ஹே பக்வான்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

நாகூர் ரூமி


நான் அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

‘டாடி, பக்வான் டி.வி.லேர்ந்து யாரோ கூப்புடுறாங்க ‘

மகள் சொன்னபோது முதலில் புரியவில்லை. பக்வான் டிவி ? உலகில் பல நாடுகளிலும் கொடிகட்டாமல் பறந்துகொண்டிருக்கும் டி.வி.யல்லவா ? அதில் யார் நம்மை அழைக்கப் போகிறார்கள் ? ஒருவேளை ரஹீமாக இருக்குமோ ? அவன்தான் யாருக்காவது தொலைபேசினால், ‘ஹலோ, நாங்க ராஜ் டி.வி.லேர்ந்து பேசுறோம் ‘ என்று தொடங்கி கலக்குவான். கேட்பவர்கள், குறிப்பாக பெண்கள், நம்பி கொஞ்ச நேரம் தன் வீட்டுக்காரரைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டிய பிறகு குட்டை உடைப்பான். கடைசியில் செல்லமாக திட்டும் வாங்கிக்கொள்வான். அவனாகத்தான் இருக்கும்.

யோசித்துக்கொண்டே ரிசீவரை வாங்கினேன்.

‘ஹலோ, மெளலானா ? ‘ கேட்ட குரலாக இல்லை.

‘ஆமா, மெளலானாதான் ‘

‘வணக்கம் சார், நாங்க பக்வான் டி.வி.லேர்ந்து பேசறோம். நான் சீலன் பேசறேன் சார். ‘

‘வணக்கம் சார், சொல்லுங்க ‘. நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ரஹீமுடைய குரல் மாதிரி இல்லை.

‘என்ன சார், நம்ம டி.வி.க்கு பேட்டியெல்லாம் தர மாட்டிங்களா ? ‘

என்னவோ என்னைப் பேட்டி கேட்டு பலமுறை அவர்கள் கெஞ்சிய மாதிரியும் நான் பிகு பண்ணிய மாதிரியும் கேட்கிறார்கள். இது கிண்டலாகவும் தெரியவில்லை. பின்னே என்ன ரகமான பேச்சு இது ? யோசித்தேன். ‘தொழில் நுட்ப அரசியல் ‘ என்று சொல்லலாம் என்று தோன்றியது.

‘குடுத்துட்டாப் போச்சு, நீங்க இப்பதானே சார் கேக்கறீங்க ? ‘

அடுத்த பக்கத்தில் லேசான சிரிப்பு. அது லேசாக இருந்ததற்கு தூரம் காரணமாக இருந்திருக்கலாம். உண்மையில் அது ஒரு பலமான சிரிப்பாகவே இருந்திருக்கும்.

‘நாளைக்காலைலெ வர முடியுமா சார் ? ‘

‘நாளைக்கா ? ஸ்ட்ரைக்லெ இருக்காங்களே சார். வந்தா வேலெ போனாலும் போயிடுமே ? ‘

‘மெடிகல் லீவு போடலாமே சார் ‘

‘மெடிகல் லீவு போட்ட மூணு பேரைத் தூக்கிட்டாங்க சார். சனி ஞாயிறு வரலாமா ? ‘

‘இல்லெ சார், நாளைக்கி நான் இங்கெ ஸ்டூடியோ பேசி வச்சிருக்கேன். சனி ஞாயிறு நாங்க பேட்டி எடுக்கறதில்லெ சார் ‘

‘சரி சார், நா வர்றேன். ‘ உலகம் பூரா ஒரே நேரத்தில் பக்வான் டிவியின் ‘நல்ல காலை ‘ ப்ரொக்ராமில் தோன்றுவது என்ற வாய்ப்பு மறுபடி கிடைக்குமா ?

‘சார், வரும்போது நீங்க எழுதின புத்தகங்களையெல்லாம் கொண்டுவாங்க ‘

அப்படி அவர் கேட்டது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘ஓகே சார் ‘

சீலன் சொன்னபடி காலை பதினோறு மணிக்கெல்லாம் பக்வான் டிவி ஆபீசில் நுழைந்துவிட்டேன். எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து பெயரைச் சொன்னேன். பதினைந்து விதமான டி.வி.க்களை நடத்திக்கொண்டிருந்த பக்வானின் தமிழ்ச் சானலின் ஆபீஸ் மேஜையில் பொறுப்பு வகித்த சுடிதார் இளம் பெண் ஒருத்தி என் கார்டை வாங்கி யாருக்கோ தொலைபேசினாள். பின் என்னிடம், ‘வெய்ட் பண்ணுங்க ‘ என்றாள்.

அங்கிருந்த நாற்காலிகள் ஒன்றில் போய் அமர்ந்தேன். ஒரு பையில் பிரசுரமான என் புத்தகங்கள் கனத்தன. என் கனம். பெருமிதத்தோடு அதைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டேன். மடியில் கனம் என்பது அதுதானோ! ஆனால் பயத்திற்கு பதிலாக மனதில் சந்தோஷம்! அடிக்கடி சின்னத்திரையில் பார்த்த முகங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன நேரில். கொஞ்ச நேரம் கழித்து அந்தப்பெண் என்னைக் கூப்பிட்டாள்.

‘மிஸ்டர் மெளலானா ? ‘

‘யெஸ் ‘

‘உங்களெ ஸ்டூடியோவுக்கு வரச்சொல்றாங்க ‘

‘ஸ்டூடியோ எங்கெ இருக்கு ? ‘ இதுக்குள்ள இல்லியா என்று கேட்கவில்லை.

என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அவள் வழி சொன்னாள். மறுபடி வந்த வழி லிஃப்ட்டில் கீழிறங்கி தரைத்தளம் வந்து அந்த கட்டிடத்தின் பின் பக்கமிருந்த ஸ்டூடியோ சென்றேன்.

‘யாரு சார் ? ‘ யாரோ ஒருவர் கேட்டார். சொன்னேன்.

‘உக்காருங்க ‘ என்று சொல்லி என்னைவிட ரொம்ப உயரமாக இருந்த ஒரு கறுப்புக்கலர் சுழல் நாற்காலியைக் காட்டினார். அதில் ஏறி அமர்வதற்கே கொஞ்சம் முயற்சி தேவைப்பட்டது. பள்ளி, கல்லூரியில் படித்தபோது தவறாமல் கலந்து கொண்ட உயரம் தாண்டுதல் பயிற்சி அப்போது கை கொடுத்தது. கற்றுக்கொள்ளும் எதுவுமே வீணாவதில்லை. எனக்கு எதிரிலேயே மனிதர்கள் உட்காருகிறமாதிரியான சின்ன நாற்காலி ஒன்று இருந்தது. ஆனால் அது புராதன நாற்காலிபோல் இருந்தது. அதில் உட்காருவது வசதியாக இருந்திருக்கும். ஆனால் ஏன் இதில் உட்காரச் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து வெள்ளை சட்டை போட்ட ஒருவர் வந்து மறுபடியும் நான் யார் எதற்காக வந்திருக்கிறேன் என்று கேட்டார். சொன்னேன். ஸ்டூடியோ உள்ளே சென்ற அவர் சற்று தாமதித்து திரும்பி வந்தார். வந்து, ‘சார், க்ரீன் ரூமிலெ உக்காருங்க. இது ரொம்ப உயரமா இருக்கு ‘ என்றார். அப்பாடா, காப்பாற்றினார் என்று மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு பச்சை அறைக்குள் நுழைந்தேன்.

க்ரீன் ரூம் என்பது மேக்கப் ரூம் என்று உள்ளே போனபிறகுதான் தெரிந்தது. ஏன் ஆங்கிலத்தில் அதை பச்சை அறை என்கிறார்கள் என்று ஆராய வேண்டும் என்று தோன்றியது. உள்ளே ஏஸி போட்டிருந்தார்கள். நான் மட்டும் தனியாக. கொஞ்சம் அதிகமான குளிர்தான். ஒன்னுக்கு வந்தது. உள்ளேயே டாய்லட் இருந்தது. பிரச்சனையில்லை. அந்த வெள்ளை சட்டைக்காரர் உள்ளே வந்தார். கையில் காப்பி கிளாசுடன். எனக்குக் கொடுத்தார். வாங்கிக் குடித்தேன்.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து உள்ளே கூப்பிட்டார்கள். போனேன். தொலைபேசிய சீலன் வரவேற்றார். என்னைவிட ஒல்லியாக இருந்தார். (நான் ஓமகுச்சி நரசிம்மன் அளவுக்கு இருப்பேன்).

‘சார், நீங்க கம்பன் மில்ட்டன்லெ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கீங்க. அதெப்பத்தி கேக்கலாமா ? ‘

அது ஆறுவருஷத்துக்கு முன்னாடி முடிஞ்சுபோன சமாச்சாரம். ‘கேளுங்க ‘ என்றேன்.

‘அப்பறம், நீங்க, பாரசீக மொழியிலேருந்து தமிழாக்கம் செஞ்சிருக்கீங்க. அதெப்பத்தி ? ‘

‘ஓ யெஸ் ‘ அவர் அந்தப் புத்தகத்தையெல்லாம் படித்திருப்பார் போல. ஆனால் பி.எச்.டி. தீசிஸ் படித்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரேஒரு காப்பி. என்னிடம்தான் இருந்தது. பிரசுரமான புத்தகத்தின் பின் அட்டை சமாச்சாரங்களில் ஒன்று அது.

கடைசியாக ஒரு கறுப்புக்கலர் சோஃபாவில் போய் உட்காரச் சொன்னார்கள். உட்கார்ந்தேன். ஒருவர் வந்து, ‘சார் வேறெ காஸ்ட்யூம் இல்லியா ? ‘ என்றார்.

காஸ்ட்யூமா ? நான் என்ன சினிமாவில் நடிக்கவா வந்தேன் என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

‘இல்லெ சார், நா ஊர்லேருந்து நேரா இங்கெ வர்றேன். வேறெ ஷர்ட் இல்லெ. ஏன் ? ‘

‘இந்த ஷர்ட் ஸ்கேன் ஆகாது சார் ‘

நான் என்ன ஸ்கேன் பண்ணிக்கவா வந்தேன் ? எனக்கு கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் இருந்தது. அப்ப பேட்டி கேன்ஸல்தானா ? அட பகவானே! என் மகள் ஆசை ஆசையாக, ‘டாடி, இந்த ஷர்ட் போட்டுப்போ டாடி, சூப்பராருக்கும் ‘ என்று தீர்க்க தரிசனத்துடன் வாழ்த்தி அனுப்பியதன் பலன் இதுதானா ? யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த வெள்ளை ஷர்ட் ஆசாமி வந்தார். பச்சை அறையில் வேறு ஒரு வெள்ளை ஷர்ட் இருப்பதாகவும் அதை அணிந்துகொள்ளலாம் என்றும் சொன்னார்.

அங்கே அவர்தான் மேக்கப் மேன் என்று மறுபடியும் பச்சை அறைக்குள் போனபோதுதான் தெரிந்தது. உள்ளே ஏற்கனவே ‘நல்லகாலை ‘ பேட்டியில் பிரபலமான இருவர் – ஒரு ஆண், ஒரு பெண் – இருந்தனர். அன்றைக்கு யாரப்பேட்டி எடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. (எனக்குத்தான் சீலன் இருக்கிறாரே)! மேக்கப் போட்டுக்கொண்டிருந்தனர். பச்சை தவிர மற்ற வர்ணங்களைப் பூசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து ஒரு புன்னைகையைக்கூடத் தூக்கி எறியவில்லை. நானும் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் சென்றதும் மேக்கப் மேன் எனக்கு ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த ஜிப்பாவைக் கொடுத்தார். கழுத்து ஓரமெல்லாம் – ஜிப்பாவுக்குத்தான் – பயங்கர அழுக்காக அது இருந்தது. அதைப்போட்டபோது ஒரு பிச்சைக்காரனின் ‘லுக் ‘ வந்துவிட்டிருந்தது. ஜிப்பாவுக்கு உள்ளே இருந்த என் பனியனின் கழுத்து ஓரங்கள் வேறு தெரிந்தன.

‘சார் ரொம்ப நல்லாருக்கு சார் ‘ என்று சொன்னார் அவர்.

பகவானே என்று போட்டுக்கொண்டு உள்ளே போனால் அங்கே அந்த இருவரும் நான் ஏற்கனவே உட்கார்ந்திருந்த சோஃபாவுக்கு எதிரில் அமர்ந்திருந்தனர்.

‘சார்தான் மெளலானா ‘ என்று அவர்களிடம் என்னை சீலன் அறிமுகப்படுத்தினார். அப்போ, அவர்கள்தான் என்னைப் பேட்டி எடுக்கப்போகிறார்களா ? சீலன் இல்லையா ? என் புத்தகத்தை அவர்களும் படித்திருக்கிறார்களா ? ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடம் கைகுலுக்கி வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். (கைகுலுக்கல் யாருக்கு, வணக்கம் யாருக்கு என்று சொல்லத் தேவையில்லை என்று நினைகிறேன்).

ஒரு வழியாக பேட்டி ஆரம்பித்தது. சீலன் பின்னாலிருந்து கேள்விகளைச் சொல்ல, ஒரு தேர்ந்த நடிகனுக்கு உரிய திறமையுடன் ஆணும் பெண்ணுமாக என் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல அதே கேள்விகளை அவர்கள் கேட்டனர். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த என் புத்தகங்களின் அட்டைகளை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோல அந்தப்பெண் ரொம்ப நேரம் எடுத்துப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். நடுவில் செய்திக்காக இடைவேளை வேறு விட்டனர். ஒன்றரை மணி பேட்டி எடுத்தனர். வெட்டி வெட்டி. நிறுத்தி நிறுத்தி.

கடைசியில் கை குலுக்கி, ‘ரொம்ப நன்றிசார், வர்ற செவ்வாய்க் கிழமை காலை ஏழரை மணிக்கு அவசியம் பாருங்க ‘ என்று சொல்லிவிட்டு திங்கட் கிழமையே ஒளிபரப்பினர். ஒரு எழுத்தாளனைப் பிடிக்கவில்லை என்றால் இப்படியெல்லாம் பழிவாங்க வேண்டுமா ? ஆனால் ஊரில் நான் வெளியே போனபோது சிலர் என்னைக் காட்டி, ‘இவர்தான், பக்வான் டி.வி.லெ வர்லெ ? ‘ என்று புருவம் உயர்த்திப் பேசிக்கொண்டனர். நான் பார்க்காவிட்டால் என்ன ?

ஆனாலும் டி.வி.ஸ்டேஷனை விட்டு நான் வெளியே வந்தபோது ஒரு முக்கியமான நிகச்சி நடந்தது. ஸ்டூடியோவை விட்டு நான் பேட்டி முடித்து வெளியே வந்து, அந்த கஜல் பாடகன் டைப் ‘வெள்ளை ‘ ஜிப்பாவைக் கழட்டிக் கொடுக்க மறுபடி பச்சை அறைக்குச் சென்றபோது மேக்கப் மேன் பேசினார் :

‘சார் தப்பா நெனச்சுக்காதிங்க. நீங்க பாரசீக கவிஞன் உமர் கய்யாமை தமிழாக்கம் செய்திருப்பதா பேட்டியிலெ சொன்னிங்க. நான் ஆங்கிலத்துல ஃபிட்ஸ்ஜெரால்டின் உமர் கய்யாம் படிச்சிருக்கேன். தமிழிலே படிக்கலே. இஃப் யு டோண்ட் மைண்ட், ப்ளீஸ் எனக்கு ஒரு காப்பி தர முடியுமா ? ‘ என்றார். உண்மையிலேயே பகவானுக்கு – உண்மையான பகவானுக்கு – நன்றி சொல்லி அவருக்கு ஒரு காப்பி கையெழுத்திட்டுக் கொடுத்து வந்தேன்.

என்ன ஒரே ஒரு குறை. இப்படித்தான் ஆகும் என்று தெரிந்திருந்தால், நான் போட்டுக்கொண்டுபோன சட்டையைக் கழட்டாமலேயே அவருக்கு உமர்கய்யாமைக் கொடுத்திருப்பேன்.

***

ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி