ஆத்திரக் கும்மி

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ஜெயந்தன்


கும்மியடிப் பெண்ணே கும்மியடி – நம்
ஆத்திரம் தீர்ந்ததாய்க் கும்மியடி!
ஆணின் ஆதிக்கம் சொன்னவர் நாவை நாம்
அறுத்து விட்டோமென்று கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி!

ஆண்டான் அடிமை சொன்னவன் சிரசை – நாம்
துண்டாடி விட்டோமெனக் கும்மியடி
தீண்டத் தகாதென சொன்னவர் கைகளைப் பிய்த்து
திசைகளில் வீசினோம் கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி!

பேசிப் பேசி ஒரு பலனுமில்லை – இனி
பல்லும் மெய்யும்தான் பேசுமடி!
ரெட்டைக் குவளைகள் வைத்த கடைகளை – நாம்
தீயிட்டு மடுக்கினோம் கும்மியடி!
வடம் பிடியாதென்று சொன்னார்கள் – இனி
வடத்துக்கும் மடத்துக்கும் வந்தது நாசம் – கும்மியடி!
சாணிப்பால் தந்த குரல்வளையை இனி
சக்கரம் அறுக்குமென்று நீ கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி!

எச்சிலைத் தரையில் துப்பாதே என்று
சொன்னவர் மூஞ்சியில் துப்பிவிட்டு நீ – கும்மியடி!
பாலிலிருந்துதான் வெண்ணைய் வரும் – நாம்
பாலியல் துறந்தால் வாழ்வு வரும்!
புண்ணென்று பார்த்த கண்களை நாம்
தோண்டி எடுத்தோம் எனக் கும்மியடி!
பெண்ணுக்குப் பேதமை இயல்பென்று* சொன்னது
சித்தனே என்றாலும் செவிட்டில் அடி
கும்மியடிப் பெண்ணே கும்மியடி!

வாச்சாந்தி தோழிகள் பட்ட அவமானம் – பெண்ணே
நம்மானம் நம்மானம் என்றே கும்மியடி!
தங்கம் மனோரமா சிந்திய ரத்தம் – பெண்ணே
எம் ரத்தம் எம் ரத்தம் எனச் சொல்லியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி!
—-
* ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன் றேயாம்,
ஆனாலும் பேதைக்குணம் பெண்ணுக்குண்டு.
– சிவானந்த போதம்.
—-

ஜெயந்தன்,
F2. விக்னேஸ்வரா பிளாட்ஸ்,
9வது குறுக்குத் தெரு,
ராஜலெட்சுமி நகர்,
வேளச்சேரி,
சென்னை-600 042.

தொலைபேசி 22550853
(jeyanthan@sancharnet.in)

Series Navigation

ஜெயந்தன்

ஜெயந்தன்