வைரமுத்துக்களின் வானம்-6

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

ருத்ரா


கவிதைகளின்

இமயங்களின் இமயமே !

அவற்றின் அடியில்

நசுங்கிக்கிடக்கும்

ஒரு இதயத்துக்குள்

இத்தனை பிரவாகமா ?

உன் எழுத்துக்களும்

ஓட்டைகள்

போட்டுக்கொண்டதுண்டு.

அந்த புள்ளிகளைச் சொல்கிறேன்.

எழுத்துக்களின் மேல்

அவை

மகுடம் சூட்டி

மகுடி வாசித்ததில்

நாங்கள் மயங்கிகிடக்கிறோம்.

அவை புல்லாங்குழல்

ஆனதில்

புல்லை மறந்தன இந்த பசுக்கள்.

ஆன்மீகமும் தத்துவமும் கூட

போதை தான்

உன் ‘காதலை ‘ப்போல.

அதனால் தான்

‘ஜனனம் மதுரம்

மரணம் மதுரம் ‘

என்றெல்லாம்

கெளடபாதர்களிலிருந்து

ஆதி சங்கராச்சாரியார்கள் வரை

‘உமர் கய்யாம் ‘ கிண்ணம் ஏந்தி

உலா வந்திருக்கிறார்கள்.

இந்த ஊர்வலத்திற்குள்

மெளனமாய்

நீயும் நுழைந்து விட்டாய்.

எங்கிருந்தோ

தூவிவந்த மகரந்தங்களை

சேகரித்து

உன் பக்கங்களை

எல்லாம்

பிருந்தாவனம் ஆக்கினாய்.

அதற்குள்

தீப்பிடித்து எரியும்

அந்த தசை நாற்றம்

உன் நாசிக்குள்

எப்படி புகுந்தது ?

தீச்சுவாலையையும்

தீச்சோலை

ஆக்கத்தெரிந்தவன் நீ.

நீ அடுக்கி வைத்திருக்கும்

விருதுகள்

வெறும் விறகுகள் அல்ல.

அமரத்துவத்தின்

புகைகமழும்

சந்தன மரக்கட்டைகள் அவை.

மற்றவர்கள் வேண்டுமானால்

இந்த சீமண்ணெயின்

வரட்டிகளில்

தொலைந்து போகட்டும்.

எங்களது

எல்லா மூளைகளின்

இருட்டுக்குள்ளும்

நீ தானே துருவ நட்சத்திரம் !

தந்தத்தின்

சித்திரவேலைப்பாடுகள்

நிறைந்த

அந்த தொட்டிலைப்பாடும்போது

அதனுள்

புதைத்து வைக்கப்பட்டிருக்கும்

ஒரு சந்தனப்

பேழையைப்பற்றிய

கவலை உனக்கு எதற்கு ?

ஜனனத்தைக் கவ்விக்கொண்டு

மரணமும்

மரணத்தைக் கவ்விக்கொண்டு

ஜனனமும்

பயங்காட்டிக்கொண்டிருக்கும்

இந்த

‘இருதலை விரியனை ‘ப்பற்றி

விரித்துப்பாடிய

வேதாந்திகளும் கனபாடிகளும்

நிறையவே சப்தங்களில்

‘ஓங் ‘க்கரித்து விட்டுப்

போய்விட்டார்கள்.

அந்தக் கோவில் மண்டபங்களில்

தலைகீழாய்த்

தொங்கிக்கொண்டிருக்கும்

வெளவால்களின்

புழுக்கைகளில்

‘புயல்களை கிளப்பும் ‘

உன் பேனா

எதற்கு

அங்க பிரதட்சணம்

செய்யவேண்டும் ?

ஏதோ ஒரு வலி

என்கிறாய்.

அதில்

உன் மை சேர்த்து

உன் ‘வலிமை ‘ ஆக்கிக்கொள்.

இந்தப் பாழாய்ப்போன

சாவு தான்

சித்தார்த்தனை

போதி மரத்தடிக்கு

விரட்டியது.

இப்போது கிடைக்கும் டாக்டர்கள்

அப்போது கிடைத்தால்

‘அல்ப்ரொசோலாமும் ‘ ‘க்ளோனோ சிபாமும் ‘

எழுதிக் கொடுத்திருப்பார்கள்.

இல்லை யென்றால்

‘சங்கிலி பூதத்தானிடம் ‘ சென்று

துண்ணீரு போட்டிருப்பார்கள்.

‘புத்தம் ‘ எனும் புனிதமான

வரலாற்று லாபம்

நமக்கு கிடைத்திருக்குமா ?

உயிரிழைகளில்

ஊடு பாவு

இந்த சாவு.

இந்த ‘நாள் ‘ எனும் ‘வாள் ‘

சாணை தீட்டிக்கொள்வதெல்லாம்

உன் ஆயுள் மீது தான்.

அந்த இரத்தம்

கசியும் போதெல்லாம்

நோபல் பரிசுகள்

உறை போடக்காணாது

உன் கவிதைகளுக்கு.

மரணம் எனும்

இந்த தீவிரவாதியைப்பற்றி

‘தி டெர்ரர் ஆஃப் டெத் ‘ என்று

ஜான் கீட்ஸ் கூட

தன் கவிதை வார்த்தைகளைக்கொண்டு

வெற்றிலை குதப்பி

சிவப்பாக துப்பியிருக்கிறான்.

‘என் ரத்தம் வறண்ட பின்

கயிறு வீசி என்னைப்பிடிக்க

துரத்திக்கொண்டு வரும்

எருமை மாட்டுக்காரனே.

என் பேனா வழியாய் பாயும்

என் மூளை வெள்ளத்தில்

மூர்க்கனே

நீ மூழ்கிப்போவாய்.

இந்த அகன்ற கரையில்

தனித்து நான் நின்றிருப்பேன். ‘

அந்த வரிகளை உன் மீது

சூடு போட்டுக்கொள்.

மரணத்தைக் கண்டு

வெல வெலத்து

மரத்துப்போய் சுருண்டு கிடக்கும்

மரவட்டைகள் அல்ல நீ.

உன் பேனாவை

ஊன்றி வைத்து விடு.

ஊழிப்பிரளயங்களின்

நீர்மட்டத்தைக் கூட

காட்டிக்கொண்டு

உயர்ந்து நிற்கும் அது.

உன் ‘மலர் நீட்டம் ‘

இந்த வெள்ளத்திலும்

தலை நீட்டும்

ஆயிரம் கோடி மனங்களின்

பிரதி பலிப்பு அல்லவா ?

கவிதைச்சிங்கமே!

பிடரி சிலிர்த்துக்கொள்.

வேண்டாம் இந்த அழுகை.

இப்படியே நீ பாடினால்

வடுகபட்டி ஆச்சிகள்

‘மைக்கு வைத்து ‘

‘ஸ்பீக்கர் கட்டி ‘

ஒப்பாரிகளால்

மூக்கைச்சிந்தி

வழித்துப்போட்டு

உன்னை

உண்டு இல்லை

ஆக்கி விடுவார்கள்.

உன் சிந்தனைத்திறத்தால்

கூடு விட்டு

கூடு பாய்ந்திடு.

இந்த நூற்றாண்டு

துருப்பிடித்து

இற்று விழுந்திடுமுன்

அடுத்த நூற்றாண்டுக்கு நீ

கூடு விட்டு

கூடு பாய்ந்திடு.

============================================
(குமுதம் இதழ்-13.10.03)

< epsi_van@hotmail.com >

Series Navigation

ருத்ரா

ருத்ரா