மலர்மன்னன்
ஆனந்த மோஹன வஸுவின் மாளிகை வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மற்றவர்கள் அதன் பிரமாண்டத்தில் லயித்துவிட, கவிஞரை மட்டும் நந்தவனத்தில் ராட்சதத் திருப்பதிக் குடையெனக் கவிந்து நின்று விசாலமாய் நிழல் பரப்பிய ஆல மரம் காந்தம்போல் விசையுடன் ஈர்த்துக்கொண்டது.
‘என்னப்பா நீ, அங்கே எங்கே போகிறாய்’ என்று சிலர் வழி மறித்துத் தம்முடன் அழைத்துச் செல்ல எத்தனிப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த மரத்தை நோக்கி விரைந்தார், கவிஞர்.
பொதுவாக ஆல மரங்களுக்கே பெரிய ஆகிருதிதான். ஆல மரத்தை எங்கு காண நேர்ந்தாலும் ஒரு பழுத்த சுமங்கலியின் தோற்றப் பொலிவுதான் கவிஞரின் மனவெளியில் உருக் கொள்ளும். மகன்களும் மறுமகன்களும், மகள்களும், மறுமகள்களும், அவரவர்களின் வயிற்றுப் பேரப் பிள்ளைகளுமாய் நடுவீட்டில் பெருமிதம் பொங்கப் பெருவாழ்வு வாழ்கிற இரட்டை நாடிச் சுமங்கலிப் பெண்டு…
ஆனந்த மோஹனர் தோட்டத்து ஆல மரமோ வழக்கமாய்க் காணப்படுகிற ஆல மரங்களைக் காட்டிலும் பன்மடங்கு பெருத்து, ஆயிரங் கரத்தாள்போல் கிளைகள் பல பரப்பி, விழுதுகள் சூழ நின்று கவிஞரை அரவணைத்துக் கொண்டது.
கவிஞர் மரத்தடியில் நின்று அண்ணாந்து பார்த்து, நெளிந்தும், வளைந்தும், நிமிர்ந்தும் நீண்டும் பரவிய கிளகளின் வனப்பில் மனதைப் பறிகொடுத்தார். கைகளை அகல விரித்து ஆதூரத்துடன் அடிமரத்தை முடிந்தவரை ஆலிங்கனம் செய்தார்.
உடன் வந்தவர்களுக்கு அவர் திசை மாறிப் போனது சங்கடமாகி விட்டது.
‘தோட்டத்து அழகை அப்புறம் ரசித்துக்கொள்ளலாம். முதலில் வீட்டுக்குள்ளே போகலாம் வா’ என்று குரல் கொடுத்தார், ஒருவர்.
கவிஞர் மரத்தைப் பிரிய மனமின்றிப் பிரிந்து, ஆயாசத்துடன் திரும்பி வந்து தம் சகாக்களுடன் சேர்ந்துகொண்டார். அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகப் படியேறி மாளிகை வராந்தாவில் நுழைந்ததும், அவர்களின் வரவுக்காகவே காத்திருப்பதுபோல் விசாலமான உள்வாயிலில் முகம் மலர நின்றிருந்தார், ஆனந்த மோஹனர்.
அந்தக் குழுவில் மற்ற அனைவரும் ஒருபோலிருக்க, கவிஞர் மட்டும் வித்தியாசமாய், தனித்துத் தோற்றமளித்தார். அதன் காரணமாகவே ஆனந்த மோஹனரின் கவனத்தைக் கவர்ந்தார்.
“நீங்கள் எல்லாருமே மதராசிகள்தான் அல்லவா? உங்களைப் பார்த்தால் மட்டும் வேறு ராஜதானிக்காரர் போலத் தெரிகிறது. நீங்கள் மராட்டியரா?” என்று கேட்டார், ஆனந்த மோஹனர்.
கவிஞர் புன்னகைத்தார். “இல்லை, நானும் மதராஸ் ராஜதானி யைச் சேர்ந்தவன்தான்-தமிழன்” என்றார்.
“வால்விட்ட தலைப்பாகை, முறுக்கு மீசை, நெற்றியில் வட்டப் பொட்டாக அல்லாமல் செங்குத்தாய்த் தீற்றிய குங்குமம்… பொதுவாக மதராசிகளின் தோற்றத்திற்கு இது விதி விலக்கு அல்லவா?”
“ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். காசியில் சில வருஷங்கள் வசித்ததால் ஏற்பட்ட பாதிப்பு என் தோற்றத்தில் புலப்படுவதாய்க் கொள்ளலாம்.”
“அட, அப்படியா? உங்களனைவருக்கும் தற்சமயம்தான் முதல் தடவையாக காசி க்ஷேத்திர தரிசனம் வாய்த்தது என்றல்லவா நினைத்திருந்தேன்.”
“என்னைத் தவிர மற்றவர்களுக்கு அப்படித்தான். நானோ, பதினான்கு வயதிலேயே என் அத்தையால் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது நிகழ்ந்தது எனக்கு இரண்டாவது காசி யாத்திரை.”
“உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அடடா, ஆர்வக் கோளாறால் நான் பாட்டுக்கு உங்களையெல்லாம் வெளியிலேயே நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். வாருங்கள், உள்ளே போவோம். மாடியில் விருந்தினர் அறைகள் இருக்கின்றன. அங்கேயே எல்லா வசதிகளும் உண்டு. குளித்து, சிறிது சிரம பரிகாரமும் செய்தான பிறகு காலை உணவுக்குக் கீழே இறங்கி வந்தால் போதும்” என்றவாறு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார், ஆனந்த மோஹனர்.
கவிஞரும் அவரது குழுவினரும் காசி யாத்திரை மேற்கொண்டது க்ஷேத்திராடனத்துக்காக அல்ல. அந்த வருடம் காங்கிரஸ் மகாசபையின் மாநாடு காசியில் நடைபெற்றதால்தான் அவர்கள் அநத்ப் புண்ணியத் தலத்திற்கு வரும் சந்தர்ப்பம் கிட்டியது. முன்னரே பேசிவைத்துக்கொண்டபடி மாநாடு முடிந்து திரும்புகிறபோது கல்கத்தாவில் இறங்கி அங்கு டம்டம்மில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த மோஹன வஸுவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து கல்கத்தாவையும் சுற்றுப்புறங்களையும் காணவேண்டும் என்பது அவர்களின் தீர்மானம். இதற்கிணங்கவே, ஆனந்த மோஹனரின் மாளிகைக்கு இப்போது அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
மாடியில் அறைகள் விசாலமாக இருந்தன. அனைவருக்கும் ஓர் அறையே போதுமானதாக இருந்தது. அறைக்குள் நுழைந்ததும் நேராக ஜன்னலின் பக்கம் சென்று ஆர்வத்துடன் வெளிப்புறத்தைப் பார்த்தார், கவிஞர். ஆகா, அவரே எதிர்பாராத வண்ணம் அதே ஆலமரம் ஜன்னலுக்கு வெளியே சிறிது தொலைவில் கம்பீரமாகக் காட்சியளித்தது. காலைநேரப் பொன்வெய்யிலில் அதன் இலைகள் பளபளவென மின்னின. கவிஞர் புளகாங்கிதமடைந்தவராய் மெய்மறந்து நின்றார். காற்றில் மென்மையாக அசையும் பல்லாயிரம் ஆலிலைகள், தம்மை ‘வா, வா’ என்று அழைப்பது போல் பிரமை தட்டியது.
இந்த மரம் எதற்காக என்னை இப்படிப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது? இது என்னிடம் என்னவாவது சொல்ல விரும்புகிறதா? எனில் இது சொல்ல் விரும்பும் செய்திதான் என்ன?
ஆல மரம் எதன் குறியீடு? வெறும் கண்களுக்குப் புலனாகாத அணுதான் ஒரு பிரமாண்டத்தைத் தன்னுள் ஒளித்துவைத்திருப்ப தால் அணுவுள் பிரமாண்டமும் பிரமாண்டத்துள் அணுவும் சாத்தியம் என்பதைத் தனது சின்னஞ் சிறிய பழத்துள் மணல் மணலாய் நிறைந்துள்ள விதைகளைக் காட்டி நிரூபணம் செய்ய முற்படுகிறதா?
கழிந்தன யாவும் மீண்டும் புத்துயிர்க்கும், மறுபடியும் க்ருதயுகம் பிறக்கும் என உறுதியளிப்பதுபோல் ஊழிக்கால வெள்ளம் தாலாட்ட, ஒற்றை ஆலிலை மீது மிதந்துவரும் குழந்தைக் கிருஷ்ணன்…வலதுகால் கட்டைவிரலை வாயிலிட்டுக் குதப்பியவாறு என்னமாய் ஒரு சொகுசு! நீர்ப் பெருக்கின்மேல் பால கிருஷ்ணனைச் சுமக்கும் பாக்கியம்பெற்ற ஆலிலை…ஒரு யுகம் மறைந்து மறுயுகம் பிறக்கையிலும் தொடர்ச்சி அறுபடாமல் நீடிக்கும் எனபதற்கு அத்தாட்சியாய் அந்த ஒற்றை ஆலிலை…
விதைத்து, துளிர்த்து, கன்றாய் வளர்ந்து மரமாய் வேரூன்றக் கால அவகாசம் அதிகம் தேவை என்பதால் விழுதுகளை நேராக மண்ணில் இறக்கித் தன் வம்சத்தைத் துரிதகதியில் விருத்தி செய்யும் ஆலமரம் இன்னும் வேறெதற்கெல்லாம் குறியீடு? புதிய யுகத்தில் சகல ஜீவராசிகளும் தன்னைப்போலவே விரைவாகப் பல்கிப் பெருகி, எழிற்கோலம் காட்டும் என்பதன் சமிக்ஞையா?
முளைத்தெழும் ஒவ்வொன்றும் தலையெடுத்ததும் தனித்தனியே ஒதுங்கிப் போய்விடாது ஒன்றுகூடி நிற்பதே வலிமை எனத் தன்னைச் சூழ்ந்துள்ள எண்ணற்ற விழுதுகளைக் காட்டி நமக் கெல்லாம் அது புத்திமதி சொல்கிறதா?
உடன் வந்த ஒருவர் தோள் பற்றி அழுத்தி, காலைக் கடன்களுக்கு அழைத்துச் செல்லும் வரை ஜன்னலடியிலேயே கவிஞர் தம் வயம் இழந்து நின்றிருந்தார்…
காளிகட்டத்து மாகாளி, ஹூக்ளி ஆற்றங்கரையோரம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் திருவடிகள்பட்ட தட்சிணேசுவரம், அதன் மறுகரையில் சுவாமி விவேகானந்தர் ஸ்தூல சரீரியாய்த் தமது அந்திம நாட்களைக் கழித்து சமாதியில் அடங்கிய பேலூர் மடம், எனக் கவிஞர் தம் சகாக்களுடன் சுற்றித் திரிந்தபோதும் அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது என்னவோ ஆனந்த மோஹனர் தோட்டத்து ஆலமரம்தான்.
இரண்டு நாட்களுக்குப்பின் அவர்கள் சென்னை திரும்ப வேண்டிய தினத்தன்று தம் மாளிகையின் கூடத்திலேயே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார், ஆனந்த மோஹன வஸு.
கூடத்தில் அனைவரும் அமர்ந்திருக்கையில் ஆனந்த மோஹனர் சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு மாளிகையின் வெளி வாயிலுக்குச் சென்று மிகுந்த மரியாதையுடன் அழைத்து வந்த பெண்மணியைக் கண்டு கவிஞர் பிரமித்துப் போனார். செந்தழல் போலொரு மாது…கொழுந்து விட்டெரியும் அக்னி போன்ற அந்த வடிவத்தினின்று வீசிய ஜ்வாலை, கூடம் முழுவதும் பரவிச் சிலிர்ப்பூட்டியது.
‘இவர்தான் சகோதரி நிவேதிதை; சுவாமி விவேகானந்தரின் நேரடி சிஷ்யை. ஷாம்பஜாரில் சிறுமிகளுக்கென ஒரு பள்ளீக்கூடம் வைத்து அவர்களின் அறிவுக் கண்ணைத் திறந்து வருகிறார்’ என்று அவரைக் கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார், ஆனந்த மோஹனர். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை என்றதும் கவிஞரின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
தேவ மகள் இவள் பெயர் ஆதியில் மார்கரெட் இ.நோபிள். இயல்பாகவே மேலாதிக்க அகந்தை மிக்க இனமெனத் தோன்றும் இங்கிலீஷ்காரியல்லள். மாறாக, சுபாவமாகவே விடுதலை, விடுதலை என்று எந்நேரமும் நாடி துடிக்கிற ஐரிஷ் மங்கை. சுவாமி விவேகானந்தரால் தர்ம புத்திரியாகவும், அத்யந்த சிஷ்யையெனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிவேதிதா எனப் புனர்ஜன்மம் பெற்ற புண்ணியவதி.
சகோதரி நிவேதிதை ஆன்மிக உரை நிகழ்த்துவாள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அவளோ பாரத சமுதாயம் அடிமைத் தளையில் உழல்வதுபற்றியே அதிகம் பேசி ஆச்சரியப் படுத்தினாள். பாரத தேசத்தை வணக்கத்திற்குரிய மாதாவாகவும் வழிபாட்டிற்குரிய தேவியென்றும் வர்ணித்தாள். இந்த தேசம் வெறும் கல்லும் மண்ணும் கட்டையும் அல்ல, சதா சர்வ காலமும் அநித்யங்களில் உழலும் உலகம் முழுமைக்கும் ஆன்மிக உள்ளொளி காட்டி வழி நடத்திச் செல்லும் தகுதி வாய்ந்த ஜீவனுள்ள தாயே பாரதம் எனும் புனித பூமி என்பதை நினைவூட்டினாள்.
கூட்டம் நிறைவுபெற்றதும் சென்னைக் குழுவினர் சகோதரி நிவேதிதையிடம் தங்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். கவிஞரின் முறை வந்தது. ‘என்னை சி. சுப்பிரமணிய பாரதி என்று அழைப்பார்கள்’ என்று தொடங்கிய கவிஞர், தம்மைப்பற்றிச் சுருக்கமாகத் தெரிவித்தார்…மற்றவர் களைப் போலன்றி உணர்ச்சிப் பிழம்பாக அவர் நிற்பதைக் கூர்ந்து பார்த்தாள், நிவேதிதை. அட, இவன் எல்லாரையும் போன்றவன் அல்லன்…மிகவும் வித்தியாசமாய்த் தெரிகிறான்; விசேஷ கவனத்திற் குரியவன்…சகோதரி நிவேதிதை புன்னகை புரிந்தாள்-“மகனே, திருமணமாயிற்றா, உனக்கு?”
கவிஞருக்குக் குரல் எழும்பவில்லை. தேச சேவைக்குத் தமது வாழ்க்கையை முழுமையாக ஒப்புக்கொடுப்பதற்கு மாறாகத் திருமணம், பிள்ளை குட்டிகள், குடும்பம் என்று குறுகிப் போய்விட்டோமோ என்கிற குற்றவுணர்வு உள்ளே குமைய, தொண்டையைச் சிரமப்பட்டுச் சரிசெய்துகொண்டு ‘ஆம், ஆயிற்று. இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தைகூட இருக்கிறது’ என்றார், கம்மிய குரலில்.
”அப்படியா? நல்லது. எங்கே உன் மனைவி? அழைத்துக்கொண்டு வரவில்லையா?”
“இல்லை. மனைவியை ஆண்களுக்குச் சரிசமமாகப் பொது இடங்களுக்கு அழைத்து வரும் வழக்கம் இன்னும் எங்களிடையே
நடைமுறைக்கு வரவில்லை. அதுவும் காங்கிரஸ் மகாசபை மாநாடுபோன்ற ராஜீய விவகாரங்களுக்கு அவளை அழைத்து வருவதால் என்ன பிரயோசனம்? மேலும் கல்வியறிவு இல்லா தவள் வேறு…”
அதைக் கேட்டதும் இயல்பாகவே சிவப்பான நிவேதிதையின் முகம் மேலும் சிவந்தது. உதய நாழிகையின்போது கீழ்வானில் வீறுகொண்டெழும் செம்பரிதி…
“இதென்ன பேச்சு! மனைவியை சரிசமமாய்ப் பொது இடங்களுக்கு அழைத்துவரும் வழக்கம் இன்னும் நடைமுறைக்கு வர வில்லையா? அப்படியானால் நடைமுறைப் படுத்த வேண்டியது தானே? சமுதாயத்தில் சரிபாதி அல்லவா பெண்கள்? சமூகத்தில் ஒருபாதி தொடர்ந்து அடிமைப்பட்டிருக்கையில் மறுபாதி மட்டும் சுதந்திரம் பெறுவது எப்படி சாத்தியம்? இதில் கவிஞன், பத்திரிகைக்காரன் என்றெல்லாம் வேறு உன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிறாய். நீயே இப்படி இருந்தால் மற்றவர்கள் நிலைமை எப்படியிருக்கும்? போகட்டும், இனிமேலாவது மனைவியை வாழ்க்கைத் துணவியாய் மதித்து உன்னுடைய எல்லாப் பொதுப்பணிகளிலும் பங்கேற்கச் செய்!”
பராசக்தியே தம்முன் பிரத்தியட்சமாகி ஆணையிடுவதுபோல் கவிஞர் உணர்ந்தார். ‘இனி அப்படியே நடந்துகொள்வேன் அம்மா’ என்றார், பணிவாக..
நிவேதிதை இருக்கையிலிருந்து சட்டென எழுந்தாள். ‘வா, என்னுடன்’ என்று கவிஞருக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு வாயிலை நோக்கி விறுவிறுவென நடந்தாள். கவிஞர் முடுக்கிவிட்ட இயந்திரம்போல் பின்தொடர்ந்தார். கூட்டத்தி லிருந்த அனைவரும் பிரமித்திருக்க, அவர்கள் இருவரும் வெளியேறிச் சென்றனர்.
அவர்கள் வீட்டிற்கு வெளியே நந்தவனத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். என்ன ஆச்சரியம், கவிஞரை ஆட்கொண்ட ஆல மரத்தை நோக்கியே நடந்தாள், நிவேதிதை. கவிஞர் நித்திரையில் நடப்பதுபோல் நிழலென அவள் பின் சென்றார். இருவரும் ஆலமரத்தடிக்குச் சென்று நின்றனர். நிவேதிதை சட்டெனக் கவிஞரின் தோள்பற்றி, ‘மகனே, அதோ பார்’ என்றாள். கவிஞர் பரவச நிலையில் நிவேதிதை காட்டிய திசையை நோக்கினார். அங்கே மோகன வடிவினளாய் ஒரு தேவி வானளாவி நின்று கவிஞரின் விழிகள் முழுவதும் நிறைந்தாள். கவிஞர் மெய் சிலிர்த்து அசைவற்று நின்றார். விழியோரங்களிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கன்னங்களில் வழியலாயிற்று.
“இவளே உன் பாரத அன்னை. இனி இவளுக்காகவே உன் வாழ்க்கை” என்றாள், நிவேதிதை.
அக்கணமே நிவேதிதையைத் தம் குருமணியாய் வரித்துக் கொண்ட கவிஞர் தலை வணங்கி சம்மதம் தெரிவித்து நிமிர்ந்தபோது அதுகாறும் பிரகாசமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த பாரதத் தாயின் திவ்வியக் காட்சி காற்றில் கரைந்து மறைந்தது.
சகோதரி நிவேதிதை எம்பி நின்று மரக் கிளையிலிருந்து ஒர் இலையை மென்மையாகப் பறித்தாள். வெகு ஜாக்கிரதையாக அதனைத் தன் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டாள். சில வினாடிகள் கண்களை மூடி தியான நிலையிலிருந்தாள். பிறகு விழிகள் திறந்து ‘இந்தா, வாங்கிக்கொள்’ என்றாள். கவிஞர் பய பக்தியுடன் இரு கரங்களையும் அவள்முன் ஏந்தி நின்றார்.
அவரையும் அறியாமலேயே அந்தி வானத்தில் ஒவ்வொரு விண்மீனாகக் கண் சிமிட்டத் தொடங்குகிற மாதிரி உள் அந்தரங்கத்தில் சொற்கள் முகிழ்த்தெழுந்து கவிதை வரிகளாய்த் தம்மை வரிசைப் படுத்திக்கொள்ளலாயின:
“அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா
டாம்பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!”
ஒரு முழுக் கவிதையும் ஓர் ஆவேசத்துடன் வரிவரியாய் அதிவிரைவாக உள்ளுக்குள் ஓடி அமர்கையில்.
நிவேதிதை தன் கைப்பொருளை கவிஞரின் குவிந்த உள்ளங் கைகளில் பத்திரமாக வைத்தாள்.
கிண்ணம்போல் குவிந்திருந்த கவிஞரின் உள்ளங் கரங்களில் மகிமை பொருந்திய பிரசாதமாய் இப்பொழுது அமர்ந்திருந்தது அந்த ஒற்றை ஆலிலை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆதாரம்: வி.எஸ். குஞ்சிதபாதம் இயற்றிய ‘புதுவையில் பாரதியார்: நான் கண்டதும் கேட்டதும் (சென்னை லோகக்ஷேமா ட்ரஸ்ட் வெளியீடு).’ கல்லூரி மாணவப் பருவத்தின்போது, “அம்பீ” என்று பாரதியாரால் அன்பொழுக அழைக்கப்படும் அரிய வாய்ப்பைப் பெற்றவர் குஞ்சிதபாதம். புதுச்சேரி கலோனியல் கல்லூரியில் பிரெஞ்ச்-ஆங்கிலப் பேராசிரியராக இருந்த சுவாமிநாத தீட்சிதரின் புதல்வர். பாரதியார் அனேகமாகத் தினமும் காலைவேளையில் ஹிந்து பேப்பர் படிப்பதற்காக தீட்சிதர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அச்சமயங்களில் பாரதியாருடன் உரையாடி மகிழும் பாக்கியம் குஞ்சிதபாதத்திற்கும் அவர் தங்கை மீனாவுக்கும் கிட்டியிருந்தது. பாரதியாருடனான தமது அனுபவங்களை 1948-ல் ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் தொடர்ந்து எழுதி வந்தார், குஞ்சிதபாதம். பின்னர் அவற்றை ஒரு நூலாகத் தொகுத்தளித்தார், அவர் புதல்வியும் சுவாமி சிவானந்தரின் சிஷ்யையாகத் துறவறம் பூண்டவருமான தேவி வஸந்தானந்தா.
================================================================================
அமுத சுரபி மார்ச் 2011 இதழில் வெளிவந்த, லட்சுமி ராஜலிங்கம் முதலியார் அறக் கட்டளைப் பரிசு பெறும் முத்திரைச் சிறுகதை
மலர்மன்னன் 18/37 முத்துலட்சுமி சாலை லட்சுமிபுரம் சென்னை 600 041
தொலை பேசி எண்: 4351 4248 / மொபைல்: 97899 62333
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- வெந்நீர் ஒத்தடம்!
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- பொதுவான புள்ளியொன்றில்..
- மனப்பிறழ்வு
- இயலும்
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- நானாச்சு என்கிற நாணா
- கடிகை வழி பாதை
- பேராசை
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- நீளும் இகற்போர்…..
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29