குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

நாவிஷ் செந்தில்குமார்


“அடியே” என்று தொடங்கும்
அப்பாவின் அழைப்பொலியிலிருந்து
அம்மாவிற்கான
அடுத்த யுத்தம்
தொடங்கிவிடும்…

சாராய நாக்கிற்கு
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாது…
எப்படிச் செய்தாலும்
இல்லை ருசியென்று
காரணத்தோடு அடித்த அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்

எனக்காக
புத்தாடை கேட்கையில்
அப்பாவின்
நாக்கு கூசச் செய்யும்
பதிலால்
அம்மாவின் துன்புற்ற இதயம்
தூண்டில் புழுவாய்
துடிதுடித்துப் போகும்

நான் கால்சட்டை நனைத்த
இரவுகளை விட
அம்மாவின் கண்ணீரில்
நனைந்த இரவுகள்
ஆயிரம்

வீட்டையே விட்டு
வெளியே வராதவள்
அம்மா
எப்படியோ அவள்
சுதந்திரம் மட்டும்
களவு போனது…

தனக்கென ஒரு ஆசையும்
வைத்துக் கொள்ளாத
கற்காலத் தாய்
“உனக்கென வருபவளுக்கு
ஒரு குறையும் வைக்காதே”
எனச் சொல்லும் போது
முற்போக்குத் தாய்

எதற்குப் பிறந்தாள்?
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள்?
என்ற கேள்விகளுக்கு
இதுவரை விடையில்லை…
மஞ்சள் கயிறால்
வென்றவர் அப்பா
தோற்றுப் போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை மெல்லிய
தோளில் சுமப்பவளும்
அம்மா!

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்