அந்த நாள்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

கஜன்


====

நீல வானம் நிறம்மாற
நெருப்பைக் கக்கும் விமானத்தை
ஆல மரத்தின் கொப்பிடையே
அச்சத் துடனே கண்டுவிட
கூலிப் படையின் மூர்க்கத்தில்
கொட்டும் குண்டைத் தவிர்த்திடவே
காலம் முந்திச் செய்திருந்த
காக்கும் *குழியை நாடிநின்றேன்

அன்னை தந்தை தங்கையுடன்
அகமும் புறமும் துன்பமுற
இன்னல் அளிக்கும் அழிவுகளால்
எதிர்க்கும் வாழ்க்கைப் பயணத்தில்
சின்னச் சின்ன இடைவெளியில்
தீராக் குண்டு வெடிப்பினிலே
இன்ப மண்ணின் இருப்பிடத்தில்
இரவுத் தூக்கம் கெட்டதுவே

ஏக்கம் நிறைந்த பொழுதுகளில்
எப்போ உறங்க முடியுமென
காக்கும் பதுங்கு குழியினிலே
காத்துக் கிடந்த வேளையிலே
பூக்கும் விடியல் உணர்ந்தவளாய்
பொழியும் வெடிப்புச் சத்தத்தில்
தாக்கம் நிறைந்த தங்கையவள்
தனது பிறந்த நாளென்றாள்

சுற்றி வாழ்ந்த குடும்பங்கள்
தொல்லை அதிக மென்பதனால்
மற்றக் கிராமம் சென்றதனால்
மாற்று வழியைக் கண்டிருக்க
முற்றும் கொடிய நிலையென்றால்
மொத்த ஊரும் செய்ததுபோல்
பற்றி நிற்க நினைத்திருந்தோம்
பாவம் குறையும் என்றிருந்தோம்

உண்ண உறங்க முடியாமல்
உயிரைப் பறிக்கும் வெடிப்புகளால்
கண்ணீர் கொண்ட அப்பாவும்
கவலைக் குரலில் செப்பினார். இம்
மண்ணில் வாழ முனைந்தாலோ
மரிக்க வேண்டி வந்துவிடும்
துண்டு துண்டாய் ஆகுமுன்னே
தூர இடத்தை நாடிநிற்போம்

இரண்டு சில்லு வாகனங்கள்
இதுவே எங்கள் வாழ்கையிலே
**முரண்ட மோட்டார் சைக்கிளிலே
முன்னே பெற்றோர் சென்றிருக்க
இருந்த எனது @ஹீரோவில்
ஏறிப் பின்னே நான்செல்ல
தரத்தில் சிறந்த @ஏசியனில்
தங்கை வந்தாள் எனைத் தொடர்ந்து

விட்டு விட்டு வெடிச்சத்தம்
வீதி எங்கும் செல்த்துண்டு
பட்ட மரத்தின் நிழலினிலே
பசுவும் இறந்து மணந்திருக்க
கிட்டும் பார்வைத் தொலைவினிலே
ஹெலியொன் றிரைந்து சுடத்தொடங்க
சுட்ட செய்கை கண்டதனால்
சோக அலறல் கேட்டுநின்றேன்

அந்த நாளாய் ஆகுமென
அந்த நாளில் துடித்திருந்தேன்
சொந்த மண்ணில் குழப்பத்தால்
தொட்டோம் இன்னோர் இடத்தைத்தான்
இந்தக் கால ஓய்வினிலே
எண்ண இரையை மீட்டுகையில்
உந்தம் கொண்ட ஓராளாய்
ஓட முயற்சி எடுத்துள்ளேன்

முற்றும்

* மண்ணுக்கு அடியில் அமைக்கப்பற்ற பகுங்கு குழி
** பெற்றோல் இல்லாத காரணத்தால் மண்ணெண்ணையில் இயங்கும் மோட்டார் சைக்கிள்
@ வீட்டுல் இருந்த துவிச்சக்கர வண்டிகள்

கஜன்
—-
avathanikajan@yahoo.ca

Series Navigation

கஜன்

கஜன்