அக்கினிகாரியம்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இன்றைக்கு மீண்டும் அந்த நாள் வந்திருக்கிறது.

ஒரு சனவரிமாதத்தில் அந்த நாள் எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம்பழச் சாறு; இளநீர், அன்னம், விபூதி, சந்தணம், பத்ரோதகம், கும்போதகம் இவற்றை வரிசைப்படி அபிேஷேகம் செய்துவிட்டுத்தான் பிறந்தது. ஆனால் முடிந்தபோது கற்பூரதீபம் போல் எரிந்து எவ்வித மிச்சமுமின்றி, அவளை மட்டும்( ?) துப்பி விட்டுப் போய்ச்சேர்ந்துவிட்டது .

அலாரம் அடிப்பதற்கு முன்பாக எழுந்துவிட்டிருந்தாள். கடிகாரத்தின் இரு முட்களும் ஆறிலிருந்தன. அவைகளின் தழுவலிலும், இவளைப்போலவே எழுந்திருக்கும் கணத்திற்கான காத்திருப்பு. மெல்லக் கட்டிலிலிருந்து, போர்வையை விலக்கிக்கொண்டு தன் அருகாமைகளுக்கு இடையூறில்லாமல் எழுந்தாயிற்று. குறிப்பாக ராமனாதனை எழுப்பி விடக்கூடாதென்பதில் அக்கறை. இப்படி எழுந்து, நின்று, அலைந்துகிடக்கும் கூந்தலைத்தட்டிப், பின்வாங்கி, சுருட்டி, இறுக்கமான கொண்டையாக்கிய நேரத்தி ல்; அவளது பார்வை தனது பாரியவீச்சை முழுவதுமாக அவன்மீது கிடத்தியிருக்கும். விழி ப்பும் தூக்கமுமாய் கட்டிலில் கிடக்கும் சூட்ஷமவுடல் ராமனாதனை அவளுக்குப் பிடிக்கும். சன்னலைத் திறந்து வைத்தாள். வெளியே, விழித்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்த வி டியல், சன்னல் திறப்பிற்குக் காத்திருந்ததுபோல் அறைக்குள்ளே பிரவேசித்துவிட்டது. சன்னலை ஒட்டிநின்ற முருங்கை மரத்தின் இலைகளும் பூவும், காலைக் காற்றோடு கலந்து, உரிமையாய் இவள் நாசிக்கு வாசத்தை ஊட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கி ன்றன. அறை முழுவதும் மங்கிய வெளிச்சத்தில் அடையாளம் காட்டப்படும் நடுத்தரவர்க்கச் சேமிப்புகள். மேசையில் அரையிருட்டில் கை வலிக்க, காப்பி மணக்க எழுதித் தீர்க்கும் ராமனாதன். திரும்பவும் கட்டிலைப் பார்க்கிறாள். அங்கே பொய்யாய், விலாவில் முழங்கால் இடிபட, இவளைச் சந்தோஷப்படுத்துவதெற்கென்றே சயனித்திருக்கி ன்றான். ‘அப்போ மேசையில் எழுதிக் கொண்டிருக்கும் ராமனாதன் யாரென ? ‘ உங்களுக்குச் சந்தேகம்; அப்படித்தானே ? இப்போதெல்லாம் நளினிக்காக இரண்டல்ல, மூன்று, நான்கு, ஐந்தென ராமனாதன்கள் முளைக்கின்றார்கள். அவன் ஆயர்பாடிக் கண்ணன். அவதாரமெடுப்பவன். அவர்களிலொருவன் இவளுக்கான கோகுலத்தில் வீரதீரசெயல்கள் செய்பவன் – கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடிப்பான், பூதனை வதம்செய்வான். மற்றொருவன் இவளிடம் பால், தயிர், வெண்ணெய்த் திருடி கள்ளத்தனமாக உண்பவன். இன்னொருவன் இவளது சேலைகளைத் திருடி மரத்திலேறி மறைந்துகொள்பவன்.

மீண்டும் பார்வைக் கட்டிலுக்குத் திரும்புகிறது. அவள் பார்வைக்கு ஈடுகொடுத்து, விடியலும் ராமனாதனைத் தீண்டுகிறது. அறையில் சன்னமான வெளிச்சம், இருட்டை விலக்கிக் கொண்டு பரவுகின்றது. சிலவிடங்களில் சிவந்த மஞ்சட் புள்ளிகளாய் சூரியனின் கதிர்கள். ஸ்விட்சைத் தட்டி ஒளியைத் தெளித்து, அறையில் எஞ்சியிருக்கும் இருட்டினை விரட்ட நளினிக்கு மனமில்லாததற்குக் காரணமிருந்தது. பகல் இருளுடன் கலக்கும் இம்மாதிரியான நேரங்களிற்தான் படுத்திருக்கும் ராமனாதனுக்கு தேஜஸ் கூடிவி டும். இதுபோன்ற காலைகளிற்தான் ராமனாதன் அணைப்புகளில், அவனுடலில் சுரக்கும் மணங்களில் போதைகண்டிருக்கிறாள். பழைய நினைவுகள் நெருப்புத் துண்டங்களாய், விழுங்க விழுங்க, வரிசையாய் தொண்டையை அடைத்துக்கொள்ளக் கண்கள் வெந்நீர்ச் சுரப்பிகளாகின்றன. மீண்டும் கட்டிலை நோக்கிய பார்வை. வெள்ளைத் தலையணைக்குப் பொருந்தாவகையிற் கலைந்து கிடக்கும் ராமனாதனின் கறுத்த கேசம்.

‘நளினி நில்லுங்க..! உங்ககிட்டப் பேசணும். ‘

‘என்ன பேசணும் ? ஆபீஸ்லதான் நாள் முழுக்க நீங்களும் நானும் பேசுவதற்குண்ணு ஆயிரம் காரணங்களிருக்கே.. ‘

நிமிர்ந்து பார்த்தாள். அலுவலகத்தில் சக ஊழியனென்றாலும், இன்றைக்கவன் புதியவனாகத் தெரிந்தான். எட்டாத உயரத்திலிருந்தான். நிமிர்ந்து பார்க்கவேண்டியி ருந்தது. முன்தலை கேசத்தை இழந்திருக்க, முகத்தை வழித்துக்கொண்டு, சிரித்தால் அறி யமுடியாத முகம்.

‘இல்லை நளினி. இது வேற. கொஞ்சம் பெர்சனல். ‘

‘புரியலை. ‘

‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. ‘

‘இதுக்கு என்ன அர்த்தம்னு விளங்கலை ‘

‘என்ன விளங்கலை ? ‘

‘என்னை மாதிரி முதிர்கன்னிகளிடம் பிடிச்சிருக்குன்னு சொல்றவனெல்லாம், மறுவினாடியே, எப்போ படுக்கலாங்கிறான். ‘

‘…. ‘

‘மிஸ்டர் ராமனாதன்! கொஞ்சம் ஓவராப் பேசறேனா ? இங்கே பாருங்க.. என் வயசு, உடம்பு எல்லாமே ஓவர்தான். உபாதைகளால ஓடிப் போகிற வயசெல்லாங்கூடக் கடந்து போச்சு. அப்படியே உபாதைகள் வந்தாலும், இருக்கவே இருக்கு ஒரு குடந்தண்ணீர். தலையில் ஊத்திண்டு, ‘ஸ்ரீ ராமஜெயத்தை ‘ பக்கம் பக்கமா எழுதி முடிச்சுடுவேன். அப்படியும் அடங்கலைன்னா, கல்யாண வயசுல இருக்குற என் தங்கைகள்ல எவளாவது ஒருத்தியைக் கட்டிப்பிடிச்சுண்டு படுத்துக்குவேன். ‘

‘இந்தமாதிரியெல்லாம் நீங்க பேசுவீங்கண்ணு நினக்கலை. ‘

‘ என்ன பேசிட்டேன். உங்கள மாதிரி ஆண்களோட மனசுல இருக்கிற வி காரத்தை படிக்கமுடிஞ்சதால சொன்னேன். மனசைத் தொட்டுச் சொல்லுங்க ? என்னைப் பிடிச்சிருக்குங்கிற சொல்லுக்கு, என்னோட உடம்பு காரணமில்லையா ? பிடிச்சி ருக்குண்ணு சொல்றது, கோவில் கட்டி கும்பிடவா ? படுக்கவைக்கணும், அவிழ்க்கணுங்கி ற சங்கதிகளேதும் அதிலில்லையா ? ‘

‘இருக்கலாம்.. ‘

‘என்ன இருக்கலாம் ? உலகிலுள்ள எண்பத்துநான்கு லட்ஷம் ஜீவபேதங்களுக்கும் உடம்பினை அளித்தது, அவைபோகித்து சந்ததி விருத்திச் செய்யவாமே ? நீங்க அறிஞ்சதில்லையா ? ‘

இவளது பார்வை தரிசனத்திற்காகக் கட்டிலிற் கிடக்கும் ராமனாதனுக்கு, நாற்பது வயதிலும் முகத்தில் தெரிவது சிறுபிள்ளைத்தனம். இமைகள் கீழிறங்கிப் பதியமி ட்டுக் கிடக்கின்றன. பொய்யான உறக்கம். இவளை மீண்டும் பக்கத்திற் கிடத்தி கனவுகான அலையும் பிசாசு மனிதன். கனவோ நனவோ அவளது பயணமுழுக்க அவன். வாயைத் திறந்துகொண்டு ஊமைக் குரலில், புரியாத வார்த்தைகளி ல் முனகுகிறான். அவனை அப்படியே வாரி அணைத்து தொட்டிலிலிடும் மனம், அவளி டம். ஸ்டவ்வைப் பற்றவைப்பதற்கு முன்னால் மனம், மீண்டும் அவனிடம் லயிக்கிறது. இம்முறை பொய்யாகவோ, மெய்யாகவோ மெல்லிய குறட்டை.. போர்த்தியிருந்த போர்வை, அவன் செயல்களுக்கேற்ப நெளிந்தும், நீட்டியும் இணங்கிப் போகி ன்றது. அவளது பார்வை சூன்யத்தில் இப்போது இன்னொரு ராமனாதன். ‘அவன் ‘ இன்னமும் கட்டிலிலேயே பொய்யாய்க் கிடக்க ? இவன் வேறு. இவள்பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடர்த்தியான ரோமக் கண்கள் கொண்ட கால்களை கட்டிலிலி ருந்து இறக்கி, பாதங்களைத் தரையில் பதித்து, இவளை நோக்கி எடுத்தடி வைக்கி றான். அவனது கைகள் நீண்டு, இவளை வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக நன்கு பிரிந்தி ருக்கின்றன. மெல்ல நெருங்கி, அவனுடல் செலுத்துகின்ற, உணர்ச்சி மின்சாரம் அதி ர்வுகளாய் இவள் நரம்புகளில் பரவுகின்றது. தழுவிக்கொள்கிறான். அவனது குவிந்த உதடுகள், இவள் கழுத்தெங்கும் பயணித்து வெதுவெதுப்பான சருமத்தின் கைப்புச் சுவையை மனதிற்குள் வாங்கிக்கொள்கின்றன. மெல்ல அவளைத் தூக்கிச் சென்று கட்டிலி லிடுகிறான். அவளது இடையும், கால்களும் விரிந்துகொடுக்க, உடற்காதலை ஊடகப்படுத்துகிறான். கண்களை இறுகமூடி மனவலியையும், உடல் வலியையும் ஒருசேரக் கொண்டுவரும் இதுபோன்ற கற்பனை நினைவுகளை விரட்டமுயற்சித்துத் தோற்றுப்போனவளவள்.. இது ராமனாதனின் இன்னொரு பக்கம். விரட்டவிரட்டப் புண்ணைத் தேடும் ஈயாக அது மீண்டும்மீண்டும் மனதில் உட்கார்ந்துகொண்டு, இவளது பழசை ருசிபார்க்கிறது. ராமனாதனை எழுப்ப மனமின்றி, ஸ்டவ்வைப் பற்றவைக்கிறாள். பாலைக்காய்ச்சி, ‘சன்ரைஸ் ‘ காப்பித் தூளைக் கலந்து, இதமான சூட்டுடன் குடித்தாயி ற்று.

கண்ணாடியிற் பார்த்துக்கொண்டாள். இவளை போலவே காலம் பயணித்தி ருந்த கண்ணாடி. இளமைக்கும் முதுமைக்கும் இடையிலிருக்கும் இவளுடலைப் பரி தாபமாய் பிரதிபலிக்கிறது. முகத்தில் வயதின் தடயம் வரிகளாகப் பதிய ஆரம்பிக்க, அப்பதி வுகளுக்கிடையில் வாழ்க்கை தன்பங்கிற்குக் கசப்பினை நிரப்பியிருயிருந்தது. தூக்கமற்றக் கண்கள் கருவளையங்களிற் சிறைபட்டு ஒடுங்கிக் கிடந்தன. வட்டமாய் விறைத்திருந்த முலைகள் தளர ஆரம்பித்துவிட்டன. கால்களும் இடுப்பும் வயதின் கனத்தில் பிசக ஆரம்பி த்துவிட்டன. நரைக்கவாரம்பித்தக் கூந்தலை நடுவகிடெடுத்துப் படியவாரி, இரண்டாகப் பிரி த்து ஒற்றைச் சடையாக்கியதை, முன்புறம்கொண்டுவந்து கண்ணாடியைப் பார்க்க, ஒழுங்காய் வந்த திருப்தியில் பின்னலை பின்னால் அனுப்பினாள். கொஞ்சமாகப் பவுடர் போட்டுக்கொண்டாள், கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வயது மீண்டும் கீழ்நோக்கி ப் பயணித்தது. என்னவோ முதலிரவுக்குத் தயாராகும் பெண்ணைப்போல மனதில் எதி ர்பார்ப்புக்கள். கண்ணாடிக்கருகே மாடத்தில், சிங்கார் சிவப்புச் சாந்தில் தோய்ந்திருந்த குச்சியை, இரு புருவங்களுக்குமிடையே கொண்டுபோய் நெற்றியின் மத்தியில் தொட்டு எடுத்தாள்.

‘நளினி இந்தப் பொட்டு உன்னோட நெற்றிக்கு எப்படி பொருந்துது தெரி யுமா ? தீப்பொறி, நெற்றியில் விழுந்தமாதிரி ‘

‘…. ‘

‘என்ன ஆச்சு ? இப்படி வாய் மூடிண்டு, மெளனமா இருந்தா என்ன அர்த்தம் ? ‘

‘வேண்டாம் ராமனாதன். நான் பேசப்போறதில்லை. என்ன பேசறது ? இப்பவும் என்னால நம்ப முடியலை. கனவுகள்னு மனசு சொல்லுது. புரோகிதரப்பா. வடாம் பிழிந்து ஓய்ந்துகிடக்கும் அம்மா. வயிற்றுப் பசியைத் தீர்க்க முடிஞ்சுதோ இல்லையோ உடற்பசியைத் தீர்த்துகிட்டதுக்கு ஆதாரமா நாங்க ஒன்பதுபேர். அம்மாவின் நூற்புடவையைக் கிழித்து மாரை மறைக்கப் பழகி, சூரிய ஒளிக்காக சன்னலை ஒட்டி வளரமுயற்சித்து, வேரில் நீரின்றி முடங்கிப்போன நேரத்தில்தான் பிருதிவிராஜனாக நீங்கள் சிறையெடுக்க வந்திருக்கிறீர்கள். பந்தல் போட்டு, வாழைமரம் கட்டி ஜமுக்காளத்தி ல் நடந்து, மருதாணியிட்டக் கரத்தினால் உங்களைப் பற்றிக்கொண்டு அக்னியை வலம்வரமுடியும்ணு நான் நினைச்சு பார்த்ததில்லை. பதில் சொல்லத் தெரியலை. ‘

நளினி இரண்டாவது முறையாகக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டாள். சற்றுமுன்புவரை உரையாடிக்கொண்டிருந்த ராமனாதன் எங்கேபோய்த் தொலைந்தான். எட்டிப்பார்த்தாள். கட்டிலைவிட்டு எழாமல் இன்னமும் முடங்கிக் கிடக்கிறான். இந்த நாள் அவர்களுக்கான நாளென்பதைக்கூட அறியாமல் அப்படியென்ன உறக்கமோ ? வெளி ப்பட்ட கோபம் அவன் முகத்தைக்காணும்போது கரைந்து போகிறது. கதவை மூடிக் கொண்டு வெளியே வந்தாள்.

காலைக்காற்று இதமாகவிருந்தது. களங்கமற்றவானமும் இறைந்துகிடந்தமேகமும் எதனையும் புதிதாக அவளிடம் சேர்த்துவிடவில்லை. இறைக்க இறைக்க ஓடி, குடை பி டித்து காத்திருக்க, திருவரங்கம் செல்லும் டவுன்பஸ் மார்பிலடித்துக்கொண்டு பெருமூச்சுவி ட்டபடி வந்து நின்றது. கும்பலில் ஒருவளாய் இவைளையும் உள்வாங்கிக்கொண்டது. காலையிலேயே சோர்ந்திருந்த சகபயணிகளை விலக்கிக்கொண்டு ஓர் ஓரமாய் நின்றாள். கைப்பையை மார்போடு அணைத்துக் கொண்டாள். பஸ் தெப்பக்குளம் சாலையில் சீராக ஓடிக் கொண்டிருந்தது. வெளியே தெரிந்த சினிமா விளம்பரத்தில், கமலஹாசன் மும்பைப் பெண்ணின் உதட்டுச் சாயத்தை உறிஞ்சிக் கொண்டிருக்க; கீழே நகராட்சி குப்பைவண்டி.. பஸ் கிருஷ்ணன்கோட்டை வாசலைக் கடந்து கீழ்வாசலை நெருங்க பச்சைத் துண்டுபோட்ட விவசாயிகள் காவிரித் தண்ணீர் கேட்டு கீற்றுப்பந்தலும், பானைத்தண்ணீருமாக உண்ணாவிரதம் நடத்துகிறார்கள்.

‘உனக்குப் பத்திரிகை பிடிச்சிருக்கா. திருச்சியில அடிச்சது. எப்படி வந்தி ருக்குப் பாரு. வர சனிக்கிழமை திருச்சிக்கு இரண்டுபேரும் போறோம். ஆபீஸ்ல சொல்லி ட்டேன். ஜவுளிகள் எடுக்கணும். உங்காத்துல யார்யாருக்கு என்ன என்னண்ணு மறக்காம லிஸ்ட் கொண்டுவா. முன்னாடியே சொன்னதுதான். எனக்காக மோதிரம், ரி ஸ்ட்வாட்சுண்ணு, உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் வேண்டாம். எல்லாமே எங்கி ட்ட இருக்கு. மாங்கல்யம் உட்பட எல்லாம் நான் பாத்துப்பன் ‘.

‘…. ‘

‘நாம நினைச்சமாதிரியே ராஜகோபுரத்துக்குப் பக்கத்திலேயே மண்டபம் கி டைச்சதுல எனக்குப் பரம சந்தோஷம். என்ன… கொஞ்சம் சின்னதாப் போச்சு. அதிக மனுஷாள் வர்றமாதிரியிருந்தா,. கீழே இடம்போதாது. மாடியில வேண்டுமானா கீற்றுக் கொட்டகைப்போட்டு சமாளிச்சிடுவோம். வீடியோவுக்கு இன்றைக்குத்தான் சொல்லமுடிஞ்சுது. மறந்தேபோச்சு… ‘

‘பாவி!…. மறந்திருக்கலாமேடா! ‘

பஸ் ஹாரன் அடித்துக்கொண்டு குலுங்கி நின்றது. தேரடியில் இறங்கி க்கொண்டாள்.

அருகிலிருந்த பூக்கடையில் ஒரு மாலையும் பூச்சென்டும் வாங்கி க்கொண்டாள். மாலையைச் சூடி, பூச்செண்டை வலதுகரத்திலேந்திக்கொண்டு. நிமி ர்ந்தாள். நேரெதிரே அவள் தேடிவந்த கல்யாணமண்டபம். இங்கேதான் எல்லாம் நடந்தது சஙகற்பம், புண்யாவாசனம், பஞ்சகவ்வியம், ரட்ஷாபந்தனம், அங்குரார்ப்பணம், கும்ப பூஜை, அக்கினிகாரியம்…

நன்றி: ‘மரத்தடி ‘

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா