து ஏதோ வெட்கப்படுகின்றாள் என்று நினைத்துக்கொண்டாள். ‘சரி புதுசா ஆரம்பிச்ச தொழில் எப்படி நடக்குது ‘ என்றாள்.
‘அதையேன் கேக்கறீங்க அத்தை.. “நீங்க சொன்னீங்களேன்னு” ஆரம்பிச்சிட்டு இப்பொ ரொம்பத் தடுமாறறாரு..எதிபார்த்ததுக்கு மேலெ செலவாயிடுச்சு. எங்க கடன் கிடைக்கும்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கிறாரு.. இவரோட சேர்ந்தவங்ககூட அவங்க நெலத்தையெல்லாம் வித்து மேலெ பணம் போட்டிருக்கிறாங்க.. ‘ என்று மருமகள் சொல்லவும் சற்று நேரம் யோசனையில் இருந்தாள். பிறகு ‘ஏம்மா எனக்கு ஒண்ணு தோனுது.. நம்ம நெலத்தையும் வித்திட்டா என்ன ‘ என்று மருமகளைப் பார்த்துக் கேட்டாள். ‘அது எப்படாங்க அத்தை.. அவரு இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு ‘ என்று சொன்ன மருமகளைப் பார்த்து, ‘அவன் என்ன ஒத்துக்கிறது.. எப்ப இருந்தாலும் அது உங்களுக்குச் சேரவேண்டியதுதானே..அதுவுமில்லாம இங்கெ வந்து நெலத்திலெ பாடுபடப் போறீங்களா என்ன ‘ என்றாள். மேலும், ‘என்னப்பத்தி ஏன் கவலைப்படறீங்க.. நான் கூலிவேலை செஞ்சு எப்படியாச்சும் பொளச்சுக்குவேன்.. ‘ என்றாள்
கடைசியாக “அவள் விரும்பினபடியே” நிலம் விற்கப்பட்டு பணமும் மகன் கைக்குச் சென்றது. மகனுக்கு இருக்கும் கவலையில் அவன் தங்களோடு வரும்படி தன்னைக் கூப்பிட்டால்கூட அடுத்த தடவைப் பார்க்கலாம் என்று சொல்லவேண்டும் என்று இருந்தவளுக்கு அவன் அந்தத் தொந்தரவையும் கொடுக்கவில்லை. வழக்கம்போலவே ஒன்றும் சொல்லாமலே சென்றுவிட்டான்.
ஆறுமாதங்கள் கழிந்த பின்பு மறுபடியும் வந்த தம்பதிகள் அவளுடைய உடல் நலனைப் பற்றி மிகவும் விசாரிக்க ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ‘நான் நல்லாதான் இருக்கிறேன்.. நீங்க ரெண்டுபேரும் எப்படி இருக்கிறீங்க.. எல்லாம் வசதியா இருக்குதா.. ‘ என்று கேட்டாள். ‘எல்லாம் வசதியாத்தான் இருக்குது ஆனா.. ‘ என்று இழுத்த மகனைப் பார்த்து, சிறிது பதட்டத்துடன் ‘என்னப்பா என்ன ஆச்சு ‘ என்றாள்.
மகன் பதில் சொல்லுவதற்குள் மருமகள் முந்திக்கொண்டாள். ‘அது ஒண்ணுமில்லீங்க அத்தை.. தொழிலெல்லாம் சுமாராகவே நடக்குது.. ஆனா வீட்டு வாடகை அது இதுன்னு செலவு கொஞ்சம் அதிகம்.. பாருங்களே.. இங்கே நம்ம வீடு எவ்வளவு பெரிய வீடு.. நீங்க ஒருத்தர்தானெ இருக்கிறீங்க.. நாங்க இருக்கிறது ரெண்டு அறை இருக்கிற ஒரு சின்ன வீடு..அதுக்கு எவ்வளவு வாடகை தெரியுங்களா.. ‘ என்று மாமியாரைப் பார்த்து கண்கள் விரியச் சொன்னாள். இதைக் கேட்ட அவளும், ‘ஆமாங்கண்ணு நீ எவ்வளவு சரியாச் சொன்ன.. எனக்கு இது தோனவேயில்ல பாரு.. இவ்வளவு பெரிய வீடு எனக்கெதுக்கு.. ஒரு சின்னக் குடிசையே போதும்.. இந்த வீட்டை வித்திட்டா அந்தப் பணம் உங்களுக்கு வீடுகீடு வாங்க வசதியா இருக்குமே.. ஆனா திடார்னு விக்கறதுன்னா நல்ல விலை கொடுக்கமாட்டாங்களே ‘ என்று கவலையோடு சொன்னாள். ‘அதெல்லாம் வேண்டாம்.. நீங்க வசதியா இருக்கணும்..வீட்டை ஒண்ணும் விக்கவேண்டாம் ‘ என்று மகன் சொல்ல, தன் மகனுக்குத்தான் தன்மேல் எவ்வளவு கரிசனம் என்று எண்ணிக்கொண்டாள். ஆனாலும் “அவன் மறுப்புகளையும்” மீறி வீட்டை விற்று முடித்தாள். பணத்தையும் மகனிடம் கொடுத்தாள்.
அம்மாவை ஒரு குடிசையில் குடியிருக்க வைத்துவிட்டுப் போன மகன் ஆறு மாதமாயிற்று.. ஒரு வருடமாயிற்று.. கிராமத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஊரில் மகனைப்பற்றி கேட்போரிடமெல்லாம் ‘வியாபார விசயமா வேலை ரொம்ப அதிகம்.. அதனாலத்தான் வரலை ‘ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
இப்பொழுது அவள் கவலையெல்லாம் மகன் தன்னைப் பார்க்க வரவில்லை என்பதைவிட அப்படியே அவன் வந்துவிட்டால் அவனுக்கு எதைக் கொடுப்பது என்பதுதான். தன்னிடம் தற்பொழுது இருக்கும் ஒன்றை நினைத்தபொழுதுதான் அவளுக்கு பயமாக இருந்தது. மகனும் மருமகளும் வந்து அவர்களுக்கு அது போய்விட்டால் என்ன செய்வது என்றுதான் மிகவும் கலவரப்பட்டாள். அதற்காகவாவது அவர்கள் இங்கே வராமலிருந்தால் நல்லது என்றும் நினைத்தாள்.
அது என்னவென்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.. கடந்த பத்து மாதங்களாய் அவளைப் படாதபாடு படுத்திவரும் காச நோய்தான் அது.
—-
natesasabapathy@yahoo.com
- Dalit History Month: 1 April to 30 April
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- ரோறா போறா சமையல்காரன்
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- யாரோ, அவர் யாரோ ?
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- போனதும், போனவைகளும்
- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- பதிவிரதம்
- இனிய காட்சி
- வீடு
- இரண்டு கவிதைகள்
- நீயும் நானும்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- மூன்று கவிதைகள்
- Bowling for Columbine (2002)
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- தாகம்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- ஐஸ்கிரீம் வகைகள்
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்