அக்கினிப் பூக்கள் – 5

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

சி. ஜெயபாரதன், கனடா



சிறு தவறிழைத்த பெண்ணுக்கு
அறுபது சவுக்கடி !
நிரபராதி என்று வாய் திறந்தால்
அறுபதடி நூறாகும் உலகமடி
ஞானப் பெண்ணே !

மன்மதன் தெருவில் நடந்தால்
ஜன்னலில் பார்ப்பது மங்கை !
ஊர்வசி நளினமாய்ப் போனால்
கூர்ந்து நோக்குவது ஆணா ? பெண்ணா ?
ஞானப் பெண்ணே !

கள்ளக் காதலில் காயப்படுவள்
கன்னியா ? அல்லது காதலனா ?
வெள்ளைக் காரனாய் மீள்வது காதலன் !
களங்கக் கருப்பியாவது பெண்ணொருத்தி
ஞானப் பெண்ணே !

வெள்ளையும், கருமையும் பின்னி
விளையாடும் போது
வெண்மையில் கரும்புள்ளி பார்ப்பதா ?
காரிருளில் மின்மினி காண்ப தறிவா
ஞானப் பெண்ணே ?

“கடவுள் இல்லை,” என்று மேடையில்
கத்தினார் கருப்புச் சட்டைக்காரர் !
“மூடருக்கு அறிவைக் கொடு,” என்று
சூடம் கொளுத்துவாள் சுவாமிக்கு மனைவி
ஞானப் பெண்ணே !

தங்க ஊசி குத்தினால் வலிக்குமா ?
தடவிக் கொள் வலித்தால் !
பொங்கி வரும் குருதியை
நக்கிக் கொள், மருந்தில்லை
ஞானப் பெண்ணே !

++++++++
[S. Jayabarathan (jayabarat@tnt21.com)] December 17, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா