அன்னமிட்ட வெள்ளெலி

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

என் எஸ் நடேசன்


யூன் மாதத்தில் ஒரு நாள் மழை ‘ ‘சோ ‘ ‘ என தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. என் நேர்ஸ் ‘ ‘Woman Day ‘ ‘ ‘ ‘ என்ற சஞ்சிகையை மிகவும் கவனத்துடன் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசிப்பை எவரும் கெடுத்துவிடப்போவதில்லை என்ற தைரியம். காலையில் இருந்து நாயோ, பூனையோ எவரும் கிளினிக்கிற்கு கொண்டுவரவில்லை என்ற கவலை என் மனத்தை அரித்தது.

“ இன்று எனக்குச் சோறு கிடைக்காது போலிருக்கு” எனக் கூறினேன். (There will not be any bread on my table)

என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் Hollywood Gossip ல் தனது கவனத்தை செலுத்தினாள்.

சொந்தமாக ‘கிளினிக் ‘ ‘ தொடங்கிய நாட்களில் செல்லப் பிராணிகளை வைத்தியத்திற்காக கொண்டு வருபவர்கள் மிகவும் குறைவாகும். எவரும் வராமல் இருந்த நாட்களும் உண்டு. சொந்தமாக தொழில் ஆரம்பிக்கும் எவருக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

மெல்பேனில் குளிரும் மழையும் ‘சயாமீய இரட்டையர்களாக ‘ இருந்த காலத்தில் சொந்த கிளினிக்கை தொடங்கினேன். இக்காலத்தில் மனிதர்கள் வெளியே செல்லத் தயங்குவார்கள். நாய், பூனைகள் வீட்டுக்குள் இருப்பதால் விபத்துக்கள் மற்றும் நோய்கள் வருவது இல்லை. மிருக வைத்தியர்கள் விடுமுறை எடுக்கும் காலமாகும்.

திடாரென ரெலிபோன் மணி அடித்தது.

நேர்ஸ் தனது சம்பாசனையை முடித்துவிட்டு “இன்று எலி உங்களுக்குச் சாப்பாடு போடும்”என்று நமுட்டு சிரிப்புடன் கூறினாள்.

சிறிது நேரத்தில் லின்டாவும் அவளது பதினைந்து வயது மகளான சோபியாவும் உள்ளே வந்தனர்.

இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள்.

இவர்களிடம் ரைகர் என்ற பூனை உண்டு. ரைகருக்கு Red Meat ஒத்துக் கொள்ளாது. வாயில் புண் வந்துவிடும். மேலும் ரைகருக்கு எலியைப் பிடித்துத் தின்றாலும் வாயில் புண் வந்துவிடும். இப்படியான வினோதமான பூனைக்கு உரிமையாளர்கள்.

சோபியா மேசையில் இரு எலிகளை வைத்தாள். மேசையில் நிற்காமல் இரு எலிகளும் சோபியாவின் தோள்களில் ஏறிவிட்டன.

“எப்போ எலி வாங்கினீர்கள்” ? என வினவினேன்.

“இரண்டு மாதமாக சோபியாவுக்கு விசர். முதல் ‘நெப்போலியன் ‘

என்ற பெரிய எலியை பாடசாலையில் இருந்து கொண்டு வந்தாள். அதற்குத் துணையாக ‘அலெக்சாண்டர் ‘ என்ற இந்த சிறு எலியை பெற் சொப்பில் வாங்கி வந்தாள்” என லின்டா அலுத்துக் கொண்டாள்.

இப்போது எலிகளுக்கு என்ன நடந்துவிட்டது ‘ ? என்றேன்.

‘ ‘நெப்போலியனுக்கு வயிற்றின் இருபகுதியிலும் புண் வந்துள்ளது. ‘அலெக்சாண்டருக்கு ‘ தலையில் சிறிதாக தோல் தடித்திருக்கு ‘”இது சோபியா.

“ இந்த வருத்தம் ஆட்களுக்கு வரும் வீட்டில் எலி வைத்திருக்க வேண்டாம். ‘ என லிண்டா கூறினாள்.

எலியின் பேரால் ஒரு நிழல் யுத்தம் நடப்பது தெரிந்தது. சோபியா சிறுமி என்ற நிலையில் இருந்து கன்னியாகும் போது ஏற்படும் புரட்சித்தனத்தின் அடையாளமாக எலி வளர்க்கிறாள் என்பது தெரிந்தது. சிவப்பு நிறமான தலைமயிரும் தொப்பிளில் போட்ட வெள்ளி வளையமும் இதைப் பறை சாற்றியது.

நடுவயதில் உள்ள தாய் தந்தையருக்கு இவை இரத்த அழுத்தங்களை ஏற்படுத்தலாம். இளமைக்கால கோர்மோன்கள் விடை கொடுக்கும் நிலையில் உள்ள லிண்டாவும், பருவகால புயல் மையங் கொண்ட நிலையில் சோபியாவும் இருவேறு கோணங்களில் பார்க்கிறார்கள்.

மேலும் லிண்டா தொடர்ந்தாள்.

‘ ‘நெப்போலியன் இருப்பது சோபியாவின் அறைக்குள்தான். ஒரு கொம்பியூட்டர் வயர் அறுக்கப்பட்டுள்ளது. பாடசாலை வீட்டு வேலைகள் செய்வதில்லை. எலியுடன் காலத்தைப் போக்குகிறாள்”.

இவர்களது நிழல் யுத்தத்தில் கூட்டு சேராமல் இருக்க நான் முடிவு செய்தேன்.

‘ ‘ ‘நெப்போலியனுக்கும் ‘. ‘அலெக்சாண்டருக்கும் ‘வந்துள்ளது ஒரு தோல் வருத்தம். இது தொற்றுவியாதி. மனிதர்களுக்கு வருவதற்குரிய சாத்தியமில்லை. எதற்கும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.”

மருந்தை சோபியாவிடம் கொடுத்தேன்.

“எவ்வளவு காலம் நெப்போலியன் உயிர் வாழ்வாள்” ?

“நாலு அல்லது ஐந்து வருடங்கள்”.

“ என்ன நோய்வரும் ?”

“எலிகளுக்கு நோய் வருவது குறைவு. ஆனாலும் கட்டிகள், கழலைகள் போன்ற புற்றுநோய் வரலாம். ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.” என்றேன்.

தாய்க்கு கம்பியூட்டரைப் பற்றியும் மகளது கல்வியைப் பற்றியும் கவலை, ஆனால் மகளுக்கு ஐந்து வருடங்களின் பின் ‘நெப்போலியனுக்கு ‘ என்ன நோய் வரும் என்ற கவலை.

இது ஓர் விந்தையான உலகம். அதில் வசிப்பவர்கள விந்தை மனிதர்கள்.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்