அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

அரவிந்தன் நீலகண்டன்


சாண எரிவாயு அடிப்படையில் மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்ஸைட் ஆகியவற்றின் கலவையாகும். சிறிதளவே ஹைட்ரஜன் சல்பைட்டும் அமோனியாவும் இருக்கும். இவற்றின் பொதுவான கலவை விழுக்காடு:

மீத்தேன் : 65%

கார்பன் டை ஆக்ஸைடு: 34%

அமோனியா மற்றும் ஹைட்ரஜன் சல்பைட்: < 1%

சாணத்தின் மீது ஆக்ஸிஜன் இல்லாத பாக்ட்டாரிய செயல்பாட்டின் விளைவாக இது உருவாகிறது. உயிர்களின் கழிவுகளில் நீளிழைகளாக இருக்கும் கரிம மூலக்கூறுகள் அவற்றின் எளிய நிலைக்கு உடைக்கப்படுகின்றன. இந்த வேதிவினை சமன்பாடு கீழ்கண்ட வாறு இருக்கும்:

இவ்வேதிவினையின் வினை ஊக்கிகள் நுண்உயிர்களின் புரத வினை ஊக்கிகளான என்ஸைம்கள். வெப்பநிலை விரும்பும் பாக்டாரியாக்கள் (thermophilic bacteria) இவ்வேதி வினையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாண எரிவாயு கலம் அமைப்பதன் மூலம் இந்நுண்ணுயிரிகள் நமக்கு ஆற்றலை உருவாக்கி தர ஒரு களம் அமைக்கிறோம். பொதுவாக சாணம் என்றல்ல எந்த உயிர் கழிவும் இந்த எரிவாயுவுக்கான மூலப்பொருள் ஆகலாம். கிராமங்களில் தாரளமாக கிடைக்கும் விவசாய கழிவுப்பொருட்கள், கதிரடிப்புக்கு பின் எஞ்சும் தளைகள், வைக்கோல் ஆகியவையும் மானுட கழிவும் கூட. சாண எரிவாயு கலன் இந்த எரிபொருள் மூலப்பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்தபின் திரவத்தன்மை கொண்ட கழிவாக அம்மூலப் பொருளை வெளியேற்றுகிறது. இக்கழிவு உரமாக, தானிய விதைகள் மேல் பூச்சு பொருளாக, நச்சுத்தன்மையற்ற களைமட்டுபடுத்து பொருளாக, மற்றும் மண்புழு வளர்ப்புக்கு என பல பயன்பாடு கொண்டு விளங்குகிறது.மேலும் சாணத்தின் நேரடி பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் எரிசாண வாயு எத்தகைய நன்மைகளை கொண்டுள்ளது என்பது விளங்கும்.

ஒரு சாண எரிவாயு கலம் பொதுவாக ஒரு கலவைத்தொட்டி , செரிப்பான் (digester), வாயு சேகரிக்கும் இடம் மற்றும் கழிவு வெளியேறும் இடம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

முதன்முதலாக இத்தகைய எரிவாயு உற்பத்தி 1897 இல் மும்பையில் தொழுநோயாளிகள் குடியிருப்பில் பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் லூயி பாய்சர், வோல்டா போன்ற அறிவியலாளர்கள் உயிர்கழிவு வாயுவின் எரிபொருள் பயன்பாட்டினை குறித்து ஆராய்ந்துள்ளனர். 1940 களின் இறுதியில் காந்திய சமூக சேவகரான ஜாஷுபாய் படேல்

(காதி கிராம தொழில்கள் ஆணை குழு) ஒரு எரிச்சாண வாயுகலத்தினை வடிவமைத்தார்.நிலத்தடி சேமிப்புகலமும் செரிப்பானும் கொண்ட இந்த அமைப்பில், எரிபொருள் மூலம் (நீருடன் கலந்து உள்ளிடப்படுவதால்) வெள்ள அளவை கட்டுபடுத்தும் அமைப்புகள் ஓஸ்மானியா பல்கலைகழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களால் 1950களில் சேர்க்கப்பட்டன. ஓஸ்மானிய பல்கலைகழகத்தின் இக்கலன் கிராம லட்சுமி என பெயரிடப்பட்டது. இந்திய கிராமங்களில் பயன்படுத்த தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட குறைந்த விலை சாண எரிவாயு கலன் ‘கிராம லட்சுமி ‘யே. 1950 முதல் 1972 வரை இத்தொழில்நுட்பத்தை மேலும் குறிப்பிட்ட கிராமங்கள் சார்ந்து பரவ வைப்பதில் ஆர்வம் காட்டிய அமைப்புகளில் முக்கியமானவை கொல்கத்தாவின் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனும் ஜோத்பூரின் காதி பிரதிஷ்டானும். இதே காலகட்டத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் 12 எரிசாணவாயு கலன்களை பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளில் இலவசமாக கட்டிகொடுத்தது. கிராம சமுதாயங்கள் இத்தொழில்நுட்பத்தை ஏற்பது குறித்து இக்கழகம் மேற்கொண்ட ஆய்வு இத்தொழில்நுட்பம் அதன் மிக்க பயன் உள்ள தன்மையால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படும் என முடிவு தெரிவித்தது. இதேகால கட்டத்தில் பாரத அரசின் பொருளாதார திட்ட அமைப்பின் கிராம ஆற்றல் பயன்பாட்டு மேம்பாட்டின் முழு கவனமும் கிராமங்களுக்கு மின்சாரஇணைப்பு வழங்கல் குறித்ததாக இருந்தது. 1965, ‘ 67 கால கட்டத்தில் ஏற்பட்ட வறட்சி பாரதம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் அவசியத்தை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது. 1960களின் இறுதியில் அதிக விளைச்சல் தரும் விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மின்சாரம் சார்ந்த நிலத்தடி நீர் பயன்பாடு விவசாயத்தில் முதன்மை பெற்றது. இக்காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட மின்னாற்றல் பயன்பாடுதான் கிராம வளர்ச்சி குறித்த திட்டமிடுதலில் முக்கிய பங்கு வகித்தது. 1973 இல் மேற்கு ஆசிய பிரச்சனைகள் எழுந்தன. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் சங்கம் உருவாக்கிய நெருக்கடியின் பாதிப்பு பாரத கிராமங்களின் ஆற்றல் குறித்த திட்டமிடலை பாதித்தது. ‘ இவ்வாறாக பல ஆண்டுகள் ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாத எரிசாண வாயு தொழில்நுட்பம் மீண்டும் அவர்களின் கவனத்தை கவர்ந்தது எனில் அதற்கு இந்த பெட்ரோலிய இறக்குமதி சிக்கலுக்குதான் நன்றி சொல்லவேண்டும் ‘ என்கின்றனர் பிரசாத் மற்றும் ரெட்டி (Economic Political Weekly August, 1974). 1975 இல் அகில் இந்திய ஒருங்கிணைக்கப்பட்ட எரிசாண வாயு செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. 1978 இல் கோபார் வாயு ஆராய்ச்சி மையத்தில் (உத்தர் பிரதேசம்) நிலைத்த அரைகோள கூரை (Fixed Dome) வடிவ ‘ஜனதா ‘ எரிசாண வாயுகலன் உருவாக்கப்பட்டது. 1980-81 இல் எரிசாண வாயு செயல்திட்டம் அரசின் பொருளாதார திட்ட அமைப்பில் இணைக்கப்பட்டது. 1981 இல் தேசிய எரிசாணவாயு பயன்பாட்டு மேம்பாடு செயல்திட்டம் உருவாக்கப்பட்டது(NPBD: National Programme for Biogas Dvelopment). NPBD 1985 முதல் 1990 வரை ஆறு கலன் அமைப்புகளை ஏற்று பிரபலப்படுத்தியுள்ளது. அவையாவன்:

1. செரிப்பான் முன்வடிவமைக்கப்பட்ட பெரோ சிமண்டால் ஆன கலன்கள் (வடிவமைப்பு: அமைப்பு பொறியியல் ஆராய்ச்சி கழகம், கசியாபாத்)

2. பைபர் கிளாஸ் மற்றும் மீள்உறுதியூட்டப்பட்ட (reinforced) பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வாயு சேகரிப்பு கலம் கொண்ட கலன் (கதர் கிராம தொழில்கள் ஆணைக்குழு, மும்பை)

3. இரும்பால் செய்யப்பட்டு பாலிதீனால் மூடப்பட்ட செரிப்பான் கொண்ட கலன் (தனியார் நிறுவனம்)

4. கூம்பு வடிவ செரிப்பான் மற்றும் கோள வடிவ மேலமைப்பில் எரிசாண வாயு சேமிப்பு வசதி கொண்ட கலன்: பிரகிருதி மாதிரி (ஐக்கிய சமூக பொருளாதார மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டம்: UNDARP,பூனா)

5. நீள்வட்ட வடிவ அரைகோள மேலமைப்பு கொண்ட செரிப்பான் உடைய கலம்: தீனபந்து கலன் மாதிரி (AFPRO தன்னார்வ அமைப்பு)

6.தீனபந்து அமைப்பினை மேலும் கட்டுமான செலவினை குறைக்கும் மற்றும் நீர் தேக்க கால அளவினை குறைக்கும் அமைப்பு வின்காப் (WINCAP) மாதிரி (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)

இந்திய அரசின் கணக்குப்படி இந்த சாணஎரிவாயுகலன்களால் சேமிக்கப்படும் விறகுகளின் மதிப்பு ஆண்டொன்றுக்கு 4 x 10^9 ரூபாய்கள். TERI யின் ஆய்வு அடிப்படையில் 1 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட எரி சாண வாயு கலனுக்கு 25 கிலோகிராம் சாணம் தேவை படுகிறது. அதே 25 கிலோ சாணம் நேரடி எரிபொருள் பயன்பாட்டில் உருவாக்கும் பயன்படுத்தப்பட முடிந்த ஆற்றல் 1046 கிலோ கலோரிகள் என்றால் எரி சாண வாயு கலன் மூலம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் கிடைக்கும் பயன்படுத்தப்பட முடிந்த ஆற்றல் 2592 கிலோ கலோரிகள். அது போக 10 கிலோ உலர் உரமும் கிடைக்கும்.

தீனபந்து கலன்

‘ஜனதா ‘கலன்

மிதக்கும் சேகரிப்பு கலம் கொண்ட கலன் (KVIC)

எரிசாண வாயு கழிவின் பயன்கள் மற்றும் கிராம பொருளாதார மேம்பாட்டில் இதன் முக்கியத்துவம் ஆகியவற்றை அடுத்த பகுதியில் காணலாம்.

-அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்