உஷாதீபன்
“டேய் செந்திலு, என்னடா அந்தப் பிள்ளைய இன்னைக்குக் காணல?”-குரலில் வருத்தம் தோயக் கேட்டுக்கொண்டே மரத்தடியை நெருங்கினான் மாணிக்கம். காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் செந்தில். “டாய்…என்னடா, நா கேட்குறேன்..பேசாம இருக்கே…?” –ஒரு பொய்யான கோபம். “அட சும்மாருண்ணே, யாருக்குத் தெரியும்? உன்னமாதிரித்தான் நானும்…” “டே…N;;;டய்…சும்மா டபாய்க்காதடா…உனக்குத் தெரியாதுங்கிறதை என்னை நம்பச் சொல்றியா? நீ இங்கேயேதான இருக்கே?” “நம்பாட்டிப் போ…எனக்கென்ன இதான் வேலையா? அந்தப் பிள்ள எங்க போகுது,வருதுன்னு பார்க்கிறதா என் வேலை? சவாரியக் காணமேன்னு நானே தவிச்சிக்கிட்டிருக்கேன்…” -சொல்லியவாறே நெற்றி வியர்வையை வழித்து விட்டான் செந்தில். மதிய வெய்யில் கொளுத்தியது. தலையில் கட்டிய உறுமாவை அவிழ்த்தான் மாணிக்கம். நெற்றி, கழுத்துப்பட்டை, மார்பு என்ற அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டான். நின்ற இடத்திலிருந்து தன் ஆட்டோவை நோக்கினான். புத்தம் புதிதாக மஞ்கள் வெயிலில் பளபளத்துக்கொண்டிருந்தது ஆட்டோ. வாங்கி ஆறு மாதம்தான் ஆகிறது. துடைத்துத் துடைத்து ஒரு தூசு தும்பு ஒட்டாமல் பாதுகாத்து வருகிறான். அவன் ஆட்டோவுக்கு அருகிலேயே இன்னொன்றும் நிற்கும் வழக்கமாக. அதைத்தான் இன்று காணவில்லை. அதுதான் மனோன்மணியின் ஆட்டோ. அவளும் புதிதாகத்தான் வாங்கினாள். இவன் எந்த வங்கியில் லோன் போட்டு வாங்கினானோ, அங்கேயேதான் அவளும் வாங்கினாள். “பொம்பள ஆட்டோ ஓட்டுறதா? இதென்ன புதுக் கூத்தா இருக்கு?”-துணுக்குற்றான் இவன். வாங்கிய புது ஆட்டோவை வைத்துக்கொண்டு ஆர்.டி.ஓ.ஆபீஸில் அவள் ஓட்டிக் காண்பித்தபோது இவனை அசத்தியது அந்த சாகசம். சட்டுச் சட்டென்று அநாயாசமாய் கியர் மாற்றவும், வளைத்துத் திருப்பவும், ரிவர்ஸ் எடுக்கவும் என்று அமர்க்களப்படுத்தினாள் மனோ. “ஏன் சார், நாங்கள்லாம் காலைல ஏழரைக்கே வந்துட்டோம். அதெல்லாம் உங்க கண்ணுல படலையாக்கும்? வந்ததும் முதல்ல அந்தப் பிள்ளையைக் கவனிக்கிறீகளே?” – நாலஞ்சுபேர் சேர்ந்து சவுன்ட் விட்டபோது பிரேக் இன்ஸ்பெக்டர் சொன்னார்: “புரியாமப் பேசாதீங்கய்யா…இன்ஸ்பெக்டர் சிபாரிசு அது…நம்ப ஊர்லயே மொதப் “பொம்பள ஆட்டோ” இதுதான். அவர் சொல்லித்தான் அந்தப் பொண்ணுக்கே லோன் கிடைச்சிருக்கு…ஒரு பொம்பளை இப்படித் தைரியமாப் பொழைக்க வந்திருக்கேன்னு சந்தோஷப்படுவீகளா?அத விட்டிட்டு…” ஏரியா போலீஸ் என்றவுடன் அமைதியாக விலகிக் கொண்டனர் எல்லோரும். இவ்வளவு நெரிசலான டவுனில் எப்படி விபத்தில்லாமல் ஓட்டப் போகிறது இந்தப் பெண்? என்று மலைப்பு ஏற்பட்டது மாணிக்கத்திற்கு. அதைவிட ‘பொம்பள ஆட்டோவில் சனங்க ஏறுமா?’ என்று கேள்வி முனைப்பாய் நின்றது. “ஏன்டா சம்முகம், நாமளே சவாரி இல்லாம லோல் படுறோம்…லோன் கட்டத் திண்டாடுறோம்…ஒரு பொம்பள எப்பிடிறா?” “அதுக்கு ஏதாச்சும் வழி இருக்குமாயிருக்கும்…நமக்கென்ன தெரியும்…அது கெடக்கட்டும்….அந்தப் பிள்ள எங்க ஸ்டான்ட் போடப் போகுதாம்?” “பார்த்தியா…பார்த்தியா…உன் புத்தி எப்டி வேலை செய்யுதுன்னு…?” “அதுக்கில்லண்ணே, பொம்பளப்புள்ள, பாதுகாப்பான எடத்துல இருக்கணும்ல…ரயில்வே டேசன், பஸ் ஸ்டான்டுன்னு போனா விடமாட்டாங்களே? அது சேப்டியும் இல்லை…” …….2………. – 2 – “பெரிய சேப்டி? அது எங்கவோ போயிட்டுப் போகுது! நீ ஏன் இத்தனை அக்கறையாக் கேட்குறே?” “நம்ப ஏரியாப் புள்ளண்ணே…உனக்குத் தெரியாதா?” “அப்புடியா?” ஆச்சரியத்தோடு கேட்டான் மாணி;க்கம். “பஸ் ஸ்டான்ட் எடதுபுறம் பெரிய பழக் கடை வச்சிருக்காருல்ல…ஒரு கருத்தவரு…பேருகூட வித்தியாசமா இருக்குமே…சடைவுடையான் பழக்கடைன்னு போட்டு, அடிச்சி, பழக்கடல்ன்னு போட்டிருக்குமே அவுரு பொண்ணுதானாம் அது…” “யாரு? அந்தக் கருவாச்சிக் கிழவனுக்கா? அவுருக்கேதுடா பொண்ணு? அவரு ஒண்டிக் கட்டைல்ல?” “அவுரு பொண்ணுன்னா அப்டியேவா? தங்கச்சி மவ…திடீர்னு ஒடம்பு முடியாம அந்தம்மா இறந்து போயிடுச்சாம். ஊர்லேருந்து கூட்டிட்டு வந்திருக்காரு…எப்டியோ ஆளக்கீளப் பிடிச்சு, ஒரு லோன வாங்கி, வழிபண்ணிவிட்டிருக்கார். அவுக ஊர்ல அந்தப் பொண்ணு இத்தன நாள் ஆட்டோதான் ஓட்டிட்டிருந்திச்சாம்…வாடகைக்கு…அதுல வர்ற துட்டுலதான் வைத்தியம் பார்த்திருக்கு. அது பத்தல..பொசுக்குன்னு வாயப் பொளந்திருச்சு அது…இப்போ இப்படி…” “அப்படிச் சொல்லு சக்கேன்னானாம்…அதான் அன்னைக்கு அந்த ஓட்டு ஓட்டிச்சா வண்டிய? உன்னாலயும் என்னாலயும்கூட அப்படிச் சடக்கு சடக்குன்னு குனிஞ்சு நிமிந்து ஓட்ட முடியாதுடியோவ்…அந்த மாதிரி கியர் போட்டுப் பறக்குது பார்த்துக்க…” அதன் பிறகுதான் மனது இறங்க ஆரம்பித்தது மாணிக்கத்திற்கு. நினைத்ததுபோலவே அந்தப் பெண்ணும் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு நேராகத் தங்களிடம் வரும் என்று யாரும் அங்கே எதிர்பார்க்கவில்லை. “இங்க வந்து என்னத்தம்மா பொழைக்கப் போற நீ? நாங்களே சவாரியில்லாமக் கஷ்டப்பட்டுட்டிருக்கோம்? இதுல நீ வேறேயா?” “கொஞ்ச நாளைக்கு இப்படி இருந்துக்கிறேண்ணே…பெறவு ஊர் பழகினவுடனே வேறே எடம் மாத்திக்கிறேன்…” “ஊரே பழகலேங்கிறே…எப்படி சவாரி ஏத்துவே?” பதில் கேள்வி போட்டான் மாணிக்கம். “”சவாரிகிட்டயே பேச்சுக் கொடுத்து, பேச்சுக் கொடுத்து, எடத்தைக் கண்டு பிடிச்சுப் போயிடுவேன்…ஏறினா பெறகு எறங்க மாட்டாகல்ல…”-மனோன்மணியின் பதிலில் அன்று அனைவரும் சிரித்தார்கள தான்கூட அப்படியிருந்துதான் இந்த ஸ்டான்டை ஏற்படுத்தினோம் என்பதை நினைத்துக்கொண்டான் மாணிக்கம். ஆளுங்கட்சியின் உள்ளுர் பிரமுகரின் படத்தை வண்டியில் ஓட்டிக்கொண்டு அவர் பெயரில் சின்ன போர்டு ஒன்றை எழுதி அந்த மரத்தில் ஆணி போட்டு இறுக்கி ஒரு அமாவாசை நாளி;ல் அந்த ஆட்டோ ஸ்டான்டைத் தோற்றுவித்தான் மாணிக்கம். முதலில் வந்து ஒட்டிக்கொண்டது செந்தில்தான். பிறகுதான் சண்முகம். ரெண்டுபேர் சேர்ந்து இருந்தால்தான் தனக்கும் பலம் என்று வாய் பேசாமல் சேர்த்துக் கொண்டான் இவன். புதிதாகத் தோன்றிய அந்த செங்குன்றம் நகர்ப்பகுதி மக்களுக்கு ஆட்டோவின் தேவை இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அது போதுமான வருமானத்தை ஈடு செய்வதாய் இல்லை. முருகனும், கதிரும் பிறகு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அன்வரும், விக்டரும் சேர்ந்து கொண்டார்கள். நட்பு ரீதியில் தாமதமான இரவுப் பொழுதுகளில் அங்கு வந்து நிறுத்திக் கொள்ளும் நாகுலுரெட்டிகூட இப்பொழுதெல்லாம் வருவதில்லை. ராத்திரி ரோந்து வருகையில் சந்தேகப்பட்டு, கேள்வி மேல் கேள்வி கேட்டு விரட்டிய பொம்மையன் எஸ்.ஐ.தான் அதற்குக் காரணம். அதற்குப் பிறகுதான் இரவு நேரங்களில் அவரவர் வீட்டு வாசலில் கொண்டு நிறுத்திக் கொள்வது வழக்கமானது. இப்பொழுது ரெண்டு மாசமாகத்தான் மனோன்மணி அந்த ஸ்டான்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு சவாரி மாட்டினால் முதலில் அந்தப் பிள்ளையைத் தள்ளி விடுவதில் எல்லோருக்குமே கரிசனம் இருந்தது. இதில் அதிக அக்கறை காட்டியவன் செந்தில்தான். அவனுக்கு அவள் மீது ஒரு கண் இருக்குமோ என்ற சந்தேகம் மாணிக்கத்திற்கு. அவனுக்கே ஒரு ஈர்ப்பு உண்டுதான். இருந்தாலும் போதிய வருவாய் இல்லாத தொழிலில் நன்றாகக் காலூன்ற முடியாத தற்போதைய நிலையில் எதிலும் அவசரப்பட அவன் தயாராக இல்லை. …..3……. -3- தன்னை ஒப்பிடும்போது செந்தில் வயதில் கொஞ்சம் சின்னவன்தான். ஆளும் பார்வையாய் இருப்பான். ஒருவகையில் பார்த்தால் தன்னைவிட செந்தில்தான் மனோவுக்குப் பொருத்தமான ஆள் என்று தோன்றும். அதிலும் அவன், இரவு நேரங்களில் காத்திருந்து மனோன்மணி வீட்டுக்குத் திரும்பியாயிற்றா என்பதை உறுதி செய்துகொண்டுதான் அவன் தன் வீட்டுக்குப் போகும் அக்கறையைப் பார்த்து மானசீகமாக அவர்கள் இருவரின் ஒட்டுதலை ஏற்கவே ஆரம்பித்துவிட்டான் மாணிக்கம். “போகட்டும் சின்னப் புள்ளைக…” என்பதாக. ஆனால் சண்முகத்திற்கு இதில் பொறாமை இருக்குமோ என்று ஒரு சந்தேகமும் கூடவே இருந்தது மாணிக்கத்திற்கு. சண்முகம் சற்று வசதியான ஆள். அவன் சம்சாரம் வழியில் ஒரு வீடும், அரிசி பருப்பு என்று வரவுகளும் அவனுக்கு உண்டு. அன்றாடம் சவாரி பார்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. வண்டியும் சொந்தம்தான். முகூர்த்த நாட்களில் கூட, எல்லோரையும் தள்ளிவிட்டு விட்டு கடைசியாகத்தான் சவாரி பிடிப்பான் அவன். அந்த வசதி வாய்ப்புதான் அவனை சற்று மெத்தனமாக இருக்க வைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை சண்முகத்திற்கும், செந்திலுக்கும் வாய்ச்சண்டை முற்றி கைகலப்பு வரை வந்துவிட்டது. விலக்கி விட்டது மாணிக்கம்தான். அதன் பிறகு முதல் வண்டி செந்தில், கடைசி வண்டி சண்முகம் என்று இருவரையும் தள்ளி வைத்தான் மாணிக்கம். “நீ கல்யாணமானவன். தேவையில்லாம அந்தப் பொண்ணு மேல கண்ணு வைக்கிறது சரியில்ல. அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன். பார்த்து நடந்துக்கோ…”என்று எச்சரித்தான் மாணிக்கம். மனோன்மணிக்கும் சண்முகம் ;பற்றித் தெரியுமோ என்னவோ, முதல் சவாரி வந்ததும், அப்பாடா என்று கிளம்பி விடுகிறாள் அவள். அதன் பின் இரவுவரை வருவதேயில்லை. எங்கு போகிறாள், எங்கு வண்டியை நிறுத்துகிறாள், யாரும் அறியாதது அது. அதையும் மாணிக்கம் பெரிதுபடுத்துவதில்லை. ஒரு பெண்ணால் தேவையில்லாத பிரச்னைகள் அங்கே எழும்புவதை அவன் விரும்பவில்லை. மரத்தில் அடித்து வைத்திருக்கிற தலைவரின் பெயரிலான ஸ்டான்டும், ஆட்டோவில் ஒட்டிய படமும்தான் பிரதானமாக அங்கே இருந்து காப்பாற்றுகிறது என்பது அவன் எண்ணமாக இருந்தது. ஆனாலும் இன்று என்னாச்சு இந்தப் பிள்ளைக்கு? காலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுத்தானே சவாரி போகும்? சொல்லப் போனால் இரண்டு நாட்களாகவே வந்த மாதிரி, இருந்த மாதிரித் தெரியவில்லையே? இந்தப் பயல் என்னடாவென்றால் ஒண்ணும் தெரியாத பப்பா மாதிரி இருக்கிறான்? சரியான அமுக்குளிப் பேர்வழியாக இருப்பான் போலிருக்கிறதே? எண்ண ஓட்டங்களுடே அப்படியே கண்ணயர்ந்து போனான் மாணிக்கம். அடிக்கும் வெயிலுக்கு பரந்த மரத்தடி நிழலில் வேப்பமரக் காற்றில் கால்களைத் தூக்கி எதிர்க்கம்பி மேல் போட்டு வளைத்து, பின் சீட்டில் அக்கடா என்று சாய்ந்து மயங்கிக் கிடப்பது எத்தனை சுகமளிக்கிறது? “என்னாச்சு, இந்தப் புள்ளைய இன்னைக்கும் காணல? அந்தச் சோர்வு நிலையிலும் மூளை விழித்துக்கொண்;;டது மாணிக்கத்திற்கு. இருக்கும் இடத்திற்கே சவாரி கேட்டு வந்தால்தான் ஆச்சு என்று எல்லோரும் முடங்கிக் கிடக்க, இது என்னமாய்த் திரிகிறது? ஒரு நாளாச்சும் முழுசா இந்த ஸ்டான்டுல வண்டியப் போட்டிருக்கா? என்ன ஒரு சுறுசுறுப்பு? “ஏண்டா செந்திலு, உண்மையைச் சொல்லு. உனக்குத் தெரியாது? தெனமும் மத்தியானம் சாப்பிடப் போகுமே வீட்டுக்கு …அப்படியே படுத்துக்கிதோ?” “ம்ம்ம்…அதெல்லாம் நாம செய்யுற வேலைண்ணே…படுக்கிறது, முடங்குறது இதெல்லாம்…! அது செய்யாது. நீயும், நானும்தான் அதை நினைச்சிட்டிருக்கோம்…அது நம்மளையா நினைக்குது? பொழப்பை நினைக்குது பொழப்பை…” “நீ வேண்ணா அதையே நினைச்சிட்டிருப்பே…என்னை ஏண்டா சேர்த்துக்கிறே?” “நானும் ஒண்ணும் நினைக்கலை…நீ அப்படின்னு நினைக்கிற!அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? நேத்து என்ன பேச்சு பேசிச்சு தெரியுமா? அதப் பத்திப் பேசுறியே? விடுண்ணே..எப்டியோ போகட்டும்…” மாணிக்கம் திடுக்கிட்டான். அதான் பயல் அக்கறையில்லாமல் இருக்கிறானா? இந்நேரம் பறந்திருப்பானேன்னு பார்த்தேன் ……4……. -4- “என்னடா பேசிச்சு அப்படி?”-உன்னிப்பாய்ப் பார்த்துக் கேட்டான். “யாரும் என்னைத் தேடி வர வேண்டாம். யாரும் எனக்காக ஸ்டான்டுல வெயிட் பண்ணவும் வேண்டாம்னுடிச்சிண்ணே…!”-குரலில் இருந்த வருத்தம் புரிந்தது இவனுக்கு. “எங்க மாமா ரொம்ப நம்பிக்கையோட என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு. அவுரு விருப்பப்படி பாங்க் கடன் முழுசையும் அடைச்சிட்டுத்தான் மறு வேலை எனக்கு. அதுவரைக்கும் வேறே சிந்தனையே கிடையாதுங்குது…” “அதெல்லாம் இருக்கட்டும் புள்ளே…ராத்திரி நேரத்துல சீக்கிரமா வீட்டுக்கு வந்து அடையலாமுல்லன்னேன்..அது எனக்குத் தெரியும்…எல்லா கண்றாவியையும் இந்தப் பொழப்புல எங்க ஊர்ல பார்த்திட்டுத்தான் வந்திருக்கேன்னு தைரியமாப் பேசுது…இன்னும் கொஞ்சம் போனா நமக்கே ஏதாச்சும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடும் போலிருக்கு…! அதான் கம்முனு ஒதுங்கிட்டேன்…அது நமக்கு ஆகாதுண்ணே…அதோட ரூட்டே தனி…ரொம்பத் தைரியமான பொம்பளை..” -செந்தில் இப்படிப் புலம்பிக்கொண்டிருந்த அதே வேளையில், மனோன்மணி அந்தப் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தாள். “இந்தா மனோ, உங்க மாமாவுக்காகத்தான் இதைச் செய்றேன்…அவர் பெரிய உழைப்பாளி. தலைல கூடையைச் சுமந்திட்டு, தெருத்தெருவா அலைஞ்சு பழம் வித்தவரு…இன்னைக்கு இந்த நிலைமைல இருக்காருன்னா அதுக்கு அவரோட அயராத உழைப்புதான் காரணம்…அதுக்கு ஈடே கிடையாது. அவரோட உண்மையான உழைப்பு மேலே மரியாதை வச்சு உனக்கு இந்த உபகாரம். எட்டுப் பிள்ளைங்க…ஆளுக்கு ஐநூறு…காலைல கூட்டிட்டுப் போயி, ஸ்கூல்ல விட்டிட்டு, சாயங்காலம் கொண்டு விட்ரணும்…” கலாவதி டீச்சர் சொன்ன அந்த வேளையில், பூரித்துப் போனாள் மனோன்மணி. கண்களில் நீர்மல்க அப்படியே டீச்சர் காலில் விழுந்தாள். “சரியான சவாரியில்லாம, வருமானமும் போதாமத் தவிச்சிட்டிருந்தேன். பாங்க் லோன் எப்படிக் கட்டப் போறேன்னு மலைச்சிட்டிருந்தேன். மாமாவுக்கு இப்படி வந்து பாரமா நின்னிட்டமேன்னு மனசுக்குள்ள வேகாத நாளில்லை. உங்களாலதான் எனக்கு விடிவு….”-சொல்லியவாறே விசித்து விசித்து அழ ஆரம்பித்துவிட்டாள் மனோன்மணி. நெஞ்சுத் துக்கத்தை அவளால் அடக்கவே முடியவில்லை. இதோ இந்தப் பள்ளிச் சவாரி முடிந்தவுடன் அடுத்ததாக அவள் இன்னொரு இடத்திற்குப் போகப் போகிறாள். அது அவளாகத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு முனைப்போடு செயல்பட்டதின் விளைவு. தன் ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக மாற்றி விட்டாள் மனோன்மணி. ஒரு நாளின், சில பொழுதுகளில் அப்படியும் மாற்றித்தான் வருமானம் பார்க்க வேண்டும் என்பது அந்த ஊர் அவளுக்குக் கற்றுத்தந்த பாடம். வரிசையாக எழும்பியிருந்த பிரம்மாண்டமான கட்டடங்களில் இயங்கிக் கொண்டிருந்த அந்த அலுவலகங்களின் மாடிப்;படிகளில் தயக்கமின்றி ஏறி இறங்கினாள் அவள். பணியாளர்களைப் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவளின் இந்த முயற்சியும் வீணாகவில்லை. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழி சரிதானோ? தனக்குத்தானே நினைத்துச் சிரித்துக் கொள்கிறாள் அவள். இந்தக் குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு, ஐந்தரை மணிக்கு ‘டாண்’னென்று அந்த வாசலுக்கு வந்து விடுவாள் அவள். ஏழெட்டுப் பெண் ஊழியர்கள் தயாராய் இவளுக்கென்று காத்து நிற்பார்கள். “என்ன மனோ போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே “டீ சாப்பிடுறியா? வா” என்று கேன்;டீனுக்கு அழைத்துப் போவார்கள். ….5…… -5- இதோ மனோவின் ஆட்டோ ஒரு சின்ன அரைவட்டம் போட்டு, அந்த அலுவலக வாசலுக்கு வந்தாயிற்று. உண்மையான உழைப்பையும், வித்தியாசமான, நேர்மையான முயற்சிகளையும் மதிப்பதற்கும், ஆதரவுக்கரம் நீட்டுவதற்கும், இன்னும் உலகத்தில் நேச பாசமுள்ள பலர் இருக்கத்தானே செய்கிறார்கள்? “பார்;த்தியா? குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டினமாதிரி நாம அங்கயே குந்திட்டிருக்க, இது என்ன வேலை பார்த்திருக்கு பாரு? நாம அதைப் பத்தி கற்பனைல மிதந்திட்டிருக்க, அது நிஜத்தைத் தேடிப் போயிருக்கு! அதுதான் நிஜம்!! ஆயிரந்தான் சொல்லு, பொம்பளைங்களுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சியே தனிதாண்டா? இனி நாமளும் ஏதாச்சும் வழிமுறையைத் தேட வேண்டிதான் இப்டி? சும்மா தேர் நிறுத்தின மாதிரி நிலைல வண்டிய நிப்பாட்டிட்டு, வெட்டிக் கதை பேசிப் பொழுதைக் கழிச்சா, பொழப்பு மேற்கொண்டும் நாறித்தான் போகும்…”-அந்த அலுவலக வாசலில் கொஞ்ச தூரம் தள்ளி, ஒதுக்கலாக நின்ற நம் மரத்தடி ஆட்N;டா நண்பர்களின் பேச்சு இவ்வாறிருக்க, அவர்களைக் கடந்து மனோன்மணியின் ஆட்டோ பறந்தபோது, அந்தப் பகுதிக்கான ஆட்டோ ஸ்டான்டிலிருந்து வேறு சில கண்கள் மனோன்மணியையே குறி வைத்து நகர்ந்து கொண்டிருந்தன. அவர்களுக்கு நடுவே தோள் மேல் கையிட்டு, சண்முகத்தின் பார்வையும் வெறியோடு கலந்திருந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை!! —————-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- புறத்தில் அகம்
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தனிமரத்து பூக்கள்
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருந்தாத கேஸ்
- பச்சை ரிப்பன்
- முகம் நக
- முற்றுப்புள்ளி
- முத்தப்பிழை !
- ஒற்றைப் பேனாவின் மை
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மாமிசக்கடை
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- நாட்டுப்புற(ர)ம்
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- முள்பாதை 48
- க்ருஷ்ண லீலை
- ஆட்டோக்கள் உரசுகின்றன