அகம் அறி

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ப்ரஹ்மபுத்ரா



நீ வாழ்ந்த அகம்
உன்னில் ஊறியது
உனக்காக தன்னில்
மாறுதல்களை ஏற்கும்
உன் வருகைக்காகவே
காத்திருக்கும்

உன் பொருள்களை
அவை அவை
இருக்க வேண்டிய இடத்தில்
நீ வைக்கா விட்டாலும்
யாராவது எடுத்து வைப்பார்கள்
உனக்கு தெரிவிப்பார்கள்
உன்னை தெரிவிக்க மாட்டார்கள்
அது உன் அகம்

நீ போனதிலிருந்து உனக்காக
துடிப்புகளின் தனிமையை
ஒரு விதமாக ஏற்றுக்கொள்ள
முயலும் உன் அகம்
நீ அறிந்தாலும் அறிய
மறந்தாலும்
என்றும் உன் அகம்

நீ அறிந்தே கொள்ள
வேண்டியது உன்
புது அகம்
புகு அகம்

உன் கணவனை
அறிந்து கொள்ள
உதவுவதே
இந்த அகம் தான்

நீ காதலித்தே
மணந்து கொண்டிருந்தாலும்
உன் அகம் தான்
அவன் வாழும் வகை காட்டும்
ஒரு விதத்தில்
காதலில் அறிந்து கொண்டவனை
மறந்து
இந்த அகம் உடையானாக
அறிந்து கொள்வது உனக்கு
புதுமையும் வலிமையும்
ஒரு சேரத்தரும் அனுபவம்

வீட்டுக்கு இரு முகங்கள்
ஒரு புறம்
ஒரு அகம்
எப்பொழுதும் உண்டு
இரண்டும் அறிய வேண்டிய முகங்கள்

உள்ளுணர்வின் விழிப்பு
ஒன்று இருந்தால் போதும்
ஒவ்வொரு விஷயமும்
பார்வையில் படும்
தகவல்களாக
தேவைகளாக
தவிப்புகளாக
எதிர்பார்ப்புகளாக
ஒரு வீட்டின்
செங்கல்களையும்
சிமெண்டையும்
ஓடுகளையும்
கடந்த அகம்
அறியப் பட வேண்டியதொன்று

அகத்தின் ஒரு
மகத்தான தோற்றம்
காலத்தின் பரிமாணத்தின் மூலம்
கிடைக்கும்

வீட்டில் வாழ்ந்த தலைமுறைகள்
வீட்டில் வளர்ந்த உறவுகள்
வீட்டை வாழ்த்திய சுற்றங்கள்
வீட்டைத் தேடி வரும் நட்புகள்
காலத்தின் கோலங்களாக பலவும்
காலம் காலமாக சிலவும் என்று
ஒரு பரிணாமம்

இவற்றை உணர நீ
போட்டோ ஆல்பங்கள் இலிருந்து
வீட்டின் பல அறைகளில்
உறைந்த காலத் துளிகளாக
உறையும் போட்டோக்கள் வரை
புதிய உறைவிடம்
பகிரப்படும் சுய சரிதைகளில் இருந்து
பகிரப்பட மறந்த வாழ்க்கைகள் வரை என்று
எவ்வளவோ அறியக் கிடைக்கும்

காலத்தின் வேறு
ஒரு கோணம்
தினசரி அலுவல்களின்
குடும்ப வாழ்க்கையின்
அன்றாட நெருக்கடிகளில்
நெருடல்களில்
புதைந்து இருக்கும்
இவற்றுடன் பழகாத
ஒரு புது உறவின்
பார்வைக்கு அந்த கோணம்
எளிதில் கிடைக்கக் கூடும்

இவற்றை
நேர்த்தியாகவும்
இன்னும் அழகாகவும்
எல்லோருக்கும் உற்சாகம்
கொடுப்பதாகவும்
செய்ய விரும்பிப்
பார்க்கும் பார்வைகளுக்கு
இந்த அகம்
அகத்தின் அடி நாதம்
ஒரு சில நாட்களில்
அத்து படியாகும்

ஒரு விதத்தில்
அவன் அகம் அறியும் முன்னர்
அகத்தின் அகம் அறிந்தால்
அவன் தலைவனாகாமல்
தொண்டன் ஆகி விடுவான்

தான் முழுமையாகவும்
தன் வேர்களின் பலத்தின்
முழு உணர்தல் ஒன்றுடனும்
அணுகப் பட்டதில்
அவனே அவன் அகம்
அறிவதில் ஒரு புத்துணர்வு பெறுவான்

அவன் வாழ்க்கையில்
இந்த திருமணம் சில
சலசலப்புகள் வரும்
என்ற ஒரு அச்சம் இருந்திருக்கும்

அவற்றை தன் குடும்பத்தினர்
எப்படி ஏற்றுக் கொள்வார்களோ
என்று அவனுக்குள் இருந்த
அச்சம் விலகி
அவன் ஒரு புதிய அத்தியாயம்
எல்லோருக்கும் இருக்கிறது
என்று உணரும் பொழுது

அது அவனுக்கும் ஒரு
புது அகமாக தோன்றும்

அந்த
அகம் அறி!


gopalan.parthasarathy@gmail.com

Series Navigation

ப்ரஹ்மபுத்ரா

ப்ரஹ்மபுத்ரா