அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

கீ டேவிட்சன்


Keay Davidson, Chronicle Science Writer

Monday, July 5, 2004

பரிணாமவியலை நவீனமாக ஆக்கியவரும் மாபெரும் அறிவுஜீவியாகவும் அறியப்படும் எர்னஸ்ட் மேய்ர் சூலை 5 2004இல் நூறு வயதை எட்டினார்.

ஹார்வர்ட் சமூக உயிரியலாளரான எட்வர்ட் ஓ வில்சன் அவர்கள் மேய்ர் பற்றிக் கூறும்போது, ‘இவர் மிகச்சிறந்த பரிணாமவியல் உயிரியலாளர் மட்டுமல்ல, அவர் அந்த தலைப்பில் எழுதக்கூடிய மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட ‘ என்று குறிப்பிட்டார்.

உயிரியலில் ‘மேய்ர் அவர்களது நிழலியே எல்லோரும் நிற்கிறார்கள் ‘ என்று பெர்க்லி பல்கலைக்கழக உயிரியல் பரிணாமவியல் ஆய்வு பரிசோதனைச்சாலையின் உப-இயக்குனரான பேராசிரியர் எஃப் கிளார்க் ஹோவெல் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘இவர் ஏராளமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவர் மிகவும் சிறப்பாக எங்களைப் பாதித்திருக்கிறார் ‘ என்றும் குறிப்பிட்டார்.

அவர் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பீடு அவரை பலரும் எதிரிகளாகவும் கருதக் காரணமாக ஆகியிருக்கிறது. உருவாக்கவியலாளர்கள் (creationists) என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விவிலிய பாதுகாவலர்கள் இவரை முதல்தர எதிரியாகக் கருதுகிறார்கள். ‘நவீன பரிணாமவியல் துறையின் கேள்விகேட்கமுடியாத தலைவர் ‘ என்று கிரியேஷன் ரிஸர்ச் நிறுவனம் இவரைக் குறிப்பிடுகிறது.

நூற்றி ஐம்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கொள்கை, கடவுள் எல்லா மிருகங்களையும் தாவரங்களையும் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் படைத்தார் என்றும், அதன் பின்னர் அவை மாறாமல் இருக்கின்றன என்றும் கூறும் விவிலியக் கொள்கையை எதிர்த்து சவால் விட்டது. நூறு கோடி வருடங்களாக பூமி இருந்துவருகிறது என்றும், இயற்கைத் தேர்வு (natural selection) என்ற முறை மூலம் மிருகங்களும் தாவரங்களும் தொடர்ந்து மாறி வருகின்றன என்றும் டார்வின் வாதம் புரிந்தார்.

எழுபது வருடங்களாக, ஒரு மாறுபட்ட டார்வின் கொள்கை மூலம், நவ-டார்வினிய ஒருமைக்கோட்பாடு neo-Darwinian synthesis இன்று எல்லா உயிரியல் அறிவியலாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ‘மேய்ர் அவர்களே இந்த சாதனைக்கு பெரும் பொறுப்பாளர் ‘ என்று கெவின் பாடியன் அவர்கள் கூறுகிறார். ‘இவர் மற்றவர்கள் எல்லோரையும் விட அதிகமாக இதில் ஆய்வு புரிந்திருக்கிறார் ‘ என்றும் பழங்கால அகழ்வாராய்ப்புப் பொருட்கள் ஆய்வியல் (paleontology) மற்றும் பரிணாமவியல் உயிரியல் பேராசிரியராக பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கெவின் பாடியன் கூறுகிறார்.

தினந்தோறும் நீண்ட நடை, எழுபது வருடங்களுக்கு முன்னர் புகைபிடிக்கும் வழக்கத்தை விட்டது மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவையே தனது நீண்ட வாழ்நாளுக்குக் காரணம் என்று மெய்ர் அவர்கள் கூறுகிறார்.

ஆனால், மெய்ர் தனது 100ஆவது வயதை நெருங்க நெருங்க, செய்திஊடகங்களின் தாக்குதல் தாங்க முடியாததாக அவருக்கு இருந்தது. தனது பிறந்தநாளுக்குப்பிறகே எந்த பத்திரிக்கை பேட்டிகளும் என்று முடிவெடுத்துவிட்டார்.

மேய்ர் தனது மனைவி க்ரெடெல் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பது புகழ்பெற்ற விஷயம். திருமணம் சுமார் 55 வருடங்கள் நீடித்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். 1990இல் மனைவி இறந்ததும் மேய்ர் ‘எனது வாழ்க்கை முடிந்துவிட்டது ‘ என்று புலம்பியதை புளோரிடா பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான மைக்கல் ரூஸ் நினைவுகூர்ந்தார்.

ஆனால் மேய்ர் வெகு விரைவிலேயே மீண்டு தன்னை மீண்டும் தன் வேலையில் ஈடுபடுத்திக்கொண்டார். உடல் ரீதியாக வலிவற்றவராக இருந்தும், அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு தனியாகவே கார் ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

எந்த ஒரு புதிய பிஹெச்டி மாணவரைப் போலவும், மிகவும் தற்கால விஷயங்களை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார். Jacob ‘s Ladder: The History of the Human Genome என்ற புத்தகத்தை எழுதிய ஹென்றி ஜீ, 1996இல் மேய்ர் யூசிஎல்ஏ வில் உரையாற்றும்போது உரைக்குப் பின்னர் பார்வையாளர்கள் கேட்ட எல்லாக் கேள்விக்கும் தெளிவாக பதிலளித்ததை நினைவு கூர்ந்தார். எவ்வளவு கடினமாகவும், அல்லது புரிபடாமலும் கேள்வி இருந்தாலும், அவர் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேய்ர் ஜெர்மனியில் 1904இல் பிறந்தார். (ரைட் சகோதரர்கள் முதலாவது விமானப்பயணம் செய்தது 1903இல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சார்பியல் கொள்கையை பிரசுரித்தது 1905இல். இரண்டுக்கும் நடுவே இவர் பிறப்பு) 1926இல் மேய்ர் தனது முதல் பிஹெச்டியை பெர்லினில் பெற்றார்.

1931இல் மேய்ர் ஜெர்மனியை விட்டு அமெரிக்காவுக்கு வந்து, நியூயார்க்கில் இருக்கும் அமெரிக்கன் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் பணியில் சேர்ந்தார்

72 வருடங்களுக்கு முன்னர் சார்லஸ் டார்வின் ஆரம்பித்த புரட்சி உச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஆங்கில இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின் தனது ‘உயிரினங்களின் தோற்றம் ‘ என்ற புத்தகத்தை 1859இல் பிரசுரித்தார். ஆரம்ப கால விவாதங்களுக்குப் பின்னர் சார்லஸ் டார்வினின் (தாவர மற்றும் விலங்கினங்கள் காலத்தின் போக்கில் மாறுதலடைகின்றன என்ற ) அடிப்படை கொள்கையை பெரும்பாலான உயிரியலாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆயினும், பரிணாமத்துக்கு கொடுக்கும் விளக்கத்தில் பெரும்பாலான அறிவியலாளர்கள் தீவிரமாக வாதிட்டனர். ‘இயற்கைத் தேர்வின் ‘ காரணமாக பரிணாமம் நடக்கிறது என்று டார்வின் கூறினார். எந்த இனங்களுக்கும் மத்தியில் இயற்கையான வித்தியாசங்கள் இருக்கின்றன. (உதாரணமாக பட்டுப்பூச்சிகளுக்கும் நாய்களுக்கும் இடையேயான வித்தியாசங்கள்) ஒரு தாவரம் அல்லது விலங்கின் குணாம்சங்கள் ஒரு சூழ்நிலைக்குப் பொருந்துகின்றன. அதனால் அந்தச் சூழ்நிலையில் அந்த குறிப்பிட்ட விலங்கினம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த சந்ததிக்கு அது செல்ல வழி செய்யப்படுகிறது. (எந்த அளவுக்கு ஒரு விலங்கினம் ஒரு சூழ்நிலைக்கு பொருந்தி வருகிறது அந்த அளவு)

உதாரணமாக, இருட்டான காட்டில், ஒரு பறவை, கருப்பான பட்டாம்பூச்சியை விட, பளபளப்பாக இருக்கும் ஒரு பட்டாம்பூச்சியை வெகு விரைவில் கண்டுபிடித்து தின்றுவிடும். ஏனெனில் கருப்பான மரம் அல்லது இலைகளில் பளபளப்பான பட்டாம்பூச்சிகள் எளிதில் பறவைக்குத் தெரியும். ஆகையால் பளபளப்பான பட்டாம்பூச்சிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும். கருப்பான பட்டாம்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த இயற்கைத் தேர்வு தொடர்ந்து இனங்களை காலப்போக்கில் மாறுபடுத்திக்கொண்டே போகிறது என்று அவர் நம்பினார். சூழ்நிலை மாறவும், தாவரங்களும் விலங்குகளும் தொடர்ந்து புதிய சூழ்நிலைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டே போகும் என்றும் அவர் நம்பினார். பல கோடி வருடங்களாக இத்தகைய இனங்கள் பல்கிப் பெருகும் என்றும், பல உயிரிகள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பாலைவனங்களிலிருந்து அண்டார்டிகாவின் வீண் பிரதேசங்கள் வரையிலும் சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும் என்றும் அவர் நம்பினார்.

இருப்பினும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பல உயிரியலாளர்கள், இயற்கைத் தேர்வு என்பது பூமியில் இருக்கும் உயிரிகளில் இருக்கும் பல்வேறு வகைகளையும், அவற்றில் இருக்கும் சிக்கலான அமைப்புகளையும் பார்க்கும் போது மிகவும் மெதுவான ஒரு வழிமுறையாக இருக்கிறது என்று உறுதிபடக் கூறினார்கள். ஆகையால் டார்வின் கொள்கை அல்லாத பல்வேறு பரிணாம முறைகளைப் பரிந்துரை செய்தார்கள். saltationism என்ற முறையைக் கூறிய பலர், மரபணுவில் தோன்றும் அதிரடி மாற்றங்களால் பல உயிரிகள் பரிணாத்தில் எம்பிக்குதிக்கின்றன என்றும், ஒரே இரவில் பல புதிய இனங்கள் உருவாகலாம் என்றும் கூறினார்கள்.

1930இலும் 1940இலும் மற்ற பரிணாமவியல் சிந்தனைகள் உதிர்ந்துவிட்டன. அறிவியலாளர்கள் டார்வின் கூறிய ‘சீரான பரிணாமவியல் மாறுதல்கள் ‘ முறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தாமஸ் ஹண்ட் மோர்கன் அவர்களது பரிசோதனையில் பழ ஈக்கள் உள்ளே குரோமசோம் மாறுதல்கள் பற்றிய ஆய்வில் இருக்கும் முடிவுகளோடு இணைத்து டார்வினின் கொள்கையை இன்னும் நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றினார்கள்.

மரபணுக்கள் (genes) தொடர்ந்து மாறிக்கொண்டேயும் தொடர்ந்து ம்யூட்டேஷன்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதையும் அவர்கள் காட்டினார்கள். ஒரு அபூர்வமான நேரங்களில் இந்த மாறுதல்கள் ஒரு தாவரம் தனது தொடர்ந்த உயிர்ப்பிற்கான சாத்தியங்களை அதிகரிப்பதையும் அவர்கள் காட்டினார்கள். கணித மாதிரிகள் மூலம், மிகச்சிறிய சாதகமான மரபணு மாறுதல் வெகு விரைவில் ஒரு இனத்தொகைக்குள் பரவுவதை காட்டினார்கள். காலப்போக்கில் அந்த மாறுதல் அந்த இனத்தையே மாற்றுவதையும் அவர்கள் கணித மாதிரிகள் மூலம் காட்டினார்கள். இதில் முக்கியப் பங்கு வகித்த அறிவியலாளர்கள் Theodosius Dobzhansky, J.B.S. Haldane, Julian Huxley, R.A. Fisher, Sewall Wright, George Gaylord Simpson, E.B. Ford – – and Ernst Mayr. ஆகியோர்

‘பரிணாமவியலின் ஒருங்கமைவின் பொற்காலத்தின் இறுதி ஆள் நான் ‘ என்று மேய்ர் அவர்கள் ஸயன்ஸ் என்ற இதழில் எழுதிய கட்டுரையில் எழுதியிருந்தார். இந்த ஒருங்கமைவுதான் இன்று பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பரிணாவியலைச் சொல்லித்தருவதன் அடிப்படையாக இருக்கிறது.

இருப்பினும், எந்த ஒரு அறிவியல் கருத்தாக்கமும் முழுமை அடைந்துவிடுவதில்லை. தீர்க்கப்படாத புதிர்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த புதிர்கள் தொடர்ந்து அறிவியல் கருத்தாக்கத்தை விமர்சிப்பவர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

உதாரணமாக, நவ டார்வினிய ஒருங்கமைவு (neo-Darwinian synthesis) வெகு வேகமாக உருவாகும் இனங்களைப் பற்றி தெளிவாக விளக்க முடியாமல் இருக்கிறது. நவ டார்வினிய ஒருங்கமைவின் பிரபலமான விமர்சகர்கள் நீல்ஸ் எல்ட்ரிட்ஜ் அவர்களும் காலம்சென்ற ஸ்டாபன் ஜே கோல்ட் அவர்களும் ஆவர்.

வெகு விரைவில் தோன்றிய இனப்பிரிவுமுறை (speciation) (புது இனங்கள் உருவாவது) ஆப்பிரிக்க ஏரிகளில் காணப்படுகிறது. உதாரணமாக மலாவி ஏரியும் விக்டோரியா ஏரியும் சுமார் 12500 வருடங்களுக்கு முன்னர் தோன்றின. விக்டோரியா ஏரியின் ஆரம்பகால சிச்லிட் மீன் நூற்றுக்கணக்கான வகை இனங்களாகப் பிரிந்து இருக்கிறது. அவற்றின் தாடை அமைப்பை பார்த்தால், அவற்றில் இருக்கும் நூற்றுக்கணக்கான வகைகளைப் பார்க்கலாம் என்று உயிரியல் வரலாற்றாளரான வில்லியம் பி ப்ரோவின் அவர்கள் கூறுகிறார்.

‘சில மீன்களைச் சாப்பிடுகின்றன. சில ஷெல்பிஷ்களைச் சாப்பிடுகின்றன. சில நுண்ணுயிரிகளை மட்டுமே சாப்பிடுகின்றன. சில ஏரியின் ஆழத்தில் மட்டுமே வசிக்கின்றன. சில ஏரியின் மேல்மட்டத்திலும் ஆழமற்ற பகுதியிலும் மட்டுமே வசிக்கின்றன. இவை அனைத்து கடந்த 12500 வருடங்களுக்குள்ளேயே நடந்திருக்கின்றன ‘ என்று கூறுகிறார்.

மேய்ர் அவர்களும், சிச்லிட் மீன்களின் ஆச்சரியமான கதையால் ஆச்சரியப்பட்டிருக்கிறார். 1942லிருந்து 1980-90வரை புதிய இனங்கள் தோன்றுவது பற்றிய கருத்தாக புவியியல் ரீதியில் அவை பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே கருதிவந்தார்.

ஆனால், புவியியல் ரீதியில் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து சிச்லிட் மீன்களிடம் செல்லுபடியாகாது. ஒரே ஏரியில் ஒரே மீன் எவ்வாறு இவ்வளவு அதிகமான இனங்களைத் தோற்றுவித்திருக்க முடியும் என்று விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

ஆகவே, சமீபத்திய வருடங்களில் மேய்ர் அவர்கள் தன்னுடைய இனப்பிரிவுமுறை பற்றிய கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளார். புவியியல் ரீதியில் ஒரே இனம் பிரிக்கப்பட்டிருப்பது புதிய இனம் தோன்றுவதற்கு முதல்படி என்று அவர் இன்னமும் கருதினாலும், மற்ற முறைகளும் இதில் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறார்.

உண்மையிலேயே முதிர்ந்த அறிவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை என்ற கருத்தை மேய்ர் அவர்கள் தன் வாழ்க்கை மூலம் உடைத்துவிட்டார் என்றே கூறலாம். தன்னுடைய கருத்து காலபோக்கில் வெகுவாக மாறியிருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

அவரது நண்பரான மைன்ஷென் அவர்கள் ‘ஒருமுறை மேய்ர் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் 38 ஆவது வயதில் இப்படிச் சொன்னேன். 64 வயதில் இதை உணர்ந்த பின்னர் இப்படிச் சொன்னேன். 78ஆவது வயதில் இப்படிச் சொன்னேன் ‘ என்று சொல்லிக் கொண்டே சென்றார். நாங்கள் உண்மையிலேயே அவர் அப்போதெல்லாம் என்ன சொன்னார் என்பதை பார்த்தோம். அவர் ஒவ்வொரு முறையும் சரியாகவே சொல்லியிருந்தார் ‘

—-

மேய்ரின் வாழ்க்கையைப் பாதித்த நிகழ்ச்சிகள்

1882: ‘இனங்களின் தோற்றம் ‘ எழுதி 23 வருடங்களுக்குப்பின்னர் சார்லஸ் டார்வின் மறைந்தார்.

1883 : கார்ல் மார்க்ஸ் மறைவு

1900: க்ரிகார் மெண்டல் மரபியல் விதிகளை laws of genetics வகுத்தார்

1903; ரைட் சகோதர்களின் விமானப்பயணம்

1905: ஐன்ஸ்டான் தன்னுடைய சார்பியல் கொள்கையை பிரசுரிக்கிறார்

1913: ஆல்பிரட் ரஸ்ஸல் வால்லஸ் அவர்களின் மறைவு. இவர் டார்வினின் உதவி இன்றியே தனியாகவே பரிணாமம் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கியவர்

1914-18 – முதலாம் உலகப்போர்

1923: அபூர்வமான ஒரு வாத்தைப் பார்த்தபின்னால் மேய்ர் ஒரு விலங்கியலாளராக ஆக முடிவு செய்தார்

1925: டென்னஸ்ஸி பள்ளிக்கூட ஆசிரியர் ஜான் ஸ்கோப்ஸ் அவர்கள் பரிணாமத்தை பள்ளியில் சொல்லித்தந்ததற்காக தண்டிக்கப்பட்டார்

1926: மேய்ர் பெர்லினில் பிஹெச்டி பெற்றார். நியூ கினியாவில் பறவை இனங்களை சேகரித்தார்

1929: பங்குச் சந்தை வீழ்ச்சி மாபெரும் பொருளாதார தேக்கத்தை அமெரிக்காவில் உருவாக்குகிறது

1931: மேய்ர் அமெரிக்காவுக்கு செல்கிறார். அமெரிக்க இயற்கை வரலாறு மியூசியத்தில் வேலைக்குச் சேர்கிறார்

1939-45 இரண்டாம் உலகப்போர். யூதர் அழிவு. ஜப்பானில் அணுகுண்டு வீச்சு.

1942: ஒரு விலங்கியலாளர் பார்வையிலிருந்து இனங்களின் தோற்றமும், அமைப்பியலும் ‘ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் புவியியல் ரீதியிலான இனங்களின் பிரிவே புது இனங்கள் தோன்றக்காரணம் என்ற கருத்தாக்கத்தை கூறுகிறார்.

1947: பிரின்ஸ்டன் பல்கலையில் நவ டார்வினிய ஒருங்கமைவின் வெற்றி கொண்டாடப்படுகிறது.

1950-53: ஜேம்ஸ் வாட்சன் – பிரான்ஸிஸ் கிரிக் இருவரும் டிஎன்ஏ மூலக்கூறின் வடிவத்தைக் கண்டறிகின்றனர். மேய்ர் ஹர்வர்ட் பல்கலையின் விலங்கின ஒப்பமைவு மியூஸியத்தில் சேர்கிறார்.

1959: பரிணாமவியல் தேற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றில் பயன்படும் கணித தேற்றங்களை ‘பீன்பேக் மரபியல் ‘ என்று எதிர்க்கிறார்.

1961: ரஷ்யர்கள் விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்புகின்றனர்.

1962: தாம்ஸ் குங் ‘Structure of Scientific Revolutions ‘ என்ற புத்தகத்தை எழுதுகிறார்.

1963 : கென்னடி கொலை

1965: சர்ச்சில் மறைவு

1968: மார்ட்டின் லூதர் கிங், ராபர்ட் கென்னடி கொலை. அமெரிக்க உச்ச நீதிமன்றம், பரிணாமவியலைத் தடுக்கும் அர்கன்ஸாஸ் சட்டத்தை நிராகரிக்கிறது.

1970: மேய்ர் தேசிய அறிவியல் மெடலைப் பெறுகிறார்

1972: நீல்ஸ் எல்ட்ரிட்ஜ் அவர்களும் ஸ்டாபன் ஜே கோல்ட் அவர்களும் ( punctuated equilibrium ) என்ற புது பரிணாமக்கொள்கையை முன்வைக்கிறார்கள்

1974: நிக்ஸன் ராஜினாமா

1975: அமெரிக்க படைகள் வியட்நாமை விட்டு வெளியேறுகின்றன

1976: மேய்ர் ‘பரிணாமமும் உயிர்களின் பன்மைத்தன்மையும் ‘ என்ற புத்தகத்தை எழுதுகிறார்

1980: ஜனாதிபதி வேட்பாளரான ரொனால்ட் ரீகன் பரிணாமத்தை ‘வெறும் தேற்றம் மட்டுமே ‘ என்று கூறுகிறார்.

1981: எய்ட்ஸ் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது

1982: ‘உயிரியல் சிந்தனையின் வளர்ச்சி ‘ என்ற புத்தகத்தை எழுதுகிறார்

1986: விண்கலம் சாலஞ்சர் விபத்து

1988: ‘உயிரியல் பற்றிய புதிய தத்துவத்தை நோக்கி ‘ என்ற புத்தகத்தைன் மேய்ர் எழுதுகிறார்

1989-90 சோவியத் யூனியன் உடைகிறது

1991; முதலாம் ஈராக் போர்

1993: கிளிண்டன் ஜனாதிபதி ஆகிறார். மேய்ர் ‘சார்லஸ் டார்வினும் நவீன பரிணாமவியல் சிந்தனையின் தோற்றமும் – ஒரு நீண்ட விவாதம் ‘ என்ற புத்தகத்தை மேய்ர் எழுதினார்

1997: ‘இதுதான் உயிரியல் ‘ அவரது 21ஆவது புத்தகம் வெளியானது

1999: ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பரிணாமவியலும் உருவாக்கவியலும் பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படவேண்டும் என்று கூறுகிறார்.

2001: ‘பரிணாமவியல் என்பது என்ன ? ‘ என்ற புத்தகத்தை மேய்ர் வெளியிடுகிறார்

2001: செப்டம்பர் 11. பயங்கரவாதிகள் தாக்குதல். ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு

2002: மேய்ர் மற்றும் ஜாரெட் டயமண்ட் சேர்ந்து ‘வட மாலெனேஷியாவின் பறவைகள் ‘ என்ற புத்தகத்தை எழுதினார்கள்.

2003: இரண்டாம் ஈராக் போர்

2004: ‘எது உயிரியலை தனித்துவம் மிக்கதாக ஆக்குகிறது ? என்ற புத்தகத்தை எழுதினார்

—-

kdavidson@sfchronicle.com.

Series Navigation

கீ டேவிட்சன்

கீ டேவிட்சன்