அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியல் மேதை; மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்கியிருந்தது. மின் விளக்கு, இசைப்பெட்டி, தொலைபேசி டிரான்ஸ்மிட்டர், திரைப்படம், மின் கொள்கலன், நகலெடுக்கும் எந்திரம் இப்படிப் பல கண்டுபிடிப்புகளை எடிசன் உலகிற்கு வழங்கினார். 1889ஆம் ஆண்டு பாரீசில் பன்னாட்டுப் பொருட் காட்சி நடைபெற்றபோது, அரங்கத்தில் அவருடைய கண்டு பிடிப்புகளைக் காட்சிப் படுத்துவதற்கென்றே தனியாக மிகப்பெரியதோர் இடத்தை ஒதுக்கித் தந்தனர்.

அயராத உழைப்பும், தளராத முயற்சியும், குறையாத ஆர்வமும், தன்னம்பிக்கையும் கொண்டு ஒரு செயலை மேற்கொண்டால், அச்செயல் பலன் தராமல் போகாது; இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். “ஒருவன் மேதையாவதற்கு 1% புறத் தூண்டுதலும், 99% வேர்வை சிந்தி உழைக்கும் அவனது விடாமுயற்சியுமே காரணம்” – இதுவே எடிசனின் கொள்கை. பெயரும், புகழும், செல்வமும், செழிப்பும் அவரைத் தேடி வந்தன; வராதவையோ ஆணவமும், தற்பெருமையும், செருக்கும். ஆம், “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”, எனும் வள்ளுவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் எடிசன். அவர் நுண்ணறிவு மிக்கவர், கடும் உழைப்பாளி. மெலிந்த உடலும், உடற்குறையும் கொண்டிருந்த எடிசன், சுறுசுறுப்பாகத் தன் கடமைகளைச் செய்து வந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 ஆம் நாள் ஓஹியோ (Ohio) மாநிலத்தில் மிலன் (Milan) என்னுமிடத்தில் பிறந்தார்; அவரது தந்தையார் மரவேலை செய்யும் தச்சர்; தாய் ஓர் ஆசிரியை. சிறுவயதில் எடிசன் முறையான கல்வி பெற்றார் எனக் கூறுவதற்கில்லை. ஆசிரியர்கள் கூறுவதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் பழக்கம் அவருக்குக் கிடையாது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் இருப்பார். இக்காரணங்களால் பள்ளியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆசிரியையான தன் தாயிடமே கல்வி பயின்றார்.

பத்தாவது வயதிலேயே, தனது ஆய்வுகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் வீட்டில் சிறியதொரு தொழிற்கூடத்தை எடிசன் நிறுவினார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற முதுமொழிக்கேற்ப சிறுவயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக அவர் விளங்கினார். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் நல்வாய்ப்பு உள்ளவராகவும் அவர் திகழ்ந்தார்.

இருப்பினும் தனது ஆய்வுகளுக்குச் செலவு செய்யப் பணமின்றி சிற்சில சமயம் எடிசன் வருத்தப்படவும் நேர்ந்தது; அதற்காக அவர் சோர்வடையவில்லை; பணத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட டெட்ராய்ட் (Detroit) நகருக்கும் போர்ட் ஹூரான் (Port Huran) நகருக்குமிடையே ஓடிய கிராண்ட் டிரங்க் ரயில்வேயின் (Grand Trunk Railway) தொடர்வண்டிகளில் (Trains) செய்திதாள்களும், இனிப்புப் பண்டங்களும் விற்பனை செய்து பணம் சம்பாதித்தார். ஓராண்டு இப்பணியை விடாது செய்து வந்தபோது ரயிலில் தொலைபேசி இயக்குபவராகவும் (Telephone operator) பணியாற்றினார். அதன் மூலம் கிடைத்த பயிற்சியினால், எளிமைப்படுத்தப்பட்ட தந்தி அனுப்பும் கருவி ஒன்றை எடிசன் உருவாக்கினார்.

1861 ஆம் ஆண்டு வாக்கில் வட, தென் அமெரிக்க நாடுகளுக்கிடையே உள்நாட்டுப் போர் மூண்டது; போர் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர். இதற்காகத் தேவையான சில எந்திரங்களைக் கடன் வாங்கி, எடிசன் ஒரு செய்தித்தாளைத் துவக்கினார்; தான் பணிபுரிந்த ரயில் வண்டியை நினைவு கூறும் வகையில் கிராண்ட் டிரங்க் ஹெரால்ட் (Grand Trunk Herald) எனப் பெயர் சூட்டினார். இச்செய்தித்தாள் இருவகையில் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. இது முழுக்க முழுக்க எடிசன் அவர்களாலேயே நடத்தப்பெற்றது; செய்தி சேகரித்தல், அச்சுக் கோர்த்தல், அச்சிடுதல், பதிப்பித்தல், விற்பனை செய்தல் போன்ற பலவற்றையும் எடிசன் அவர்களே மேற்கொண்டு செம்மையாக நடத்திவந்தார்; அடுத்ததாக ரயில் வண்டியில் பதிப்பிக்கப்பெற்று விற்பனை செய்யப்பட்ட செய்தித்தாள் என்ற பெருமையும் இதற்குண்டு. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பணிபுரிந்த தந்தி அனுப்புவோரின் உதவியை நாடிச் செய்திகளைப் பெற்றார். இத்துடன் ஒரு சிறு ஆய்வுக்கூடத்தையும் ரயிலில் நிறுவி தன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இச்சமயத்தில் எடிசன் ஒரு விபத்தில் சிக்கித் தனது கேட்கும் திறனை இழக்க நேரிட்டது. மேலும் ரயிலில் அவர் நிறுவிய ஆய்வுக்கூடமும் தீக்கிரையாகி ஆய்வுப்பணிகள் தடைபட்டன.

1862ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ரயில் விபத்தின்போது, எடிசன் மிகவும் துணிச்சலோடு ரயில் நிலைய அதிகாரி ஒருவரின் குழந்தையைக் காப்பாற்றினார். அதற்கு நன்றிக் கடனாக அவர் எடிசனுக்கு தந்திக்கலையின் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்; இக்கல்வி அவருக்குப் பெரிதும் உதவிற்று. 1868 ஆம் ஆண்டு எடிசன், தந்தி அனுப்புவதற்கான கருவித் தொகுதி ஒன்றை வடிவமைத்து உருவாக்கினார்; இதில் ஒலிப்பதிவு வசதியும் இருந்தது. பின்னர் எடிசன் நியூயார்க்கில் உள்ள பங்குச்சந்தை தந்தி அலுவலகத்தில் தனது தந்திக் கருவித் தொகுதியை 3000 டாலருக்கு விற்க முன்வந்தார். ஆனால் பங்குச் சந்தையின் தலைவரோ எடிசன் கண்டுபிடித்த கருவியின் மதிப்பை உணர்ந்து 40,000 டாலர் கொடுத்து அதனை விலைக்கு வாங்கிக்கொண்டார். இதற்குப் பிறகு எடிசனுக்கு மேலும் மேலும் பணம் வந்து குவியத் தொடங்கியது.

1887 ஆம் ஆண்டு வரை விளக்கு எரிக்க எண்ணெயையே பயன்படுத்தி வந்தனர். பின்னர் எடிசன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளையிழை குமிழ் விளக்கு (incandescent electric bulb) புழக்கத்திற்கு வந்தது. இதன் மூலம் அவர் பெரும் பணக்காரரானார். நியூயார்க்கில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம் வழங்குவதற்கான, மின்வழங்கு மையம் எடிசன் அவர்களால் நிறுவப்பட்டது. பின்னர் எடிசன் தட்டச்சு எந்திரம் உட்படப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார்.

1871 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் மேரி ஸ்டில் வெல் (Mary Still Well) என்பவரை எடிசன் திருமணம் செய்து கொண்டார். மனைவி வேதியியல் படித்தவர்; எனவே கணவரின் ஆராய்ச்சியில் பலவகையிலும் அவரால் உதவ முடிந்தது. நியூ ஜெர்சியில் உள்ள மெண்டோ பார்க்கில் ஆய்வுக்கூடம் ஒன்றை எடிசன் சொந்தமாக நிறுவினார். கிரஹம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி அமைப்பு இங்கு மேலும் செம்மைப்படுத்தப்பட்டது. இசைப்பெட்டி (gramophone) கண்டுபிடிப்பும் இங்கேயே நிகழந்தது. ஒரு பெட்டியிலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாவதைக் கண்ட மக்கள் நம்பமுடியாமல் திகைத்தனர்; மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர். 1884ஆம் ஆண்டு மனைவியை இழந்த எடிசன், தனது நண்பர் லூயி மில்லர் (Louis Miller) என்பவரின் மகளான மிஸ் மில்லர் (Miss Miller) என்பவரை மறு மணம் புரிந்து கொண்டார். 1913 அக்டோபர் 18 ஆம் நாள் எடிசன் இவ்வுலக வாழ்வை நீத்தார். அமெரிக்க அரசு அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டியது; வெஸ்ட் ஆரஞ்சு (West Orange) என்னுமிடத்தில், 1887 ஆம் ஆண்டு எடிசன் நிறுவிய ஆய்வுக்கூடத்தைத், தேசிய நினைவுச் சின்னமாக 1956இல் அமெரிக்க அரசு அறிவித்து, அவரது சேவையைப் போற்றியது.

**

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர