ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பாரத தேசியத்தின் அடித்தளமாக விளங்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே பாரத தேசியம் மேற்கத்திய தேசிய வாதங்களின் ஒற்றைத்தன்மை கொண்ட வெறுப்பியல் தன்மையற்று ‘வசுதைவக குடும்பகம் ‘ எனும் பிரபஞ்சத்தையே அணைக்கும் அன்பின் இதயம் பெற்று விளங்குகிறது. அத்தகைய அடித்தளத்தை நவீன காலத்தில் பாரத தேசியத்திற்கு அளித்தவர் விவேகானந்த சுவாமிகளே. அவரது தேசிய வரையறை போன்றே முக்கியமானவை அவரது சமுதாய விடுதலையியல் சிந்தனைகள். பாரத சமுதாயம் எதிர்நோக்கும் சாதிய பிரச்சனைகளுக்கு அப்பிரச்ச்னைகளின் நடுமையத்தில் நின்று போராடி கோடானு கோடி மக்களின் துன்பங்களை தம் இதயத்தில் வலியாக உணர்ந்து சமுதாய விடுதலையியலை உருவாக்கிய இரு பாரத புத்திரர்கள் சுவாமி விவேகானந்தரும் டாக்டர் பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கரும் ஆவர். அவர்களது சமுதாய விடுதலையியலின் ஒருமை சமுதாய ஒருமை மற்றும் வன்கொடுமைகளற்ற சமுதாயத்தை படைக்க களமிறங்கும் ஒவ்வொருவருக்கும் ஆற்றலையும் புதிய பார்வையையும் அளிப்பதாக அமையும்.

பாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன ?

பாரதத்தின் ஒருமைப்பாட்டின் அடிப்படைத்தன்மையின் இயற்கை என்ன ? சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1 டாக்டர் அம்பேத்கரும் தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு பின்வருமாறு பதிலுரைக்கிறார், ‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால்

மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலா

மென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2

சமுதாய பிரச்சனைகளுக்கு இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது

எனில் இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரிய திராவிட இனத்தவர்கள் அல்லவா ? ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாஸ்ரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன ? ‘இந்தியா ‘ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க பிராம்மணிய கட்டமைப்பல்லவா ? பல தேசிய இனங்களின் அடிமைப்படுத்துல்தானே இந்திய தேசத்தின் இருப்பையே வரையறை செய்கிறது ? இத்தகைய கருத்தியல் மூலமாக பல தலித் அமைப்புகள் தம் சமுதாய செயல்பாட்டினை வகுத்துக் கொள்கின்றன. சமுதாய அவலங்கள் மூலமாக இக்கருத்தியல்களை பரப்பி வரும் அரசியல் வியாபாரிகள் டாக்டர்.அம்பேத்கரின் பெயரையும் அவர் மீது தலித் சமுதாயங்களும், தேச பற்று கொண்ட அனைத்து பாரதியர்களும் கொண்டுள்ள மதிப்பான நினைவையும், இந்த வெறுப்பியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பியல் வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் ? இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.

ஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன். ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி ‘களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர் , ஆரியரன்றி வேறல்ல. ‘3

டாக்டர் அம்பேத்கர் வேதங்களை தானே கற்றறிந்தவர். மிகவும் ‘ஆச்சாராமான ‘ குடும்பங்களைச் சார்ந்த வைதீக குடும்ப ‘பண்டிதர்கள் ‘ காங்கிரஸ் கட்சியின் அரசியல் கபட நாடகங்களுக்காக ஆரிய இன வாதத்தை (மகாத்மாவின் அரசியல் வாரிசு நேருவே உண்மை என்ற விஷயத்தை எதிர்ப்பதாவது!) வாய்மூடி சிரசேற்றுக் கொண்டிருந்த போது வேதங்களை கபட வைதீகர்களின் எதிர்ப்புகளுக்கிடையே கற்றறிந்த டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது.

அறிவியல் ஆய்வின் வக்கிரத்தின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது.

ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது. ‘ ‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4

பெயரை மாற்றினால் மேற்கோள்கள் யார் கூறியது எது என தெரியாத அளவில் ஒற்றுமை உடையதாக இருப்பதை நாம் காணலாம். சமுதாய மேன்மையை பாரதம் அடைய நலிந்த பிரிவினர் சமுதாய ஆற்றல் பெற இனவாத அடிப்படையிலான வெறுப்பியல் கூறுபாட்டு பிரச்சாரங்களை விடுதலையியல் என்னும் பெயரில் ஏற்றெடுப்பதன் பயங்கர பின்விளைவுகளை குறித்து ஸ்வாமி விவேகானந்தர் டாக்டர் அம்பேத்கர் இருவருமே தெளிவாக இருந்தனர். இவ்விஷயத்தில் அம்பேத்கர் பெயரால் வெறுப்பியல் வியாபாரம் செய்யும் தலித் தலைமைகள் டாக்டர் அம்பேத்கரின் நினைவுக்கு செய்துள்ள அவமான கரமான துரோகம் அளவிடமுடியாதது.

கபட வைதீகர்களும் போலி மதச்சார்பின்மையும்

இப்போது ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. ஏன் அப்போது வைதீகர்களாக தங்களை சித்தரித்து திரிந்த காங்கிரஸ் போலி மதச்சார்பின்மை சவர்ணர்கள் வேதத்தை திரித்து உருவாக்கப்பட்ட ஆரிய இனவாதத்தை (சுவாமி விவேகானந்தர், பாரதி மற்றுமெ¢ டாக்டர் அம்பேத்கர் எதிர்த்ததை போல) எதிர்க்கவில்லை ? ஒருவேளை சுவாமி விவேகானந்தர் விவரிக்கும் அவர்களது பின்வரும் இயற்கை இதற்கு காரணமாக இருக்கலாம். ‘உங்களைத்தான் இந்தியாவின் மேல்குடிப்பிறப்பாளர்களாக தங்களை கருதி கொண்டிருப்பவர்களே! பத்தாயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்ட பிணத்தை போல உள்ள நீங்கள் உங்கள் எலும்பு விரல்களிலும் பொக்கிஷ அறைகளிலும் வைத்திருக்கும் விலைமதிப்பற்ற செல்வங்களுக்கு உரிமை கொண்டாட தகுதியற்றவர்கள். உங்களால் தாழத்தப்பட்ட நீங்கள் தீண்டதகாதவர்கள் என கூறிய மக்களிடமே பாரதத்தின் உயிர் எஞ்சியுள்ளது. எனவே அச்செல்வங்களை திறந்து விட்டு விட்டு நீங்கள் ஒழிந்து மறையுங்கள் சூனியத்தில் கறைந்தொழியுங்கள். உங்கள் இடத்தில் புதிய பாரதம் எழட்டும். ‘5

துரதிர்ஷ்டவசமாக ‘உயர்குடியின் பாதுகாக்கப்பட்ட பிணங்களோ ‘ (ஸ்வாமி விவேகானந்தரின் வார்த்தைகள்) இன்று போலிமதச்சார்பின்மையின் பதாகையை உயர்த்தி பிடித்தவாறு பாரத சமுதாயம் அனைத்திற்கும் வேதபாரம்பரியத்தை வழங்கும் முயற்சிகளை எதிர்த்தவாறே உள்ளனர். அன்று மனுவின் பெயரால் என்றால் இன்று மதச்சார்பின்மையின் பெயரால். இன்றைக்கும் கபட வைதீக பெரும் குடும்ப ஸ்தாபனங்களே போலிமதச் சார்பின்மை உயர்த்தி பிடிக்கும் அறிவுஜீவிகளாக விளங்குவதன் இரகசியம் இதுதானோ ?

ஹிந்து சமுதாயம் வாழ சாதியம் ஒழிவதன் அவசியம்

ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் கழைய வேண்டியதின் அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார், ‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) ஒரு நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால் ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘6

பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார், ‘ தலித்துகளுக்கு அரசியல் சலுகைகள் அளிப்பதை எதிர்க்கும் காந்தி இஸ்லாமியருக்கு பணமெழுதா காசோலை வழங்கத் தயாராக இருக்கிறார். ஹிந்து அதிகார வர்க்கத்தின் போக்கு விசித்திரமாக இஸ்லாமியருடன் அதிகாரத்தை கையளிக்க விரும்பும் அளவிற்கு தங்கள் சூத்திர மற்றும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட சகோதரர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதாக உள்ளது. ‘7 மகாத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார், ‘சாதியத்தின் விளைவே தீீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘

ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அறிவுரைகள் மதச்சார்பின்மை பேசித்திரிந்த மேல்மட்ட ஹிந்து சமுதாய கபட வைதீக காங்கிரஸின் உரத்த பிரச்சாரங்களின் முன் விழலுக்கு இறைத்த நீராகின. இதன் விளைவாக கணிசமான அளவில் இன்றைய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் வாழ்ந்த ஹிந்து சமுதாயத்தினர் அழித்தொழிக்கப்பட்டனர். மதச்சார்பற்ற இந்தியாவின் மனித உரிமையாளர்கள், சதா சர்வ காலமும் சமுதாய அற உணர்வில் கொப்பளித்துக் கொண்டிருக்கும் நம் முற்போக்குகள், மற்றும் இன்ன பிற இடதுசாரிகள் மகாத்மாவின் குரங்குகளாகி ‘அறம் ‘ காத்தனர்.

சமுதாய ஒருமை ஏற்பட சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்

ஸ்வாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதின் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார் ‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும். ‘ 8

பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்தியல் வாரிசுகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் சரி, போலி மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் சவர்ண அறிவுஜீவிகளும் சரி சமஸ்கிருதத்தை அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கின்றனர். உதாரணமாக ‘எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி ‘யில் ஒரு ‘தலித் ‘ விடுதலையியலாளராகவும் அறிவு ஜீவியாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் திரு.ஆனந்த் எழுதியிருந்த ஒரு கட்டுரை அம்பேத்கரை முன்வைத்து வெறுப்பியல் வியாபாரம் நடத்தும் பல தலித் இணைய தளங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் பிரபலப்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டுரையில் சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த முயற்சிக்கும் காவி பாசிச சக்திகள் விமர்சிக்கப்படுகின்றன.அம்பேத்கரின் வழியில் நடப்பவர்களாக தன்னை அடையாளம் காட்டும் அக்கட்டுரை ஆசிரியர் பல சான்றுகளை மேற்கோள்களை அக்கட்டுரையில் காட்டுகிறார். ஷேக்ஷ்பியர் முதல் ஜவகர்லால் நேரு வரை அறிஞர்களின் ஆறு மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அக்கட்டுரையில் பாபா சாகேப் அம்பேத்கரின் ஒரு மேற்கோள் கூட இல்லை!9

தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார், ‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ‘ மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது. சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அது சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் என்றும் குறிப்பிட்டார்.10

மதமாற்றம்

சமுதாய மேன்மை அடைய தலித்கள் தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வது ஒரு அடிப்படை உரிமையாகவும் போராட்ட உக்தியாகவும் பயன்படுத்த பாபா சாகேப் அம்பேத்கர் எப்போதுமே ஆதரவு கொடுத்தார். ஆனால் பாரத பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட மதங்களை அவர் அபாயத்தன்மை கொண்டதாகவே கருதினார். உதாரணமாக பிரிவினைக்கு முந்திய இந்திய ராணுவத்தில் இஸ்லாமியர் விழுக்காடு அதிகரிப்பதை முழுமையாக ஆராய்ந்து அதனால் ஏற்படும் அபாயங்களை வெளிப்படையாக கூறிய அரசியல் தலைவர்லவர் ஒருவரே11. எனவே தான் அவரது முதல் தேர்வாக சீக்கிய தர்மத்தை அவர் தேர்ந்தெடுத்தார். ஹிந்து மகாசபையின் ஆதரவும் இதற்கு இருந்தது. துரதிர்ஷ்ட வசமாக காங்கிரஸ் மேலிடத்தின் வன்மையான எதிர்ப்பால் அவர் அதை கைவிட்டார். பின்னரும் அவர் புத்த தர்மத்தையே தேர்ந்தெடுத்தார். கலாச்சார தேசியத்தில் டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

டாக்டர் அம்பேத்கரின் இந்த இரு தேர்வுகளுமே ஸ்வாமி விவேகானந்தரால் உயரிய இலட்சியங்களாக அனைத்து ஹிந்து சமுதாயத்தின் முன் வைக்கப்பட்டவை ஆகும். உதாரணமாக குரு கோவிந்த சிங் குறித்து ஸ்வாமிஜி பின் வருமாறு குறிப்பிட்டார், ‘நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனை போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன். ‘ புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர். ‘புத்த சமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.12 ‘ ஆனால் வேற்று சமயங்களுக்கு மதமாற்றப்படுவதன் மூலம் ‘நாம் நம்மில் ஒருவனை இழப்பது மட்டுமல்ல நமக்கு ஒரு எதிரியையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். ‘

ஸ்வாமி விவேகானந்தரின் வேதாந்த அறிதல் மூலம் எழும் சமுதாய பார்வையும் பாபா சாகேப் அம்பேத்கரின் காருண்ய அறிவாய்வின் மூலம் எழும் சமுதாய பார்வையும் பாரத சமுதாய மேன்மைக்கு முன்வைக்கும் தெளிவான தீர்வுகள் அதிசயிக்கத்தக்க ஒற்றுமையுடன் உள்ளன. இத்தேச மக்களின் மேம்படுத்துதலை விரும்பும் எவரும் இந்த ஒற்றுமையை புறக்கணித்து வெறுப்பியல் மூலமோ கபட சித்தாந்தங்கள் மூலமோ சமுதாய மாற்றத்தை கொணர முடியாது. அத்தகைய வெறுப்பியல் இயக்கங்கள் சமுதாய மேம்பாட்டு இயக்கங்களாக இருக்கவும் முடியாது.

***

1. லாகூர் பேருரை ஸ்வாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III

2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ PartெII Chapter IV

3. ஸ்வாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்

4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII, பக் 302ெ203

5. ஸ்வாமி விவேகானந்தர் , பாகம். VII

6. அதே.

7. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Epilogue

8. ஸ்வாமி விவேகானந்தர் ,சென்னை பேருரை, பாகம்ெIII

9. S.Anand,Sanskrit, English and Dalits, Economic and Political Weekly, July 24:30, 1999 இணையத்தில்: http://www.ambedkar.org/News/hl/SanskritEnglish.htm

10. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.

11. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘

12. ஸ்வாமி விவேகானந்தர் , பாகம்ெI

***

hindoo_humanist@lycos.com

Series Navigation