அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

வந்தியத் தேவன்


எ.பி. (எலக்ஷனுக்குப் பின்) அம்மா தான் போட்டிருந்த பல சட்டங்களை வாபஸ் வாங்கும் காலகட்டம். H முத்திரை, மத மாற்ற தடை சட்டத்தோடு லாட்டரிச் சட்டத்தையும் வாபஸ் வாங்க (இப்போ கற்பனைதான் சீக்கிரமே உண்மையாகலாம்!), ஆம்பூர் அப்புசாமிக்கு லட்சுமி கடாட்சமடித்தது. அதனால் ஹாலிவுட்டில் ஒருவருக்கு சனி பிடித்ததென்றால் நம்ப முடிகின்றதா ? விரிவாகப் பார்ப்போம்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் லாட்டரி தடைச் சட்டம் விலக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமிணைந்து ஸ்பெஷல் சீட்டு ஒன்றை வெளியிட்டது. ‘பூமிமாதா ‘ என்று நாமகரணமிட்ட அந்த சீட்டின் முதல் பரிசினைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவீர்கள். ஒரு கோடி, இரண்டு கோடி ஆறு கோடியில்லை. மொத்தம் நூறு கோடி. பெட்டிக்கடையிலிருந்து, பஸ் ஸ்டாண்டு வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை உச்சரித்த ஒரே பெயர் ‘பூமி மாதா ‘.

ஆம்பூர் அப்புசாமி முடிவு செய்து விட்டார். பென்ஷன் பணமான இரண்டாயிரம் ரூபாயையும் பூமிமாதா சீட்டுகளிலேயே முதலீடு ( ?) செய்ய வேண்டுமென்று. மகன் கேட்டால் வழியில் பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களென்று சொல்லிவிட வேண்டியதுதான். விதவிதமான வரிசைகளில் மொத்தம் 20 சீட்டுகள் வாங்கி, குலுக்கல் தினம் வரை பெட்டைக்கோழியாய் அடைகாத்தார். யார் அதிர்ஷ்டமோ முதல் பரிசும் கிடைத்து விட்டது.

பரிசு கிடைத்த அதிர்ச்சியில் கொஞ்சநாளில் கிழம் மண்டையைப் போட்டு விடுமென்று எதிர்பார்த்த மருமகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்புசாமியின் திடகாத்திரம் கூடியதோடு மட்டுமின்றி, தினமும் உடற்பயிற்சியையும் ஆரம்பித்து விட்டிருந்தார். ஒரு ஆங்கில வீடியோ கேஸட் பார்த்து குனிந்து நிமிர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த ஐடியா பளிச்சிட்டது.

உடனே மகனை அழைத்தார். ‘டேய் ராமசாமி, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உடனே ஒரு படம் எடுக்கப்போறேன். இப்ப என் ரேஞ்சுக்கு ஹாலிவுட் ஆளுங்களைப் போட்டு தமிழ் படம் எடுக்கணும். சமீபத்துலதான் ஆனந்த விகடன்ல படிச்சேன். யாரோ சியாமளாவாம். அவங்களை உடனே புக் பண்ணப் போறேன். ‘

‘தாத்தா அது சியாமளா இல்லை. சியாமளன். அப்புறம் அவரு டைரக்டர் ‘, படித்துக் கொண்டிருந்த பேரன் திருத்தினான்.

‘சரி. அப்ப நான் படத்தை தயாரிக்க மட்டும் செய்யிறேன். கிளம்பு ‘

‘எங்கப்பா ? ‘

‘சியாமளாவை… இல்லை… இல்லை… சியாமளனை புக் பண்ணத்தான் ‘

‘தாத்தா சியாமளன் அமெரிக்காவுல இருக்காரு ‘

மகனை விட பேரனின் இன்வால்வ்மெண்ட் தாத்தாவுக்கு உற்சாகம் தந்தது. ‘பேராண்டி என்ன பண்றதுன்னு நீயே ஐடியா கொடு ‘

‘தாத்தா முதல்ல விளம்பரம் கொடுப்போம். பெரிய ப்ரொஜெக்ட்ங்றதால ஒரு கன்சல்டண்ட் கம்பெனிய ஹயர் பண்ணிடுவோம். ‘

‘என்ன இழவோ…ஒண்ணுமே புரியல. பாத்து செய்யுடா பேராண்டி. ‘

பத்து நாட்களில் பன்முனை வேலைகள் துரிதமாய் நடந்தேறின. நாத் சினி கன்சல்டண்ட்ஸ் அனைத்து பணிகளை ஒருங்கிணைத்தார்கள். ஒருவழியாய் சியாமளனின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டார்கள். ஆனால் உடனடியாக பயணம் செய்ய முடியாத காரணத்தால் ஒரு பெரிய ஹாலில் லைவ் சாடிலைட் மூலம் கான்பரன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படியாவது சியாமளனை வளைக்கும் எண்ணத்தில் கோடம்பாக்கமே குழுமியிருந்தது.

நடிகர் சங்க தலைவரான விஜயகாந்த் ஆரம்பித்தார். ‘அமெரிக்க சினிமாவை ஆளும் சியாமளருக்கு அடியேனின் வணக்கங்கள். ஒரு அருமையான கதை கைவசமிருக்கு. மக்கள் சேவையே குறிக்கோளாய் பிறந்து வளரும் இளைஞன், ஒரு துடிப்பான புரட்சி எழுத்தாளனாகின்றான். அவனது எழுத்து ஒரு அரசியல் தலைவரை உசுப்பிவிட, பிரச்சினைகள் ஆரம்பமாகின்றது. பிரச்சினை என்றவுடன் இமயமலைக்கு ஓடி விடாமல், ஐ.நா. சபை வரை நீதி கேட்டுப் போராடுகின்றான். இதனால் கவரப்பட்ட உலக வங்கி அவனுக்கு கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட நிதியையும் லோனாக வழங்குகின்றது. பின்னர் அந்த ஏழை எழுத்தாளன் முதலமைச்சராகி லோனை அடைக்கின்றான். எழுத்தாளனாகவும், அவனது பெரிய அண்ணனாகவும் நானே நடிக்கப் போகின்றேன். தம்பி லியாகத் அலி கான் வசனத்தைப் பார்த்துக்குவார். நீங்க இங்க வந்துதான் டைரக்ட் செய்ய கட்டாயமேதுமில்ல. அப்பப்போ இப்படி சாடிலைட்ல கூட ரஷ் போட்டுப் பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க ? ‘

சியாமளன் அவசர அவசரமாக பக்கத்திலிருந்த கிளாசிலிருந்து நீரோ, என்னமோ பருகினார்.

சிம்பு துள்ளியெழுந்து ஆரம்பித்தார். ‘இது நம்மைப் போல இளைஞர்கள் காலம். சூப்பரான சப்ஜெக்ட் வெச்சு அசத்திடலாம். ரெஸ்டாரண்ட்டில் டேபிள் துடைக்கும் பையன் சூப்பர் நடிகர் ஒருவரின் மகளைக் காதலிக்கின்றான். இதனிடையே ஒரு டைரக்டரின் ஒல்லிப்பிச்சா பையனும் அதே பெண்ணைக் காதலிக்கின்றான். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து டேபிள் பையன் பெண்ணைக் கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு டைரக்டரா பிலடெல்பியாவில் டூயட் பாட மட்டும் ஏற்பாடு செய்ங்க. ஜமாய்ச்சுடலாம். ‘

ஒரு பெரிய கர்ச்சீப்பை அவசர அவசரமாய் எடுத்து சியாமளன் முகம் துடைப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

நடுவிலே முரளியின் கல்லூரி காதல் கதை, விஜய்யின் கிட்டிப்புள்ளை மையமாய்க் கொண்ட ‘கபடி ‘க் கதை, பிரஷாந்த்தின் ‘காக்கி ‘க் கதையெல்லாம் முடிந்தது.

சியாமளன் அஷ்டகோணலுடன் நெளிய ஆரம்பித்தார்.

பின்னர் நீளமான முடியுடன் விக்ரம் வந்தார். பிரஷாந்த் மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ‘உங்களை மாதிரியே படமெடுக்கணும்னு நினைச்சு இங்கே சிலர் படமெடுத்து மக்களுக்கு ‘ஷாக் ‘ கொடுக்கிறாங்க. ஒரு சூனியக்காரன் கதை இது. ஆனா நல்ல சூனியக்காரன். சிறிய வயதிலில் ஒரு ஏரியில் தவறி விழுந்து இறக்கும் தருவாயில் மருத்துவர்கள் அச்சிறுவனைக் காப்பாற்றுகின்றனர். இருப்பினும் மரணிக்கும் நிலை வரை சென்றதால் அமானுஷ்யங்களுடன் பரிச்சயம் ஏற்பட அதை வைத்து ஊருக்குள் சூனியங்களை எடுப்பதுதான் ஹீரோவின் வேலை. சிக்கனமாக ஓட்டேரி மற்றும் பெரம்பூர் மயானங்களிலேயே முழுப்படப்பிடிப்பையும் முடிச்சிடலாம். மேலும் வித்தியாசமா இப்படத்தில் ஹீரோ மட்டும்தான் பேசுவான். கண்டிப்பாய் நேஷனல் அவார்டுதான். என்ன சொல்றீங்க ? ‘

‘அடப் பாவிங்களா. என்னோட Sci-Fi சேனல் பேட்டியைப் பாத்துட்டு எனக்கே அல்வா கொடுக்கிறீங்களே ‘, சியாமளன் நினைத்து முடிக்கவில்லை.

‘அதனாலென்ன தப்பு ‘, என்றபடி எழுந்தார் கமலஹாசன். ‘என்னோட சிப்பிக்குள் முத்து பாத்துட்டு உங்காளுங்க Forrest Gump எடுக்கலியா ? தமிழன் வெறும் ஹாலிவுட் படங்கள் சுட்டது போக இப்போது மெக்ஸிகோ படங்களையும் தழுவ ஆரம்பித்தது பரிணாம வளர்ச்சிதானே ? திருட்டு தப்பேயில்ல. ஆனா திருட்டு விசிடி தான் தப்பு. ஹாலிவுட்லயிருந்து வந்து எடுத்தாலும் படத்துக்கு தமிழ் பேருதான் வைக்கணும். தமிழ்நாட்டுக்கு தமிழனுக்குத்தான் சொரணையில்ல. அதுனால உங்களுக்கு இருக்கும்னு நம்பறேன். ‘

‘கமலஹாசன் என்பது தமிழ்ப் பெயரா ? ‘ கூட்டத்துல யாரோ முணுமுணுக்க கோபப்பார்வை வீசினார் கமல். ‘சரி படத்துக்கு வருகின்றேன். திருட்டு விசிடி பார்த்துவிட்டு ஒரு கொலை நிகழ்வதை சிறுவன் கமல் பார்த்துவிடுகின்றான். அதனால் வளர்ந்து பெரியாளானவுடன் விசிடி, டிவிடி ஏன் கிராமபோன் ரெக்கார்ட் வைத்திருப்பவனைக் கண்டாலும் கொடூரமாக கொலை செய்து விட்டு, நினைவுச் சின்னமாக ஒரு டிஸ்க்கை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்(ல்)கின்றான். ஒரு நாள் கொலை செய்யபடுவன் முகம் தன்னைப் போலவே இருக்க, ஒரு நிமிடம் நிதானிக்கின்றான். அவன் வேறு யாருமல்ல. என்னுடைய பெரியம்மாவின் பையன். அதாவது அதுவும் நான்தான். I mean Spilit Personality. கொலை செய்யும் ஹீரோவுக்கு மொட்டைத்தலை. ஆனால் மார்பு முடியை சுருட்டி அலங்காரம் செய்ய ஹாலந்து ஹேர் டிசைனர், மற்றும் ஆயிரமாயிரம் அடிகளில் கிராபிக்ஸ் ‘னு கலக்கிடலாம். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப் பாச்சினோவை பேசி முடிக்கலாம். அப்புறம் ஒரு சின்ன ரோலில் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸுடன் முத்தக் காட்சியை சிம்பிளாக வைக்கலாம். என்ன சொல்றீங்க ? ‘

‘என்ன இழவுடா இது ? வசமா மாட்டிக்கிட்டோமே ? ‘, சியாமளன் பரிதவிக்கத் தொடங்கினார்.

வருவாரா மாட்டாரா என்று உலகமே குழம்பிக் கிடக்க கடைசியில் வந்தே விட்டார் ரஜினி. மேக்கப் போடாத ரஜினியை யாரென்று முதலில் சியாமளனுக்குப் புரியவில்லை. இருப்பினும் ஒருவாறு சமாளித்து சிரிப்பை உதிர்த்தார்.

ரஜினி தான் எழுதி வந்திருந்ததை கிடுகிடுவென்று படிக்க ஆரம்பித்தார். ‘திரு. சியாமளன் அவர்களே! ஜக்குபாய் படமெடுப்பதாய் இருந்தேன். ஜக்கு என்றால் இந்து. பாய் என்றால் முஸ்லிம். இரண்டையும் இணைத்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கூற நினைத்தேன். நண்பர் கூட்டத்தில் அடைக்கலம் புகுந்த எதிரிகள் சிலர் தடுத்து விட்டனர். நான் கன்னடனா ? மராட்டியனா ? தமிழனா ? இல்லை. எதுவுமே இல்லை. நான் ‘மனிதன் ‘. இதை மீண்டும் நிரூபிக்க டைரக்டர் வாசுவிடம் பொறுப்பைத் தந்துள்ளேன். சந்திரமுகியோடு ஒரு ‘சர்வநிவாரணி ‘ படமும் தருவேன். நன்றி, வணக்கம். ‘

‘ஆனா கதைய சொல்லவேயில்லியே ? ‘ சியாமளன் பதறினார்.

‘அதை ஷூட்டிங் ஸ்பாட்ல டெவலப் பண்ணுவோமே. ‘

‘என்னது கதையை டெவெலப் பண்றது ஷீட்டிங் ஸ்பாட்டிலேயா ? ‘

கரன் தாப்பர் முன்னே பேட்டி கொடுத்த கபிலைப் போல் தேம்பியழும் சியாமளனை பெரிய ஸ்கீரினில் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.

விவேக் உச்சஸ்தாதியில் குரல் கொடுத்தார், ‘அப்பவே சொன்னேனடா….எஸ்கேப் ‘.

t_sambandam@yahoo.com

http://vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்