ஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

சித்ரா ரமேஷ் ,சிங்கப்பூர்


‘புதுசா என்ன விசிடி வந்திருக்கு ? ‘,

‘ஜனா, கில்லி, ஆயுதஎழுத்து, எதிரி எல்லாம் இருக்கு ‘,

‘ஜக்குபாய், கிருஷ்ணலீலா இருக்கா ? ‘,

‘படம் முதல்ல ரிலீஸ் ஆகட்டும். கண்டிப்பா கொடுத்திடரேன் ‘,

இது வெறும் நகைசுவைக்காக எழுதப்பட்டது அல்ல. திரைப்படம் பார்ப்பது என்பது அதுவும் புது திரைப்படம் பார்ப்பது இவ்வளவு எளிதான விஷயமாக இப்போது இருப்பது ஒரு காலத்தில் எப்போதாவது கிடைக்கும் ஆடம்பரமாக இருந்ததை நினைத்து பார்க்கிறேன். சென்னை சாந்தி,கிரெளன், புவனேஸ்வரி மற்றும் தென்னகமெங்கும் வெற்றி நடை போட்ட படங்களெல்லாம் இரண்டு தீபாவளி தாண்டிதான் எங்கள் ஊருக்கு வரும். அதற்குள் பக்கத்து ஊர்களில் சொந்த பந்தங்கள் வைத்திருக்கும் அதிருஷ்டசாலிகள் படத்தை பார்த்து விட்டு வந்து கதை சொல்லி, பாட்டெல்லாம் கேட்டு அலுத்துப் போன பிறகுதான் வந்து சேரும். என்றாவது அதிசயமாக புதுப்படம் வந்திருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தாலும் அதன் ரகசியம் புரிந்து விடும். ‘pollution indicator ‘ என்று சுற்றுபுறச் சூழல் மாசுபடுவதை சில அடையாளங்கள் மூலம் கண்டறிவது போல் அந்த படங்கள் எங்க ஊருக்கு வந்தால் அது ‘failure indicator ‘!தோல்வியடைந்த படங்கள் மட்டுமே புதிய படமாக எங்க ஊரில் வருவதன் மர்மமும் பிடிபட்டு விடும். உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று செயற்கை கோளில் பீற்றி கொள்ளுகின்ற யுக்தி ரொம்ப பழைய விஷயம்தான். இந்த விஷயத்தினால்தான் வெகுஜன ரசனையோடு எங்கள் ரசனை ஒத்து போகாதத் தன்மை தொடங்கியதோ ?

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த பையன் ‘ஐயே இந்த படம்மா உங்க ஊருல ‘, என்று துக்கம் விசாரித்தான். நாங்களும் அப்பாவியாக ‘ஏன் புதுப்படம்தானே ? ‘, என்று சொல்லி சமாளித்தோம். அவன் விடாமல் ‘ இல்ல! எங்க ஊருல காலைல ஸ்கூல் போம்போது இந்த பட போஸ்டரை ஒட்டிகிட்டு இருந்தாங்க. சாயங்காலம் திரும்பி வரும் போது இந்த படத்தை எடுத்துட்டு வேற புது போஸ்டர் ஒட்டி கிட்டு இருந்தாங்க ‘, என்றான் நக்கலாக. ஒரே ஒரு காட்சி ஓடிய படங்களையெல்லாம் ஒரு வாரமாவது ஓட்டி விடுவார்கள்.முதல் வெள்ளிக்கிழமை படம் மாற்றினால் அடுத்த வெள்ளி வரை கண்டிப்பாக இருக்கும்.

சில சமயம் தோதாக வெறெந்த படமும் கிடைக்கவில்லையென்றால்

அதே டப்பாப் படம் தொடரும். இதையெல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டிய காரணம் என் எதிர் வீட்டுப் பெண்மணி. வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஒரு ரூபாய் இருபது காசு எடுத்துக் கொண்டு (சினிமா டிக்கட் எண்பது காசு போக வர பஸ்டிக்கட் நாற்பது காசு) என்ன மொழி யார் நடித்தது என்ன படம் எதையும் பற்றி கவலைப்படாமல் தனியே கிளம்பிப் போய் பார்த்துவிட்டு அந்த வாரம் முழுவதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். அடுத்த வெள்ளி திரைப்படத்தை மாற்றவில்லையென்றாலும் இரண்டாவது முறையாக அதேப் படத்தை பார்த்து விட்டு வரும் தைரியசாலி!

‘என்ன கண்றாவியோ படத்தை மாத்த மாட்டெங்கிறாங்களே ‘ என்று வாரம் முழுவதும் திட்டி தீர்த்து விடுவாள். வேற தியேட்டரெல்லாம் கிடையாது. ஒண்ணே ஒண்ணுதான்! இப்போது அந்த ஆன்ட்டி அத்தனை செயலாக இருக்க வேண்டாம். ஒரே நாளில் நாலைந்து திரைப்படம் பார்த்து விடலாம்.

நாங்கள் புதுப் படம் பார்ப்பதைப் பற்றி…. பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்கோ இல்லை பெரு நகரங்களுக்கோ போகும் சமயங்களில் பார்த்தால்தான் உண்டு. அந்த பயணங்களில் கூட சினிமா பார்ப்பதை பெரிய லட்சியமாக கொண்டிராத அப்பா அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமலிருப்பார். அதனால் கொஞ்சம் வெறுத்துப் போய்தான் திரும்பி வருவோம். ஆனால் சென்னைக்கு போகும் போதெல்லாம் வேறு விதமான பொழுதுபோக்குகள் கிடைக்கும். சென்னையில் எங்கள் சமகாலத்தினரான

‘கஸின்கள் ‘ நிறைய பேர் இருந்தனர்.

நாங்கள் தலைபிரட்டைப் பருவம், முகுளம், அல்லிவட்டம், புல்லிவட்டம், ஒரு விதையிலைத்தாவரம் என்று படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் சென்னையில் பிரபல கான்வென்ட்களில் படித்துக் கொண்டிருந்தனர். நீங்கள் நினைப்பது போல் சினிமாவில் வருவது போல் எங்களை கேலி கிண்டலெல்லாம் செய்யவே மாட்டார்கள்.

‘டமில் ரொம்ப டிபிஃகல்ட். அதுல எப்படி சயின்ஸ், மாத்ஸ், ஹிஸ்டரி, ஜியாகிரஃபி எல்லாம் படிக்கிறீங்களே ? ‘, என்று ஆச்சரியந்தான் படுவார்கள். இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, துளு, மலையாளம் என்று எதை வேண்டுமானாலும் படிப்பார்கள். ஆனால் மூன்றாவது மொழியாகக்

கூடத் தமிழ் படிக்கத் தயங்குவார்கள்.

‘நாளைக்கு நார்த் இண்டியாவில் வேலை கிடைச்சு போனா ஹிந்தி படிச்சாதான் ரொம்ப யூஸ்புஃல் ‘, என்று பேசிக்கொள்வார்கள். வட இந்தியாவில் வேலை பார்ப்பதற்கு ஹிந்தி அவசியம்! இதுவே ஒரு பெரிய மாயை. உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் ஆங்கிலம் தேவை என்பதைப் போல்!

உங்களுக்கு பெருவாரியான மக்கள் பேசுகிற, பயன்படுத்தும் மொழி எதையாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வமிருந்தால் உண்மையிலேயே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மொழி மான்ட்ரின்,(சீனமொழி) இன்னொரு மொழி ஸ்பானிஷ்.

ஆனந்த விகடன்லே வர்ற ஜோக்ஸ் படிக்கின்ற அளவு கூடத் தமிழ் தெரியாத பச்சை தமிழர்கள் செய்யும் இந்த பாசாங்கு இந்தியாவில் மட்டுமில்லை உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத அ….

பஞ்சாபில் போய் உனக்கு தமிழ் நாட்டில் நல்லவேலை கிடைக்கும் என்று ஒரு பஞ்சாபியிடம் ஐந்து வயதில் அறிவித்தால் கூட தமிழை விடுங்கள் அவன் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கூட நினைக்காமல் பஞ்சாபி படிப்பான். அதே போல் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்த இரண்டு தமிழர்கள் சந்தித்தால் ஒரு வார்த்தைக் கூட தமிழில் பேசிக் கொள்ளாமல் இரண்டு மணி நேரம் பேசுவார்கள்.

கஸின்கள் கதைகளைத் தொடர்வோம். கையில் எதாவது ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வைத்து டிஸ்கஸ் செய்வார்கள். கீட்ஸ், ஷெல்லி, ஆர்கே நாராயண் என்றெல்லாம் நினைத்து புல்லரித்துப் போய் விடலாம் என்று பார்த்தால் ‘பாக்கெட் நாவல்கள் ‘ மில்ஸ் அன்ட் பூன், பார்பராகார்ட்லன்ட் அதிக பட்சம் போனால் ரகசியமாய் ஹெரால்ட் ராபின்ஸ். நாம் படிக்கும் தமிழ்வாணன் கதைகளும் நம்ப முத்து காமிக்ஸ் ‘இரும்புக்கை மாயாவியும் ‘ இன்னும் அதிக இலக்கிய மதிப்பு வாய்ந்தவை.

அடுத்தது ஹிந்தி புலமை! விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் ‘கீத்மாலா ‘ சாயாகீத் எல்லாம் கேட்டு விட்டு தப்பும் தவறுமாய் ஹிந்தி பாட்டு பாடிக் காட்டுவார்கள். ‘மே ஷாயர்த் தோ நஹி ‘ (நான் கவிஞன் இல்லை) என்ற அழகான வரிகளை மொஷயர்த்தோ நஹி என்று அபத்தமாக சேர்த்துப் பாடி,

ஹம் தும் ஏக் கம்ரேமே பந்த் ஹோ…. ஹரே ராமா ஹரே ராமா ஹரே கீஸ்னா ஹரே கீஸ்னா, பியாத்து ஹாத்து ஹாஜா போன்ற இலக்கியப் பாடல்களை பாடி கொண்டு வட இந்தியாவில் வேலை பார்க்கும் கனவுகளுடன் இருப்பார்கள். நாங்கள் கலந்து கொண்ட கல்யாணத்தில் கூட அந்த கல்யாண பெண் நலங்குக்கு ஒரு ஹிந்தி பாட்டு ராக்கி பாடுவாங்களே ‘தில் தேரி தில் யஹான் ‘ (ராதையின் நெஞ்சமே) அந்தப் பாட்டை சிறப்பாகப் பாடியதாக கூறிக் கொண்டிருந்தார்கள். சுசித்ராவின் குடும்பம் என்ற தொடர் கேட்டு விட்டு உங்க ஊருலே விவித்பாரதி கேட்காதா ? என்று விசாரிப்பார்கள். எங்களுக்கு தமிழ் வளர்க்கத்தான் ஒரு அருமையான வானொலி நிலையம் இருந்ததே!(இதைப் பற்றி அடுத்தவாரம்)

இந்த ஹிந்தி படித்த நாகரிகத்தில் சற்று மேம்பட்டு ஆங்கில வழிக் கல்வி கற்ற தாய்க் குலங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன ? தெற்கே செங்கல்பட்டு வடக்கே கும்மிடிப் பூண்டியை எல்லையாகக் கொண்ட சென்னை மாநகரத்தை விட்டு எல்லை தாண்டாமல் சன்டிவி, ஜெ டிவி, ராஜ் டிவி என்று ஒளிவழி மாற்றி மாற்றி தொலைக் காட்சித் தொடர்கள் பார்த்துக் கொண்டு மெட்டி ஒலி குடும்பத்தோடு ஒன்றி போய், சஹானாவும் அண்ணாமலையும் ஒரே நேரத்தில் வருவதை ஆட்சேபித்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த ‘செந்தமிழ்ச் செல்விகள் ‘ தமிழ் படிக்க வேண்டிய பருவத்தில் ‘தம் மேரே தம் ‘ பாடி விட்டு இப்போது தமிழ் நிகழ்ச்சிகளைத் தவிர வேறெதுவும் பார்ப்பதில்லை என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார்கள்.

முதல் வகுப்பில் ‘ஊசி மூஞ்சி மூடா ‘ என்று குரங்கு தூக்கணாங்குருவியை திட்டுவதை படிக்காமல், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற எளிமையான தமிழ் இலக்கியங்களை அறியாமல், எதுகை மோனைகளை கண்ணதாசன் பாடல்களை ரசிக்காமல் மெகா சீரியல் டமில் மட்டும் பார்ப்பது ரொம்ப அநியாயமாகப் படுகிறது. அடுத்த தலைமுறையினரைப் கேட்கவே வேண்டாம். பிறக்கும் போதே

‘என் டெலிவரிக்கு எத்தனை டாலர் செலவாச்சு ‘ என்று விசாரித்துக் கொண்டே பிறக்கிறார்கள். இந்திய மொழியே வேண்டாம் என்று பிரெஞ்ச் படிக்கிறார்கள்.(அமெரிக்கா போவதற்கு பிரெஞ்ச் எதற்கு ?)

பிட்ஸா, ஹாட்டாக், பிரெஞ்ச்ஃரைஸ், மசித்த உருளை என்று சாப்பிட்டுக் கொண்டு இட்லி, தோசையைப் பார்த்து ‘வாட்ஸ் திஸ் ‘ என்று முகம் சுளிக்கிறார்கள்.

ஆனால் இவர்களும் நாளைக்கு அமெரிக்கா போன பிறகு நார்த்தங்காய் ஊறுகாய், ஜவ்வரிசி வடாம், அரிசி அப்பளம் என்று அலைந்து கொண்டு, ‘ஹெள டு குக் ‘ என்ற மீனாட்சியம்மாள் புத்தகத்தைப் பார்த்து வத்த குழம்பு பண்ணி ஒருவாரம் குளிர் பதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளிடம் இந்தியக் கலாச்சாரத்தைப் பேசிக் கொண்டு பால விஹார் வகுப்புகளுக்கு அனுப்பி பக்தியைப் பரப்ப கோவில்கள் கட்டி பரத நாட்டியம், கர்னாடக இசை, மிருதங்கம், தபெலா என்று இந்திய பாரம்பரியத்தை பரிச்சயம் செய்து தங்கள் தேச பக்தியை காட்ட ‘இந்தியன் மேளா ‘ ஏற்பாடு செய்து அதில் மசால் தோசை ஸ்டால் வைத்து அதில் கிடைக்கும் டாலர்களை போர் நிவாரண நிதி, பூகம்ப நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி என்று அனுப்பும் சமத்துக் குழந்தைகள்!

தமிழை செம்மொழி ஆக்குவதற்கு முயற்சி எடுப்பதெல்லாம் இருக்கட்டும். தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழ் பேசும் தமிழர்கள் ‘தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது ‘ என்பதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சொல்லிக் கொள்ளும் இவர்களை நம் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார்

செய்தது போல் நாடு கடத்தி இவர்களை மட்டுமல்லாது இவர்களுடைய மாமன், மைத்துனன், கொழுந்தியாள் பெண் கொடுத்தவர்கள், பெண் எடுத்தவர்கள் போன்ற எந்த உறவையும் விட்டு விடாமல் நாடு கடத்தி முத்தமிழையும் சொல்லித்தர வேண்டும்.

‘கண்டனன் கற்பினுக்கணியை கண்களால் ‘ என்ற கம்பராமாயண செய்யுளை மனப்பாடமாக ஒப்புவித்து

இயல் தமிழையும்,

முழங்குதிரை புனலருவி கழங்கென முத்தாடும்

முற்றமெங்கும் பறந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும் ‘

என்ற குறவஞ்சிப் பாடலைப் பாடி இசைத்தமிழையும் முடிந்தால் குறத்தி நடனம் கூட ஆடச் சொல்லலாம்.

(தயவு செய்து யாரும் முழம் குதிரை என்று படித்து விட வேண்டாம். முழங்கு+திரை)

‘தேரா மன்னா ‘ என்ற சிலப்பதிகாரப் பாடலை தனி நடிப்பாக நடித்து காட்டச் சொல்லி நாடக்தமிழையும் கற்றுத் தேர்ந்தால்தான் விடுதலை என்று அறிவித்து விடலாம்.

தமிழ் செம்மொழி என்பதில் எந்த வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை. அதேபோல் நம் தாய் மொழியைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைக்கும் தமிழர்களையும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்த வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லைதானே!

(ஆட்டோகிராஃப் தொடரும்)

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்