மு. பழனியப்பன்
பெண்களின் படைப்புக்களில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பலவகை அனுபவங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களின் கவிதைகளில் சுட்டப்படும் நிகழ்வுகள், ஆண் படைப்புக்களில் வெளிப்படுத்தப்படும் நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டு முற்றிலும் சுயத்தன்மை உடையனவாக, உண்மைத்தன்மை உடையனவாக விளங்குகின்றன. தற்காலத்தில் இப்பண்புடைய பல பெண்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டுவருவது வரவேற்கத்தக்கது.
அ. வெண்ணிலாவின் (முகவரி- 36,தோப்புத்தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி, 604408) ”நீரில் அலையும் முகம்” (வெளியீடு தமிழினி பதிப்பகம், 342. டி.டி.சாலை.,சென்னை 14.) (1991) தற்காலத்தில் வந்துள்ள பெண்கவிதையாக்கங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இக்கவிதைத்தொகுப்பு கன்னிப்பெண், மணப்பெண், குடும்ப பெண், தாய்ப்பெண் ஆகியோரின் மனப்போராட்டாங்களைச் சித்திரித்துச் செல்கின்றது. இத்தொகுப்பில் கவிதைகளுக்கு தலைப்பில்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தன்மை குறித்துப் பின்வருமாறு இக்கவிஞை எழுதுகின்றார். ”பெண் என்ற அச்சமும் சேர்ந்து கொள்கிறது எழுத்தில். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் அந்த உணர்வை உண்டாக்குகையில் எழுத்தில் வருவதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன்” என்ற கவிஞையின் கூற்று அவரது கவிதைகளில் பெண்ணியல்பு இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்கின்றது.
இக்கவிதைத் தொகுதியுள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பெண்படும் வதைகளை உணரமுடிகின்றது. கவிஞையின் ஐந்தாண்டு கால வாழ்க்கையில்; ஏற்படுத்திக் கொண்ட (அ) அடைந்துவிட்ட மாற்றங்களின் கலவையாக இத்தொகுப்பு அமைகின்றது. வயதுவந்த பெண்ணின் ஐந்தாண்டுகால வாழ்க்கை அவளை பலபடி நிலைகளுக்கு இழுத்து செல்கின்ற உண்மை, அதில் ஈடுபடும் பெண்ணின் உடல், மனம் ஆகியவற்றின் செயல்பாட்டுத்தன்மை இவற்றின் ஒரு விளக்கப்படமாக இக்கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.
லே ஆப் என்ற பெண்ணியவாதி, ”பெண்களின் வரையறுக்கபட்ட எல்லைகள், அதிகாரமின்மை ஆகியன அவர்களின் படைப்புக்களில் அவர்களைப் பேசவைக்கின்றன” (The marginality and powerless of women is reflected in … The ways women are expected to speck) என்று பெண்களின் படைப்பாக்கத்தன்மையைக் காட்டுகின்றார். அவரின் கூற்றுப்படி வெண்ணிலாவின் கவிதைகளில் வரையறுக்கப்பட்ட மரபு எல்லையும், அதிகாரமின்மையும் அவரது பெண் தன்மை படைப்புணர்வைக் காட்டிலும் அதிகமாக வெளிப்பட்டுள்ளமையை படித்துப்பார்கையில் உணரமுடிகின்றது.
படிக்கும் பெண், வயதிற்குவந்து, ஆசிரியையாகி, திருமணமாகி, தாயாகி மாறுகையில், ஒவ்வொரு படிநிலையிலும், ஒவ்வொரு எல்லைக்கோட்டில் அடங்கிப்போய் விடுகின்ற மரபு சார்ந்த கட்டுப்பாடுகளுக்குக் கீழ்பணியும், அதேநேரத்தில் அதிலிருந்து தன்னை, தன்போன்ற மற்றவர்களை விடுதலையாக்கத் தூண்டும் கவிஞையாக வெண்ணிலா இத்தொகுப்பு வழியாக அறியப்படுகின்றார்.
கன்னிப்பெண்ணுக்கான எல்லை
”பிறப்பின் வாசம், உடலெங்கும் பரவி நிற்க , ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும் , நடுங்கும் கால்களோடும், சாய்ந்து கொள்ளத் துழாவுகிறோம், தொடாதே தள்ளி நில், என்கிறாள் அம்மாவும்” (ப. 18)
என்ற இக்கவிதை கன்னிப் பெண்கள்படும் மாதவிலக்கு சிக்கலை கண்முன் நிறுத்துகிறது. அம்மாவின் அரவணைப்பினை வேண்டும் அந்தப் பொழுதில் அம்மாவும் ”தொடாதே தீட்டு” எனச் சொல்லும் சோகம், அம்மா அப்பண்பைப் பெறாதவளாள, பெற்றிருந்தவள் என்றாலும்,; அந்தச் சிக்கலை எண்ணி ஏன் ஒதுக்(ங்)கவேண்டும்? , பெற்றவள் கூட தள்ளி நிற்கும் அளவிற்கான இவ்வரையறையை யார் ஏற்படுத்தியது என்ற எண்ணங்களை மேற்கண்ட வரிகள் எழுப்புகின்றன.
மேலும் இக்கவிதை பின்வருமாறு முடிகின்றது. ”எறும்புக்கும், நாய்க்கும், எப்படியோ இந்த அவஸ்தை” என்ற முடிப்புவரிகள், உலக உயிர்களின், குறிப்பாக பெண் உயிர்களின் உடல் வருத்தத்தை வெளியிடுவதாகவும், அதே நேரத்தில் பெண் எறும்பையும், பெண் நாயையும் தள்ளி வைத்துவிடாத சூழலில் மனிதர்கள் மட்டும் தள்ளிவைக்கும் நாகரீகம் கொண்டது ஏனோ- என்ற கேள்வியை முன் வைப்பதாகவும் உள்ளன.
தலைவாரி வகிடு எடுப்பதை மற்றொரு கவிதை கேலிசெய்கிறது. ”சட்டென்று பிரியுமாம், புத்தி தௌ¤வானவர்களுக்கு , அனுபவம் கூறினாள் தோழி ” (ப. 12) எனவரும் கவிதைவரிகளில் தலைவாரி பூச்சூட முனையும் செய்கையில் கூட பெண்களுக்கென வைக்கப்பட்டுள்ள அனுபவ வரையறை சொல்லப் பெற்றுள்ளது. ஆனால் முடிப்புவரிகளில்,
சரிதானென்று தோன்றியது , பாதையாய் பிரிந்து கிடக்கும் , குரங்கின் வகிடு பார்த்து எனக் குறித்திருப்பது குரங்கைக் கேலி செய்கிறாரா?, அல்லது பெண்களை கேலி செய்கிறாரா-? என்பதற்கு சிந்தித்து முடிவு காணவேண்டியுள்ளது. தலை வகிடு எடுப்பதும் அது விலகாமல் அந்த நாளின் இறுதிவரை அழகாய் இருக்க முயலும் பெண் படும் எச்சரிக்கை விநோதங்களை இவ்வரிகள் விமர்சிக்கின்றன.
தலையில் பூ சூட்ட வேண்டாம் என மற்றொரு கவிதை மலருகின்றது. சுவரில் சாயாமல், எதிலும் தலை அழுந்தாமல், தூங்,கப் போனாலும் மல்லாந்து படுக்காமல், எப்போதும் கவனம் அதிலேயே” (ப. 44) என்ற கவனக் கண்காணிப்பால் பூக்களைத் தலையில் இக்கவிதையில் வரும் தலைவி சூடுவதேயில்லையாம். செடிகளில் மலர்ந்து கீழே விழுவதைக் கவனிப்பதே போதும் என்பது அத்தலைவியின் சமாதானமாகும்.
தலைவாரி, பூச்சூட்டிடும் கன்னிப்பெண்களின் கவனம் கூந்தலிலும், சூடும் பூவிலும், வகிடு எடுப்பதிலும் இருக்கும்போது இந்த நினைவுகளைத் தாண்டி எப்படி அதிகார இயல்பிற்கு, வெளியுலக ஆளுமைப்பண்பிற்கு பெண்கள் வர இயலும் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை.
மணப்பெண்ணுக்கான எல்லை
மணப்பெண்ணிற்கு மணநாளன்று அணியப்பெறும் முக்கிய அணிகலன்கள் அவளை இறுகிக் கிடந்தாலும், அவற்றை அணிவதில் பெருமையை அப்பெண் கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே பிற ஆண்களின் விகாரப் பார்வையினின்று காக்கும் கேடயங்களாக விளங்குகின்றன. இவற்றைப் பின்வரும் கவிதை ”உறுதியாகத்தான் இருந்தேன், சடங்குகளை அணிவதில்லையென்று, அப்பா அம்மாக்கள், அக்கம் பக்கம் என்பதோடு, சுற்றி மேயும் கண்களுக்கு, அணுங்கீகாரம் பெற்ற அடையாளம் காட்ட, கொடி போன்ற சங்கிலி அணிவிக்கப்பட்டது,…. காலுக்கு மோதிரம் போட்டாவது, பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, சடங்குகளை., பிணைக்கயிற்றை நொந்தென்ன, காலம் சுமந்த கனத்தோடு, அழுத்துகின்றன நுகத்தடிகள்(ப. 15) என்றவாறு வலியுறுத்துகின்றது. அணிகள் அலங்காரங்கள் என்பது மாறி மணமானதற்கு அடையாளங்களாகி அவையே ஆண்களின் பார்வைக்குக் காவலாகி நின்றிட, அணிகலன்களை விரும்பாத பெண்களுக்கும் அணிய வேண்டிய சூழலை உருவாக்கிவிட்ட முறைமை மேற்கவிதையால் தெரியவருகின்றது.
காதல் மணம் கொண்ட காதலர்களானாலும், அவர்களின் குடும்ப வாழ்க்கையும் இக்கால நெருக்கடியில் வெகுசாதாரணமான தம்பதிகளாக அவர்களை மாற்றிவிடுகின்றது. மடியில் புரண்டது, கட்டிக் கொண்டது, எல்லாம் தாண்டி, இன்று, எல்லாத் தொடுதலும், அதில் போய்தான் நிற்கிறது., எனக்காகவும், உனக்காகவும் அன்றி அதற்காக(ப. 41) என்ற கவிதைவரிகள்- ஆண், பெண் இணைவுக்கான மூலம் அன்பு அல்ல; வேறொன்றின் தேவை என்பதை இக்கவிதை சுட்டுகின்றது.
குடும்பப் பெண்ணுக்கான எல்லை
குடும்பம் என்ற கட்டமைப்பு, புகுந்த வீடு வந்த பெண்களின் சார்பால் நிலைகொள்ளுகின்றது. இருப்பினும் அவ்வமைப்பு அவர்களுக்கு முழு உரிமையை, விடுதலையை, அதிகாரத்தை அளிப்பதில்லை.
பார்த்துப் பார்த்து வாங்கினோம் , விதவிதமாய் சமைத்தோம், பணிவாய் பரிமாறினோம், கைகழுவிய தட்டைக் கழுவினோம், வாய் துடைக்கக் கூட, முந்தானை கொடுத்தோம், எல்லாம் செய்துவிட்டு, ஏனோ, பசித்திருக்கிறோம், என்றோ ஒருநாள், அருகருகே அமர்ந்து, அவசரமில்லாமல் சாப்பிட்டுவர, விருந்துக்கு வந்தால், ஆண் பந்தி முந்தி என்று, அங்கேயும், அடுக்களையும் காத்திருக்கச் சொல்கிறீர்கள். ( ப.22) என்ற கவிதை வீட்டிற்குள்ளும், வெளியிலும் அதிகாரம் பெறமுடியா மரபு வேலிகளில் பெண்கள் சிக்கியிருப்பதை உணர்த்துகின்றது.
இத்தோடு காலையில் அயர்ந்து தூங்கும் குடும்பப்பெண்ணை எழுப்பிட, முத்தமிட்டு எழுப்பலாம், தலையை வருடி எழுப்பலாம், நெட்டி எடுத்து எழுப்பலாம் என வகைவகையாய் எழுப்ப வழி இருந்தாலும் குடும்பப் பெண்ணை, இவ்வளவையும் விடுத்து, என் கால் தீண்டி, போகிறபோக்கில், எழுப்பிப் போகிறாய் ( ப.48) என அசட்டையாய் எழுப்பும் கணவன், அதனால் ஏற்பட்ட அலுப்புடன் வேலைகளைச் செய்யப் போகும் மனைவி இந்த எல்லைக் கோடுகள் பெண்களின் நீங்காத மரபுசார் எல்லைக் கோடுகளாகிவிடுகின்றன.
தாய்ப்பெண்ணுக்கான எல்லை
தாய்மை என்பது அருமையான அனுபவம். ஆனால் அவ்வனுபவத்திற்கான உயர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத உலகமாக இவ்வுலகம் விளங்குகிறது. அதிலும் வேலைக்குப் போகும் தாய்படும் சிரமம்,; குழந்தையை கவனிக்க முடியாமல் அலுவலகம் சென்று, அலுவலையும் சரியாகச் செய்யாமல் குழந்தையை எண்ணி ஏங்கும் பெண்ணின் உள்ளம் இருபக்கத் தாழ்வை ஏற்பதாக உள்ளது.
தலைவாருகிறேன், புடவை மாற்றுகிறேன், வேகவேகமாக பைக்குள் பொருட்களை அடைக்கிறேன், இவையெல்லாம், குழந்தைக்குச் சொல்கின்றன, என்பிரிவை (ப. 49) என்ற கவிதைவரிகள் பிள்ளை பெற்ற தாயின் அலுவலகப் பிரிவாரம்பத்தை, அவசரத்தை அவலமாகச் சொல்லும்.
அலுவலகம் செல்வதால், குழந்தையை வேறுஒருவரிடம் ஒப்படைத்து விட்டு போகும் ஒரு தாயால், குழந்தைக்குத் தாய்ப்பால் சரிவரக் கொடுக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தவிப்பை,
மணமிக்க, பூச்சூடிக் கொள்கிறேன், கூடுதலாய், முகப்பவுடரும், புடவைகளுக்குக்கூட, வாசனை திரவியம் ,பூசி வைத்துள்ளேன்., வியர்வையை, கழுவிக்கழுவி, சுத்தமாய் வைத்திருப்பதாய், நினைத்துக் கொள்கிறேன், என்னை, அத்தனையும் மீறி, ஆடைகளுக்குள்ளிருந்து, தாயின் வாசம், சொட்டு சொட்டாய், கோப்புகளில் இறங்குகிறது, அவசரமாய், அலுவலக கழிப்பறையில் நுழைந்து, பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது, பசியைத் தின்று அலறும், குழந்தையின் அழுகுரல் ( ப.47) என்ற கவிதை சித்திரிக்கிறது.
குழந்தையைப் பெற்றெடுக்கும், தாய்மைப்பண்பின் பெருமைகளை அருமைகளை உணரா ஆண் உலகத்தைப் பார்த்து, தாய்மையின் இன்னலை அறிந்து கொள்ளா ஆணைப்பார்த்து, கருசுமந்து குழந்தைத்தவம் இருக்கும் பெண்களைச் சுமக்க , எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை எனக் கேள்வி கேட்கிறது ஒரு கவிதை. இவ்வரிகளில் ஆண்களுக்குப் பிள்ளைப் பெற்றுத்தரும் உடல்கூறு இல்லை என்பதையும், அதனைப் பெற்றுள்ள பெண்களைத் தாங்கும் ஆதரவு, மனக்கூறு கூட ஆண்களிடம் இல்லை என்பதையும் கவிஞை உணர்த்தி விடுகின்றhர்.
அதே நேரத்தில் தாய்மை ஏற்படுத்திய உடல் விகாரங்களை இன்னொரு கவிதை உறவின் அடையாளத்தை, உறுப்புக்கள் தாங்கியுள்ளன., மார்புக் காம்புகளும், வயிற்றுச் சுருக்கங்களும், சொல்லும், என் பிள்ளை பிறப்பின், அடையாளத்தை , பிறகெதற்கு எதிர்பார்க்கிறீர்கள், என் அடையாளத்தை, தாலிக் கயிற்றிலும், கால் மெட்டியிலும், வகிடு சிவப்பிலும்.(ப. 55) என எடுத்துக்காட்டுகின்றது.
தாய் என்னும் நிலையில் தன் உடலை அங்ககீனப்படுத்திக்கொண்டு, குழந்தையை வளர்க்கவும் முடியாமல் – வளர்க்காமல் விட்டுவிடவும் முடியாமல், செய்யும் அலுவலகப் பணியைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் தவிக்கும் தாயுள்ளம் எப்போது விடுதலை பெற்று குழந்தைக்கு உற்ற தாயாக, அலுவலகத்திற்கு உற்ற அலுவலாளியாக, தன் உடலுக்கு உள்ள அழகை அவளுக்காகக் காத்துக்கொள்பவளாக மாற முடியும் என்ற தீராத கேள்விக்கு இக்கவிதைகள் உற்ற துணையாகின்றன.
வெண்ணிலாவின் மேற்கண்ட கவிச்சிந்தனைகளின் மூலம் ஒரு பெண் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு படிநிலையிலும் தனக்கு ஒத்துவராத ஒரு பாத்திரத்தை சமூக நலன் கருதியும், குடும்ப நலன் கருதியும் ஏற்கவேண்டியவளாக உள்ளாள் என்பது தெரியவருகிறது. இவற்றில் இருந்து விடுபட எண்ணுவதே, அவற்றைக் குறித்த தன் கவலைகளைப் படைப்புக்களாக மாற்றுவதே இந்நூற்றாண்டில் பெண் தனக்கான அதிகாரத்தை எண்ணிப்பார்ப்பதற்கான ஊற்றுக்கண்ணாகின்றது.
Muppalam2003@yahoo.co.in
மு. பழனியப்பன்,
விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை
—
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.