“பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

இளைய அப்துல்லாஹ்


“நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.

போர் என்ற ஓநாயின்

பிடி உதறித் தப்பிய நான்

வாட்டும் குளிர் நாளில் கூட

வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்

நாடு வந்தேன்”

புலம் பெயர் நாடுகளின் தன்மையையும் அகதி வாழ்வின் குறிப்பையும் ஆறுவரியில் சொல்லிய கவிஞன்-வ.ஐ.ச.ஜெயபாலன்.

இலங்கை இனப்பிரச்சனையும் யுத்தமும் தமிழர்களை குளிர் தேசமெங்கணும் சிதறி வீசின.

சுவாத்திய ஒவ்வாமை, மொழிப்பிரச்சனை, கூடுபோன்ற வீடுகள், வெளியில் யாரையும் தெரியாது என்ற எல்லா வகையான அசெளகரியங்களையும் சுமந்து கொண்டு

கடத்த வேண்டியதான புலம் பெயர் வாழ்வு.

தமிழர் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களைப் பேண வேண்டிய இக்கட்டில் தமிழர்கள்.

இதில் புலம் பெயர்ந்ததோடு தமிழர் இலக்கியமும் புது வடிவம் ஒன்றை வேண்டிநின்றது.

உடல் புலம்பெயர்ந்தாலும் உள்ளம் என்னவோ எமது கிராமங்களுக்குள்ளும்,

கிளுவை வேலிகளுக்கு மத்தியிலும், பனங்கூடல்களுக்குள்ளும், வேப்பங்காற்றுக்குள்ளும், வெண்மணற் கிராமங்களுக்குள்ளும் தான் செருகிக் கிடந்தது, கிடக்கிறது.

புலம் பெயர் எழுத்துக்கள் எமது ஊர்மனைகளைச் சுற்றியே கருக்கொண்டன. யுத்தம் அகதி, சாதி, வாழ்வவலம், இடம்பெயர்வு என்பன புலம் பெயர் இலக்கியத்தின் பாடு பொருளாகின.

நேரில் பாராமல் ஈழத்து விடயங்களை எழுதுபவர்கள் பிழை செய்கிறார்கள் என்று ஒரு சாராரும், இல்லை எல்லாவற்றையும் நேரில் எழுத்தாளன் பார்க்க வேண்டாம் எழுதலாம் என்று இன்னொரு பகுதியினரும் சொல்லிக் கொண்டிருக்க புலம் பெயர் இலக்கியம் இன்னொரு வீச்சில் வந்து கொண்டே இருந்தது, இருக்கிறது.

மரியாதையான வேலை என்று எதனை ஊரில் இருக்கும் போது நினைத்தோமோ அந்த வேலைகள் புலம் பெயர்நாடுகளில் கிடைப்பது அரிது. சொந்த பந்துக்களுக்கு தொலைபேசியில் கேட்கும் காசு அனுப்புவதற்கு விறை குளிரில், வெள்ளைத் தோல்களின் எரிச்சல் ஆத்திரத்தில், மன உணர்வுகளுக்குள் சுருங்கிக் கொண்டு வேலை செய்யும் பொழுது எமது தனி மனித உணர்வுகளை இழந்து விடுகிறோம்.

வாழ்வில் எல்லா அவலங்களையும் சுமக்கும் படியாய் ஆனதே என்று யாரிடமும் நோகமுடியாது. விதி என்று விட்டு வேலை செய்கிறோம். சில வேளை மனத்துணிவு வந்து எதிர்காலம் பற்றிய அடுத்த கட்டத்துக்கு போகிறோம்.

“சுதந்திர அடிமை” வாசுதேவன் எழுதியது.

வேலைக்களைப்பை சொல்லி ஆறுதலடைவதற்கும் யாருமில்லை. இரவு பகலாக வேலை. சில நேரம் 2 வேலை செய்தால்தான் ஊரில் உள்ள கடனை அடைக்க முடியும். வேலை, வேலை, வேலை ஊரில் உள்ள அக்கா, கலியாணம் முடிக்கும் வயதில் இருக்கும் தங்கச்சி, ஆச்சி, அப்பு எல்லோரும் நினைவில் நிற்க இடுப்பு ஓடிந்து போக வேலை செய்து ஈரோ அல்லது பவுண்ஸ் அல்லது பிராங் சேர்க்க வேண்டிய இக்கட்டான நிலமை. உணர்வுகளை வெண்பனிக்குள் புதைத்துவிட்டு அவலங்களை விழுங்கும் கதா மனிதர்கள்….

“உதிரும் இலைகள்” தா-பாலகணேசன் எழுதியது.

1992 களில் இந்தக் கதை எழுதப்பட்டாலும் தினம் தினம் வெளிநாடுகளில் நடக்கும் விடயம் இது. புலம் பெயர் வாழ்வின் உண்மையின் சாட்சி இது. எத்தனை மாமாக்கள் எத்தனை மாமிகள், எத்தனை உறவுகள் இங்கிருந்து அதட்டி காசு கேட்கும்.

உண்மையில் பதில் சொல்லத் தெரியாமல் தொலைபேசியின் “சிப்பை” கழட்டி வீசி விட்டு திரியும் தமிழர்களைக் கண்டிருக்கிறேன்.

மிக நுண்ணிய மன உணர்வுகளைச் சுண்டியிருக்கிறது இது. மூன்று நகரத்தின் வாழ்வின் சுவடுகள்-ஒன்று யாழ்ப்பாணம் மற்றது கொழும்பு அடுத்தது அகதியாய்ப்போன பாரிஸ்.

“மூன்று நகரங்களின் கதை” க-கலாமேகன் எழுதியது.

ஒரு தலைமுறையின் வாழ்வு மாறி மாறி எங்கு போகிறது. ஊரில் நடக்கும் செத்த வீடுகளைக்காட்டி புலம் பெயர் நாடுகளில் அகதி அவலம் தேடும், அந்தஸ்த்தை தேடும் மனிதர்கள் பற்றிய விடயம். ஊரில் சண்டை நடந்தால் வெளியில் இருப்பவர்களுக்கு சந்தோஷம். அகதி காட் கிடைப்பதற்காக எந்த பிணத்தின் மீதும் நடப்பதற்கு தயார் என்பது தான் உண்மை.

“இதுவும் ஓர் இலையுதிர்காலம்” பாரிஸ் பார்த்திபன் எழுதியது.

சிறிய வயது புலம் பெயர்வாழ்வு, கொடுமை தான் வேலை கிடைக்காமை, கிடைத்தாலும் உரிய நேரத்துக்கு சம்பளம் கிடைக்காமை ஊரில் இருந்து அம்மாவின் கடன்கட்டும் எதிர்பார்ப்பு. வாழ்வை முன்னகர்த்த வழிதெரியாமல் அழுகின்ற மனிதர்கள்.

“அலையும் தொலைவு” கார்த்தி நல்லையா எழுதியது

சில தவிர்க்க முடியாத அந்தரங்கள் வந்துவிடும். எவ்வளவு பெரிய அல்லது வளர்ச்சியடைந்த நாட்டிலும் சில ஒழுங்குச்சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சிறிய விடயத்திற்கான பெருந்துன்பம் இது.

“கிய+ வரிசை” புவனன் எழுதியது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்துவது ஒரு பெரிய வியாபாரம். கென்டயினர், ரயில், கார், பஸ்ஸின் சாமான் வைக்கும் தட்டு போன்ற பகுதிகளில் வைத்து ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவார்கள். இது பெரிய ஏஜன்சிகள் மூலம் நடக்கும் சட்டவிரோதம். ஏழை எளியதுகள் நொந்ததுகளிடம் பணம் பறிக்கும் ஒரு வழி முதலில் ஒரு தொகை பேசுவார்கள் பின்னர் அதிகமாக கேட்பார்கள். பணம் பறிப்பவர்கள் இவர்கள் முழு விடயங்களையும் ஒரு ரெலிபோன் உரையாடல் சொல்கிறது நல்ல உத்தி.

“பொறி” செந்தமிழர் உடையது.

“புலம் பெயர் நாடுகள்” என்று அகதிகளாய் தமிழர்கள் வாழும் நாடுகளை தமிழர்கள் பாவிக்கத் தொடங்கி, நீண்ட நாட்களாகிவிட்டன. ஆபிரிக்க இனத்தவர் மீது எமக்கு ஒருவகை பயம். அவர்களைக் கண்டால் வெறுப்பு. அவர்களின் தூக்கலான பேச்சுப்பிரயோகம் இதனைக் கேட்டால் ஒரு வகை மதியாமை. ஆனால் அவர்களும் நல்ல மிக நல்ல மனிதர்கள் தாம். தோற்றம் மனிதர்களை அளக்க சரியான தல்ல. புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரர் எங்களை வெறுக்க நாங்கள் ஆபிரிக்கர்களை வெறுக்கிறோம் அவ்வளவுதான்

“மலர்வு” சிவலிங்கம் சிவபாலன் உடைய சிறுகதை

எதுவுமே நிரந்தரமில்லை. எப்பொழுதும் எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த நாம் பிறந்த கிராமத்தை மண்ணை விட்டு விட்டால் நாடோடிகள் தான். யார் நாடோடிகள் நாமா அவர்களா என்பது கேள்வியல்ல. விடை எது ? இன்னும் பல அவலங்களுடன் தொக்கியே நிற்கிறது. வாழ்வின் அனுபவங்களைத் தேடியபடி வாழ்க்கை.

“நாடோடிகள்” எழுதியவர் கி.பி. அரவிந்தன்

எல்லாக் குறிகளும் சரியானவை தான் என்ற காலத்துக்கப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பொய். இப்பொழுதும் எங்கும் வியாபித்து தீர்மானிப்பவை துப்பாக்கிகள் தான். அவற்றையும் மீறி துணிவை வரவழைத்துக் கொண்டு வாழ்வின் இருப்பிடம் தேடி ஓடிய ஜனநாயக நாடுகளில் என்ன உத்தரவாதமுடன் உயிர் கழிப்பது என்பது கேள்வியே உண்மைகளை ஓரளவாவது சொல்ல முடிவது சுபமே. நின்று கொல்பவையும் உண்டு.

“பரிசுத்த ஆவி” க. கலைச்செல்வன் உடையது.

வாழ்க்கை பற்றிய தெளிவும் உறவுகள் பற்றிய புரிதலும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்றன என்கின்றனர் சிலர். இல்லை வெறும் மாயை என்கின்றனர் சிலர். எதையும் இலகுவாக எடுக்கும் ஐரோப்பியர் சரியா எதையுமே மனதில் போட்டு அலட்டி உணர்ச்சிவசப்பட்டு கவலையில் அழுது கிடைக்காததற்கு ஏங்கி பைத்தியம் பிடித்து அலைந்து… எது சரி என்பது உணர்வுகளின் தீர்ப்பு. சொல்வதானால் இன்னுமொரு அவலம் சுமக்கிறோமோ நாம்

“துளிர்ப்பு” எழுதியவர் ச. தில்லைநடேசன்

புகலிடத்து சீவியத்தில் சீரழிந்தது, இனமா ? பணமா ? பாசமா ? சுமையா ? அவலமா ? சிந்தனைகளைத் தொலைத்து விட்டு ஆளைக்கொல்லும் குளிருக்குள் வேலைக்குச் சென்றால் முதலாளிமாரின் ஏளனம் மனதை கொல்லும்-பிரெஞ், லண்டன், ஜேர்மனி என்று மட்டுமல்ல தமிழ் முதலாளிமாரும் இரக்க மற்றவர்கள் தான்.

“சிறைச்சாலை” மா.கி.கிறிஸ்ரியன் எழுதியது

காதல், மன ஒருமைப்பாடு, ஒருவரை ஒருவர் விரும்புதல் விட்டுக்கொடுத்தல் என்பது எல்லாம் கிராமப்புறங்களில் மட்டும் தான் சாத்தியப்படுகிறதா ? புலம் பெயர் மண்ணில் எமது தமிழ் மக்கள் ஆண்கள், பெண்கள் என்று காதலில் திளைக்க முடிகிறதா ? வெளிநாடு என்று வந்து விட்டால் இது பெரிய பிரச்சனைதானா ? கலாச்சாரம் என்றும் காதல் என்றும் உரிமைகள் என்றும் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றனவா ? தானாகவே சில நிர்ப்பதங்கள் வருகின்றனவா ? எத்தனையோ குடும்பங்களும் மனங்களும் குழம்பித்தான் போயுள்ளன. எமது ஆண்கள்-இளைஞர்கள் ஊரில் இருந்து தான் பெண் கேட்கிறார்கள்

“இடைவெளி” ரமேஷ் சிவரூபன் எழுதியிருக்கிறார்

புலம்பெயர் வாழ்வில் எத்தனையோ அனுபவங்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. அவற்றை சொல்ல வெளிக்கிட்டால் புதிய ஒரு வரலாறு எழுதலாம். சில சுவாரஸ்யமானவை. சில துக்கமானவை. சில எரிச்சலூட்டுபவை சில வாழ்விழந்தவை என்று நீளும். இது ஒரு உண்மையான சங்கதியாய் இருக்கிறது. புறநகரை நோக்கி வித்தியாசம் தேடி நண்பர்கள் பயணம் செய்வது எங்கும் உண்டு. “கோழி” தேடியது சிரிப்பாகவும் அனுபவமாகவும் இருக்கிறது.

“கோழியும் அய்ந்து நண்பர்களும் பல சாத்தான்களும்” சி.புஸ்பராஜா எழுதியது

சொந்த ஊரின் நினைவுகளைத் தாங்கிக்கொண்டு எந்த நேரமும் வாழத்தலைப்படும் ஒரு தலைமுறையும் அது என்னவென்று தெரியாத மறு தலைமுறையும். மோதல், காதல், அன்பு, விட்டுக்கொடுப்பு என்று குடும்பங்களின் வாழ்வனுபவங்கள். சலிப்புற்ற புலம் பெயர் வாழ்வில் சலிப்பையும் சொல்ல முடியாமல் நான்கு சுவர்களுக்குள்ளே வாழ்வை அசைபோடும் நிர்ப்பந்தம். அவசரம், உறவுகள், சில மகிழ்ச்சிகள் – ஊரைப்போல வருமோ… என்ற ஏக்கத்தோடு கழியும் எத்தனையோ வருடங்கள். சாகும் மட்டும் பெரியவர்களுக்கு ஏக்கம் ஆனால் அடுத்த தலைமுறை அலட்டிக்கொள்வதாக இல்லை எதற்கும்.

“விடுமுறைகள்” சு. கருணாநிதி எழுதியது

சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அப்பால் தமிழ் பிரசுரமாக வந்திருக்கும் “பாரிஸ் கதைகள்” பிரான்ஸ்ஸில் வாழும் 15 எழுத்தாளர்களின் அவ்வப்போது வந்த சிறுகதைகளை ஒரு தொகுப்பாக்கிய முயற்சி மிகவும் நன்று.

கி.பி.அரவிந்தனின் சிறுகதையினது ஓட்டம், செந்தமிழர் உடைய தொலைபேசிமாந்தர்களின் விறுவிறுப்பான உரையாடல், கலாமோகன் உடைய நுண்ணுணர்வுகளின் இழை, புஸ்பராஜாவினது நகைச்சுவை… பதினைந்துகளிலும் சிறப்பாக மனதை தொட்டுச் செல்கிறது.

பிரான்ஸ்ஸில் இருந்து வந்த காரணத்தால் பிரெஞ்சுச் சொற்கள் சிறுகதைகளில் வந்திருக்கின்றன. நல்லது.

அரவிந்தனுடைய முன்னுரை ஒரு வரலாற்றை பதிவு செய்திருக்கிறது. புலம் பெயர் வாழ்வின் ஒவ்வொரு நாடுகளிலும் இப்படி ஒரு சம்பவங்களும் விடயங்களும் நடந்தே வருகின்றன. அதனை சிறுகதையாளர்கள் துல்லியமாகவே தந்திருக்கின்றனர்.

இடைஇடையே உள்ள எழுத்துப்பிழைகள் வாசிக்கும் போது கஷ்டத்தைக் கொடுக்கின்றன. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் சொல்ல முடியாது.

அட்டைப்படம் பார்த்த முதல் பார்வையிலேயே என்னைக் கவர்ந்தது.

அரவிந்தன்! பிரான்ஸ்வாழ் இலங்கைத்தமிழர் முகம்களை எங்களுக்கு அறியத்தந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

நூல்: பாரிஸ்கதைகள்

தொகுப்பு: கி.பி.அரவிந்தன்

வெளியீடு: அப்பால் தமிழ் (ஜுலை 2004)

விலை: 150ஃஸ்ரீ

கிடைக்குமிடம்: வை. ஜெயமுருகன்,

அப்பால் தமிழ் பதிப்பகம்,

465இ கண்டி வீதி,

திருகோணமலை.

‘இளைய அப்துல்லாஹ் ‘- இலங்கை

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்