அலைப் போர்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ரவி


இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை
நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினுாடு
நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
முடியவில்லை, இந்தக் காட்சியை
கற்பனையுள் வார்த்துக் கொள்ள.
அலைகள் இராட்சதித்து
மண்ணில் புகுந்து
நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப் போர்.
பூமியின் மீதான ஒரு பிரளயத்தின் முன்மாதிாியாய்
எல்லாம் நடந்து முடிந்தது.

இந்தத் துயர்த் திரட்சியைத் தாங்கிக் கொள்ள
மனிதர்களால் முடியுமெனின்,
இவையெல்லாம்
அசாதாரணமாகவே தோன்றுகிறது எனக்கு.

ஒவ்வொரு சோகத்தின்போதும்
கடற்கரை மணலில் கால்பதித்து ஆறுமென் மனம்
இப்போ
இந்தக் கடற்துயரை ஆற்ற எங்கு செல்வது.

நடமாடித்திர்ிந்த உடல்களை உயிர்நீக்கி
உடலங்களாக பரத்திச் சென்றது
நீர்வெறிப்  பிரளயம்.
தனித்து விடப்பட்ட ஒற்றைத் தென்னைகளில் அதன்
கீற்றுகளின் ஒலி துயாிசை எழுப்ப,
மீளமுடியாமல்
சாிந்துபோனது கடற்கரையின் வாழ்வு.
எதுவும் நடவாததுபோல் அலைகளெல்லாம்
இயங்கத் தொடங்கியுமாயிற்று.

மரணத்தின் அச்சம் கலந்த தொனி
இதயத்தின் ஒவ்வொரு மூலையையும்
நிரப்பி நிரப்பித் தழும்புகிறது.
மீளமுடியாமல் அவதியுறம் மக்களைப் பார்த்து
எதிர்காலம் கையசைத்து,
விலகிச் செல்கிறது.
இந்த சுனாமிக் கொடுமையை அலைகள்  இசைத்து
வாழ்வுக்கு சவால்விட்டுச்
சென்றிருக்கிறது.
இதயத்துள் இறக்கப்பட்டிருக்கும் இந்த
அதிர்ச்சியை நாம்
பிடுங்கி எறியவும்
காயமாற்றவும்
இயங்கவும் பற்றிக்கொள்ள எதுவுமின்றி
அசைகிறது வாழ்வின் நுனி.
ஆயினும் நாம்
நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும்.

ஒரு சோகப் பிரளயத்தை உள்வாங்கிய இதயங்களே
துயர் கரையும்வரை அழுக
கதறி இழுக
கண்ணீாவிட்டு அழுக…

மனித அவலத்தின் உச்சியின்மேல் நின்று
ஒலிக்கும் உங்கள் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்.
தேசம் இனம் மதம் கடந்து
இணைந்தது இத் துயாில் உலகம் எமது
எதிர்பார்ப்பையும் மீறி என்ற செய்தியைப்
பற்றிக் கொள்ளுங்கள்
அழிவுகள் அடர்ந்த காடுகளினுாடு
அதன் திசையற்ற வியாபகத்தினுாடும்கூட
வாழ்வின்மீதான நம்பிக்கைகளை அடைவது
ஒன்றும் சாத்தியமற்றதல்ல.

– ரவி (சுவிஸ்,02012005)

Series Navigation

ரவி

ரவி